அளவீட்டியல் | முதல் பருவம் அலகு 1 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - அடர்த்தி | 7th Science : Term 1 Unit 1 : Measurement
அடர்த்தி
ஒரு முகவையில் நீரை எடுத்துக் கொண்டு, அதில் ஓர் இரும்புக் குண்டையும் ஒரு தக்கையையும் போடவும். என்ன காண்கிறாய்? படத்தில் காட்டியுள்ளபடி இரும்புக் குண்டு மூழ்குகிறது, தக்கை மிதக்கிறது. இது ஏன் என விளக்கமுடியுமா?
எடை மிகுந்த பொருள்கள் நீரில் மூழ்கும், எடை குறைந்த பொருள்கள் நீரில் மிதக்கும் என்பது உனது, பதில் எனில், எடை குறைந்த ஓர் உலோகக் காசு நீரில் மூழ்குவதும், எடை மிகுந்த மரக்கட்டை நீரில் மிதப்பதும் ஏன்? அடர்த்தி பற்றிய கருத்துகளை புரிந்து கொண்டால், இத்தகைய கேள்விகளுக்கு நாம் சரியாக பதிலளிக்க முடியும்.
செயல்பாடு 4 லிருந்து, மரத்துண்டு அதே நிறை கொண்ட இரும்புத் துண்டைவிட அதிக கனஅளவினைப் பெற்றுள்ளது என அறிகிறோம். மேலும், மரத்துண்டு அதே கனஅளவினைக் கொண்ட இரும்புத் துண்டைவிட குறைந்த நிறையைப் பெற்றுள்ளது எனவும் அறிகிறோம்.
ஒரு பொருள் இலேசானதா அல்லது கனமானதா என்பது அதன் அடர்த்தியைப் பொருத்தது. குறிப்பிட்ட கனஅளவு கொண்ட பொருளின் உள்ளே அதிக நிறை திணிக்கப்பட்டிருந்தால், அதன் அடர்த்தி அதிகமாக இருக்கும்.
செயல்பாடு :4
அ. ஒரே நிறையுள்ள (1கிகி) ஓர் இரும்புத் துண்டையும், ஒரு மரத் துண்டையும் எடுத்துக்கொள்க. அவற்றின் பருமனை அளக்கவும். இவற்றுள் எது அதிக பருமனைப் பெற்று அதிக இடத்தை ஆக்கிரமிக்கிறது?
பதில் : மரத் துண்டு
ஆ. ஒரே அளவுள்ள ஓர் இரும்புத் துண்டையும், ஒரு மரத் துண்டையும் எடுத்துக் கொள்க. அவற்றின் நிறையை அளக்கவும். இவற்றுள் எது அதிக நிறையைப் பெற்றுள்ளது?
பதில் : இரும்புத் துண்டு
ஆகவே இரும்புத்துண்டு, அதே அளவுள்ள மரக்கட்டையைவிட அதிக நிறையைக் கொண்டிருக்கும், எனவே, இரும்புத்துண்டின் அடர்த்தி மரத்துண்டின் அடர்த்தியை விட அதிகமாகும்.
ஒரு பொருளின் அடர்த்தி என்பது ஓரலகு பருமனில் (1 மீ3 ) அப்பொருள் பெற்றுள்ள நிறை என்று வரையறுக்கப்படுகிறது. ‘M’ நிறை கொண்ட ஒரு பொருளின் பருமன் ‘V’ எனில், அதன் அடர்த்தியானது பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது.
அடர்த்தி (D) = நிறை (M) / பருமன் (V)
D = M/V
அடர்த்தியின் SI அலகு கிகி/மீ3. அதன் CGS அலகு கி/செ.மீ3.
வெவ்வேறு பொருள்களின் அடர்த்தி
வெவ்வேறு பொருள்கள் வெவ்வேறு அடர்த்தியைப் பெற்றுள்ளன. அதிக அடர்த்தியைக் கொண்ட பொருள்கள் அடர்வுமிகு பொருள்கள் எனப்படுகின்றன. குறைந்த அடர்த்தியைக் கொண்ட பொருள்கள் அடர்வுகுறை பொருள்கள் எனப்படுகின்றன. பெருமளவில் பயன்படுத்தப்படும் சில பொருள்களின் அடர்த்தி, அட்டவணை 1.4ல் தரப்பட்டுள்ளது.
அட்டவணை 1.5 சில பொருள்களின் அடர்த்தி
(அறை வெப்பநிலையில்)
அடர்த்தி, நிறை, மற்றும் கன அளவு ஆகியவற்றுக்கிடையேயான தொடர்பு பின்வரும் அடர்த்தி முக்கோணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
அடர்த்தி (D) = நிறை / கனஅளவு
நிறை (M) = அடர்த்தி × கனஅளவு
கனஅளவு (V) = நிறை / அடர்த்தி
சமையல் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் போன்றவை பார்ப்பதற்கு நீரைவிட அடர்த்தி மிகுந்தவைகளாகத் தோன்றினாலும், அவற்றைவிட நீர் அதிக அடர்த்தி கொண்டது. விளக்கெண்ணெயில் அடர்த்தி 961 கிகி/மீ3. விளக்கெண்ணெய்யின் ஒரு துளி நீரை இடும்பொழுது, நீர்த்துளி மூழ்கிறது. ஆனால், நீரில் ஒரு துளி விளக்கெண்ணெயை இடும்பொழுது, அது மிதந்து நீரின் மீது ஒரு படலத்தை உருவாகும். எனினும், சில எண்ணெய் வகைகள் நீரை விட அதிக அடர்த்தி கொண்டவை.
கணக்கு 1.4
280 கிகி நிறை கொண்ட ஒரு திட உருளையின் கனஅளவு 4 மீ3. அதன் அடர்த்தியைக் காண்க.
தீர்வு :
உருளையின் அடர்த்தி (D) = உருளையின் நிறை (M) / உருளையின் கன அளவு (V)
= 280/4 = 70 கிகி/மீ3
கணக்கு 1.5
இரும்பினால் செய்யப்பட்ட ஒரு பெட்டியின் பருமன் 125 செ.மீ3. அதன் நிறையைக் காண்க. (இரும்பின் அடர்த்தி =7.8 கி/ செ.மீ3).
தீர்வு
அடர்த்தி = நிறை / கனஅளவு
எனவே, நிறை = அடர்த்தி × கனஅளவு
= 125 × 7.8 = 975 கி.
கணக்கு 1.6
தாமிரத்தால் செய்யப்பட்ட ஒரு கோளத்தின் நிறை 3000கிகி. தாமிரத்தின் அடர்த்தி 8900 கிகி/மீ3 எனில், கோளத்தின் பருமனைக் காண்க.
தீர்வு :
அடர்த்தி = நிறை / கனஅளவு
எனவே, கன அளவு = நிறை / அடர்த்தி
= 3000 / 8900 = 0.34மீ3