Home | 11 ஆம் வகுப்பு | 11வது தமிழ் | செய்யுள் கவிதைப்பேழை: பதிற்றுப்பத்து

இயல் 7 : 11 ஆம் வகுப்பு தமிழ் - செய்யுள் கவிதைப்பேழை: பதிற்றுப்பத்து | 11th Tamil : Chapter 7 : Vaiya thalamai kol

   Posted On :  09.08.2023 07:26 am

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : வையத் தலைமை கொள்

செய்யுள் கவிதைப்பேழை: பதிற்றுப்பத்து

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : வையத் தலைமை கொள் : செய்யுள் கவிதைப்பேழை: பதிற்றுப்பத்து | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் 7

கவிதைப்பேழை

பதிற்றுப்பத்து


 நுழையும்முன்

நாட்டில் வாழும் உயிர்கள் இன்புற்று வாழ வேண்டும். அவ்வாழ்வு சிறக்க நாட்டின் அரசன் மக்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்த வேண்டும். வள்ளுவர், "உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு" என்று குறிப்பிடுகிறார். பசியும் நோயும் பகையும் இல்லாதிருப்பதே சிறந்த நாடு என்று அறிவுறுத்துகிறார்.

 

பாடல் பின்னணி

உதியன் சேரலாதனுக்கும் வேண்மாளுக்கும் மகனாகப் பிறந்தவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். இவன் வடக்கே இமயமலைவரை படையெடுத்துச் சென்று, வெற்றி பெற்று, இமயத்தில் வில்லினைப் பொறித்தவன். தமிழின் சிறப்பை உலகறியச் செய்தவன். கடம்பர்களை வென்று, தன் வீரர்களுக்குக் கவசமாக விளங்கியவன். சேரலாதனின் நாடு காத்தற் சிறப்பையும் கொடைச் சிறப்பையும் குமட்டூர்க் கண்ணனார் புகழ்வதாகப் பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்தில் உள்ள இப்பாடல் அமைந்துள்ளது.

 

நிரைய வெள்ளம்


பதிபிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி

நிரையம் ஒரீஇய வேட்கைப் புரையோர்

மேயினர் உறையும் பலர்புகழ் பண்பின்

நீபுறம் தருதலின் தேய்இகந்து ஒரீஇய

யாணர்நன் னாடும் கண்டுமதி மருண்டனென்

 

மண்ணுடை ஞாலத்து மன்னுயிர்க்கு எஞ்சாது

ஈத்துக்கை தண்டாக் கைகடும் துப்பின்

புரைவயின் புரைவயின் பெரிய நல்கி

ஏமம் ஆகிய சீர்கெழு விழவின்

நெடியோன் அன்ன நல்லிசை

ஒடியா மைந்தநின் பண்புபல நயந்தே.

(15: 30-40)

- குமட்டூர்க் கண்ணனார்.

 

உறுபசி ஓவாப்பிணி செறுபகை இன்மையால்

புலம்பெயர்ந்து செல்லாது வாழும் மக்கள்!

சான்றோர் புகழும் ஆட்சிச் சிறப்பில்

துயரம் தொலைந்த புதுவள நன்னாடு!

மண்ணுலக உயிர்கள் மாண்புடன் வாழ

ஈகையால் நீளும்கை! எதிரிகளை அழிக்கும்கை!

இடையறாது இடையறாது

பெரும்பொருள்கொடுத்துப்

பாதுகாப்பு அளிக்கும் பெருவிழாத் தலைவன் என

நற்புகழ் குறையாத வலிமைமிகு உந்தன்

பண்புபல நினைந்தும் கண்டும்

பெருவியப்பு அடைந்தேன்; மதிமிரண்டு போனேன்!

 

திணை: பாடாண்திணை

பாடாண் திணையானது ஒரு மன்னனின் புகழ், வலிமை, வள்ளன்மை, அருள் முதலானவற்றை ஆய்ந்து கூறுவதாகும். பாடப்படும் ஆண்மகனின் உயர்பண்புகளைக் கூறுவது இத்திணையின் நோக்கமாகும்.

துறை: செந்துறைப் பாடாண்பாட்டு

செந்துறையாவது உலகினுள் இயற்கை வகையான் இயன்ற மக்களைப் பாடுதல். இது செந்துறைப் பாடாண் பாட்டு எனப்படும்.

வண்ணம் : ஒழுகு வண்ணம்

வண்ணம் என்பது ஒலிநய (சந்தம்) வேறுபாடு ஆகும்.

வண்ணந் தாமே நாலைந் தென்ப

தொல். பொ. 524

ஒழுகு வண்ணம் என்பது ஒழுகிய ஓசையாற் செல்வதாகும்.

ஒழுகு வண்ண மோசையி னொழுகும்.

தொல். பொ. 538

தூக்கு: செந்தூக்கு

தூக்கு என்பது செய்யுள் அடிகளை வரையறை செய்வதாகும். செந்தூக்கு என்பது' வஞ்சிப்பாவின் இறுதியடி போன்றோ. ஆசிரியவடியின் இறுதி போன்றோ அமையும்.

வஞ்சித் தூக்கே செந்தூக் கியற்றே.

தொல். பொ.383;

பா வகை : நேரிசை ஆசிரியப்பா

 

சொல்லும் பொருளும்

பதி - நாடு: பிழைப்பு வாழ்தல்; நிரையம் - நரகம்; ஓரீஇய - நோய் நீங்கிய; புரையோர் - சான்றோர்; யாணர்புது வருவாய் ; மருண்டெனன் - வியப்படைந்தேன்; மன்னுயிர் நிலைபெற்றுள்ள உயிர்த்தொகுதி; தண்டா - ஓயாத; கடுந்துப்பு - மிகுவலிமை; ஏமம் - பாதுகாப்பு; ஒடியா -குறையா; நயந்து - விரும்பிய.

