அளவீட்டியல் | முதல் பருவம் அலகு 1 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - வானியல் பொருள்களின் தொலைவினை அளத்தல் | 7th Science : Term 1 Unit 1 : Measurement
வானியல் பொருள்களின் தொலைவினை அளத்தல்
நாம் அன்றாட வாழ்வில் அளவிடும் நீளங்களைக் குறிக்க சென்டிமீட்டர், மீட்டர் மற்றும் கிலோமீட்டர் போன்ற அலகுகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால், விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பூமிக்கும், விண்மீனுக்கும் இடைப்பட்ட தொலைவு அல்லது இரு விண்மீன்களுக்கு இடையில் உள்ள தொலைவு போன்ற மிக நீண்ட தொலைவுகளை விண்வெளி ஆராய்ச்சிக்காக அளவிடுகின்றனர். இத்தகைய தொலைவுகளை அளவிட, கீழ்காணும் இரு அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன.
அ. வானியல் அலகு
ஆ. ஒளி ஆண்டு
வானியல் அலகு
பூமியானது சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றுகிறது என்பது நாம் அறிந்ததே. எனவே, பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கும். பூமி அதன் அண்மை நிலையில் (பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள தொலைவு மிகக்குறைவாக இருக்கும் நிலை) உள்ளபோது, பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள தொலைவு சுமார் 147.1 மில்லியன் கிலோமீட்டர் ஆகும். பூமி அதன் சேய்மை நிலையில் (பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு மிக அதிகமாக இருக்கும் நிலை) உள்ள போது அவற்றிற்கிடையேயான தொலைவு சுமார் 152.1 மில்லியன் கிலோமீட்டர் ஆகும். எனவே, பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள சராசரித் தொலைவு 149.6 மில்லியன் கிலோ மீட்டர் ஆகும். இத்தொலைவே வானியல் அலகு எனப்படுகிறது. நெப்டியூன், சூரியனிலிருந்து 30 வானியல் அலகு தொலைவில் உள்ளது. அதாவது, நெப்டியூன் சூரியனிலிருந்து பூமியை விட 30 மடங்கு தொலைவில் உள்ளது.
ஒரு வானியல் அலகு என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள சராசரித் தொலைவு ஆகும்.
1வானியல் அலகு = 149.6 மில்லியன் கிமீ
= 149.6 × 106 கிமீ
= 1.496 × 1011 மீ.
ஒளி ஆண்டு
நமது சூரிய குடும்பத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள விண்மீன் ப்ராக்ஷிமா சென்டாரி. (Proxima Centauri). இதன் தொலைவு 2,68,770 வானியல் அலகாகும். இதிலிருந்து, விண்மீன்களின் தொலைவை வானியல் அலகால் குறிப்பிட்டால், அதைக் கையாள்வது கடினம் என்பது தெரிகிறது. எனவே, விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மிக நீண்ட தொலைவுகளை அளக்க ஒளி ஆண்டு என்னும் ஒரு தனித்தன்மை வாய்ந்த அலகினைப் பயன்படுத்துகின்றனர். வெற்றிடத்தில் ஒளியின் வேகம் 3× 108
மீ/ வி
என்பதை நாம் அறிவோம். அதாவது, ஒளி ஒரு வினாடியில் 3× 108 மீ தொலைவைக் கடக்கிறது. ஓர் ஆண்டில் (லீப் ஆண்டைத் தவிர) 365 நாள்கள் உள்ளன. ஒரு நாளில் 24 மணி நேரமும், ஒரு மணி நேரத்தில் 60 நிமிடங்களும், ஒரு நிமிடத்தில் 60 வினாடிகளும் அடங்கியுள்ளன.
ஆகவே, ஓர் ஆண்டில் உள்ள மொத்த வினாடிகளின் எண்ணிக்கை
= 365 × 24 × 60 × 60
= 3.153 × 107 வினாடிகள்
ஒளியானது ஒரு வினாடியில் 3 × 108 மீ தொலைவைக் கடக்கும் எனில், ஓர் ஆண்டில் ஒளி கடக்கும் தொலைவு = 3× 108 × 3.153 × 107 = 9.46 × 1015 மீ. இத்தொலைவே ஓர் ஒளி ஆண்டு எனப்படுகிறது.
ஒளி ஆண்டு என்பது ஒளியானது வெற்றிடத்தில் ஓர் ஆண்டில் கடக்கும் தொலைவு என வரையறுக்கப்படுகிறது.
1 ஒளி ஆண்டு = 9.46× 1015மீ
ஒளி ஆண்டில் குறிக்கப்படும்போது, ப்ராக்சிமா சென்டாரி (Proxima Centauri) நமது பூமியிலிருந்தும் சூரிய குடும்பத்திலிருந்தும் 4.22 ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது. பூமியானது அண்டத்தின் மையத்திலிருந்து 25,000 ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது.