இந்தியாவில் கல்வி வளர்ச்சி | அலகு 5 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - பண்டைய கால இந்தியாவின் கல்வி | 8th Social Science : History : Chapter 5 : Educational Development in India
பண்டைய கால
இந்தியாவின் கல்வி
தொடக்க
காலத்திலிருந்தே பாரம்பரியமாக கற்றல் மற்றும் கற்பித்தல், இந்தியாவில் நடைமுறையில்
இருந்ததாக வரலாற்று ஆதாரங்கள் நமக்குத் தகவல்களை வழங்குகின்றன. வேதம் (Veda) என்ற சமஸ்கிருத
சொல்லிற்கு அறிவு என்று பொருள். இச்சொல்லானது "வித்" என்ற சொல்லிலிருந்து
பெறப்பட்டது. இதன் பொருள் அறிதல்' என்பதாகும். நமது பண்டைய கல்வி முறை பல நூற்றாண்டுகளுக்கு
முன்னரே உருவானது. இது தனிநபரின் உள்ளார்ந்த மற்றும் மறைந்திருக்கும் திறன்களை வெளிக்கொணர்வதன்
மூலம், அவரின் முழுமையான வளர்ச்சியில் கவனம் செலுத்தியது. இக்கல்வியானது பணிவு, உண்மை
, ஒழுக்கம், சுயச்சார்பு மற்றும் அனைத்து படைப்புகளின் மீதும் மரியாதையுடன் இருத்தல்
ஆகிய மதிப்புகளை வலியுறுத்தியது.
கற்றலுக்கான ஆதாரங்கள்
பாணினி,
ஆர்யபட்டா, காத்யாயனா, மற்றும் பதாஞ்சலி ஆகிய பெயர்களை நீங்கள் கட்டாயம் கேள்விப்பட்டிருத்தல்
வேண்டும். இவர்களின் எழுத்துக்களும் சரகர் மற்றும் சுஸ்ருதர் ஆகியோரின் மருத்துவ குறிப்புகளும்
கற்றலுக்கான ஆதாரங்களாக இருந்தன. வரலாறு, தர்க்கம், பொருள் விளக்கம், கட்டடக்கலை, அரசியல்,
விவசாயம், வர்த்த கம், வணிகம், கால்நடைவளர்ப்பு மற்றும் வில்வித்தை போன்ற பல்வேறு துறைகள்
கற்பிக்கப்பட்டன. உடற்கல்வியும் ஒரு முக்கியமான பாடத்திட்டமாக இருந்தது. மாணவர்கள்
குழு விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு செயல்பாடுகளில் பங்கேற்றனர். கற்றலின் அனைத்து
அம்சங்களிலும் வல்லுநராவதற்குக் குருக்களும், அவரது மாணவர்களும் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு
இணைந்து பணியாற்றினர். மாணவர்களின் திறன்களை மதிப்பீடு செய்வதற்காக இலக்கிய விவாதங்கள்
ஏற்பாடு செய்யப்பட்டன. கற்றலில் மேம்பட்ட நிலையிலுள்ள மாணவர்கள் இளைய மாணவர்களுக்கு
வழிகாட்டினர். சக மாணவர்களுடனான குழுக் கற்றல் முறை நடைமுறையில் இருந்தது.
