தாவரச் சூழ்நிலையியல் - சூழ்நிலையியல் தக அமைவுகள் | 12th Botany : Chapter 6 : Principles of Plant Ecology
சூழ்நிலையியல் தக அமைவுகள் (Ecological adaptations):
ஒரு சூழ்நிலையில் வெற்றிகரமாக வாழ உயிரினங்களின்
கட்டமைப்பில் எற்படும் மாறுபாடுகள் உயிரினங்களின் தக அமைவுகள் என்று அழைக்கப்படுகின்றன.
வாழ்விடத்தில் நிலவும் சூழலுக்கேற்ப உயிரினங்கள் உயிர்வாழ இத்தக அமைவுகள் உதவுகின்றன. தாவரங்களின் வாழ்விடங்கள் மற்றும் அதற்கான
தக அமைவுகளைப் பொறுத்து அவை கீழ்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன. நீர் வாழ் தாவரங்கள்,
வறண்ட நில வாழ் தாவரங்கள், வள நிலத் தாவரங்கள், தொற்றுத்தாவரங்கள் மற்றும் உவர் சதுப்பு
நில வாழ் தாவரங்கள் என்பன இவைகளாகும்.
நீர்வாழ் தாவரங்கள் (Hydrophytes):
நீர் அல்லது ஈரமான சூழலில் வாழ்கின்ற தாவரங்கள்
நீர்வாழ் தாவரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
நீர் மற்றும் காற்றின் தொடர்பினைப் பொறுத்து அவை
கீழ்கண்ட வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
i. மிதக்கும் நீர்வாழ் தாவரங்கள்
ii. வேரூன்றி மிதக்கும் நீர்வாழ் தாவரங்கள்
iii. நீருள் மூழ்கி மிதக்கும் நீர்வாழ் தாவரங்கள்
iv. நீருள் மூழ்கி வேரூன்றிய நீர்வாழ் தாவரங்கள்
v. நீர், நில வாழ்த்தாவரங்கள்
i. மிதக்கும் நீர்வாழ் தாவரங்கள் (Free floating hydrophytes): இவ்வகை தாவரங்கள் நீரின் மேற்பரப்பில் சுதந்திரமாக மிதக்கின்றன. இவைகள் மண்ணுடன் தொடர்பு கொள்ளாமல் நீர் மற்றும் காற்றுடன் மட்டுமே தொடர்பு கொண்டுள்ளன. எடுத்துக்காட்டு: ஆகாயத் தாமரை (Eichhornia), பிஸ்டியா மற்றும் உஃல்பியா என்ற மிகச் சிறிய பூக்கும் தாவரம்.
ii. வேரூன்றி மிதக்கும் நீர்வாழ் தாவரங்கள் (Rooted floating hydrophytes): இத் தாவரங்களின் வேர்கள் மண்ணில் பதிந்துள்ளன. ஆனால் அவற்றின் இலைகள் மற்றும் மலர்கள் நீரின் மேற்பரப்பில் மிதக்கின்றன. இத் தாவரங்கள் மண், நீர், காற்று ஆகிய மூன்றுடன் தொடர்பு கொண்டுள்ளன. எடுத்துக்காட்டு: நிலம்போ (தாமரை), நிம்ப்ஃபெயா (அல்லி), போட்டமோஜிட்டான் மற்றும் மார்சீலியா (நீர்வாழ் பெரணி)
தாவர உலகில் தாமரையின் விதைகள் தான் மிகவும் நீடித்த வாழ்நாளைக் கொண்டவை.
iii. நீருள் மூழ்கி மிதக்கும் நீர்வாழ் தாவரங்கள் (Submerged floating hydrophytes): இத்தாவரங்கள் முற்றிலும் நீரில் மூழ்கியுள்ளது. இவைகள் மண் மற்றும் காற்றோடு தொடர்பு பெற்றிருப்பதில்லை எடுத்துக்காட்டு: செரட்டோஃபில்லம் மற்றும் யுட்ரிக்குலேரியா.
iv. நீருள் மூழ்கி வேரூன்றிய நீர்வாழ் தாவரங்கள் (Rooted- submerged hydrophytes): இத்தாவரங்கள் நீருள் மூழ்கி மண்ணில் வேறூன்றி காற்றுடன் தொடர்பு கொள்ளாதவை. எடுத்துக்காட்டு: ஹைட்ரில்லா, வாலிஸ்நேரியா மற்றும் ஐசாய்டெஸ்.
v. நீர் நில வாழ்பவை அல்லது வேர் ஊன்றி வெளிப்பட்ட நீர்வாழ் தாவரங்கள் (Amphibious hydrophytes or Rooted emergent hydrophytes): இத்தாவரங்கள் நீர் மற்றும் நிலப்பரப்பு தக அமைவு முறைகளுக்கு ஏற்றவாறு வாழ்கின்றன. இலைகள் ஆழமற்ற நீரில் வளர்கின்றன. எடுத்துக்காட்டு: ரெனன்குலஸ், டைஃபா மற்றும் சாஜிடேரியா.
ஹைக்ரோபைட்கள் - (Hygrophytes): ஈரத்தன்மையுடைய சூழல் மற்றும் நிழல் உள்ள இடங்களில் வளரும் தாவரங்கள் ஹைக்ரோஃபைட்கள் என்று அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டு: ஹேபினேரியா (ஆர்கிட்கள்), மாஸ்கள் (பிரையோஃபைட்கள்) முதலியன.
வேர்
• பொதுவாக உல்ஃபியா மற்றும் சால்வீனியாவில் வேர்கள் முற்றிலும் காணப்படுவதில்லை அல்லது ஹைட்ரில்லாவில் குறைவுற்ற வளர்ச்சியுடனும், ரனென்குலஸில் நன்கு வளர்ச்சி அடைந்த வேர்களும் காணப்படுகின்றன.
• வேர்மூடிகளுக்கு பதிலாக வேர் பைகள் அமைந்திருக்கிறது. எடுத்துக்காட்டு: ஆகாயத் தாமரை.
தண்டு:
• நீருள்மூழ்கித்தாவரங்களில் நீண்ட, மிருதுவான, பஞ்சு போன்ற நீட்சியடைந்த தண்டு காணப்படுகிறது.
• மிதக்கும் தாவரங்களில் தண்டானது தடித்த, குறுகிய, பஞ்சு போன்ற ஓடு தண்டுடனும், வேரூன்றி மிதக்கும் தாவரங்களில் இது கிடைமட்டத் தண்டாகவும் (கிழங்கு) காணப்படுகிறது.
• தரைபடர் ஓடுதண்டு, தரைகீழ் உந்து தண்டு, தரைமேல் ஓடுதண்டு, தண்டு மற்றும் வேர் பதியன்கள், கிழங்குகள், உறங்கு நிலை நுனிகள் ஆகியவற்றின் மூலம் உடல் இனப்பெருக்கம் நிகழ்கிறது.
இலைகள் :
• வாலிஸ்நேரியாவில் இலைகள் மெல்லியவை, நீண்டவை மற்றும் பட்டையான நாடா வடிவமுடையது. பொட்டோமோஜிடானில் இலைகள் மெல்லியவை, நீண்டவை. செரட்டோஃபில்லம் தாவரத்தில் நுன்பிளவுற்ற இலைகள் காணப்படுகின்றன.
• அல்லி (Nymphaea) மற்றும் தாமரையில் (Nelumbo) மிதக்கும் இலைகள் பெரியது மற்றும் தட்டையானது ஐக்கார்னியா மற்றும் ட்ராப்பாவில் இலைக்காம்பு பருத்தும், பஞ்சு போன்று காணப்படுகின்றன.
• வேரூன்றி வெளிப்பட்ட நீர்வாழ் தாவரங்களில் இரு வகையான இலைகள் (நீர் மட்டத்திற்குக் கீழே பிளவுற்ற இலைகளும், நீர் மட்டத்திற்கு மேலே முழுமையான இலைகளும்) காணப்படுகின்றன. எடுத்துக்காட்டு: ரெனன்குலஸ், லிம்னோஃபில்லா எட்டிரோபில்லா மற்றும் சாஜிடேரியா.
உள்ளமைப்பில் தக அமைவுகள் (Anatomical adaptations):
• கியூட்டிக்கள் முழுமையாகக் காணப்படாமலோ அல்லது காணப்பட்டால் மெல்லியதாகவோ அல்லது குறைவாகவோ வளர்ச்சி அடைந்திருத்தல்.
