ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற – மாற்றங்கள் | அலகு 7 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - ஆங்கிலேயரின் ஆட்சியில் நகரமயமாக்கலின் தனித்துவங்கள் | 8th Social Science : History : Chapter 7 : Urban changes during the British period
நவீன கால
நகரங்கள்
ஐரோப்பியர்களின் வருகை நகரங்களின் வளர்ச்சியில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்தது. அவர்கள் முதலில் சூரத், டாமன், கோவா மற்றும் பாண்டிச்சேரி போன்ற சில கடலோர நகரங்களை உருவாக்கினர். இந்தியாவில் தங்களை நன்கு நிலைநிறுத்திக் கொண்ட பிரிட்டிஷார் மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய மூன்று நகரங்களை நிர்வாகத் தலைநகராகவும் வணிக மையங்களாகவும் வளர்த்தனர். ஆளுமையின் பரப்பு விரிவடைய, பல புதிய நகரங்களை அதன் அமைவிடத்திற்காகவும் தேவைக்காகவும் வளங்களுக்காகவும் உருவாக்கினர். புதியதாக வளர்ச்சிபெற்ற நகரங்கள், மலை நகரங்கள், தொழில் நகரங்கள், நீதிமன்ற நகரங்கள், இருப்புப்பாதை நகரங்கள், இராணுவ குடியிருப்புகள் மற்றும் நிர்வாக நகரங்களாக விளங்கின.
ஆங்கிலேயரின் ஆட்சியில் நகரமயமாக்கலின் தனித்துவங்கள்
1. தொழில் முடக்கப்படுதல்
18ஆம்
நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயர்களின் கொள்கைகள் நகரமயமாக்கலுக்கு எதிராக இருந்தது
நிரூபணமானது. பின்னர் ஆங்கிலேயர்கள் பின்பற்றியப் பொருளாதாரக் கொள்கைகள் இந்தியாவின்
பொருளாதாரத்தை விரைவாக ஒரு காலனித்துவப் பொருளாதாரமாக மாற்றுவதற்கும் நகரங்களின் வளர்ச்சிக்கும்
வழிவகுத்தன.
பிரிட்டிஷாரின்
ஒரு வழியிலான சுதந்திரமானவர்த்தகத்தின்விளைவாக இந்திய உற்பத்தித் தொழில்கள் அழிக்கப்பட்டன.
இந்திய உற்பத்தித் தொழில்களின் மொத்த அழிவின் விளைவாக லட்சக்கணக்கான கலைஞர்கள் மற்றும்
கைவினைஞர்கள் நசிந்து போயினர். பல நூற்றாண்டுகளாக நாகரிக உலகின் சந்தைகளில் கோலோச்சியிருந்த
இந்தியாவின் நகர்ப்புற கைவினைத் தொழில்களில் திடீர் சரிவு ஏற்பட்டது.
நீண்ட
காலமாக சிறப்பான உற்பத்தி பொருளுக்காகப் புகழ்பெற்ற நகர்ப்புற சந்தைகள் தொடர்ந்து குறையலாயின.
இதன் விளைவாக புகழ்பெற்ற பழைய உற்பத்தி நகரங்களான டாக்கா, மூர்ஷிதாபாத், சூரத் மற்றும்
லக்னோ போன்றவை முந்தைய முக்கியத்துவத்தை இழந்தன. இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின்
கடுமையான போட்டியினால் ஒட்டுமொத்த தொழில்துறை கட்டமைப்பும் செயலிழந்து போயின.
பாரம்பரியத்
தொழில்களை அடிப்படையாகக் கொண்டிருந்த இந்திய கைவினைத் தொழில் பொருட்கள், உற்பத்தி செய்யும்
நகரங்கள் தொழிற்புரட்சியின் விளைவாக அழிந்தன. அதிகப்படியான இறக்குமதி வரி மற்றும் ஏற்றுமதி
சார்ந்த பிற கட்டுப்பாடுகள் காரணமாக இந்தியப் பொருட்கள் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய
நாடுகளில் இறக்குமதி செய்யப்படுவது குறையலாயின. இவ்வாறு இந்தியா, பிரிட்டனின் வேளாண்மை
குடியேற்றமாக மாறியது.
II. நகர்மயமாதல் குறைதல்
இந்தியப்
பொருளாதாரம் காலனிய பொருளாதாரமாக மாறியதால் உற்பத்தியாளர்களின் சந்தையாகவும் தொழிற்சாலைகளுக்கு
கச்சாப் பொருட்களை வழங்குமிடமாகவும் மாறியதோடு பல நகரங்களில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும்
வணிகத்தளத்தைக் கடுமையாக பாதித்தது.
