Home | 11 ஆம் வகுப்பு | 11வது தமிழ் | துணைப்பாடம்: சிந்தனைப் பட்டிமன்றம்

இயல் 7 : 11 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: சிந்தனைப் பட்டிமன்றம் | 11th Tamil : Chapter 7 : Vaiya thalamai kol

   Posted On :  09.08.2023 07:27 am

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : வையத் தலைமை கொள்

துணைப்பாடம்: சிந்தனைப் பட்டிமன்றம்

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : வையத் தலைமை கொள் : துணைப்பாடம்: சிந்தனைப் பட்டிமன்றம் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் 7

விரிவானம்

சிந்தனைப் பட்டிமன்றம்


நுழையும்முன்

தமிழர் சிந்தனைக்கான வெளிப்பாட்டு வடிவங்களில் சிறப்பானதொரு வடிவம் பட்டிமன்றமாகும். முரண்பாடான பல கருத்துகளை விளக்கவும் நிலைநாட்டவும் பட்டிமன்றம் உதவுகின்றது. பண்பட்ட முறையில் கருத்துகளை முன்வைத்துப் பேசுகையில் சிந்தனையாற்றலையும் பேச்சுத்திறனையும் மொழியாளுமையையும் வளர்த்தெடுக்கிறது.

 

அரசு மேல்நிலைப் பள்ளி - அரங்கம்

முன்னிலை: தமிழாசிரியர் தங்கமணி

நடுவர்: மாணவர் இளங்கோ

இளைஞர்களின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவுவது

வீடா? 

மாணவர்கள் எழில், எலிசபெத்

நாடா?

மாணவர்கள் அமுதா, அப்துல்லா

 

நடுவரின் முன்னுரை

பெருமதிப்பிற்குரிய தமிழாசிரியர் அவர்களே! என் இனிய நண்பர்களே! வணக்கம்.

இளமை என்றாலே அறிவு, துணிவு ஆகிய இரண்டின் கலவை எனலாம் அறிவூக்கத்திற்கும் படைப்பூக்கத்திற்கும் அடித்தளமிடப்படும் பருவம் இது.

இந்தச் சிந்தனைப் பட்டிமன்றத்திற்கு இளைஞர்களை முதன்மைப்படுத்திய தலைப்பு ஏன் வழங்கப்பட்டது என்று பலரும் எண்ணலாம்.

இந்திய மக்கள் தொகையில் இன்று சரிபாதி இளைஞர்கள் அல்லவா! நம்முடைய பங்களிப்பு இன்றி வீடோ, நாடோ எந்தவித வளர்ச்சியையும் அடைந்துவிடமுடியாது. எனவேதான், தலைப்பு இளைஞர்களை மையப்புள்ளியாக வைத்துச் சுழல்கிறது.

(கரவொலி...)

ஆண் மாணவர்கள் மட்டும் ஏன் கைதட்டுகிறார்கள்? எனக்குப் புரிந்துவிட்டது. இன்றைய தமிழ்ச் சமுதாயம் 'இளைஞர்' என்ற சொல்லிற்கு 'இளவயது ஆண்கள்' என்றே பொருள்கொண்டு பழகிவிட்டது. இளைஞர் என்ற சொல் இருபாலரையும் குறிக்கின்ற பொதுச்சொல் என்றே புரிந்துகொள்வோம். கவிஞர் தாராபாரதி எழுச்சியுடன்,

"வீட்டுக்கு உயிர் வேலி!

வீதிக்கு விளக்குத்தூண்!

நாட்டுக்குக் கோட்டை மதில்!

நடமாடும் கொடிமரம் நீ"

என்று இளைஞர்களைப் பார்த்துப் பாடினார். அறிவியல் யுகத்தைத் தாங்கும் தூண்களாகத் திகழும் இளைய சமுதாயத்திற்கு வீடும் நாடும் துணைபுரிகிறதா?

இந்தக் கேள்விக்கு விடை தேட முனைகிறது இந்தச் சிந்தனைப் பட்டிமன்றம். இளைஞர்களின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவுவது வீடே! என்று நண்பர் எழிலைப் பேச அழைத்து என் தொடக்கவுரையை முடிக்கின்றேன். வணக்கம்.