• ஓர் அடுக்கு புறத்தோல் காணப்படுவது.
• நன்கு வளர்ச்சியடைந்த ஏரங்கைமாவினால் ஆன புறணி காணப்படுவது.
• வாஸ்குலத் திசுக்கள் குறைவான வளர்ச்சி அடைந்துள்ளது. வேரூன்றி வெளிப்பட்ட நீர்வாழ் தாவரங்களில் வாஸ்குலத்திசுக்கள் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது.
• வேரூன்றி வெளிப்பட்ட நீர்வாழ் தாவரங்களைத்
தவிர மற்ற தாவரங்களில் வலுவைக் கொடுக்கும் திசுக்கள் பொதுவாகக் காணப்படுவதில்லை. பித்
செல்கள் ஸ்கிளிரங்கைமாவினால் ஆனது.
• நீர்வாழ்தாவரங்கள் காற்றிலாச்சூழலைத்தாங்கிக் கொள்ளும் திறன் கொண்டது.
• இவை வாயு பரிமாற்றத்திற்கு உதவும் சிறப்பு உறுப்புகளைக் கொண்டுள்ளது.
உலர் அல்லது வறள் நிலச்சூழலில் வாழ்கின்ற தாவரங்கள் வறண்ட நிலத் தாவரங்கள் எனப்படுகின்றன. வறண்ட நில வாழிடங்கள் இருவகையானது. அவை,
அ) இயல்நிலை வறட்சி (Physical dryness): இவ்வ கை வாழிடங்களில் காணப்படும் மண் குறைந்த மழையளவு பெறுவதாலும் மற்றும் நீரைக் குறைந்த அளவில் சேமிக்கும் திறன் கொண்டுள்ளதாலும் மண்ணானது சிறிதளவு நீரையே பெற்றுள்ளது.
ஆ) செயல்நிலை வறட்சி (Physiological dryness): இவ்வகை வாழிடங்களில் தேவைக்கு அதிகமான நீர் கொண்டிருந்தாலும் மண்ணில் புழைவெளிகள் (capillary spaces) காணப்படுவதில்லை. எனவே நீரை வேர்கள் உறிஞ்சிக்கொள்ள முடிவதில்லை. எடுத்துக்காட்டு: உவர் மற்றும் அமில மண்ணில் வாழும் தாவரங்கள்.
தக அமைவு அடிப்படையில் வறண்ட நிலத் தாவரங்கள் மூன்று வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. அவை
1. குறுகிய காலம் வாழும் ஒரு பருவத்தாவரங்கள்
2. சதைப்பற்றுடைய அல்லது நீரைச் சேமித்து வைக்கக்
கூடிய தாவரங்கள்
3. சதைப்பற்றற்ற அல்லது நீரைச் சேமிக்க இயலாத் தாவரங்கள்
i. குறுகிய காலம் வாழும் ஒரு பருவத்தாவரங்கள் (Ephemerals): இவைகள் வறட்சி நிலையைத் தவிர்க்கும் அல்லது சாமாளிக்கும் தாவரங்கள் எனப்படுகின்றன. இத் தாவரங்கள் மிகக் குறைந்த காலத்தில் (ஒரு பருவம்) தன் வாழ்க்கை சுழற்சியினை முடித்துக் கொள்கின்றன. இவை உண்மையான வறண்ட நிலத் தாவரங்கள் இல்லை எடுத்துக்காட்டு: ஆர்ஜிமோன், மொல்லுகோ, ட்ரிபுலஸ் மற்றும் டெஃப்ரோசியா
ii. சதைப்பற்றுடைய அல்லது நீரைச் சேமித்து வைக்கக் கூடிய தாவரங்கள் (Succulents):
இவை வறட்சியைச் சமாளிக்கும் திறனுடைய தாவரங்கள் எனப்படுகின்றன. இத்தாவரங்கள் வறட்சியின் போது அதன் உடலப் பகுதிகளில் நீரைச் சேமித்து வைத்துக் கொள்வதுடன் கடுமையான வறட்சி நிலைகளை எதிர்கொள்ளச் சிறப்பான சில தகவமைவுகளை கொண்டுள்ளன. எடுத்துக்காட்டு: ஓப்பன்ஷியா, ஆலோ, பிரையோஃபில்லம் மற்றும் பிகோனியா.
