சிறப்புகள், வரம்புகள் - டால்டனின் அணுக் கொள்கை | 8th Science : Chapter 12 : Atomic Structure
டால்டனின் அணுக் கொள்கை
டால்டன் 1808-ம் ஆண்டு தம்மால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளின்
அடிப்படையில் தமது அணுக் கொள்கையை வெளியிட்டார். அவருடைய அணுக் கொள்கையின் முக்கியக்
கருதுகோள்கள் பின்வருமாறு:
• பொருள்கள் அனைத்தும் அணு எனப்படும் மிகச்சிறிய துகள்களால்
ஆனவை (கிரேக்க தத்துவமேதை டெமாக்ரடீஸ் பிளக்க இயலாத மிகச்சிறிய துகள்களை அணு என்றே
அழைத்தார்).
. • ஒரே தனிமத்தின் அணுக்கள் அனைத்துப் பண்புகளிலும்
ஒத்திருக்கின்றன (அளவு, வடிவம், நிறை மற்றும் பண்புகள்).
• வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் அவற்றின் வடிவம், நிறை மற்றும்
பண்புகளில் வேறுபட்டிருக்கின்றன.
• அணுவை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. அதாவது அணுவானது அழிக்கமுடியாத
துகள்.
• வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஒரு குறிப்பிட்ட நிறை விகிதத்தில்
ஒன்றிணைந்து மூலக்கூறுகள் மற்றும் சேர்மங்களை உருவாக்குகின்றன.
• அணு என்பது வேதிவினையில் ஈடுபடக்கூடிய மிகச் சிறியதுகள்.
ஜான்
டால்டன் ஒரு ஏழ்மையான நெசவுக் குடும்பத்தில் பிறந்தவர் அவர் தனது 12 ஆவது வயதில் ஒரு
கிராமத்துப் பள்ளியில் ஆசிரியராகப் பணியேற்றார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் அப்பள்ளியின்
தலைமை ஆசிரியரானார். பின் 1973ல் அவர் மான்செஸ்டரில் உள்ள ஒரு கல்லூரியில் இயற்பியல்,
வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களைக் கற்பிக்கும் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
அவரது இறுதிக்காலம் வரை வளிமண்டல அழுத்தம் மற்றும் மழையளவினைப் பதிவு செய்வதைத் தனது
வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் ஒரு சிறந்த வானியல் ஆராய்ச்சியாளராக இருந்தார்.
1. டால்டன்
அணுக்கொள்கையின் சிறப்புகள்
• டால்டனின் அணுக் கொள்கை பெரும்பாலான திரவங்கள் மற்றும் வாயுக்களின்
பண்புகளை விவரிக்கின்றது.
• வேதிச் சேர்க்கை விதி மற்றும் பொருண்மை அழிவின்மை விதியினை
இது விளக்குகிறது.
.• தனிமங்களின் மூலக்கூறுகள் மற்றும் சேர்மங்களின் மூலக்கூறுகளுக்கு
இடையேயான வேறுபாடுகளை இது எடுத்துரைக்கிறது.
2. டால்டன் அணுக் கொள்கையின் வரம்புகள்
• அணு என்பது பிளக்க முடியாத மிகச் சிறிய துகள் என்பது தவறு.
• ஒரே தனிமத்தின் அணுக்கள் வெவ்வேறு அணு நிறைகளைப் பெற்றுள்ளன
(ஐசோடோப்புகள்).
• வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஒரே அணுநிறையைப் பெற்றுள்ளன (ஐசோபார்கள்).
• ஒரே மாதிரியான அணுக்களால் உருவாகக்கூடிய பொருள்கள் வெவ்வேறு பண்புகளைப் பெற்றிருக்கின்றன. உதாரணமாக நிலக்கரி, கிராஃபைட், வைரம் ஆகிய மூன்றும் கார்பன் அணுக்களால் ஆனவை. ஆனால், அவற்றின் பண்புகள் வேறுபடுகின்றன.