இந்தியாவில் கல்வி வளர்ச்சி | அலகு 5 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி | 8th Social Science : History : Chapter 5 : Educational Development in India
தமிழ்நாட்டின்
கல்வி வளர்ச்சி
தமிழ்நாட்டின்
கல்வி முறையானது புத்தகங்களை படிப்பதும், புரிந்து கொள்வதும் மட்டுமில்லாமல் கற்றறிந்த
அறிஞர்களின் வழிகாட்டுதல்களையும் பெறுவதுமாக இருந்தது. திருக்குறள் கல்வியின் தேவையை
எடுத்துக் கூறியதுடன், எழுத்தறிவின்மையின் அபாயத்தையும் எச்சரித்தது. பண்டைய இந்தியாவில்
பள்ளிக் கூடங்கள் பள்ளி (palli) என்றும், ஆசிரியர்கள் கணக்காயர் என்றும் அழைக்கப்பட்டனர்.
பல்லவர்
காலத்தில் கல்வித்துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்தது. கல்வி நிறுவனங்கள் கடிகை
எனப்பட்டன. இக்கல்வி நிறுவனங்களுக்கு மானியங்கள் வழங்கி பல்லவ மன்னர்கள் ஆதரித்தனர்.
சைவ மற்றும் வைணவ மடங்கள் அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உண்டு உறைவிட
வசதியை வழங்கின.
யுவான்
- சுவாங் என்ற சீனப்பயணியின் குறிப்புகள், காஞ்சி நகரமானது கற்றலின் மையமாக விளங்கியதையும்,
காஞ்சியில் இருந்த புத்த மையம் பற்றியும் தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது.
சோழர்களின்
காலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகவும் அறிவார்ந்த மற்றும் புதுமைகளைப் புகுத்திய
காலம் எனலாம். தமிழ்வழிக் கல்வியானது கோயில் மற்றும் சமயத்துடன் நெருங்கிய தொடர்பைக்
கொண்டிருந்தது. மக்களுக்கு இலவச கல்வி அளிக்கப்பட்டது. கலைத்திட்டமும் பாடத்திட்டமும்
தத்துவத்தின் அடிப்படையைக் கொண்டிருந்தது. அக்கால கல்வெட்டுகளிலிருந்து ஆசிரியர்களின்
தகுதிகள், கற்பித்தல் முறைகள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம், மாணவர்களுக்கு
வழங்கப்பட்ட உணவு மற்றும் பள்ளிகளுக்கு அளித்த நிலங்கள் குறித்த பல தகவல்களை அறிந்து
கொள்ள முடிகிறது. இராஜராஜன் சதுர்வேதி மங்கலம் (எண்ணாயிரம், முந்தைய தென் ஆற்காடு மாவட்டத்தில்
அமைந்திருந்தது) புகழ்பெற்ற வேதக் கல்லூரிக்கு இருப்பிடமாக இருந்தது. திருபுவனையில்
(பாண்டிச்சேரியில் உள்ளது) ஒரு வேதக் கல்லூரி செழித்தோங்கியது. திருவிடைக்காளை கல்வெட்டு
நூலகத்தைப் பற்றியும், வீரராஜேந்திர சோழனின் திருவாடுதுறைக் கல்வெட்டு மருத்துவப் பள்ளி
பற்றியும் குறிப்பிடுகிறது.
பாண்டிய
மன்னர்கள் சமஸ்கிருதத்தை ஆதரித்ததை அவர்களின் செப்புத் தகடுகளின் மூலம் அறியலாம் பாண்டியர்களின்
காலத்தில் கல்வி நிலையங்கள் கடிகை, சாலை மற்றும் வித்யாசாதனம் என அழைக்கப்பட்டது.
