பொருளாதாரம் - திட்டமிடல் | 12th Economics : Chapter 11 : Economics of Development and Planning

   Posted On :  17.03.2022 03:35 am

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 11 : பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல்

திட்டமிடல்

பொருளாதாரத் திட்டமிடல் என்பது தனியார் உற்பத்தி மற்றும் விநியோக நடவடிக்கைகளை கூட்டாக கட்டுப்படுத்துவது அல்லது ஒடுக்குவதை குறிப்பதாகும்

திட்டமிடல்


திட்டமிடலின் பொருள்

மைய திட்டமிடல் ஆணையத்தால் நன்கு வடிவமைக்கப்பட்ட, முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட குறிக்கோள்களையும், நோக்கங்களையும் அடைவதற்கான வழிமுறையே திட்டமிடல் ஆகும். பொருளாதாரம், அரசியல், சமூக அல்லது ராணுவ நோக்கங்களை திட்டமிடல் மூலம் அடைவதற்கான இலக்குகளாக இருக்கலாம்.


திட்டமிடலின் இலக்கணங்கள்

பொருளாதாரத் திட்டமிடல் என்பது தனியார் உற்பத்தி மற்றும் விநியோக நடவடிக்கைகளை கூட்டாக கட்டுப்படுத்துவது அல்லது ஒடுக்குவதை குறிப்பதாகும்

- ராபின்ஸ் 

"பொருளாதாரத் திட்டமிடல் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளை அடைய உரிய பொறுப்பில் உள்ளவர்கள் நிதானமாக சிந்தித்து, இருக்கக்கூடிய பொருளாதார வளங்களை அதிக அளவில் பயன்படுத்த சுட்டிக்காட்டும் வழிமுறைகளே ஆகும்".

- டால்ட்டன்



1. இந்தியாவில் திட்டமிடல்

ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அடைய வேண்டிய இலக்குகளை, முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட பொருளாதார நோக்கங்களையும், வழிகாட்டுதல்களையும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட முடிவுகளையும் திட்டங்களையும் உள்ளடக்கிய வரைபடமே பொருளாதார திட்டமிடல் ஆகும். தற்போதைய பொருளாதார திட்டமிடல் சிந்தனை மிகவும் புதியது, ஆனால் மார்க்சிச சோசலிசத்தில் அடிப்படையில் ஓரளவு வேரூன்றியுள்ளது. 20 ஆம் நூற்றாண்டில், அறிஞர்கள், கோட்பாட்டாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் ஐரோப்பாவின் நிலையை முன்னிருத்தி, முதலாளித்ததுவத்தையும், சமூகத்தில் ஏற்படும் ஏற்றத்தாழ்வினையும் நிறுத்த அரசின் தலையிடுதல் அவசியம் என்றனர்.

சோவியத் ஒன்றியம் திட்டமிடலை 1928-ல் செயல்படுத்தத் துவங்கியது. பொருளாதாரத் திட்டமிடலே சோவியத் நாட்டை வல்லரசு நாடாக மாற்ற உதவியது. 1930-களில் ஏற்பட்ட பொருளாதாரப் பெருமந்தம் அமெரிக்காவில் மக்களின் வாங்கும் திறனைக் குறைத்து சிக்கலான சூழ்நிலையை உருவாக்கியதால், பொருளாதாரத் திட்டமிடலின் அவசியம் என்னும் கருத்து வலுவடைந்தது. நாட்டின் வளங்கள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் சிறப்பாக ஒதுக்கீடு செய்ய இரண்டாம் உலகப்போரினால் ஏற்பட்ட சூழல் நிர்பந்தத்தை உருவாக்கியது. போரின் விளைவுகளை சமாளிக்க திட்டமிடல்தான் சரியான தீர்வு என்ற சிந்தனை பரவத் தொடங்கியது.

இந்திய விடுதலைக்குப்பிறகு 1948-ல் தொழில் கொள்கை அறிவிக்கப்பட்டது. இதில் மையத் திட்டக்குழு மற்றும் கலப்புப் பொருளாதார அமைப்பு முறை ஆகிய இரண்டையும் அமைக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இந்திய அரசியலமைப்பு சட்டம் ஜனவரி 26, 1950 அன்று நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. திட்டக் குழு மார்ச் 15, 1950ல் அமைக்கப்பட்டது. ஏப்ரல் 1, 1951ல் முதல் திட்ட காலம் துவங்கியது. இதில் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலமாக 1951 முதல் 1956 வரை ஏற்படுத்தப்பட்டது. இந்தியாவில் திட்டமிடுதலின் பரிணாம வளர்ச்சியை கீழ்கண்ட நிகழ்வுகளிலிருந்து புரிந்துக் கொள்ளலாம்.