பண்டைய கால இந்தியாவில் கல்வி
முறை: ஒரு வாழ்க்கை முறை
பண்டைய
இந்தியாவில் முறையான மற்றும் முறைசாரா கல்வி இரண்டுமே இருந்தன. இல்லங்கள், கோயில்கள்,
பாடசாலைகள், குருகுலங்கள் ஆகியவற்றில் அப்பகுதிக்கேற்றவாறு கல்வி வழங்கப்பட்டது. வீடுகள்,
கிராமங்கள் மற்றும் கோயில்களில் இருந்த மக்கள், சிறு குழந்தைகளுக்கு பக்தியுடன் நேர்மையான
வாழ்க்கை முறைகளை வாழ ஊக்குவித்தனர். கல்வி அளிப்பதிலும், கற்றல் மையமாக செயல்படுவதிலும்
கோயில்கள் முக்கிய பங்கு வகித்தன. மாணவர்கள் தங்கள் உயர்படிப்பிற்காக விகாரங்கள் மற்றும்
பல்கலைக்கழகங்களுக்குச் சென்றனர். வாய்வழியாகவே கற்பித்தல் இருந்தது. குருகுலங்களில்
கற்பிக்கப்பட்டவைகளை மாணவர்கள் நினைவிலும், ஆழ்சிந்தனையிலும் வைத்திருந்தனர். பல குருகுலங்கள்
முனிவர்களின் பெயராலேயே அழைக்கப்பட்டன. காட்டில் அமைதியான சூழலில் அமைந்த குருகுலங்களில்,
நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒன்றாகத் தங்கி கற்றுக் கொண்டனர். தொடக்க காலத்தில் ஆசிரியரால்
(குரு / ஆச்சார்யா) தன்னைச் சுற்றி இருந்த மாணவர்களுக்குக் கல்வி வழங்கப்பட்டது. மேலும்
குருவின் வீட்டில் குடும்ப உறுப்பினர் போல வந்து தங்கி கல்வி பயின்றனர். இதுவே குருகுலக்
கல்விமுறை எனப்பட்டது.
அந்த
காலக்கட்டத்தில், குருக்களும் அவர்களுடைய சீடர்களும் (மாணவர்கள்) ஒன்றாக வசித்து, அன்றாட
வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் உதவி செய்தனர். அக்காலத்தில் முழுமையான கற்றல், ஒழுக்கமான
வாழ்க்கையை வாழ்தல், ஒருவரின் உள்ளார்ந்த திறமையை உணர்ந்து கொள்ளச் செய்தல் போன்றவையே
கல்வியின் முக்கிய நோக்கங்களாக இருந்தது. மாணவர்கள் தங்கள் இலக்குகளை அடையும் வரை சில
ஆண்டுகள் தங்கள் வீடுகளை விட்டு விலகி குருகுலங்களில் வாழ்ந்தனர். குறிப்பிட்ட காலத்தில்
குருவுக்கும் மாணவனுக்குமிடையேயான உறவு வலுப்பெறும் இடமாகவும் குருகுலம் திகழ்ந்தது.
இந்த
காலகட்டத்தில் துறவிகள் மற்றும் பெண் துறவிகள் தியானம் செய்வதற்கும், விவாதிப்பதற்கும்,
அவர்களின் அறிவு தேடலுக்காக கற்ற அறிஞர்களிடம் கலந்து ஆலோசிப்பதற்காகவும் பல மடாலயங்கள்
மற்றும் விகாரங்கள் அமைக்கப்பட்டன. இந்த விகாரங்களைச் சுற்றிலும் உயர்கல்வி கற்றுக்
கொள்வதற்காக பிற கல்வி மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இத்தகைய கல்வி மையங்கள் சீனா, கொரியா,
திபெத், பர்மா, இலங்கை, ஜாவா, நேபாளம் மற்றும் பிற தூரதேசத்து மாணவர்களையும் கவர்ந்திழுத்தது.
பௌத்த சமய காலத்தில் விகாரங்களும்
பல்கலைக்கழகங்களும்
உங்களுக்குத் தெரியுமா?
பண்டைய இந்திய நகரமாக இருந்த தட்சசீலம் தற்போது வடமேற்கு பாகிஸ்தானில்
உள்ளது. இது ஒரு முக்கியமான தொல்பொருள் ஆராய்ச்சிப் பகுதியாகும். இதனை 1980இல் யுனெஸ்கோ
, உலக பாரம்பரியத் தளமாக அறிவித்தது. சாணக்கியர், தனது அர்த்த சாஸ்திரத்தை இப்பல்கலைக்கழகத்தில்
தங்கியிருந்து தொகுத்ததாக கூறப்படுவது இதன் சிறப்பாகும். 19ஆம் நூற்றாண்டின் மத்தியில்
இப்பல்கலைக்கழகத்தின் இடிபாடுகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர் அலெக்சாண்டர் கன்னிங்காம்
கண்டுபிடித்தார்.