மன்னர்களின்
அதிகாரங்கள் படிப்படியாக சரியத் தொடங்கியதால் அவர்களது ஆட்சியுடன் தொடர்புடைய நகரங்களின்
அழிவுக்கு அது வழிவகுத்தது. 19ஆம் நூற்றாண்டில் முதல் காலாண்டில் அதுவரை பேரரசின் தலைநகரமாக
இருந்த ஆக்ரா முற்றிலும் அழிக்கப்பட்டது. பிரிட்டிஷாரின் பல்வேறு ஏகாதிபத்திய கொள்கைகளின்
விளைவாக இந்திய அரசர்கள் தங்களது ஆட்சியை இழந்தனர்.
பிரிட்டிஷ்
காலத்திற்கு முந்தைய நகர்ப்புற மையங்களின் வீழ்ச்சிக்கு பங்களித்த மற்றொரு காரணி
1853ஆம் ஆண்டு இந்தியாவில் இருப்புப் பாதைகளை அறிமுகப்படுத்தியதாகும். இரயில்வே அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக வர்த்தகப்
பாதைகள் திசைதிருப்பப்பட்டு ஒவ்வொரு ரயில் நிலையமும் மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்யும்
மையமாக மாறியது. பிரிட்டிஷ் உற்பத்தியாளர்கள் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் சென்றடைய
இரயில்வே வழிவகுத்ததால் நாட்டின் கிராமங்களிலுள்ள பாரம்பரிய தொழில்கள் அடியோடு நசிந்தன.
III. புதிய நகர மையங்களின் வளர்ச்சி
கிழக்கு
மற்றும் மேற்கு கடலோரப் பகுதிகளிலுள்ள கல்கத்தா, மதராஸ் மற்றும் பம்பாய் போன்ற இடங்களில்
பிரிட்டிஷ் புதிய வர்த்தக மையங்களை உருவாக்கியது. மதராஸ் (1639), பம்பாய் (1661) மற்றும்
கல்கத்தா (1690) போன்ற நகரங்களை உருவாக்கி பிரிட்டிஷார் வலுப்படுத்தினர். இவை அனைத்தும்
முன்னர் மீன்பிடித்தல் மற்றும் நெசவு தொழில் செய்யும் கிராமங்களாகும். இங்கு அவர்கள்
வீடுகள், கடைகள் மற்றும் தேவாலயங்களைக் கட்டியதோடு வணிக மற்றும் நிர்வாக தலைமையகத்தையும்
அமைத்தனர்.
18ஆம்
நூற்றாண்டின் மையப்பகுதியில் மாற்றத்தின் ஒரு புதிய காலகட்டம் தோன்றியது. 1757ஆம் ஆண்டு
பிளாசிப் போருக்குப் பின்னர் ஆங்கிலேயர்கள் படிப்படியாக அரசியல் ஆதிக்கம் பெற்றதால்
ஆங்கில கிழக்கிந்திய நிறுவனத்தின் வர்த்தகம் விரிவடைந்தது.
சூயஸ் கால்வாய் திறப்பு, நீராவிப் போக்குவரத்து அறிமுகம், ரயில்வே சாலைகள் அமைத்தல், கால்வாய்கள், துறைமுகங்கள், தொழிற்சாலைகள் வளர்ச்சி, நிலக்கரி சுரங்கம், தேயிலைத் தோட்டம், வங்கிப்பணி, கப்பல் போக்குவரத்து மற்றும் காப்பீடு வளர்ச்சியினால் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நகரமயமாக்கலில் புதிய போக்கு தொடங்கியது. வர்த்தக பிணைப்புகளில் ஏற்பட்ட மாற்றம் நகர்ப்புற மையங்களின் வளர்ச்சியில் பிரதிபலித்தது.
ஒரு நகர்ப்புற பகுதி என்பது அதிக மக்கள் தொகை அடர்த்தியோடு உணவு உற்பத்தியல்லாத
தொழில்களில் ஈடுபடுவதும் நன்கு கட்டமைக்கப்பட்ட சூழலில் வாழ்வதும் ஆகும்.