iii) சதைப்பற்றற்ற அல்லது நீரைச் சேமிக்க இயலாத் தாவரங்கள் (Non succulents): இவை வறட்சியை எதிர்கொண்டு தாங்கிக்கொள்ளும் தாவரங்கள். எனவே இவை உண்மையான வறண்ட நிலத் தாவரங்கள் என அழைக்கப்படுகின்றன. இவை வெளிப்புற மற்றும் உட்புற வறட்சியினை எதிர்கொள்கின்றன. உலர் நிலைகளை எதிர்த்து வாழப் பல தக அமைவுகளைக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டு : கேசுவரைனா, நீரியம் (அரளி), ஜிஜிபஸ் மற்றும் அக்கேஷியா.
புற அமைப்பில் தக அமைவுகள்:
வேர்
• வேர்த்தொகுப்பு நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. தண்டு தொகுப்பினைக் காட்டிலும் வேர்த்தொகுப்பு அதிக வளர்ச்சி அடைந்துள்ளது.
• வேர் தூவிகள் மற்றும் வேர் மூடிகள் நன்கு வளர்ச்சியடைந்துள்ளன.
தண்டு
• தண்டு பெரும்பாலும் கடினமானது, கட்டை தன்மையுடையது. இது தரைமேல் அல்லது தரைகீழ்க் காணப்படலாம்.
• தண்டு மற்றும் இலைகளின் மேற்பரப்புகளில் மெழுகு பூச்சு காணப்படுவதுடன் அடர்த்தியான தூவிகளும் காணப்படுகின்றன.
• சில வறண்ட நிலத் தாவரங்களின் தண்டின் அனைத்துக் கணுவிடைப் பகுதிகளும் சதைப்பற்றுள்ள இலை வடிவ அமைப்பாக மாற்றமடைந்துள்ளன. இவை இலைத்தொழில் தண்டு (ஃபில்லோகிளாட்) (ஒப்பன்ஷியா) எனப்படுகின்றன...
• வேறு சில தாவரங்களில் ஒன்று அல்லது அரிதாக இரண்டு கணுவிடைப் பகுதிகள் சதைப்பற்றுள்ள பசுமையான அமைப்பாக மாறுபாடு அடைந்துள்ளது. இவைகிளாடோடு (ஆஸ்பராகஸ்) எனப்படும்.
• சிலவற்றில் இலைக் காம்பானது சதைப்பற்றுள்ள இலை போன்று உருமாற்றம் அடைந்துள்ளது. இது காம்பிலை (ஃபில்லோடு) (அக்கேஷியா மெலனோசைலான்) என அழைக்கப்படுகிறது.
அ) சதைப்பற்றுடைய வறண்ட நிலத் தாவரம்
ஆ) சதைப்பற்றற்றது - பல்லாண்டு வாழ்பவை - கெப்பாரிஸ்
இ) கிளடோடு - அஸ்பராகஸ்
ஈ) காம்பிலை - அக்கேஷியா
தண்டு, இலை ஆகியவை பல தூவிகளால் சூழப்பட்டுள்ள வறண்ட நிலத் தாவரங்கள் ட்ரைக்கோஃபில்லஸ் தாவரங்கள் என அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டு : பூசணி வகைகள். (மிலோத்ரியா மற்றும் முகியா)
இலைகள்
• சூரிய ஒளி மற்றும் வெப்பத்தினைப் பிரதிபலிக்க உதவும் தோல் போன்றும், பளபளப்பாகவும் உள்ள இலைகள் பொதுவாகக் காணப்படுகின்றன.
• யூஃப்போர்பியா, அக்கேஷியா, ஜிஜிபஸ், கெப்பாரிஸ் போன்ற தாவரங்களில் இலையடிச் செதில்கள் முட்களாக மாறுபாடு அடைந்துள்ளன.
• முழு இலைகளும் முட்களாகவோ (ஒபன்ஷியா),மற்றும் செதில்களாகவோ (ஆஸ்பராகஸ்) மாற்றுரு அடைந்து காணப்படுகிறன.