1. சர்.எம்.விஸ்வேஸ்வரய்யா (1934) புகழ்பெற்ற பொறியியல் வல்லுநரும் அரசியல்வாதியுமான எம். விஸ்வேஸ்வரய்யா 1934-ல் இந்தியாவில் திட்டமிடுதலுக்கான அடித்தளத்தை அமைத்தார். அவர் தனது ஆலோசனையாக பத்தாண்டுத் திட்டமொன்றை அவர் எழுதிய "இந்திய பொருளாதார திட்டமிடல்" என்ற புத்தகத்தில் விளக்கியுள்ளார்.

2. ஜவஹர்லால் நேரு (1938) : "தேசியத் திட்டக் குழு" ஒன்றை அமைத்தார். அன்றைய அரசியல் சூழ்நிலை காரணமாகவும், இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்ததாலும் நேருவின் முயற்சிகள் நின்றுவிட்டன.

3. பாம்பே திட்டம் (1940) மும்பையின் முன்னனி தொழிலதிபர்கள் பாம்பே திட்டம் என்ற திட்டத்தை1938-ல் முன்மொழிந்தனர். இது பதினைந்து ஆண்டுகளுக்கான தொழில் முதலீட்டுத் திட்டமாகும்.

4. எஸ். என் அகர்வால் (1944) என்பவர் "காந்தியத் திட்டம்" என்ற திட்டத்தை 1944-ல் வழங்கினார். இது வேளாண்மை மற்றும் கிராமியப் பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டமாகும்.

5. எம்.என்.ராய் (1945): மக்கள் திட்டம் என்பதை வடிவமைத்தார். இது வேளாண்மை உற்பத்தி மற்றும் விநியோகத்தை இயந்திர மயமாக்குவதையும் நுகர்வுப் பொருட்களை அரசே விநியோகம் செய்யவேண்டும் என்பதையும் வலியுறுத்தியது.

6. ஜெயப்பிரகாஷ் நாராயணன் (1950): "சர்வோதயத் திட்டம்" ஒன்றை முன்மொழிந்தார். இது காந்தி மற்றும் வினோபா பாவே ஆகியோரின் கருத்துக்களின் உத்வேகத்தால் தயாரிக்கப்பட்டத் திட்டமாகும்.  மட்டுமல்லாமல் சிறு மற்றும் குடிசைத் தொழில்களுக்கு ஊக்கமளிக்கும் கூறுகளைக் கொண்டத் திட்டமாகும்.

இந்த ஆறுத் திட்டங்களையும் கவனமாக ஆராய்ந்து திட்டக்குழுவை அமைத்து ஐந்தாண்டுத் திட்டங்களாக செயல்படுத்த ஜவஹர்லால் நேரு முடிவெடுத்தார். அவரே இந்திய அரசின் திட்டக் குழுவின் முதல் தலைவராவார்.



2. திட்டமிடலுக்கு ஆதரவான கருத்துக்கள் 

கீழ்க்கண்ட வகைகளின் திட்டமிடல் வலியுறுத்தப்படுகிறது.

1. நாட்டின் சந்தைகளின் இயக்கத்தை முடுக்கிவிடுதலும் உறுதியாக்குதலும்: பின்தங்கிய நாடுகளில் சந்தை சக்திகள் சரிவர இயங்காதததற்கு அறியாமையும், பிரபலமும் இல்லாததே ஆகும். நாட்டில் பெரும்பாலான பகுதியில் பணமாற்ற பறிமாற்றம் நடைபெறுகிறது. பொருட்கள், உற்பத்திக் காரணிகள், பணம் மற்றும் மூலதன அங்காடிகள் அமைப்புமுறை ஆகியவை ஒழுங்குற அமைக்கப்படவில்லை. எனவே, திட்டமிட்ட பொருளாதாரமே அங்காடிப் பொருளாதராத்திற்கு சிறந்த மாற்றாக கருதப்படுகிறது.

