பொருளாதாரம் - நிதி ஆயோக்கின் பணிகள் | 12th Economics : Chapter 11 : Economics of Development and Planning
நிதி ஆயோக் (NITI Aayog)
.National Institution for Transforming India என்ப தன் சுருக்கமே நிதி ஆயோக் என்பதாகும். இதனை இந்தியாவை உருமாற்றம் செய்வதற்கான தேசிய நிறுவனம் என புரிந்துக் கொள்ளலாம். இதனை ஆகஸ்டு 13, 2014-ல் திட்டக்குழுவுக்கு பதிலாக இந்த நிறுவனத்தை உருவாக்கும் முடிவை இந்திய அரசு எடுத்தது. இதன்படி ஜனவரி 1, 2015 அன்று அமைச்சரவைக் குழுவின் தீர்மானத்தின் மூலமாக நிதி ஆயோக் அமைக்கப்பட்டது. இந்தியப் பிரதமரே நிதி ஆயோக்கின் தலைவர். மத்திய அமைச்சர்கள் உறுப்பினர்கள் ஆவர். இதன் துணைத்தவைரே நிர்வாகத் தலைவராவார். அரவிந்த் பனகரியா இதன் முதலாவது துணைத்தலைவராக செயல்பட்டு வருகிறார்.
நிதி ஆயோக்கின் பணிகள்
நிதி ஆயோக்கின் பணிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
1. கூட்டுறவு மற்றும் போட்டி அடிப்படையிலான கூட்டாட்சி
மாநிலங்கள் நாட்டின் கொள்கை வடிவமைப்பதில் துடிப்புடன் பங்கெடுக்கத் தேவையானவற்றை செய்வது
2. நாட்டின் நிகழ்வுகளின் மாநிலங்களைப் பங்கெடுக்க வைத்தல்
நாட்டின் முன்னேற்றத்திற்கான முன்னுரிமைகள் மற்றும் உத்திகளில் மாநிலங்களையும் இணைத்துக் கொள்ளுதல்
3. பரவலாக்கப்பட்டத் திட்டமிடல்
திட்டமிடல் நடைமுறையை கீழிருந்து மேல் என்ற முறையில் மாற்றம் கொண்டுவருதல்.
4. தொலை நோக்கு மற்றும் காட்சித் திட்டமிடல்
நாட்டின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு இடைக்கால மற்றும் நீண்டகால தொலை நோக்கு கட்டமைப்பை வடிவமைத்தல்.
5. நிபுணர்களின் கூட்டமைப்பை உருவாக்குதல்
அரசின் கொள்கைகள் வடிவமைப்பதிலும், திட்டங்களை செயல்படுத்துவதிலும் அரசுக்கு வெளியில் உள்ள நிபுணர்கள் ஒன்றிணைந்து பங்குபெற வைத்தல்.
6. உகந்ததாக்குதல்
அரசின் பல படிநிலைகளில் பணியாற்றுபவர்களை குறிப்பாக பலதுறைகள் ஒன்றிணைந்து செயல்படுமிடங்களில் ஏற்படும் பிரச்சனைகளை களைய தொடர்பு கொள்ளுதல், ஒருங்கிணைத்தல், கைகோர்த்தல் மற்றும் கூட்டிணைத்தல் மூலம் உகந்த பணியை நிதி ஆயோக் செய்கிறது.
7. சச்சரவுத் தீர்த்தல்
அரசுத் திட்டங்களை வேகமாக செயல்படுத்த மாநில மைய அரசுகளுக்கு இடையில், மாநிலங்களுக்கிடையில், அரசுத் துறைகளுக்கிடையில் மற்றும் பிற துறைகளுக்கிடையில் நிலவும் சச்சரவுகளுக்குத் தீர்வுகான ஒரு தளத்தை அமைத்துக் கொடுக்கிறது.
8. வெளியுலகத் தொடர்பை ஒருங்கிணைத்தல்
வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனைகளையும் பன்னாட்டு நிறுவனங்களிலிருந்து கிடைக்கும் நிதி வளங்களையும் நாட்டின் முன்னேற்றத்துக்குப் பயன்படும் வகையில் பெற்றுத்தரும் பொறுப்பு அலுவலகமாக நிதி ஆயோக் செயல்படும்.
9. உள்நாட்டு ஆலோசனை வழங்குதல்
கொள்கைகள் மற்றும் திட்டங்கள் வகுக்க மாநில மற்றும் மைய அரசுகளுக்கு ஆலோசனைகளை வழங்குகிறது.
10. திறன் உருவாக்குதல்
அரசுத் துறைகளில் திறனை வளர்க்கவும் தொழில் நுட்பத்தை மேம்படுத்தவும், உலக அளவில் தற்போது நடைமுறையில் உள்ள தர அளவுகோள்களை கொண்டும், மேலாண்மை நுட்பங்கள் வழியாகவும் திறன் உருவாக்கும் பணியையும் நிதி ஆயோக் செய்கிறது.
11. கண்காணித்தல் மற்றும் மதிப்பிடுதல்
அரசு செயல்படுத்தும் திட்டங்களை நிதி ஆயோக் கண்காணித்து அதன் விளைகளை மதிப்பீடும் செய்கிறது.
அடல் புத்தாக்க கொள்கை, ஆயுஸ்மான் பாரத் அணுகுமுறை ஆகியவை தண்ணீர் வளங்களை பாதுகாக்கும் விதமாகவும், இந்திய மருத்துவ கழகத்திற்கு தேசிய மருத்துவ வாரியம் என பெயர் மாற்றம் செய்வதற்கும் நாடாளுமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது நிதி ஆயோக்.