உள்ளமைப்பில் தக அமைவுகள்:
• நீராவிப் போக்கின் காரணமாக நீர் இழப்பினைத் தடுப்பதற்காகப் பல்லடுக்கு புறுத்தோலுடன் தடித்த கியூட்டிகளும் காணப்படுகின்றன.
• ஸ்கிலிரங்கைமாவினாலான புறத்தோலடித்தோல் (Hypodermis) நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
• உட்குழிந்த குழிகளில், தூவிகளுடன் கூடிய உட்குழிந்தமைந்த இலைத்துளைகள் (Sunken stomata) கீழ்புறத் தோலில் மட்டுமே காணப்படுகின்றன.
• இரவில் திறக்கும் (Scota active stomata) வகையான இலைத் துளைகள் சதைப்பற்றுள்ள தாவரங்களில் காணப்படுகின்றன.
• பல்லடுக்கு கற்றை உறை கொண்ட வாஸ்குலத் தொகுப்புகள் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
• இலையிடைத் திசுவானது பாலிசேடு மற்றும் பஞ்சு திசுவாக நன்கு வேறுபாடு அடைந்துள்ளது.
• சதைப்பற்றுள்ளவற்றில் தண்டுப்பகுதியில் நீர் சேமிக்கும் திசுக்களைப்பெற்ற பகுதியாக விளங்குகிறது.
வாழ்வியல் தக அமைவுகள்
• பெரும்பலான வாழ்வியல் நிகழ்வுகள் நீராவிப் போக்கினைக் குறைக்கின்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
• வாழ்க்கை சுழற்சியைக் குறுகிய காலத்திலேயே முடித்துக் கொள்கின்றன (குறுகிய காலம் வாழும் ஒரு பருவத்தாவரங்கள்)
• மிதமான சூழ்நிலையில் (மிக ஈரமாகவோ அல்லது மிக வறண்டோ அல்லாத) வாழும் தாவரங்கள் வளநிலை தாவரங்கள் என அழைக்கப்படுகின்றன.
• இவை பொதுவாக நிலத் தாவரங்கள் என அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டு: சோளம் (Maize) மற்றும் செம்பருத்தி (Hibiscus)
புற அமைப்பில் தக அமைவுகள்:
• வேர் தூவிகள் மற்றும் வேர் முடிச்சுகளுடன் வேர் தொகுப்பானது நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
• தண்டு பொதுவாகத் தரைக்கு மேலே தடித்து நன்கு கிளைத்துக் காணப்படுகிறது.
• இலைகள் பொதுவாகப் பெரிய, பரந்த, மெல்லிய, பல வடிவங்களுடன் காணப்படுகிறது.
உள்ளமைப்பில் தக அமைவுகள்:
• தரைமேல் பகுதியின் தாவரப் பாகங்களில் மிதமான கியூட்டிகிள் வளர்ச்சி அடைந்து காணப்படுகிறது.
• நன்கு வளர்ச்சியடைந்த புறத்தோல் மற்றும் இலைத்துளைகள் பொதுவாக இரு புறத்தோல்களிலும் காணப்படுகின்றன.
• இலையிடைத் திசு நன்கு வேறுபட்ட பாலிசேடு மற்றும் பஞ்சு பாரங்கைமாவினை கொண்டுள்ளது.
• வாஸ்குலத்திசுக்கள் மற்றும் வலுவூட்டும் திசுக்கள் மிதமான வளர்ச்சியுடன் நன்கு வேறுபாடு அடைந்து காணப்படுகிறன.
வாழ்வியல் தக அமைவுகள்
• அனைத்து வாழ்வியல் நிகழ்வுகளும் இயற்கையாகவே காணப்படுகிறது.
• நீர் பற்றாக்குறை ஏற்படுமானால் அறை வெப்ப நிலைகளில் தற்காலிக வாடல் நிலையை ஏற்படுத்தி கொள்கின்றன.
கோடைக் காலங்களில் வறண்ட நிலத்தாவரங்களாகவும், மழைக்காலங்களில் வளநிலத் தாவரங்களாகவோ அல்லது நீர்வாழ் தாவரங்களாகவோ செயல்படும் தாவரங்கள் ட்ரோப்போபைட்கள் (Tropophytes) என அழைக்கப்படுகின்றன.
