1. பொருளாதாரம் சார்ந்த காரணிகள்
பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் எட்டு முக்கியமான காரணிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
1. இயற்கை வளங்கள்
ஒரு நாடு பெற்றுள்ள இயற்கை வளங்களின் அளவு அந்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் காரணியாகும். முன்னேற்றத்துக்கு தேவைப்படும் அளவுக்கு ஒரு நாடு இயற்கை வளங்களை பெற்றிருக்க வேண்டும். வளங்கள் பற்றாக்குறையாக உள்ள நாடு விரைவாக முன்னேற இயலாது. ஆனால், ஜப்பான் நாட்டில் வளங்கள் பற்றாக்குறையாக இருந்தாலும் முன்னேறிய நாடாக உள்ளது. ஏனென்றால் தேவையான வளங்களை இறக்குமதி செய்து கொள்ளுகிறது. இந்தியா அதிக அளவில் வளங்களைப் பெற்றிருந்தாலும் முன்னேற்றம் குறைந்த நாடாக உள்ளது.
2) மூலதன உருவாக்கம்
மூலதனம் பொருளாதாரத்தின் அனைத்துச் செயல்பாட்டிற்கும் அடிப்படையானதாகும். ஏற்கனவே உள்ள இருப்புடன் தற்போது கூடும் நிகர அளவு மூலதனமே மூலதன உருவாக்கம் என்பர். இதில் கண்ணுக்கு புலனாகக் கூடிய தொழிற்சாலைகள், இயந்திரங்களும், கண்ணுக்கு புலனாகாத உடல்நலம், கல்வி மற்றும் ஆராய்ச்சி போன்ற இரண்டு இனங்களுமே இதில் உள்ளடங்கும். தொழிலாளர்களின் உற்பத்தி திறனை உயர்த்தி வருமானத்தை அதிகரிக்க மூலதன ஆக்கம் உதவுகிறது. புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் இயற்கை வளங்களை நன்முறையில் பயன்படுத்தவும். தொழில்மயமாதலுக்கும், மற்றும் அங்காடி விரிவாக்கத்திற்கும் உதவுகிறது. இதனால் பொருளாதாரம் வளர்ச்சிக்கு முக்கியமானதாகும்.
3) சந்தையின் அளவு
சந்தை அளவானது பெரிய அளவில் இருந்தால் கூடுதலான உற்பத்தி, அதிக வேலைவாய்ப்பு மற்றும் தேசிய தலா வருமான உயா'வு ஆகியவற்றைத் தூண்டும். இவ்வாறு வளர்ந்த நாடுகள் உலக வர்த்தக மையத்தின் வழியாக சந்தை அளவை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வதன் மூலம் பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவுகிறது.
4) கட்டமைப்பு மாற்றம்
கட்டமைப்பு மாற்றம் என்பது பொருளாதாரத்தில் தொழில் கட்டமைப்பில் எற்படும் மாற்றத்தைக் குறிக்கும். நாட்டின் பொருளாதாரத்தின் மூன்று துறைகளான பிரிக்கப்படுகின்றன. அதில் முதன்மைத் துறையானது வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, காடுகள் போன்றவற்றை உள்ளடக்கியும், இரண்டாம் துறையானது தொழிற்சாலை உற்பத்தி, கட்டுமானப்பணிகள் போன்றவற்றை உள்ளடக்கியும் மற்றும் சார்புத் துறைகளான வாணிபம், வங்கி மற்றும் வர்த்தகம்போன்றவற்றையும் உள்ளடக்கியிருக்கும். எந்த ஒரு பொருளாதாரமும் முழுக்க வேளாண்மையை மட்டும் சார்ந்து இருந்தால் பின்தங்கிய நிலையிலேயே இருக்கும்..
5) நிதியியல் முறை
நிதியியல் முறை என்பது ஒரு நாட்டில் திறமையான மற்றும் சிறந்த முறையில் கட்டமைக்கப்பட்ட வங்கி முறையினைக் கொண்டதாகும். ஒழுங்குற அமைக்கப்பட்டட பண அங்காடியானது தேவையான மூலதனத்தை வழங்குகிறது.
