முதல் பருவம் அலகு 1 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - அளவீட்டியல் | 7th Science : Term 1 Unit 1 : Measurement
அலகு 1
அளவீட்டியல்
கற்றல் நோக்கங்கள்
இப்பாடத்தைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன:
* அடிப்படை மற்றும் வழி அளவுகளை அடையாளம் காணல்.
* அடிப்படை மற்றும் வழி அலகுகளை அடையாளம் காணல்.
* சில வழி அளவுகளுக்கான அலகுகளைப் பெறுதல்.
* ஒழுங்கான மற்றும் ஒழுங்கற்ற பொருள்களின் பரப்பளவு மற்றும் கன அளவினைக் கண்டறியும் முறையினை அறிதல்
* பொருள்களின் கன அளவை கனமீட்டரிலிருந்து லிட்டருக்கு மாற்றுதல்.
* பொருள்களின் அடர்த்தி, பருமன் மற்றும் நிறை ஆகியவற்றைக் கணக்கிடுதல்.
* வானியல் அலகு மற்றும் ஒளி ஆண்டு ஆகியவற்றை வரையறுத்தல்.
அறிமுகம்
நம் அன்றாட வாழ்வில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள் போன்றவற்றின் எடை, திரவங்களின் கன அளவு, பொருளின் வெப்பநிலை, வாகனங்களின் வேகம் போன்ற பல்வேறு அளவுகளை அளவிடுகிறோம். நிறை, எடை, தொலைவு, வெப்பநிலை, கன அளவு போன்ற அளவுகள் இயற்பியல் அளவுகள் என அழைக்கப்படுகின்றன. ஒரு இயற்பியல் அளவின் மதிப்பை அளந்தறிய எண் மதிப்பு மற்றும் அலகு ஆகிய இரண்டும் தேவை. எடுத்துக்காட்டாக, தினந்தோறும் நீ 2 கி.மீ நடைப்பயிற்சி மேற்கொள்வதாக வைத்துக்கொள்வோம். இந்நிகழ்வில் '2' என்பது எண் மதிப்பாகும். 'கி.மீ’ என்பது தொலைவு என்ற இயற்பியல் அளவின் மதிப்பினைக் குறிப்பதற்குப் பயன்படும் அலகாகும். இந்தப் பாடப்பகுதியில், அடிப்படை அளவுகள், பரப்பளவு, கன அளவு மற்றும் மிகப் பெரிய அளவுகளை அளவிடுதல் ஆகியவற்றைப் பற்றிக் காண்போம்.