2. வேலையின்மையை அகற்றுதல்: மூலதன குறைவும், தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பும் ஏற்படுவதால் அதிகரித்துவரும் தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வேலை வாய்ப்பை உருவாக்குவது அரசுகளுக்கு சவாலாக உள்ளது. பின்தங்கிய நாடுகளில் வேலையின்மை மற்றும் மறைமுக வேலையின்மையை அகற்ற திட்டமிடுதல் அவசியமாகும்.

3. சமமான முன்னேற்றம் ஏற்படுத்துதல்: பொருளாதாரத்தின் பல துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள போதுமான பெரிய நிறுவனங்கள் இல்லாத சூழ்நிலையில் திட்டக்குழுவே சரிசம முன்னேற்றத்தை ஏற்படுத்த உதவும். பின்தங்கிய நாடுகளில் வேளாண்மை , தொழில், சமூகப் கட்டமைப்பு, உள்நாட்டு மற்றும் பன்னாட்டு வாணிகம் ஆகியத் துறைகளின் முன்னேற்றம் நாட்டின் பொருளாதார முன்னேற்றம் விரைவாக நடைபெறத் தேவைப்படுகிறது.

i) வேளாண் துறை மற்றும் தொழில்துறை முன்னேற்றம்: வேளாண்துறையும் தொழில்துறையும் ஒன்றுடன் ஒன்று இணைந்திருப்பதால் வேளாண் துறையும், தொழில் துறையும் சேர்ந்து முன்னேற்றமடைய வேண்டியுள்ளது. வேளாண்துறையை சீர்படுத்தும்போது அதில் உள்ள உபரியான தொழிலாளர்களை தொழில் துறை ஈர்த்துக் கொள்ளும். வேளாண் துறையின் வளர்ச்சியினால் தொழில் துறைக்கு தேவையான இடுபொருள் கிடைக்கும். இதனால் வேளாண்மையுடன் தொழில்துறையும் வளரும்.

ii) கட்டமைப்பு முன்னேற்றம்: வேளாண்துறை மற்றும் தொழில்துறையின் முன்னேற்றம் என்பது பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்பு இல்லாமல் முன்னேற்றம் பெறமுடியாது. பாசனக் கால்வாய்கள், சாலைகள், தொடர்வண்டிப்பாதைகள், ஆற்றல் வளம் போன்றவற்றை ஏற்படுத்துதல் என்பது வேளாண் மற்றும் தொழில் துறைக்கு மிக முக்கியமானதாகும். கட்டமைப்பு அமைக்க அதிகமான மூலதனம் மற்றும் நீண்ட பலன்தரும் சில காலங்கள் எடுக்கும், மேலும் குறைவான வெளியீடுகளைத் தரக்கூடியவை. அரசு மட்டுமே வலிமையான கட்டமைப்பை திட்டமிடல் மூலம் ஏற்படுத்த முடியும்.

iii) பண மற்றும் மூலதன அங்காடியின் முன்னேற்றம்: உள்நாட்டு மற்றும் பன்னாட்டு வாணிபங்கள் வளர்ச்சி பெற வேளாண்துறை, தொழில் துறை, சமூக, பொருளாதார கட்டமைப்புகளில் பங்களிப்பும் மட்டுமல்லாது நிதி நிறுவனங்களின் பங்களிப்பு அவசியமானதாகும். பண மற்றும் மூலதன அங்காடி பின்தங்கிய நாடுகளில் குறைவாக உள்ளது. இது தொழில் மற்றும் வாணிப வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. எனவே உறுதியான பணம் மற்றும் மூலதன அங்காடியை உருவாக்க திட்டமிடல் என்பது அவசியமாகும்.

4. திட்டமிடல் வறுமையையும் ஏற்றத்தாழ்வையும் குறைக்கும். திட்டமிடல் என்பது மட்டுமே பின்தங்கிய நாடுகள், நாட்டு வருமானம் மற்றும் தலா வருமானத்தை அதிகரிக்கவும், வறுமையும் ஏற்றத்தாழ்வுகளை குறைக்கவும் வேலைவாய்ப்பினை அதிகரிக்கவும் செய்கிறது. இந்த 65 ஆண்டுகளில் இவை நடந்ததா?