அ) துறைமுக நகரங்கள்
ஆங்கிலேயர்கள்
வர்த்தகத்திற்காக இந்தியா வந்தனர். மதராஸ், கல்கத்தா மற்றும் பம்பாய் ஆகியவை முக்கிய
துறைமுகங்களாக மாறின. இவை வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகித்தன. ஐரோப்பிய பாணியிலான
உயரமான கட்டடங்களுடன் இந்த நகரங்கள் முக்கிய வணிகப் பகுதிகளாக மாறின. ஆங்கில கிழக்கிந்திய
நிறுவனம் அதன் தொழிற்சாலைகளைக் அமைத்ததோடு குடியேற்றத்தின் பாதுகாப்பிற்காக கோட்டைகளையும்
அமைத்தனர். சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டையும் கல்கத்தாவில் புனித வில்லியம் கோட்டையும்
இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
ஆ) இராணுவக் குடியிருப்பு நகரங்கள்
ஆங்கிலேயர்
தங்கள் இராணுவ பலத்தால் இந்தியப் பகுதிகளையும், அரசியல் அதிகாரத்தையும் கைப்பற்றினர்.
எனவே வலுவான இராணுவ முகாம்கள் தேவைப்பட்டதால் இரணுவக் குடியிருப்புகளை ஏற்படுத்தினர்.
இராணுவக் குடியிருப்புகள் முற்றிலும் புதிய நகர்ப்புற மையங்களாக இருந்தன. இராணுவ வீரர்கள்
இந்த பகுதிகளில் வசிக்கத் தொடங்கினர். மேலும் இப்பகுதிகள் படிப்படியாக நகரங்களாக வளர்ந்தன.
எடுத்து காட்டு: கான்பூர், லாகூர்.
இ) மலைவாழிடங்கள்
காலனித்துவ
நகர்ப்புற மலைவாழிடங்கள் தனித்துவம் வாய்ந்தவையாகும். ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு
வருவதற்கு முன்பு மலைவாழிடங்கள் பற்றி அறியப்படவில்லை. அவை சிலவாக இருந்ததோடு குறைந்த
மக்கள்தொகையைக் கொண்டிருந்தன. அவர்களும் குறிப்பிட்ட தேவைகளுக்காகவே அடிக்கடி வருகை
புரிந்தனர். எடுத்துக்காட்டாக ஸ்ரீநகர் ஒரு முகலாய பொழுதுபோக்கு மையமாகவும் கேதர்நாத்
மற்றும் பத்ரிநாத் ஆகியவை இந்து சமய மையங்களாகவும் விளங்கின. குளிர்ந்த கால நிலையிலிருந்து
வந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவில் கோடைகாலத்தில் வாழ்வது கடினம் என உணர்ந்தனர். அவர்களுக்கு
இந்திய மலைகளின் குளிர்ந்த காலநிலை பாதுகாப்பானதாக மற்றும் நன்மை அளிப்பதாக இருந்தது.
இது வெப்பமான வானிலையிலிருந்தும் தொற்று நோயிலிருந்தும் ஐரோப்பியர்களைப் பாதுகாத்தது.
ஆகையால் அவர்கள் மாற்றுத் தலைநகரங்களை குளிர்ந்த பகுதிகளில் கல்கத்தாவுக்கு மாற்றாக
டார்ஜிலிங்கிலும் டெல்லிக்கு மாற்றாக டேராடூனிலும் ஏற்படுத்தினர். மலைப்பிரதேசங்கள்
படைகள் தங்குமிடமாகவும் எல்லைகளைப்பாதுகாக்கவும் தாக்குதலைத் தொடங்கும் இடமாகவும் இருந்தன.
மலைவாழிடங்கள் வட மற்றும் தென் இந்தியாவில் வளர்ச்சி பெற்றன. எ.கா. சிம்லா, நைனிடால்,
டார்ஜிலிங், உதகமண்டலம், கொடைக்கானல். கூர்க்கர்களுடன் (1814-16) நடைபெற்ற போரின் போது
சிம்லா நிறுவப்பட்டது. டார்ஜிலிங் பகுதியானது சிக்கிம் ஆட்சியாளர்களிடமிருந்து
1835இல் கைப்பற்றப்பட்டது. இம்மலைப்பிரதேசங்கள் சுகாதார மையமாக வளர்ச்சி பெற்றன (படையினர்
ஓய்வெடுப்பதற்கும், நோய்களிலிருந்து மீள்வதற்கான இடங்கள்). ரயில்வேயின் அறிமுகம் மலைவாழிடங்களை
எளிதில் சென்றடைய வழிவகுத்தது.
ஈ) இரயில்வே நகரங்கள்