6) விற்பனைக்குரிய உபரி
வேளாண் துறையில் குடும்பத்திற்கான நுகர்வுத் தேவையைவிட கூடுதலாக செய்யப்படும் உற்பத்தியை விற்பனைக்குரிய உபரி என்கிறோம். இந்தக் கூடுதல் விளைப்பொருட்களை விவசாயிகள் சந்தையில் விற்று வருமானம் ஈட்டலாம். இது அவர்களுடைய வாங்கும் திறன் அதிகப்படுத்தும், இதனால் நாட்டில் பொருள் உற்பத்தி அதிகரித்து வேலைவாய்ப்பும், நாட்டு வருமானமும் உயர்ந்து நாடு முன்னேற்றமடையும்.
7) பன்னாட்டு வாணிகம்
பன்னாட்டு வாணிகத்தில் சாதகமான சூழ்நிலை இருந்தால் ஒரு நாடு போதுமான அளவு அந்நிய செலாவணியை கையிருப்பில் வைக்கமுடியும். அந்நிய செலாவணியை கையிருப்பு போதுமானதாக இருந்தால் அந்த நாட்டின் பணமாற்று வீதம் ஏற்ற இறக்கமின்றி நிலைத்திருக்கும்.
8) பொருளாதார அமைப்புமுறை
ஒரு நாடு தடையில்லா பொருளாதாரக் கொள்கையை கடைப்பிடித்தால் கட்டளைப் பொருளாதாரத்தைவிட வேகமான வளர்ச்சி பெறும். இது சில நாடுகளுக்கு மட்டும் பொருந்தும்.
2. பொருளாதாரம் சாராத காரணிகள்
"மனித வளம் சமுதாயத்தின் மனப்பான்மை, அரசியல் சூழ்நிலைகள் மற்றும் வரலாற்று நிகழ்வுகள் பொருளாதார முன்னேற்றத்தின் மிக அதிக அளவு ஆதிக்கம் செய்கின்றன. முன்னேற்றமடைவதற்கு மூலதனம் அடிப்படையானதே ஒழிய அதுமட்டுமே போதுமானதல்ல என ராகனர் நர்கஸ் தெளிவுபடுத்துகிறார்
1. மனித வளம்
மனித வளம் மனித மூலதனம் எனக் கூறப்படுகிறது. ஏனென்றால், இது உற்பத்தி திறனை அதிகப்படுத்தி நாட்டு வருமானத்தையும் உயர்த்தும் ஆற்றல் பெற்றுள்ளது. மக்களின் முன்னேற்றத்துக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் சுழற்சியான உறவு நிலவுகிறது. ஒரு நாட்டுக்கு கல்வியறிவுள்ள, உடல் நலமுள்ள மற்றும் திறமையான தொழிலாளர்கள் உற்பத்தித் திறன்மிக்க சொத்தாக கருதப்படுகிறார்கள். மக்களின் அறிவு, திறன்கள் மற்றும் உற்பத்தி செய்யும் தகுதி ஆகியவற்றை அதிகரிக்கும் செயலை மனித மூலதன ஆக்கம் எனலாம்.
பொது சுகாதாரம், கல்வி மற்றும் மக்களுக்கான வசதிகள் மீது செய்யப்படும் செலவுகள் மனித மூலதன ஆக்கத்தை அதிகரிக்கும். திறமைமிக்க மனிதர்கள் உற்பத்திக்கு பங்களித்து முன்னேற்றத்தைத் தீர்மானிக்கிறார்கள். உதாரணம் ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகள்.
2. தொழில் நுட்ப அறிவு
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவு வளரும் பொழுது உயர்வகை உற்பத்தி தொழில் நுட்பங்கள் பிறக்கும். புதிய தொழில் நுட்ப முறைகள் உற்பத்தி திறனை அதிகப்படுத்தும். இது பொருளாதாரம் முன்னேற்றத்துக் காரணமாகிவிடும் என ஜோசப் சும்பீட்டர் கூறுகிறார்.
3. அரசியல் சுதந்திரம்
பொருளாதார முன்னேற்றத்திற்கும் அரசியல் சுதந்திரத்திற்கும் நெருங்கிய தொடர்புடையது. இந்தியாவின் வறுமைக்கு இந்தியாவின் செல்வம் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் எடுத்து செல்லப்பட்டதே காரணம் என தாதாபாய் நவ்ரோஜி தனது" "வறுமையும் - இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி முறையும்" (Poverty and un - British Rule in India)' என்ற நூலில் எழுதியுள்ளார். பிரிட்டிஷ் ஆட்சி முறைதான் இந்தியாவில் வறுமை அதிகரிக்க முக்கியக் காரணமாக இருந்தது.
