தாவரவியல் - சூழ்நிலையியல் கோட்பாடுகள் : பாடச்சுருக்கம் | 12th Botany : Chapter 6 : Principles of Plant Ecology
பாடச்சுருக்கம்
உயிரினங்களுக்கும் சூழலுக்கும் இடையேயுள்ள தொடர்பினைப் பற்றிய உயிரியல் பிரிவு சூழ்நிலையியல் எனப்படும். சூழ்நிலையியல் முக்கியமாக இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை சுய சூழ்நிலையியல் மற்றும் கூட்டுச் சூழ்நிலையியல் ஆகும். பல்வேறு உயிரினங்களும் சூழலோடு ஒருங்கிணைந்துள்ளன. சூழல் என்பது (சுற்றுப்புறம்) இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய கூறுகளை உள்ளடக்கியது.
இந்தக் காரணிகள் ஒரு உயிரினத்தின் சூழலை உருவாக்கும் உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகள் என வகைப்படுத்தப்படுகின்றன. இருப்பினும் சூழல் காரணிகள் நான்கு வகுப்புக்களாகப் பிரிக்கப்படுகின்றன. இவை பின்வறுமாறு 1. கால நிலை காரணிகள், 2 மண் காரணிகள், 3. நிலப்பரப்பியல் காரணிகள், 4. உயிரி காரணிகள்.
கால நிலையானது தாவர வாழ்க்கையினைக் கட்டுப்படுத்தும் முக்கியமான இயற்கை காரணிகளில் ஒன்றாகும். கால நிலை காரணிகள் ஒளி, வெப்பநிலை, நீர், காற்று மற்றும் தீ ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் உருவான மண்ணின் இயற்பியல் மற்றும் வேதியியல் கூறமைப்பை பெற்ற ஒரு உயிரற்ற காரணி மண் காரணிகள் எனப்படுகின்றன. இது புவியின் மேற்பரப்பு வடிவம் மற்றும் அம்சங்களை ஆய்வது ஆகும். இது இயற்கை நில அமைவு என அழைக்கப்படுகிறது. சூரிய ஒளி கதிர்வீச்சு , வெப்ப நிலை, ஈரப்பதம், மழைப்பொழிவு, விரிவகலம், குத்துயரம் ஆகியவற்றின் ஒருங்கமைப்பால் எந்தவொரு பகுதியின் தட்ப வெப்ப நிலை இவற்றால் தீர்மானிக்கப்படுகிறது. தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஆகிய உயிரினங்களுக்கிடையே ஏற்படும் இடைச்செயல் விளைவுகள் உயிரிக்காரணிகள் என அழைக்கப்படுகின்றன. அவை தாவரங்களின் மீது குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
ஒரு சூழ்நிலையில் வெற்றிகரமாக வாழ உயிரினங்களின் கட்டமைப்பில் எற்படும் மாறுபாடுகள் உயிரினங்களின் தக அமைவுகள் என்று அழைக்கப்படுகின்றன. வாழ்விடத்தில் நிலவும் சூழலுக்கேற்ப உயிரினங்கள் உயிர்வாழ இத் தக அமைவுகள் உதவுகின்றன.
தாவரங்களின் வாழ்விடங்கள் மற்றும் அதற்கான தக அமைவுகளைப் பொறுத்து அவை கீழ்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன. நீர் வாழ் தாவரங்கள், வறண்ட நில வாழ் தாவரங்கள், வள நிலத் தாவரங்கள், தொற்றுத்தாவரங்கள் மற்றும் உவர் சதுப்பு நில வாழ் தாவரங்கள் என்பன இவைகளாகும்.
ஒரு தாய் தாவரத்திலிருந்து பல்வேறு தூரத்திற்குக் கனிகள் மற்றும் விதைகள் பரவுதலே விதை மற்றும் கனி பரவுதல் என அழைக்கப்படுகிறது. இது காற்று, நீர் மற்றும் விலங்குகள் போன்ற சூழ்நிலை காரணிகளின் உதவியுடன் நடைபெறுகிறது.
கலைச்சொல் அகராதி
நுண்ணுயிரி எதிர்ப்பு: இரண்டு உயிரினங்களுக்கு இடையேயான கூட்டமைப்பில் ஒன்று தீமையை விளைவிக்கும்.
உயிரிக்கோளம்: புவியில் காணப்படும் அனைத்து உயிரினங்களையும் உள்ளடக்கிய உறை (அடுக்கு).
குழுமம்: ஒரே இடத்தில் வாழும் உயிரினங்களின் தொகுப்பு
ஃபுளோரா: ஒரு குறிப்பிட்ட பகுதியில் காணப்படுகின்ற தாவர வகைகள்
பழ உண்ணிகள் : பழங்களை உண்ணும் உயிரினங்கள்
எக்கிஸ்டோதெர்ம்கள்: (70 °C கீழுள்ள வெப்பநிலை கொண்டது) மிகவும் குறைந்த வெப்பநிலை கொண்ட பகுதி மற்றும் இங்கு காணப்படும் ஓங்கிய தாவரக்கூட்டம் மலைமுகடு பனிக்காடுகள் ஆகும்.
நிலப்பரப்பு: புலப்படும் ஓர் நிலப்பரப்பின் பண்புகள்
வன்கொடிகள்: வெப்பகால நிலை கொண்ட காடுகளில் காணப்படும் கட்டைத்தன்மையுடைய பின்னுகொடிகள்
மெகாதெர்ம்கள்: (240 °Cக்கு அதிகமுள்ள வெப்பநிலை கொண்டது) வருடம் முழுவதும் அதிக வெப்பநிலை கொண்ட பகுதி மற்றும் இங்கு காணப்படும் ஓங்கிய தாவரக் கூட்டம் வெப்பமண்டல மழைக்காடுகளாகும்.
மீசோதெர்ம்கள்: (170 °C மற்றும் 240 °Cக்கு இடைப்பட்ட வெப்பநிலை கொண்டது) அதிக மற்றும் குறைந்த வெப்பநிலைகள் மாறிமாறி காணப்படும் பகுதி மற்றும் இங்கு காணப்படும் தாவரக்கூட்டம் வெப்பமண்டல இலையுதிர்க் காடுகளாகும்.
மைக்ரோதெர்ம்கள்: (70 °C மற்றும் 170 °Cக்கு இடைப்பட்ட வெப்பநிலை கொண்டது). குறைந்த வெப்பநிலை கொண்ட பகுதி மற்றும் இங்கு கலப்பு ஊசியிலை காடுகளைக் கொண்டுள்ளது.
உயிரினக்கூட்டம்: ஒரே சிற்றினங்களைக் கொண்ட பல தொகுப்புகளாலான உயிரினங்களைக் கொண்டது.
இரவில் திறக்கும் இலைத்துளை வகை: இரவு நேரங்களில் திறந்தும், பகல் நேரங்களில் மூடியும் காணப்படுகின்ற சதைபற்றுள்ள தாவரங்களில் காணப்படுகின்ற இலைத்துளைகள்.
கனிக்குள் விதை முளைத்தல்: விதை அல்லது கரு முளைத்தலானது கனி தாய்த் தாவரத்தில் இருக்கும்போதே நடைபெறுவதாகும்.