எழில்: பட்டிமன்றங்கள் பலவும் இன்று நீர்த்துப்போய்விட்ட காலகட்டத்தில் சிறப்பான ஒரு தலைப்பைத் தந்து சிந்தனைக் களமாக மாற்றியிருக்கின்ற தமிழாசிரியர் தங்கமணி அம்மா அவர்களே! நல்ல தீர்ப்பைத் தரவிருக்கின்ற நடுவர் அவர்களே! நண்பர்களே! வணக்கம்.

இளைஞர்களின் முன்னேற்றப் பாதையில் முதல் படிக்கல்லாகவும் அவர்கள் கொடுமுடியைத் தொடுவதற்கு அடித்தளமாகவும் விளங்குவது இல்லம்தானே. அன்பையும் அறிவையும் உணர்த்தும் உரைகல்லாக வீடல்லவா விளங்குகிறது. பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைக்கும் தாயின் முகம்தானே முதல் பாடப்புத்தகம்.

குழந்தைகளுக்கு உலகத்தைத் தாய்தான் முதன்முதலில் அறிமுகப்படுத்துகிறார். தங்கமக பூம்பாதம், தண்ணிபட்டா கொப்பளிக்கும்' என்று அன்பு காட்டிப் பிள்ளையை வளர்த்து, வாழ்வின் ஒவ்வொரு நிலையையும் உணரவைக்கின்றார்.

சொல்லப்போனால் 'கற்றல்' என்பதே வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது. தந்தையோ அதைத் தொடர்கிறார். அடித்தளம் பலமாக இருந்தால்தானே கட்டடம் வலிமையாக அமையும். எனவே. அடித்தனம் வீட்டுச்சூழல். அதன்மீதுதான் நமது வெற்றி கட்டி எழுப்பப்படுகிறது. நடுவர் எடுத்தாண்ட கவிஞாயிறு தாராபாரதியின் கவிதையை நானும் துணைக்கு அழைக்கிறேன்.

"எத்தனை உயரம் இமயமலை - அதில்

இன்னொரு சிகரம் உனது தலை!

எத்தனை ஞானியர் பிறந்த தரை - நீ

இவர்களை விஞ்சிட என்ன தடை?"

என்று முழங்கிய கவிஞரின் வழியில் நான் முன்னேற வீடுதான் என்னைத் தாங்குகிறது. ஆகவே, நடுவர் அவர்களே! இளையோர் முன்னேற்றத்தின் முகமும் அகமுமாக அமைவது வீடே! என்று தீர்ப்பு வழங்க வேண்டுகிறேன். நன்றி வணக்கம்.

நடுவர்: நான் எதிர்பார்க்கவே இல்லை. நல்ல தொடக்கத்தை நிகழ்த்திவிட்டார் எழில். மிகச் சிறப்பாகப் பேசி அமர்ந்திருக்கும் எழிலின் கருத்தை மறுத்துப் பேச வருகிறார் நண்பர் அப்துல்லா. வாருங்கள். உங்களுக்காகக் கரவொலி காத்திருக்கின்றது.

அப்துல்லா: மழைபெய்கிறபோது எல்லோரும் வெளியில் இருந்து வீட்டுக்குள் ஓடுவோம். ஆனால், எட்டயபுரத்து இளம்புயல் மகாகவி பாரதி வீட்டுக்குள்ளிருந்து வெளியே ஓடிவருவார். மழையில் நனைந்துகொண்டே.

"எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா"

என்று பாடுவார். பாட்டுக்குள் புயல்வைத்த பாரதிக்கும் இந்த அவைக்கும் என் பணிவான வணக்கம்.

வீடு அஃதொரு சிறிய கூடு. அதற்குள்தான் எத்தனை முரண்பாடு, குடும்பத்திற்குள் இருந்த குதூகலமான உரையாடல் தற்போது தொலைந்து போய்விட்டது. ஆனால், கல்வியே வீட்டில் இருந்துதான் தொடங்குகிறது என்று எதிரணி சொல்கிறது.

