இந்தியாவில் கல்வி வளர்ச்சி | அலகு 5 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - இடைக்கால இந்தியாவில் கல்வி | 8th Social Science : History : Chapter 5 : Educational Development in India
இடைக்கால
இந்தியாவில் கல்வி
இந்தியத்
துணைக்கண்டத்தில் இஸ்லாமிய கல்வியை அறிமுகப்படுத்தியதன் மூலம் இடைக்காலம் ஒரு மாற்றத்தைக்
கண்டது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்த படையெடுப்பாளர்களாலும் வணிகர்களாலும் நாடு
தாக்குதலுக்குள்ளானது. வணிகர்களும் படையெடுப்பாளர்களும் தங்களது கலாச்சாரங்களை இந்நாட்டு
மக்களுடன் ஒன்றிணைத்தனர். அவற்றைத் தவிர சமயம், சமூகம், பண்பாடு மற்றும் கல்வி ஆகியவற்றில்
இடைக்கால இந்தியா ஒரு புதிய கண்ணோட்டத்தை அடைந்தது. முஸ்லிம்களின் ஆட்சி காலத்தில்
(இடைக்காலம்) அறிவின் ஒளியூட்டமும், விரிவாக்கமும் கல்வியின் நோக்கமாக இருந்தன. பதினோறாம்
நூற்றாண்டில் முஸ்லிம் ஆட்சியாளர்கள் தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளை நிறுவினர்.
அக்காலத்தில் இந்திய இஸ்லாமிய பாரம்பரியங்களுக்கிடையே ஒரு சிறந்த தொடர்பு இருந்ததால்
இறையியல், சமயம், தத்துவம், நுண்கலை, ஓவியம், கட்டடக்கலை, கணிதம், மருத்துவம் மற்றும்
வானியல் ஆகிய துறைகள் ஒரு புதிய கோணத்தில் மேம்பாடு அடைந்தன.
இருப்பினும்,
முஸ்லிம்கள் வருகைக்கு முன்னரே இந்தியாவில் ஒரு மேம்பட்ட கல்விமுறை நடைமுறையில் இருந்தது.
முஸ்லிம் ஆட்சியாளர்கள் நூலகங்கள் மற்றும் இலக்கிய சங்கங்களை ஏற்படுத்தி நகர்ப்புற
கல்வியை ஊக்குவித்தனர். அவர்கள் நிறுவிய தொடக்கப் பள்ளிகள் மூலம் (மக்தப் -
Maktab) மாணவர்கள் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை இஸ்லாமிய வழிபாட்டு முறைகளைக்
கற்றனர். மேம்பட்ட மொழித்திறன்களைக் கற்பிக்க இடைநிலைப் பள்ளிகள் (மதரசா -
Madrasa) நிறுவப்பட்டன. சுல்தான்கள் மற்றும் பிரபுக்களால் பல மதரசாக்கள் அமைக்கப்பட்டன.
மதரசாக்களின் முக்கிய நோக்கம், தகுதியான அறிஞர்களுக்குக் குடிமைப் பணிக்கான பயிற்சி
அளிப்பதும், கல்வி அளிப்பதுமே ஆகும். டெல்லியில் ஒரு மதரசாவை நிறுவிய முதல் ஆட்சியாளர்
இல்த்துமிஷ் ஆவார். காலப்போக்கில் பல மதரசாக்கள் உருவாயின.
இடைக்கால
இந்தியாவில் கல்விமுறையானது உலோமாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்தக் காலங்களில்,
கல்வியானது சமயம் சார்ந்த பயிற்சியுடன் தொடர்புடையதாக இருந்தது. இருப்பினும், மருத்துவம்,
அரேபியா இலக்கியம், இலக்கணம் மற்றும் தத்துவம் போன்ற பல்வேறு வகையான பாடங்களும் கற்பிக்கப்பட்டன.
இடைக்காலம் மற்றும் நவீன கால முற்பகுதியில் அரபு மற்றும் மத்திய ஆசிய மக்கள் இஸ்லாமிய
அடிப்படையிலான கல்வி முறைகளைக் கொண்டு வந்ததாக வரலாறு கூறுகிறது. இடைக்கால இந்தியாவில்
பெண் கல்வி பரவலாகக் காணப்பட்டது.
ஜெய்ப்பூர் ராஜா ஜெய்சிங், அறிவியல் பாடங்களின் கற்றலை ஊக்குவித்தார். இதைத்தவிர மேலும், பல கல்வி நிறுவனங்கள் தனிநபர்களாலும் தொடங்கப்பட்டன. டெல்லியில் உள்ள கியாசுதீன் மதரசா மற்றும் ஷாஜகானாபாத்தில் உள்ள மௌலானா சத்ருதீன் மதரசா ஆகியன இம்முறையில் உருவான நிறுவனங்களே ஆகும்.
உங்களுக்குத் தெரியுமா?
இடைக்காலத்தில் பல சமய மடங்களும் மடாலயங்களும் கல்வி வளர்ச்சிக்காக நிறுவப்பட்டன. ஸ்ரீரங்கத்தில் உள்ள
அஹோபில மடம் அவற்றுள் ஒன்றாகும். அங்கு ஸ்ரீராமானுஜர் கல்விக்காக தன்னுடைய குறிப்பிடத்தக்க
பங்களிப்பை வழங்கியுள்ளார். மடாலயக் கல்வி தவிர, சமணப் பள்ளிகளும் மற்றும் பௌத்த விகாரங்களும்
மக்களுக்குக் கல்வி வழங்குவதில் முக்கிய பங்காற்றின. அனைத்துத் துறைகளைச் -சார்ந்த
புத்தகங்கள் கொண்ட நூலகத்தினை அவைகள் பெற்றிருந்தன.