இயல் 7 : 11 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: ஆக்கப்பெயர்கள் | 11th Tamil : Chapter 7 : Vaiya thalamai kol
இயல் 7
இனிக்கும் இலக்கணம்
ஆக்கப்பெயர்கள்
உலகிலுள்ள அனைத்துப்பொருள்களும். பெயரிடப்பட்டு அழைக்கப்படுகின்றன. முன்னோர்கள் சில பொருள்களுக்குக் காரணம் கருதியும் சில பொருள்களுக்குக் காரணமின்றியும் பெயர் வைத்தனர். இலை, மண், கல், நாற்காலி, காற்றாடி எனப் பெயர்களை நினைவில் கொண்டுவரும்போது இவற்றுள் காரணத்தோடு வரும் பெயர்களை உணர்ந்துகொள்ள முடிகிறது. காலப்போக்கில் பொருளின் மாற்றத்தால் அவை பயன்படுத்தப்படும் நிலைமைக்கேற்றவாறு காரணப்பெயர்கள் சிலநேரங்களில் இடுகுறிப்பெயர்களாகி விடுகின்றன.
மரத்தால் செய்யப்பட்டுப் பின்புறம் சாய்ந்துகொள்ளவும் கைகளை வைத்துக்கொள்ள வசதியாகவும் நான்கு கால்களைக் கொண்ட இருக்கைக்கு நாற்காலி எனக் காரணம் கருதிப் பெயர் வைத்தனர்.
ஆனால், இன்று நான்குகால்கள் இல்லாத இருக்கை சிலவற்றையும் நாற்காலி என்றே அழைக்கிறோம். ஒருகாலத்தில் காரணம் கருதி வழங்கப்பட்ட ஒரு பொருளுக்கான பெயர் இன்று இடுகுறியாக வழங்கப்படுகிறது.
காலச் சூழலுக்கேற்றவாறு நம் பயன்பாட்டிற்கெனப் பல்வேறு பெயர்களைப் புதியதாக ஆக்கிக்கொள்கிறோம். அவை இடுகுறியாகவும் இருக்கலாம்; காரணமாகவும் இருக்கலாம். இவ்வாறு, புதியதாக ஆக்கப்படும் சொல் ஆக்கப்பெயர் என அழைக்கப்படுகின்றது. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்பது பழமொழி. இதில் ஆத்திரம் கொண்ட ஒருவனைக் குறிப்பிட காரன் என்னும் விகுதி சேர்த்து ஆத்திரக்காரன் என்னும் சொல்லை உருவாக்குகிறோம்.
பெயர் அல்லது வினைச்சொற்களுடன் விகுதிகளைச் சேர்த்து ஆக்கப்படும் பெயர்ச்சொற்கள் ஆக்கப் பெயர்கள் (Derivative noun) எனப்படும். இவ்வாறு பெயர்ச்சொற்களை ஆக்கப் பயன்படும் விகுதிகளை ஆக்கப்பெயர் விகுதிகன் என்பர்.
தமிழில் ஆக்கப்பெயர் விகுதிகள்
காரன், காரர், காரி, ஆள், ஆளர், ஆளி, தாரர், மானம்
ஆக்கப் பெயர்களில் விகுதிகளே தனிச்சிறப்பு உடையன. தமிழ்ச்சொற்களோடு இவ்வகையான விகுதிகள் சேரும்போது எண்ணற்ற புதுச்சொற்கள் உருவாகித் தமிழின் சொற்களஞ்சியம் விரிவடைகின்றது. தமிழ்மொழியில் ஆக்கப்பெயர்கன் பேச்சு வழக்கிலேயே மிகுதியாக உள்ளன.
மலர்ந்த மலரைக்
கண்டு வாடினாள்
பூக்காரி
இத்துளிப்பாவில் பூ விற்கும் பெண். பூக்காரி என்று அழைக்கப்படுகிறார். மேலும். நெசவு செய்பவரை நெசவாளி/நெசவாளர் என்றும் உழைப்பவரை உழைப்பாளி/ உழைப்பாளர் என்றும் அழைக்கப்படுகிற ஆக்கப்பெயர்கள் இன்றும் வழக்கில் உள்ளன.
தெரியுமா?