நடுவர் அவர்களே! வீடு என்னும் சிறிய வட்டத்தைத் தாண்டி நாட்டை நாடிய பின்தான் நல்வாழ்வு துளிர்க்கத் தொடங்குகிறது. பாரதியையே எடுத்துக்கொள்வோம், பாரதி வீதிக்கு வந்தார். உலகத்தைப் படிக்கத் தொடங்கினார். அதுவே, பாரதிக்குப் புதிய திசைகளை அறிமுகப்படுத்தியது.

"தமிழா! பயப்படாதே.

வீதிதோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்"

என்று நமக்குக் கட்டளையிட்டார்.

தேடுகல்வி இலாததோர் ஊரைத் தீயினுக்கு இரையாக மடுத்தல்

என்று கல்விக்கூடங்களின் இன்றியமையாமையைச் சினத்துடன் எடுத்துக்காட்டினார்.

வீடு என்பது உறவுகளுக்குள்ளேயே நம்மைச் சுற்றவைக்கிறது. ஆனால், நாட்டின் கல்விச்சாலையோ புத்தகங்களின் அடே உலகத்தைத் திறந்து காட்டுகின்றது. வேறுபாடுகளைக் கடந்து புதிய நண்பர்களையும் உறவினர்களையும் அடையாளம் காட்டுகிறது. மேலும், இந்த யுகம் அறிவியல் தொழில்நுட்பக் கல்வி யுகம் என்று அறிஞர்கள் சொல்வதை, நாடுதான் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. எனவே, எல்லோரையும் இணைக்கின்ற பொதுவெளி. நாடுதான் என்பதை எதிரணியினர் உணர வேண்டும். நடுவர் அவர்களே! நல்ல தீர்ப்பைத் தருமாறு வேண்டி விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம்.

நடுவர்: அன்பு நண்பர் அப்துல்லாவின் உரைவீச்சு நம் எல்லோரின் உள்ளங்களையும் கொள்ளைகொண்டது. எரிமலையாகக் கொதித்துவிட்டார். சரி, தோழி எலிசபெத்தின் நிலையைப் பார்த்தால்தான் இரக்கமாக இருக்கின்றது. வருக வருக. உங்கள் கருத்தோட்டங்களை அள்ளித் தருக.

எலிசபெத்: வீட்டினுள் உலகத்தை எனக்கு அறிமுகப்படுத்திய என் பெற்றோரைப் போற்றுகின்றேன். கற்றோர் நிறைந்த அவையை வணங்குகின்றேன். வீடு என்றால் எடுத்தெறிந்து பேசுகிற அளவிற்கு எதிரணிக்கு எளிதாகப் போய்விட்டதா? வீடு என்பது நீங்கள் நினைப்பதுபோலச் சிறு கூடு அன்று. அது நமது பண்பாட்டையும் மரபையும் காத்து நிற்கும் கருவூலம். எந்தவொரு தேடலும் இல்லத்திலிருந்துதான் தொடங்குகிறது. அன்பின் தலைவாசலாக, அறிவின் நாற்றங்காலாக வீடுதான் விளங்குகிறது. எப்படித் தெரியுமா?

பெற்றோர் பாடிய தாலாட்டும், தாத்தா பாட்டி சொன்ன கதைகளும் நமக்கான கைவிளக்குகள் அல்லவா! என்னை உப்பு மூட்டைதூக்கிச் சுமந்த, என் உடன் பிறந்தவர்களின் முதுகிலிருந்துதான் நேசத்திற்கான உள்ளுணர்வு பிறந்து வளர்ந்தது.

