அறிமுகம் | வேதியியல் - வாயு நிலைமை | 11th Chemistry : UNIT 6 : Gaseous State

   Posted On :  25.12.2023 06:50 am

11 வது வேதியியல் : அலகு 6 : வாயு நிலைமை

வாயு நிலைமை

நாம் உணவில்லாமல் சில வாரங்களும், நீரில்லாமல் சில நாட்களும் உயிர் வாழ இயலும் ஆனால் காற்றில்லாமல் சில நிமிடங்கள் மட்டுமே உயிர் வாழ இயலும்.

அலகு 6

வாயு நிலைமை


So many of the properties of properties of matter, especially when in gaseous form, can be deduced from hypothesis that their minute parts are in rapid motion, the velocity increasing with temperature, that the precise nature of this motion becomes a subject of rational curiosity.

James Clerk Maxwellகற்றலின் நோக்கங்கள்

இப்பாடப் பகுதியைக் கற்றறிந்த பின்னர் 

நல்லியல்பு வாயுக்களுக்குரிய விதிகளை வகுத்துரைத்தல்.

நடைமுறை வாழ்வின் பல்வேறு சூழல்களில் வாயு விதிகளின் பயன்பாட்டினை செயல் விளக்கமளித்தல்.

நல்லியல்பு வாயுச் சமன்பாட்டினை வருவித்தல் மற்றும் அதனைப் பயன்படுத்தி கணக்கீடுகள் செய்தல்.

நல்லியல்பு நிலையிலிருந்து விலகுதலை எடுத்துரைத்தல்.

வாண்டர்வால்ஸ் சமன்பாட்டினை வருவித்தல்.

கிரஹாமின் வாயுவிரவல் விதியினை வரையறுத்தல்.

அமுக்கத்திறன் காரணியை வரையறுத்தல்.

நிலைமாறு நிகழ்வினை விவரித்தல்.

நிலைமாறு மாறிலிகளின் மதிப்பினை வாண்டர்வால்ஸ் மாறிலிகளைக் கொண்டு வருவித்தல்

கார்பன் டை ஆக்ஸைடிற்கான ஆண்ட்ரூஸின் சமவெப்பநிலைக் கோடுகளை விளக்குதல்

ஜூல் தாம்சன் விளைவு மற்றும் வாயுக்களை திரவமாக்குதலை விவரித்தல்.

ஆகிய திறன்களை மாணவர்கள் பெற இயலும்.
பாட அறிமுகம்

நாம் உணவில்லாமல் சில வாரங்களும், நீரில்லாமல் சில நாட்களும் உயிர் வாழ இயலும் ஆனால் காற்றில்லாமல் சில நிமிடங்கள் மட்டுமே உயிர் வாழ இயலும். ஒவ்வொரு நொடிப்பொழுதும் நம் நுரையீரல் முழுவதும் நிரம்பும் வகையில் காற்றினை உட்சுவாசிக்கின்றோம், சில காற்று மூலக்கூறுகள் நமது தேவைக்கு பயன்படுகிறது, நமக்கு தேவையற்ற சில மூலக்கூறுகள் வெளிசுவாசத்தின் மூலம் நம்மை சுற்றியுள்ள காற்றில் கலந்து விடுகிறது. நம்மை சூழ்ந்துள்ள காற்றானது வாயு நிலைமையில் உள்ளது. இது பருப்பொருளின் எளிய நிலையாகும். வாயுக்களின் இயைபினைப் பொருத்து அதன் வேதித் தன்மை அமைந்தாலும், அனைத்து வாயுக்களும் இயற்பண்புகளில் குறிப்பிடத்தக்க அளவில் ஒத்த பண்புகளைக் கொண்டுள்ளன.


புவி வளிமண்டலத்தில் உள்ள காற்றினால் சூழப்பட்டுள்ளது. இக் காற்றின் இயைபு சுமார் 78% நைட்ரஜன், 21% ஆக்சிஜன், மற்றும் 1% பிற வாயுக்களையும் உள்ளடக்கியதாகும். நாமறிந்த தனிமங்களில், பதினொன்று தனிமங்கள் மட்டுமே இயல்பான வளிமண்டல நிலையில் வாயு நிலைமையில் காணப்படுகிறது. ஹைட்ரஜன்(H2), நைட்ரஜன் (N2), ஆக்சிஜன் (O2), புளூரின் (F2) மற்றும் குளோரின் (Cl2) ஆகியன வாயு நிலைமையில் காணப்படும் ஈரணு மூலக்கூறுகளாகும். ஓசோனும் ஆக்சிஜனைப் போன்று அறை வெப்ப நிலையில் வாயு நிலைமையில் காணப்படுகிறது. 18 வது தொகுதியைச் சார்ந்த மந்த வாயுக்களான ஹீலியம் (He), நியான் (Ne), ஆர்கான் (Ar), கிரிப்டான் (Kr), செனான்  (Xe) மற்றும் ரேடான் (Rn) ஆகியவை ஓரணு வாயுக்களாகும். கார்பன் மோனாக்ஸைடு(CO), கார்பன்டை ஆக்ஸைடு (CO2), நைட்ரஜன் டைஆக்ஸைடு (NO2), மற்றும் நைட்ரிக் ஆக்ஸைடு (NO) ஆகிய சேர்மங்களும் சாதாரண வெப்ப அழுத்த நிலைகளில் வாயு நிலைமையில் காணப்படுகின்றன. இப் பாடப்பகுதியில் வாயுக்களின் பண்புகள் மற்றும் தொடர்புடைய நிகழ்வுகளையும் நீங்கள் கற்றறிவீர்கள்.


உங்களுக்குத் தெரியுமா?

வாயு மற்றும் ஆவி ஆகியனவற்றிற்கு இடையேயான வேறுபாடு

அறை வெப்பநிலை மற்றும் 1 atm அழுத்தத்தில், இயல்பாகவே வாயு நிலைமையில் உள்ள ஒரு பொருள் வாயு எனவும், அறை வெப்பநிலை மற்றும் 1 atm அழுத்தத்தில் திட அல்லது திரவ நிலையில் இருக்கும் ஒரு பொருளின் வாயு நிலை வடிவம் ஆவி எனவும் அழைக்கப்படுகிறது.

Tags : Introduction | Chemistry அறிமுகம் | வேதியியல்.
11th Chemistry : UNIT 6 : Gaseous State : Gaseous State Introduction | Chemistry in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 6 : வாயு நிலைமை : வாயு நிலைமை - அறிமுகம் | வேதியியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 6 : வாயு நிலைமை