4. சமூக அமைப்பு
முன்னேற்றத்தின் பலன்கள் சமமாக அனைத்துத் தரப்பினருக்கிடையில் பகிர்ந்தளிக்கப்படும் என்ற நம்பிக்கை இருந்தால் தான், நாடு முன்னேற தூண்டும் செயல்களை செய்ய மக்கள் முன் வருவார்கள். பொருளாதார முன்னேற்றம் துரிதமாக நடைபெற மக்களின் பங்கெடுப்பது என்பது மிகவும் அவசியமானதாகும். குறைபாடுள்ள சமூக அமைப்புமுறையில் ஒரு சில பிரிவினர் மட்டும் முன்னேற்றத்தின் பலன்களை கூடுதலாக பெறுவதை அனுமதித்தால் பெரும்பான்மையான மக்கள் பொருளாதார முன்னேற்ற செயல்பாடுகளில் கலந்து கொள்ளமாட்டார்கள். முன்னேற்றத்தின் பலன் ஒரு சிலர் கொண்டு செல்வதை முதலாளித்துவத்தின் தோழமை பொருளாதார அமைப்பு என்கிறார்.
5. ஊழலற்ற அரசு நிர்வாகம்
பொருளாதாரம் முன்னேற்றமடைதலில் ஊழலும் பொருளாதார நேர்மையின்மையும் எதிர்மறை விளைவை உருவாக்கும் காரணிகளாகும். நாட்டு நிர்வாகத்தில் ஊழலை அகற்றாவிட்டால் முதலாளிகளும், வணிகர்களும் நாட்டின் வளங்களை சுரண்டி விடுவார்கள். இதனால் வரி ஏய்ப்பு அதிகரித்து ஊழல் பெருகி முன்னேற்றமே தடைபடும் நிலை உருவாகிவிடும்.
6. முன்னேற்றம் அடைவதற்கான விருப்பம்
விருப்பமிருந்தால்தான் மக்கள் எந்த ஒரு செயலையும் செய்து முடிப்பார்கள் பொருளாதார முன்னேற்றத்துக்கும் மக்களின் விருப்பம் அவசியம். விதிப்படிதான் எல்லாம் நடக்கும் என்பதை பெரும்பாலான மக்கள் நம்புவதும், வறுமையை தலைவிதியின் விளைவு என்றும் ஏற்றுக் கொண்டுவிட்டால் அந்த நாட்டில் பொருளாதார முன்னேற்றத்துக்கான வாய்ப்புக் குறைவாக இருக்கும்.
7. நீதிபோதனை, அறநெறி மற்றும் சமூக மதிப்புகள்
ஒழுக்க நெறிகளும் அறநெறி பற்றுதலும் சந்தையின் திறன்மிக்க செயல்பாட்டுக்கு அடிப்படைகளாகும். டக்ளஸ் சி. நார்த் "மக்கள் நேர்மையற்றவர்களாக இருந்தால் சந்தை செயல்படாது" என்கிறார்.
8. சூதாட்ட முதலாளித்துவம்
மக்கள் தங்களின் வருமானம் மற்றும் நேரத்தின் பெரும்பகுதியை பொழுது போக்கு நிகழ்ச்சிகளில், மது அருந்துவதில், சூதாடுவதில் செலவழித்தால் உற்பத்தி நடவடிக்கை பாதிக்கப்பட்டு பொருளாதார முன்னேற்றம் தடைபடும் என தாமஸ் பிக்கெட்டி எடுத்துரைக்கிறார்.
9. பரம்பரை சொத்துரிமை முதலாளித்துவம்
நிலம் உள்ளிட்ட சொத்து பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு பரம்பரையாக வந்து சேர்ந்தால் குழந்தைகள் கடின உழைப்பை விரும்பமாட்டார்கள். இது உற்பத்தித்திறனை குறைத்துவிடும் என தாமஸ் பிக்கெட்டி கூறுகிறார்.