வண்டிக்காரன், சினிமாக்காரன், மாட்டுக்காரன், வீட்டுக்காரன், ஆட்டோக்காரன் போன்ற சொற்கள் எல்லாம் காரன் விகுதி சேர்க்கப்பட்ட ஆக்கப்பெயர்கள் என்பதை அறிவீர்களா?
அறிவியல், திறமைசாலி, கோழைத்தனம், சமத்துவம், பெண்ணியம், பேச்சாளன். ஏற்றுமதி முதலான சொற்கள் ஆக்கப்பெயர்ச்சொற்களே என்பதை உணரவேண்டும். இச்சொற்களில் இயல், சாலி, தனம், துவம், இயம், ஆளன், மதி ஆகிய விகுதிகள் சேர்ந்து ஆக்கப் பெயராக்கப்பட்டுள்ளன.
கண்டறிக: குரங்காட்டி, வண்டியோட்டி, பழந்தின்னி, வாயாடி, குடித்தனம், நீதிமான் இச்சொற்களைப் பிரித்து ஆக்கப்பெயர் விகுதிகளைக் கண்டறிக.
ஆக்கப்பெயர்ச்சொற்களை ஈற்றில் நிற்கும் விகுதிகளைக் கொண்டு மூவகையாகப் பிரிக்கலாம். அவை
1. பெயருடன் சேரும் விகுதிகள்
2. வினையுடனும் எச்சத்துடனும் சேரும் விகுதிகள்
3. பெயருடனும் வினையுடனும் சேரும் விகுதிகள்
1. பெயருடன் சேரும் விகுதிகள் (காரன், காரர், காரி, ஆள், ஆளி, தாரர்)
காரன், காரி, காரர் ஆகிய ஆக்கப்பெயர் விகுதிகள் உடைமை, உரிமை, உறவு அல்லது தொடர்பு, தொழில் அல்லது ஆளுதல் என்னும் நான்கு பொருள்களில் வரும்.
வீடு +
காரன் –
வீட்டுக்காரன் -
உடைமை
தமிழ்நாடு +
காரி –
தமிழ்நாட்டுக்காரி - உரிமை
உறவு +
காரர் –
உறவுக்காரர் –
உறவு
தோட்டம் +
காரர் –
தோட்டக்காரர் -
தொழில்
தொழிற்பெயர் விகுதிகளுடன்
"ஆளர்' என்னும் ஆக்கப்பெயர் விகுதி சேர்ந்து சொற்கள் உருவாகின்றன.
'ஆளர்' 'ஆளி' முதலான விகுதிகள் இருபாற்பொதுப்பெயர்களை உருவாக்கத் துணை நிற்கின்றன.
2. வினையுடனும் எச்சத்துடனும் சேரும் விகுதிகள்
வினையடியுடன் 'மானம்' என்னும்விகுதி சேர்ந்து புதிய சொற்கள் உருவாகின்றன.
வினை விகுதி ஆக்கப்பெயர்
அடை + மானம் = அடைமானம்
கட்டு + மானம் = கட்டுமானம்
தேய் + மானம் = தேய்மானம்
3. பெயருடனும் வினையுடனும் சேரும் விகுதிகள்
பெயருடன் சேர்ந்து வரும் விகுதிகள்.
பெயர் விகுதி ஆக்கப்பெயர்
அச்சு அகம் அச்சகம்
வினையுடன் சேர்ந்து வரும் விகுதிகள்
வினை விகுதி ஆக்கப்பெயர்
பயில் அகம் பயிலகம்
இவ்வாறு, தமிழில் எண்ணற்ற ஆக்கப் பெயர்ச்சொற்கள் விரவிக் கிடக்கின்றன. இவ்வகையான சொற்கள் தம் மொழிக்குப் புதிய புதிய சொற்களை உருவாக்குவதோடு நில்லாமல், மொழி காலந்தோறும் வளர்வதற்கும் துணை நிற்கின்றன.
அறிக :
இன்று வழக்கிலுள்ள ஆக்கப்பெயர்களைப் பட்டியலிடுக. அவை எவ்வெவ்விகுதி கொண்டு ஆக்கப்பட்டுள்ளன என்பதை ஆய்க.