முதல் 29 அடிகளின் கருத்துச் சுருக்கம்: (சேரலாதனே! பகை நாட்டில் ஓராண்டுவரை தங்கிப் போர் செய்வாய். பகைவர்க்கு நரகத் துன்பத்தைத் தரும் உன் வீரர்கள் உன்னுடனே வெள்ளமென வருவர். பகைநாட்டில் நீ மூட்டிய தீயால் அந்தாட்டின் பழைய அழகு அழிந்தது. காய்ந்த வயல்களில் வீரர்கள் தங்கினர். இத்துன்பத்தை மறந்து உன்னை எதிர்த்து அழிந்த பகைவர் நாடுகளைக் கண்டு பல வந்தேன். வளங்களை உடைய உன் நாட்டில் தொடர்ச்சியான விழாக்களைக் கொண்டாடும் பழமையான ஊரில் உன் வெற்றி முரசு கொட்டுகிறது. நெடுஞ்சேரலாதனே! கலைஞர்கள் உன்னை வாழ்த்தி இசைக்கின்றனர்.)

பாடலின் பொருள்

"சேரலாதனே, உன் குடிமக்கள் எப்பொழுதும் நல்ல செயல்களையே செய்து வருபவர்கள் பசி, பிணி அறியாத அவர்கள் நாட்டை விட்டுப் புலம்பெயராமல் உள் நாட்டிலேயே சுற்றத்தாரோடு வாழ விரும்புவர். அவ்வாறான குடிமக்களால் நீ போற்றப்படுகிறாய். இப்பெரிய நிலவுவகத்தில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் இடையறாது கொடுக்கும் பண்புடையவனே, நீ சான்றோர்களுக்கு அரிய பொருள்கள் நல்குவாய். எப்பொழுதும் விழாக்கள் நிகழும் நாட்டிற்கு நீ உரிமை உடையவன். நெடியோன் போன்ற புகழினை உடைய உன் நாட்டின் வளத்தையும் பகை நாட்டின் அழிவையும் கண்டு வியப்படைகிறேன்."

சேரநாடு செல்வவளம் மிக்கது. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தன் நாட்டையும் மக்களையும் கண்ணெனக் காத்தான். ஆகவேதான், அவன் நாட்டு மக்கள் வேற்று நாட்டுக்குச் செல்ல விரும்புவதில்லை. புது வருவாய்ப் பெருக்கமும் ஈத்துவக்கும் இன்பமும் உடையவன் சேரலாதன்.

இலக்கணக் குறிப்பு

துய்த்தல் - தொழிற்பெயர்; ஒரீஇய - சொல்லிசை அளபெடை; புகழ்பண்பு - வினைத்தொகை; நன்னாடு - பண்புத்தொகை; மருண்டனென் - தன்மை ஒருமை வினைமுற்று; ஒடியா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.

பகுபத உறுப்பிலக்கணம்

மருண்டனென் - மருள்(ண்) + ட் + அன் + என்

மருள் - பகுதி, 'ள்' 'ண்' ஆனது விகாரம்

ட் - இறந்தகால இடைநிலை, அன் - சாரியை

என் - தன்மை ஒருமை வினைமுற்று விகுதி.

துய்த்தல் - துய் + த் + தல்

துய் - பகுதி, த் - சந்தி, தல் - தொழிற்பெயர் விகுதி

புணர்ச்சி விதி

மண்ணுடை - மண் + உடை

தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டும் மண்ண் + உடை

உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே - மண்ணுடை

புறந்தருதல் புறம் + தருதல்

மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும் வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும் - புறந்தருதல்.

 

நூல்வெளி

எட்டுத்தொகையில் அமைந்த புறத்திணை நூல்களுள் ஒன்று பதிற்றுப்பத்து, சேர மன்னர்கள் பத்துப்பேரின் சிறப்புகளை எடுத்தியம்பும் இது, பாடாண் திணையில் அமைந்துள்ளது. முதல் பத்துப் பாடல்களும் இறுதிப் பத்துப் பாடல்களும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு பாடலின் பின்னும் துறை, வண்ணம், தூக்கு, பாடலின் பெயர் என்பவை இடம்பெற்றிருக்கின்றன; பாடலில் வரும் சிறந்த சொற்றொடர் அப்பாடலுக்குத் தலைப்பாகத் தரப்பட்டிருக்கிறது. பாடப்பகுதிப் பாடலுக்குச் சேரலாதனின் படைவீரர் பகைவர்முன் நிரையபாலரைப் போலப் (நரகத்து வீரர்கள்) படைவெள்ளமாக நின்றதால் "நிரைய வெள்ளம் என்று தலைப்பு இடப்பட்டுள்ளது. பாடப்பகுதியான இரண்டாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். இவனைப் பாடிய குமட்டூர்க் கண்ணனார், உம்பற்காட்டில் 500 ஊர்களையும் தென்னாட்டு வருவாயுள் பாதியையும் பரிசாகப் பெற்றார்.

Tags : Chapter 7 | 11th Tamil இயல் 7 : 11 ஆம் வகுப்பு தமிழ்.
11th Tamil : Chapter 7 : Vaiya thalamai kol : Poem: Pathitrupatthu Chapter 7 | 11th Tamil in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : வையத் தலைமை கொள் : செய்யுள் கவிதைப்பேழை: பதிற்றுப்பத்து - இயல் 7 : 11 ஆம் வகுப்பு தமிழ் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : வையத் தலைமை கொள்