உணவு எப்படி உற்பத்தியாகிறது என்று காட்டுவதற்காக என்னை விளை நிலத்திற்கு அழைத்துச் சென்ற பெற்றோர்களே என் முதல் பேராசிரியர்கள். பனையோலையில் காற்றாடி செய்யப் பழக்கியதும் நுங்கைத் தின்று அந்தக் காய்களில் வண்டி கட்டி விளையாடக் கற்றுக்கொடுத்ததும் எனக்குப் படைப்பாற்றலைச் சொல்விக்கொடுத்ததும் என் வீடுதான். குழந்தைப் பருவத்தைச் சரியாகக் கடந்து வருவதற்குக் கற்றுக்கொண்டால் இளமைப் பருவம் இனிதே வளமடையும். எனவே, இஸ்ஸம் என்கிற வீடுதான் இளைஞர்களின் முன்னேற்றத்திற்குக் கலங்கரை விளக்கமாக நின்று வழிகாட்டுகிறது. நடுவர் அவர்களே! நீங்களும் உங்கள் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்துத் தீர்ப்புச் சொல்லுங்கள். நன்றி வணக்கம்.

நடுவர்: கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார் எலிசபெத். நன்று தோழி, உங்கள் நாவன்மைக்கு என் நல்வாழ்த்துகள். இப்போது அமுதாவின் நேரம். வாருங்கள் அமுதா! புதிய விடியலுக்கான வெளிச்சமாக உங்கள் பேச்சு அமையட்டும்.

அமுதா:

"நல்லதோர் வீணை செய்தே அதை

நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ!

சொல்லடி சிவசக்தி - எனைச்

சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

வல்லமை தாராயோ - இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே?"


என்று எனக்கு நாட்டு நலத்தைப் புதிய வழித்தடத்தில் கற்றுக்கொடுத்த முண்டாசுக் கவிஞனை முதலில் வணங்கி அவைக்கு என் பணிவான வணக்கத்தைச் சொல்லி மகிழ்கிறேன்.

வீட்டைப் பற்றிய எண்ணங்களை விசாலப் பார்வையில் பார்க்காமல் எலிசபெத் ஏன் இப்படிக் குறுகிப் போனார் என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. வீடு அப்படி என்ன பெரிதாய்க் கற்றுக் கொடுத்துவிட்டது? ஆண்களுக்கு வேண்டுமானால் அது அறிவின் உறைவிடமாக இருக்கலாம். ஆனால், பெண்களுக்கு அது தங்கக் கம்பிகளால் செய்யப்பட்ட கூண்டுதான். வீடு எப்படிப்பட்ட சொலவடைகளைச் சொல்லிக் கொடுத்தது? எத்தகைய கதைகளைப் போதித்தது? 'அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு', 'பெண்புத்தி பின்புத்தி' என்றுதானே சொன்னது. நான் பள்ளிக்கூடத்திற்கு வந்தபின்தான்

"பெண்மை வெல்க என்று கூத்திடுவோம்"

என்று பாரதி முழங்கியதையும்

"பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில்

மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே"

என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் முழங்கியதையும் அறிய முடிந்தது.

இன்று விஞ்ஞானிகளாக கல்வியாளர்களாக, கவிஞர்களாக இளம் பெண்கள் கம்பீரமாக நடைபோடுவதற்கு நாடல்லவா கற்றுக் கொடுத்தது? ஊராட்சி மன்றங்களையும் சட்ட மன்றங்களையும் பார்த்த பின்தானே பெண்களுக்கான உரிமைகளைப் பெண்களே உணரத் தொடங்கினார்கள். எனவே, நடுவர் அவர்களே நாடுதான் நம்பிக்கையோடு இளைஞர்களை வழிநடத்துகிறது. எதிர்காலத்தை வளமாக்கத் துணைபுரிகிறது. எனவே, இளைஞர்களின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவுவது நாடே! என்ற தீர்ப்பினை வழங்குமாறு கேட்டு நிறைவு செய்கிறேன். நன்றி வணக்கம்.

நடுவர்: அன்புத்தோழி அமுதாவின் கருத்து மழையில் எல்லோருமே கரைந்து நெகிழ்ந்து போனோம். இரண்டு அணிகளும் மிகச் சிறப்பாகத் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்திருக்கின்றன.