நிதி ஆயோக் பொறுப்புணர்வையும் உருவாக்குகிறது. இதன் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அலுவலகம் அரசின் பல்வேறு துறைகளின் அலுவலகங்களில் புள்ளி விவரத்தை சேகரித்து அவற்றின் செயல்பாட்டை கண்காணிக்கிறது. மாநிலங்களையும் வரிசைப்படுத்தி போட்டியடிப்படையிலான கூட்டாட்சி உணர்வை வளர்க்கிறது. நிதி ஆயோக்கின் வெற்றியை குறிப்பிட்ட காலங்களுக்குப் பிறகே கணிக்க முடியும்.
தொகுப்புரை
இந்த அத்தியாத்தின் முதல் பகுதியில், 20-ம் நூற்றாண்டில் பொருளாதார வளரச்சியின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தது. பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் என்ற கருத்து ஒன்றுபோல் இருந்தாலும் சிறு வித்தியாசம் உள்ளதை எடுத்துரைத்தது. பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிக்கும் பல காரணிகளை பொருளாதாரம் சார்ந்த காரணிகள், பொருளாதாரம் சாரா காரணிகள் என வகைப்படுத்தப்பட்டது. பொருளாதார முன்னேற்றம் தடைபடுவதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் வறுமை நச்சு சுழற்சி முக்கிய காரணியாக காணப்படுகிறது. அத்தியாத்தின் இரண்டாம் பகுதி திட்டமிடுதலை எடுத்துரைக்கிறது. அங்காடி அமைப்பின் தோல்விதான் திட்டமிடுதலுக்கு வழிவகுத்தது. இவை ரஷ்யா மற்றும் இந்தியா போன்ற கலப்பு பொருளாதார நாடுகளுக்கு பரவியது. பலகாரணங்களும், விவாதங்களும் திட்டமிடலுக்கு சாதகமாகவும் சில காரணங்கள் பாதகமாகவும் செயல்படுகின்றது. திட்டமிடும் முறைகள் அரசின் கட்டுப்பாடு அடிப்படையில் பல்வேறு வகைகளாக காணப்படுகிறது. இது சமவுடைமை நாடுகளில் சர்வாதிகார முறையும், பிரான்ஸ் போன்ற நாடுகளில் மக்களாட்சி மற்றும் சுட்டிக்காட்டும் திட்டமிடலும் உள்ளது. இந்தியத் திட்டக்குழுவை நீக்கிவிட்டு நிதி ஆயோக் என்ற புதிய நிறுவனம் துவங்கப்பட்டதையும் இந்த பாடத்தில் கற்றுக் கொண்டோம்.
அருஞ்சொற்பொருள்
* வளர்ச்சி : பொருளாதார வளர்ச்சி என்பது உண்மை மொத்த நாட்டு உற்பத்தி அதிகரிப்பதைக் குறிக்கும். இது உற்பத்திய்ன மதிப்பின் அடிப்படையிலோ அல்லது நாட்டின் செலவின் அடிப்படையிலோ இருக்கும்.
* முன்னேற்றம்: அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தை ஒரு குறிப்பிட்ட நோக்கம் மற்றும் தேவையை அடைய பயன்படுத்தும் வழிமுறையைக் குறிக்கும்.
* சமூகக் குறியீடுகள்: பொது சுகாதாரம், கல்வி, துப்புரவு, குடிநீர், உணவு, வசிப்பிடம் போன்றவை பொருளாதார முன்னேற்றத்தை அளவிடும் சமூகக் குறியீடுகள்
* மூலதன ஆக்கம்: நாட்டிலிருக்கும் மூலதனத்தில் புதிதாக நடப்பு ஆண்டில் சேர்ந்த மூலதனம்.
* நிதித் திட்டமிடல் : பண மதிப்பில் வளங்களை ஒதுக்கீடு செய்யும் திட்டமிடல் முறை
* உருவகத் திட்டமிடல் : பொருள், மனிதவளம் மற்றும் இயந்திரங்களாக வளங்களை ஒதுக்கீடு செய்யும் திட்டமிடல் முறை
* முன்னோக்குத் திட்டமிடல் : பதினைந்திலிருந்து முப்பதாண்டுகளுக்கு நீண்டகாலத் திட்டமிடல் முறையே முன்னோக்குத் திட்டமிடல் முறை
* வளர்ச்சி குறைந்த பொருளாதாரம்: குறைவான தலா வருமானம், பரவலான வறுமை, குறைவான கல்வி நிலை, குறைவான சராசரி வாழ்நாள் போன்ற பண்பு கூறுகள் குறைவான முன்னேற்றத்தை குறிக்கின்றன.
* மனித மூலதனம்: மனிதர்களை அதிக உற்பத்தி திறன் கொண்டவர்களாக உருவாக்கும் கல்வியும் பயிற்சியும் மனித மூலதனமாகும்
* வறுமையின் நச்சு சுழற்சி: பின்தங்கிய நாடுகளில் சுழற்சி தொடர்புடையவற்றால் பொருளாதார முன்னேற்றம் பாதிக்கச் செய்வதைக் குறிப்பது
* திட்டமிடல்: குறிப்பிட்ட காலத்துக்குள் இலக்குகளை அடையும் திசையில் பொருளாதார செயல்பாடுகளை செய்வதையே திட்டமிடல் என்கிறோம்
* மையப்படுத்தப்பட்ட திட்டமிடல்: திட்டமிடல் நடவடிக்கை முழுவதும் மைய திட்டக்குழுவின் அதிகாரத்திற்குள் இருக்கும் வகையானத் திட்டமிடல் முறை