மற்ற தாவரங்களின் மேல் (ஆதாரத் தாவரங்கள்) தொற்றி வாழ்பவை தொற்றுத் தாவரங்கள் எனப்படுகின்றன. இதில் ஆதாரத் தாவரத்தை உறைவிடத்திற்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்கின்றன. அனால் நீர் அல்லது உணவினைப் பெற்றுக் கொள்வதில்லை. தொற்றுத் தாவரங்கள் பொதுவாக வெப்ப மண்டல மழைக் காடுகளில் அதிகம் காணப்படுகின்றன.
எடுத்துக்காட்டு: ஆர்கிட்டுகள், வன்கொடிகள் (Lianas), தொங்கும் மாஸ்கள், மணி தாவரங்கள்.
புற அமைப்பில் தக அமைவுகள் :
• வேர்த் தொகுப்புகள் விரிவாக வளர்ச்சி அடைந்துள்ளது. இதில் இருவகை வேர்கள் காணப்படுகின்றன. இவை அ) பற்று வேர்கள் மற்றும் ஆ) உறிஞ்சும் வேர்கள்.
• தொற்றுத் தாவரங்களின் பற்று வேர்கள் (Clinging roots) ஆதாரத் தாவரங்க ளின் மீது உறுதியாக நிலை நிறுத்த உதவுகின்றன.
• நிலப்புற வேர்கள் (Aerial roots) பசுமையானது. இவை கீழ்நோக்கித் தொங்கிக் கொண்டிருப்பவை. மேலும் இது வளி மண்டலத்திலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்காக வெலாமன் (Velamen) என்ற பஞ்சு போன்ற திசுவுடையது.
• சில தொற்றுத் தாவரங்களின் தண்டு சதைப் பற்றுள்ளதாகவும் மற்றும் போலி குமிழ்களையோ அல்லது கிழங்குகளையோ உருவாக்குகின்றன.
• இலைகள் பொதுவாகக் குறைந்த எண்ணிக்கையிலும், தடிப்பான தோல் போன்றும் காணப்படுகின்றன.
• கொன்று உண்ணிகளிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ளத் தொற்று தாவரக்கூட்டங்களில் மிர்மிகோஃபில்லி பொதுவாகக் காணப்படுகிறது.
• கனிகள் மற்றும் விதைகள் மிகவும் சிறியவை. பொதுவாக இவை காற்று, பூச்சிகள் மற்றும் பறவைகள் மூலம் பரவுகின்றன.
உள்ளமைப்பில் தக அமைவுகள்:
• பல்லடுக்கு புறத்தோல் காணப்படுகிறது. வெலாமன் திசுவினை அடுத்துச் சிறப்பாக அமைந்த எக்சோடெர்மிஸ் (Exodermis) அடுக்கு ஒன்று காணப்படுகிறது.
• நீராவிப் போக்கினை வெகுவாகக் குறைப்பதற்காகத் தடித்த கியூட்டிகிள் மற்றும் உட்குழிந்த இலைத்துளைகள் ஆகியன காணப்படுகின்றன.
• சதைப்பற்றுள்ள தொற்றுத்தாவரங்களில் நீரினைச் சேமிக்க நன்கு வளர்ச்சி அடைந்த பாரங்கைமா திசுக்கள் காணப்படுகின்றன.
வாழ்வியல் தக அமைவுகள்
• நீரைச் சிறப்பாக உறிஞ்ச வெலாமன் திசு உதவுகிறது.
மிகையான உப்புகள் காணப்படும் நிலப்பகுதியில் வளரும் சிறப்பு வகை தாவரங்கள் உவர் சதுப்பு நிலவாழ்த் தாவரங்கள் என அழைக்கப்படுகின்றன.
