இந்தியாவில் கல்வி வளர்ச்சி | அலகு 5 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - தேசியக் கல்விக் கொள்கை | 8th Social Science : History : Chapter 5 : Educational Development in India
தேசியக்
கல்விக் கொள்கை
சுதந்திரத்திற்கு
பிறகு, 1968 ஆம் ஆண்டு முதலாவது தேசியக் கல்விக் கொள்கையானது இந்தியக் கல்வி வரலாற்றில்
ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. இது தேசத்தின் முன்னேற்றத்தை ஊக்குவிப்பதோடு,
பொதுவான குடியுரிமை, கலாச்சாரம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டினை வலுப்படுத்துதல் ஆகியவற்றை
நோக்கமாகக் கொண்டது. 1986ஆம் ஆண்டு இந்திய அரசு புதிய கல்விக் கொள்கையினை அறிமுகப்படுத்தியது.
இதன் நோக்கம் ஒரு நிலையான சமுதாயத்தை, மேம்பாட்டுடன் கூடிய துடிப்பான சமுதாயமாக மாற்றுவதாகும்.
இக்கல்விக் கொள்கை நாட்டில் விளிம்பு நிலை மக்களுக்கான சமவாய்ப்புகள், உதவித் தொகைகள்,
வயது வந்தோர் கல்வி, திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் மூலம் குறிப்பாக கிராமப்புற
இந்தியாவில் ஏற்றத்தாழ்வுகளை நீக்குதலை வலியுறுத்தியது. புதிய கல்விக் கொள்கை தொடக்கக்கல்வியில்
குழந்தைகளைமையமாகக் கொண்ட அணுகுமுறைக்கு அழைப்பு விடுத்ததுடன், தொடக்கப் பள்ளிகளைத்
தேசிய அளவில் மேம்படுத்துவதற்காக கரும்பலகைத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது.
புதிய
கல்விக் கொள்கையானது 1992ஆம் ஆண்டு மீண்டும் திருத்தியமைக்கப்பட்டது. இது தேசிய பாடத்திட்டத்தை
வடிவமைத்தல், பணியிடைப் பயிற்சி கல்வியை வலியுறுத்துதல், வசதிகளை மேம்படுத்துதல் மற்றும்
இடைநிலைக் கல்வி நிலையில் மதிப்பீட்டு முறைகளை ஒழுங்குப்படுத்துதல் ஆகியவற்றைப் பரிந்துரைத்தது.
உங்களுக்குத் தெரியுமா?