ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற – மாற்றங்கள் | அலகு 7 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் தோற்றுவிக்கப்படுதல் | 8th Social Science : History : Chapter 7 : Urban changes during the British period
நகராட்சிகள்
மற்றும் மாநகராட்சிகள் தோற்றுவிக்கப்படுதல்
இந்தியாவில்
ஆங்கிலேயர்கள் ஆட்சியில் உள்ளாட்சி மன்றத்தின் வளர்ச்சியினை மூன்று வெவ்வேறு நிலைகளில்
அறியலாம்.
அ) முதல் கட்டம் (1688-1882)
இந்தியாவில்
நகராட்சி அரசாங்கம் 1688இல் சென்னையில் ஒரு மேயர் பதவியுடன் உருவானது. கிழக்கிந்திய
கம்பெனியின் இயக்குநர்களில் ஒருவரான சர் ஜோசியா சைல்டு மாநகராட்சி உருவானதற்கு காரணமாக
இருந்தார். மூன்று மாகாண நகரங்களில் 1793ஆம் ஆண்டின் பட்டயச் சட்டம் நகராட்சி நிர்வாகத்தை
நிறுவியது. வடமேற்கு எல்லைப்புற மாகாணங்களிலும், அயோத்தியிலும் நகராட்சிகள் 1850ஆம்
ஆண்டு சட்டப்படி அமைக்கப்பட்டன. மேயோ பிரபுவின் 1870ஆம் ஆண்டின் புகழ்பெற்ற தீர்மானம்
உள்ளாட்சி அரசாங்கத்தின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
ஆ) இரண்டாம் கட்டம் (1882-1920)
உள்ளாட்சி
அரசாங்கம் தொடர்பான ரிப்பன் பிரபுவின் தீர்மானம் உள்ளாட்சி அரசாங்கத்தின் வரலாற்றில்
ஒரு மைல்கல்லாக விளங்கியது. எனவே ரிப்பன் பிரபு இந்தியாவின் உள்ளாட்சி அமைப்பின் தந்தை
என்று அழைக்கப்படுவது பொருத்தமானதாகவும் அவரது தீர்மானம் உள்ளாட்சி அரசாங்கத்தின் மகாசாசனம்
எனவும் கருதப்படுகிறது.
இ) மூன்றாம் கட்டம் (1920-1950)
மாகாணங்களில்
இரட்டை ஆட்சியை 1919ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் அறிமுகப்படுத்தியது. மாகாண சுயாட்சியை
1935ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் அறிமுகப்படுத்தியது. 1947இல் சுதந்திரம் அடைந்தவுடன்
சுதந்திர இந்தியாவின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உள்ளாட்சி அரசாங்கத்தை உருவாக்கி வடிவமைப்பதற்கான
சிறப்பான வாய்ப்பை இந்தியா பெற்றது.