ஜாதகக்
கதைகளும், யுவான் சுவாங், இட்சிங் (சீன அறிஞர்கள்) ஆகியோரின் குறிப்புகளும் மற்றும்
பிற ஆதாரங்கள், அரசர்களும் சமுதாயமும் கல்வியை மேம்படுத்துவதில் அதிக ஆர்வம் செலுத்தியதாக
நமக்கு கூறுகின்றன. மடாலயங்கள் மற்றும் விகாரங்கள் மூலமாக பெளத்த சமய அறிஞர்கள் தங்கள்
கல்விப் பணியை மேற்கொண்டனர். இதன் விளைவாக, பல புகழ்பெற்ற கல்வி மையங்கள் தோன்றின.
அவைகளுள் தட்சசீலம், நாளந்தா, வல்லபி, விக்கிரமசீலா, ஓடண்டாபுரி மற்றும் ஜகத்தாலா ஆகிய
இடங்களில் தோன்றிய பல்கலைக்கழகங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவைகள் ஆகும். இந்தப் பல்கலைக்கழகங்கள்
விகாரங்களின் தொடர்புடன் மேம்படுத்தப்பட்டன. பனாரஸ் மற்றும் காஞ்சி ஆகிய இடங்களில்
இருந்த பல்கலைக்கழகங்கள், கோயில்களின் தொடர்புடன் மேம்பாடு அடைந்தன. மேலும் அவைகள்
அமைந்துள்ள இடங்கள் சமூக வாழ்க்கையின் மையங்களாக மாறின. அந்த நிறுவனங்கள் அறிவார்ந்த
மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்தன. அந்த மாணவர்கள் உயர் கல்வி நிறுவனங்களில் இணைந்து
புகழ்பெற்ற அறிஞர்களிடம் பரஸ்பர கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள் மூலம் தங்கள்
அறிவை வளர்த்துக் கொண்டனர். அது மட்டுமல்லாமல், மன்னரால் கூட்டப்பட்ட சபையில் பல்வேறு
விகாரங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சார்ந்த அறிஞர்கள் சந்தித்து, விவாதித்து தங்கள்
கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
ஆசிரியரின் பங்கு
மாணவர்களைத்
தேர்ந்தெடுப்பது முதல் அவர்களின் பாடத்திட்டங்களை வடிவமைப்பது வரை அனைத்து அம்சங்களிலும்
ஆசிரியர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. மாணவர்களின் திறனில் ஆசிரியர்
திருப்தி அடையும் போது மட்டுமே அவர்களின் கல்வி நிறைவடைந்ததாக கருதப்பட்டது. அவரது
விருப்பத்திற்கேற்ப பல மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதுடன், மாணவர்கள் எதை கற்க ஆர்வமாக
இருந்தனரோ அதையே கற்றுக் கொடுத்தார். விவாதங்கள் மற்றும் கலந்தாலோசித்தல் ஆகியன கற்பித்தலின்
அடிப்படையான வழிமுறைகளாகும். கல்வியில் மேம்பட்ட நிலையிலிருந்த மாணவர்கள் ஆசிரியர்களுக்கு
உதவினர்.
உங்களுக்குத் தெரியுமா?
பண்டைய காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகம் கி.பி.(பொ.ஆ.) 5ஆம் நூற்றாண்டு
முதல் கி.பி. (பொ.ஆ.) 12ஆம் நூற்றாண்டு வரை கற்றலின் மையமாக இருந்தது. தற்போதைய பீகாரில்
உள்ள ராஜகிருகத்தில் அமைந்துள்ள நாளந்தா பல்கலைக்கழகம் உலகின் பழமையான பல்கலைக்கழகங்களில்
ஒன்றாகும். நாளந்தா மகா விகாராவின் இடிபாடுகளை ஐ.நா. சபையின் யுனெஸ்கோ (UNESCO) நிறுவனம்
உலக பாரம்பரிய தளமாக அறிவித்துள்ளது. தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ள நாளந்தா பல்கலைக்கழகம்
நாகரிகங்களுக்கிடையிலான தொடர்பு மையமாக கருதப்படுகிறது.