எடுத்துக்காட்டு: ரைசோஃபோரா, சொனரேஸியா மற்றும் அவிசென்னியா
இவை கடற்கரை ஓரங்களிலும், முகத்துவாரங்களிலும் வாழ்கின்றன. இங்கு நிலம் ஈரத்தன்மையொடிருந்தாலும் வாழ்வியல் ரீதியாக உலர்தன்மையுடையது. தாவரங்கள் உப்பு நீரை நேரடியாகப் பயன்படுத்த முடியாது. ஆகையால் அவை உப்பை வடிகட்டுவதற்காக வாழ்வியல் செயல்முறைகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. இவ்வகையான தாவரக்கூட்டங்கள் சதுப்பு நிலக்காடுகள் அல்லது அலையாத்திக்காடுகள் (Mangrove forest) என அழைக்கப்படுகின்றன. இதில் வாழும் தாவரங்கள் சதுப்புநிலத் தாவரங்கள் என அறியப்படுகின்றன.
புற அமைப்பில் தக அமைவுகள்:
• மித வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படும் உவர் சதுப்பு நிலத்தாவரங்கள் சிறு செடிகளாகவும், வெப்ப மண்டலப்பகுதிகளில் காணப்படும் உவர் சதுப்பு நிலத் தாவரங்கள் பெரும்பாலும் புதர் செடிகளாகவும் காணப்படுகின்றன.
• இயல்பான வேர்களுடன் கூடுதலாக முட்டு வேர்கள் (Stilt roots)இவற்றில் தோன்றுகின்றன. புவிஈர்ப்புவிசைக்கு எதிராக இவற்றில் தோன்றும் சிறப்பு வகை வேர்கள் நிமட்டோஃபோர்கள் (Pneumatophores) எனப்படுகின்ற ன. அதில் அமைந்துள்ள நிமத்தோடுகள் (Pneumathodes) கொண்டு தாவரம் அதற்குத் தேவையான அளவு காற்றோட்டத்தைப் பெறுகிறது. இவை சுவாசிக்கும் வேர்கள் (Breathing roots) எனவும் அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டு : அவிசென்னியா.
• தாவர உடலத்தின் தரைமேல் பகுதிகள் தடித்த
கியூட்டிக் கிளை பெற்றுள்ளது.
• இலைகள் தடித்தவை, முழுமையானவை, சதைப்பற்றுள்ளவை, பளபளப்பானவை. சில சிற்றினங்களில் இலைகள் காணப்படுவதில்லை (Aphyllus)
• கனிக்குள் விதை முளைத்தல் (Vivipary)வகையான விதை முளைத்தல் அதாவது கனியில் உள்ள போதே விதைகள் முளைப்பது உவர் சதுப்பு நிலத் தாவரங்களில் காணப்படுகிறது.
உள்ளமைப்பில் தக அமைவுகள்:
• தண்டில் காணப்படும் சதுர வடிவப் புறத்தோல் செல்கள் மிகையான க்யூட்டின் பூச்சைப் பெற்றிருப்பதுடன் அவற்றில், எண்ணெய்ப் பொருட்கள் மற்றும் டான்னின் நிரம்பிக் காணப்படுகின்றன.
• தண்டின் புறணிப் பகுதியில் வலுவூட்டவதற்காக நட்சத்திர வடிவ ஸ்கிலிரைட்களும், 'H' வடிவ தடித்த அடர்த்தியுற்ற ஸ்பிகியூல்களும் காணப்படுகின்றன.
• இலைகள் இருபக்க இலைகளாகவோ அல்லது சமபக்க இலைகளாகவோ இருப்பதுடன் உப்பு சுரக்கும் சுரப்பிகளையும் பெற்றுள்ளன.
வாழ்வியல் தக அமைவுகள்:
• சில தாவரங்களின் செல்கள் அதிக அழுத்தச் சவ்வூடு பரவல் அழுத்தத்தைக் கொண்டுள்ளன.
• விதை முளைத்தலானது கனி தாய் தாவரத்தில் இருக்கும்போதே நடைபெறுகின்றது (கனிக்குள் விதை முளைத்தல்)
தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்களில் (நாகப்பட்டினம், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர்), இவ்வகை - காடுகள் காணப்படுகின்றன. கஜா புயல் (Gaja cyclone) விளைவாக (நவம்பர் 2018) முத்துப்பேட்டையில் மட்டும் (திருவாரூர் மாவட்டம்) குறைந்த அளவு சேதமே ஏற்பட்டது. இதற்கு அங்குள்ள அலையாத்திக்காடுகளே (உவர் சதுப்பு நிலக்காடுகள்) காரணம்.