இளைஞர்களின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவுவது வீடா? நாடா? இந்தத் தலைப்பு ஆழமான கேள்வியை முன்வைக்கிறது. 'நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்' என்றார் பாவேந்தர் பாரதிதாசன். 'வீட்டிற்கோர் புத்தக சாலை வேண்டும்' என்று அறிஞர் அண்ணா கூறினார். எத்தனை பேர் அதைச் செய்தோம்? பிறகெப்படி வீடு பல்கலைக்கழகமாக மாறும்? வீடு என்பது இளைஞர்களின் குழந்தைப் பருவத்தை எப்படிக் கட்டமைக்கிறது? பெற்றோரையும் உறவினரையும் எப்படி அறிமுகப்படுத்துகிறது? அமுதா சொன்னதைப்போல மரபார்ந்த பார்வையுடன் பெண்களுக்கான உரிமை உணர்வை வீடு மதிக்கிறதா?

பாச உணர்ச்சியை வளர்த்தெடுக்கிறது. ஆனால், பரந்து விரிந்த பகுத்தறிவை வீடு தருகிறதா? ஆனால். வீட்டைத் தாண்டி நாட்டுக்குள் வந்தால்தான் சங்ககாலப் புலவர் கணியன் பூங்குன்றனின் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற மேன்மையான பார்வையைப் பெறுகின்றோம். புரட்சிக் கவிஞர் பாரதிதாசனோ.

"விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை

மானுட சமுத்திரம் நானென்று கூவு

புவியை நடத்து; பொதுவில் நடத்து!"

என்று உலகத்தையே வீடாகக் காட்டுகிறார். வீடு என்பது நாட்டின் ஓர் அலகு மட்டுமே.

நம் அனைத்து அறிவுத் தேவைகளையும் அது தந்துவிடுமா என்று நாம் சிந்திக்கவேண்டும். நாடு என்பது பன்முக ஆளுமை உடையது. நாடு, எத்தனை வகையான கல்விக் கூடங்களைத் தருகிறது? கல்வியில் எத்தனை வகையான படிப்புகள் இருக்கின்றன? நமக்கான மேற்படிப்பை எப்படித் தேர்வு செய்வது? எந்த வகையான வேலை வாய்ப்புக்குச் செல்வது? என்று இந்தத் தேடுதல்களுக்கான வாசல்களை இளைஞர்களுக்காகத் திறந்து வைத்திருக்கிறது.

ஆண் பெண் சமத்துவச் சிந்தனை, பேதங்களைக் கடந்த தோழமை, கல்வி சார்ந்த உயர்ந்த கருத்துகள் ஆகிய எல்லாவற்றையும் வழங்கி முழுமையான முன்னேற்றத்திற்குப் பெரிதும் வழிகாட்டுவது நாடே! நாடே! என்று எனது தீர்ப்பினைக் கூறி,

"செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்

தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள்

தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு

சக்தி பிறக்குது மூச்சினிலே!"

என்று பாடிய மகாகவி பாரதியின் அடிகளைச் சிந்தனையில் ஏந்திப் பட்டிமன்றத்தை நிறைவு செய்கிறேன்.

நன்றி, வணக்கம்!

தெரியுமா?

பட்டிமன்றம் ஒரு சுவையான விவாதக்களம். அது தமிழில் பழங்காலம் தொட்டே அறிமுகமான அறிவார்ந்த பேச்சுக்கலை வடிவம். வாழ்வியல் சிந்தனைகளை மக்கள் முன்பு வலிமையாக வைக்கும் வாதுரை அரங்கம். "பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்" என்று மணிமேகலைக் காப்பியம் குறிப்பிடுகின்றது.

Tags : Chapter 7 | 11th Tamil இயல் 7 : 11 ஆம் வகுப்பு தமிழ்.
11th Tamil : Chapter 7 : Vaiya thalamai kol : Supplementary: Sindhanai Pattimandaram Chapter 7 | 11th Tamil in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : வையத் தலைமை கொள் : துணைப்பாடம்: சிந்தனைப் பட்டிமன்றம் - இயல் 7 : 11 ஆம் வகுப்பு தமிழ் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : வையத் தலைமை கொள்