எனவே ஆர்தர் லூயிஸ், "பின்தங்கிய நாடுகளில் தேசிய வருவாயை உயர்த்துவதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகள் மிகவும் அவசியம், இதற்கு திட்டமிடல் என்பது வழிகளையும், வழிமுறையையும் கொண்ட ஒரு சாதனமாக திகழ்கிறது



3. திட்டமிடலுக்கு எதிரான வாதங்கள்

சந்தை இயங்காமல் தோல்வியடைந்ததால் அரசு திட்டமிடல் மூலம் தலையிடும் அவசியம் உருவானது. பொருளாதாரத் திட்டமிடுதலின் முக்கிய நோக்கம் வளர்ந்த நாடுகளில் பொருளாதார நிலைத்தன்மையை அடைவது, பின்தங்கிய நாடுகளில் வளர்ச்சியைப் பெறுவதாகும். திட்டமிடுதல் குறைகளற்ற பொருளாதாரக் கொள்கை எனவும் கருதிவிட முடியாது. இவை தனியார் முயற்சியை தடுக்கும், தேர்ந்தெடுத்தலின் உரிமையை முடக்கவும், நிர்வாகச் செலவு அதிகரிக்கவும், தானாகவே விலை நிர்ணய முறையை சரிசெய்வதை நிறுத்தவும் செய்கிறது. திட்டமிடலுக்கு எதிரான வாதங்களையும் குறைகளையும் கீழே புரிந்து கொள்வோம்.

1. தன் விருப்பம் போல் செயல்பட இயலாமை

தன் விருப்பம் போல் செயல்பட இயலாததால் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது. திட்டமிடல் கட்டுப்பாடுகளையும் வழிமுறைகளையும் விதித்து நாட்டிற்கு முதுகெலும்பாக உள்ளது. தலையிடா பொருளாதாரத்தில் நுகர்வு, பணியை தேர்வு செய்தல், உற்பத்தி செய்தல், மற்றும் வலை நிர்ணயம் செய்தல் ஆகியவற்றில் தன் விருப்பம் போல் முடிவெடுக்க உள்ள அனுமதி உள்ளது. ஆனால் திட்டமிட்ட பொருளாதாத்தில் சிக்கலான முடிவுகளை மத்திய திட்டக்குழு எடுக்கிறது. இது நுகர்வோர், உற்பத்தியாளர் மற்றும் பணியாளர்களின் கட்டுப்படுத்துகிறது. ஹேயக் எழுதிய "அடிமைத்தனத்திற்கான பாதை" என்னும் நூலில் மையப்படுத்தப்பட்ட திட்டமிடலில் மக்களின் பொருளாதார விடுதலைக் கட்டுப்படுத்தி நாட்டை மந்தநிலைக்கு இட்டுச் செல்லும், என கருத்து தெரிவிக்கிறார். அரசின் முடிவுகள் அனைத்தும் எப்பொழுதும் சரியாக இருப்பதில்லை . ஆனால் தனியார் உற்பத்தியாளர்களுக்கு சுதந்திரம் வழங்கும்போது, அதனை தவறாக பயன்படுத்தப்பட்டு, மக்களின் நலன் புறக்கணிக்கப்பட்டு, இலாபம் ஒன்றுக்கே மிக முக்கியத்துவம் வழங்கப்படும்.

2. தன் முனைப்புக் குறைதல்

மையப்படுத்தப்பட்டத் திட்டமிடலில் நடவடிக்கைகளில் ஊக்கப்படுத்துதல் மற்றும் புதுமைகளை புகுத்துதல் ஆகியவற்றுக்கு ஊக்கமிருக்காது. திட்டமிடுதலானது வழக்கமான செயல்முறைகளைப் பின்பற்றி வளர்ச்சியில் தேக்கத்தை உண்டுபண்ணும். இது வளர்ச்சியைக் கீழ் கண்ட வழிகளில் தடுக்கிறது.

அ. தனியார் உரிமை இல்லாதது, இலாப நோக்கை குறைத்து தொழில் முனைவோர் திறம்பட முடிவு எடுப்பதையும், இடர் எதிர்நோக்குதலையும் குறைக்கிறது. அபரிதமான இலாபமே புதிய வழிமுறைகளைத் தேடவும், அதனை செயல்படுத்தவும், அதில் வரும் இடர் தாங்கி புதுமையை புகுத்தி இலாபத்தை பெற தூண்டும். ஆனால் திட்டமிடுதலில் இந்தத் தூண்டுதல் இல்லை

ஆ. திட்டமிடல் பொருளாதாரத்தில் அனைவருக்கும் அவர்களது முயற்சி, திறமை மற்றும் உற்பத்தி திறன் ஆகியவற்றை கணக்கில் கொள்ளாமல் சமமான பலன்கள் வழங்கப்படுவதால், எவரும் இடர்பாடுகளை ஏற்று புதிய நிறுவனத்தை துவக்க முன் வர மாட்டார்கள்.