ஆசிரியர்களுக்கு
நிலங்கள் வழங்கப்பட்டன. அவ்வகை நிலங்கள் சாலபோகம் என்றழைக்கப்பட்டது. (உம். கன்னியாகுமரியிலுள்ள
வல்லப பெருஞ்சாலை). பாண்டியர்கள் ஆட்சிகாலத்தில் காந்தளூர் சாலையில் புகழ்பெற்ற கல்லூரி
இருந்தது. கல்வியை மேம்படுத்துவதில் மடங்கள் முக்கியப் பங்கு வகித்தன. விஜய நகர ஆட்சியின்
கீழ் கற்றல் செழித்தோங்கியது. விஜயநகர ஆட்சியாளர்களின் ஆதரவால் பல கல்வி நிறுவனங்கள்
ஏற்படுத்தப்பட்டன. நாயக்கர்களின் ஆட்சியில் திண்ணைப் பள்ளிக்கூடம் நிறுவப்பட்டது.
நவீன காலத்தில் கல்வி
வீரப்ப
நாயக்கர் காலத்தில் மதுரைக்கு வருகை புரிந்த பெர்னாண்டஸ், அங்கு ஒரு தொடக்கப் பள்ளியை
நிறுவினார். மராத்திய ஆட்சியாளர் இரண்டாம் சரபோஜி பண்டைய ஆவணங்களை சேகரித்து அவற்றை
தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் பாதுகாத்தார். அவர் தஞ்சாவூரில் தேவநாகரி எழுத்து முறையிலான
அச்சுக்கூடத்தை அமைத்திருந்தார்.
மதராஸ்
மாகாணத்தில் மேற்கத்திய கல்வியை அறிமுகப்படுத்தியதில் மிகப்பெரிய பங்கு மதராஸ் மாகாண
ஆளுநர் சர் தாமஸ் மன்றோவைச் (1820-27) சாரும். அவர் கல்வியின் நிலை குறித்து அறிய புள்ளிவிவரக்
கணக்கெடுப்பு நடத்த ஒரு குழுவை நியமித்தார். மன்றோவின் கல்விக்குழு ஒவ்வொரு மாவட்டத்திலும்
இரண்டு முதன்மைப் பள்ளிகளை உருவாக்க பரிந்துரைத்தது (மாவட்ட ஆட்சியர் மற்றும் தாசில்தார்
பள்ளிகள்). 1835ஆம் ஆண்டு வில்லியம் பெண்டிங் பிரபு மேற்கத்திய கல்வி முறையை அறிமுகப்படுத்துவதற்கு
ஆதரவாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார். 1854ஆம் ஆண்டின் சர் சார்லஸ் உட்ஸ் கல்வி அறிக்கை
மதராஸ் மாகாணத்தில் பொது வழிகாட்டும் துறையை (Department of Public Instruction) ஏற்படுத்தியது.
அனைத்து பள்ளிகளுக்கும் கல்வி மானியம் வழங்கப்பட்டன. 1857இல் சென்னை பல்கலைக்கழகம்
நிறுவப்பட்டது. இதுவே ஆங்கிலேய ஆட்சியின் போது தமிழகத்தில் அமைக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகமாகும்.
1882ஆம் ஆண்டு உள்ளூர் வாரியச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன் மூலம் புதிய பள்ளிகளைத்
திறக்கவும், அரசாங்கத்திடமிருந்து மானியங்களைப் பெறவும் வாரியத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
1938 வாக்கில் பள்ளிகளில் ஆங்கிலமொழிப் பாடம் தவிர அனைத்துப் பாடங்களும் தமிழ் மொழியிலேயே
கற்பிக்கப்பட்டன.
சுதந்திரத்திற்குப் பின் தமிழகக்
கல்வி
1964-65இல்
இடைநிலைக் கல்வி அளவில் இலவச கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. 1975 இல் காந்திகிராம கிராமிய
கல்லூரி ஏற்படுத்தப்பட்டது. கல்லூரி சென்று படிக்க முடியாதவர்களுக்காக 1971இல் தொலைதூரக்
கல்வியும் அறிமுகப்படுத்தப்பட்டது.