இ. உயர் பதவியில் உள்ள அலுவலர்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் போக்கு திட்டமிடலில் தவிர்க்க இயலாத ஒன்றாக உள்ளது. சமவுடைமை பொருளாதார நாடுகள் திட்டமிடலில் சந்திக்கும் பிரச்சனை இது. அரசுப் பணிகளைப் பயன்படுத்துவதில் கால விரயமாகிறது. இது பொருளீட்டும் நடவடிக்கையையே சீர்குலைக்கிறது.

3. அதிகமான நிர்வாக செலவு

திட்டமிடலின் நோக்கமென்னவோ தொழில்மயமாக்கல், சமூக நீதி, நாட்டு நிலைமையை சமப்படுத்துதல் போன்ற உயர்வானவை ஆனால் அதற்கு நாடு செலவிடும் தொகை அடையவுள்ள பலனைவிட அதிகமாக இருக்கும். புள்ளிவிவரங்களை சேகரித்து, தொகுத்து திட்டங்களைத் தயாரித்து செயல்படுத்தி நிர்வகிப்பதில் தேவைப்படும் பணியாளர் எண்ணிக்கை மிக அதிகம். லூயிஸ் இதைப்பற்றி குறிப்பிடும்பொழுது "திட்டமிடல் சிறப்பாக அமையவேண்டுமானால் கூடுதலான திட்டமிடல் நிபுணர்கள் தேவை என்கிறார்". சரியான புள்ளிவிவரம் இல்லாமை, தவறாக கணிப்பது, திட்டமிடுதலை சரிவர செயல்படுத்தாது போன்றவை வளங்களை வீணடித்து உபரி அல்லது பற்றாக்குறை நிலைக்கு கொண்டு செல்லும்.

4. முன்கணிப்பதில் உள்ள சிரமங்கள்

அரசு தடையில்லாத நாட்டில், விலை இயக்க முறையில், விலை, தேவை மற்றும் அளிப்பு ஆகியவை தானாக இயங்கி ஒன்றையொன்று சரி செய்து கொள்கிறது. உற்பத்தியாளர்கள் தங்களது அளிப்பையும், நுகர்வோர்கள் தங்களது தேவைகளையும் விலை மாற்றத்துக்கேற்றவாறு சரிசெய்து கொள்வார்கள். திட்டமிடல் நாடுகளில் இப்படி ஒரு வசதி இல்லை . நுகர்வு மற்றும் உற்பத்தி  அளவுகளை துல்லியமாக முன்கூட்டியே நிர்ணயிப்பது கடினம். உபரி அளிப்போ, உபரித் தேவையோ அங்காடிப் பொருளாதாரத்தில் ஏற்படலாம். அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகளில் இது போன்று ஏற்பட்டுள்ளது.

திட்டமிடலின் குறைகளனைத்தும் மையப்படுத்தப்பட்ட திட்டமிடல் முறையின் குறைகளாகும். பரவலாக்கப்பட்டத் திட்டமிடல் முறை மற்றும் கலப்பு பொருளாதார நாடுகளில் தனியார் மற்றும் அரசுத்துறைகளுக்கு சமமான இடம் கொடுத்து சிறப்பாக செயல்படுகிறது.

திட்டமிட்டப் பொருளாதாரம் சந்தைப் பொருளாதாரத்தைவிட திறம்பட செயல்படுவதாகவே தோன்றுகிறது. எனவே பொருளாதார முன்னேற்றத்துக்காகத் திட்டமிடுவதா வேண்டாமா என்பதல்ல பிரச்சனை. அரசு தலையிடுதலையும், சந்தை இயங்குதலையும் சரியான விகிதத்தில் கலந்து அனுமதிப்பதால் துரிதமான அதே நேரத்தில் நிலையான பொருளாதார முன்னேற்றத்தையும், சமூக சமத்துவத்தையும் திட்டமிடுதல் மூலம் சாதிக்க முடியும் என்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.


Tags : Economics பொருளாதாரம்.
12th Economics : Chapter 11 : Economics of Development and Planning : Planning Economics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 11 : பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல் : திட்டமிடல் - பொருளாதாரம் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 11 : பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல்