Home | 11 ஆம் வகுப்பு | 11வது தமிழ் | உரைநடை: காற்றில் கலந்த பேரோசை

சுந்தர ராமசாமி | இயல் 7 : 11 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: காற்றில் கலந்த பேரோசை | 11th Tamil : Chapter 7 : Vaiya thalamai kol

   Posted On :  09.08.2023 06:50 am

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : வையத் தலைமை கொள்

உரைநடை: காற்றில் கலந்த பேரோசை

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : வையத் தலைமை கொள் : உரைநடை: காற்றில் கலந்த பேரோசை - சுந்தர ராமசாமி | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் 7

உரைநடை உலகம்

காற்றில் கலந்த பேரோசை

- சுந்தர ராமசாமி


நுழையும்முன்

ஒருமுறை திருவாங்கூறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்ட துன்பத்தைத் துடைக்கப் பள்ளி மாணவர்களும் குழுக்கள் அமைத்துச் செயல்பட்டனர். ஒரு குழுவினர் நாஞ்சில் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள தோவாளை என்னும் இடத்திற்குச் சென்று பணியை மேற்கொண்டனர். அங்கிருந்த கிராம மக்களிடம் வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்துப் பேசி நிதி திரட்டினர். அக்குழுவிற்குத் தலைவராக இருந்த ஜீவா அப்போது பள்ளி இறுதிப்படிப்புப் படித்துக்கொண்டிருந்தார். அரசியல் சிந்தனையிலும் பொதுவுடைமைச் சிந்தனையிலும் கூர்வாளாய் மெருகேற்றிக்கொண்ட ஜீவா, சமூக நலனுக்காகத் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட முதல் நிகழ்வு அது.

 

நண்பர் ஒருவரிடம் ஜீவா மறைந்துவிட்டார்' என்றேன். 1963 ஜனவரி மாதம் பதினெட்டாம் தேதி. நண்பகல் வேளை செய்தி, தபால் நிலையத்துக்கு வந்து ஒரு மணி நேரம்கூட ஆகியிருக்கவில்லை. ''!' என்று கூவி ஸ்தம்பித்து நின்ற நண்பர், இரண்டொரு நிமிஷங்களுக்குப்பின் 'கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும்போதா?' என்று கேட்டார். 'ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்?' எனக் கேட்க எண்ணியவன் 'தெரியாது' என்ற சொல்லோடு நிறுத்திக்கொண்டேன்.

அரைமணி நேரத்திற்குப்பின் மற்றொரு நண்பர் காதில் இச்செய்தியைப் போட்டபோது, அவரிடமிருந்தும் அதே கேள்வி பிறந்தது ஆச்சரியத்தை அளித்தது. இருவரது வாயிலிருந்தும் ஒரே கேள்வி புறப்பட்டதைத் தற்செயலான காரியம் என எண்ணி மறந்துவிடுவதும் சுலபம்தான். ஆனால், நான் அவ்வாறு எண்ணவில்லை. அதற்குக் காரணமும் உண்டு.

மேடையில் வாழ்ந்த மனிதர்

நண்பர்களைப் பொறுத்தவரையில் ஜனப்பிரளயத்தின் முன்னால் நின்று  சங்கநாதம் எழுப்பிக் கொண்டிருக்கும்போதே. அண்டம் முட்ட எழுந்து நாற்றிசையிலும் அலையலையாய்ப் பரவும் அப்பேரோசையில் அவர் கலந்துவிடுவதே ஜீவாவின் முத்திரைகொண்ட மரணமாக இருக்கும் போலும். அப்போதுதான் நாடகத்தின் இறுதிக் காட்சி, முந்திய காட்சிகளுடன் பொருந்தி அமையும் போலும். மேடையில் வாழ்ந்த மனிதன். வாழ்ந்த இடத்தில்தானே மறைந்திருக்கவும் வேண்டும்? இவ்வாறு எண்ணுகிறது பேதை மனசு.

ஜீவா என்ற தொண்டன் தமது இறுதிமூச்சு நிற்பதுவரையிலும் கர்ஜித்துக்கொண்டுதான் இருந்திருப்பான் என்பதில் இவர்களுக்கு எத்தனை நம்பிக்கை! எனவேதான் 'மூச்சு நின்றுவிட்டது' என்று நான் சொன்னபோது 'பேச்சு நின்றபோதா?' எனத் திருப்பிக் கேட்கிறார்கள். எத்தனை அர்த்தபுஷ்டியாண கேள்வி! ஜீவா தமது அரிய சேவையால் சர்வசாதாரண உள்ளங்களில்கூட எழுப்பியிருக்கும் சித்திரம்தான் எத்தனை ஜீவகளையுடன் காட்சி தருகிறது!

நெஞ்சோடு வளர்ந்த கனவு

ஜீவா தமக்கென ஒரு தத்துவத்தைச் சிருஷ்டித்துக்கொண்டவர் அல்லர், அவர், தான் நம்பிய தத்துவத்தை, அச்சில் உயிரிழந்து கிடக்கும் அதன் சித்தாந்தக் கருத்துகளைத் தமது அரிய திறமையால், கலை நோக்கால், கற்பனையால், உயிர்பெறச் செய்து, மனிதன்முன் படைத்தவர். மின்சக்திக்கு ஒளியுருவம் கொடுத்தவர் அவர்.


அவருடைய வாழ்வை, அதன் மையமான போக்கை எண்ணிப் பார்க்கையில், ஒரு கனவு, சிறு பிராயத்திலிருந்தே நெஞ்சோடு வளர்ந்த ஒரு கனவு, அவருக்கு இருந்திருக்கத்தான் வேண்டும் என்று தோன்றுகிறது. மனித வெள்ளத்தை அவர்களில் ஒருவனாய் முன்னின்று தலைமை தாங்கி இட்டுச் சென்று, அதி உன்னதமான ஓர் எதிர்காலத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே அது.

கொள்கையும் நம்பிக்கையும்

'மனிதச் சிந்தனையே, கற்பனைக்கும் எட்டாத பேராற்றலே, நீ சிந்தித்தவற்றில் சிறந்தவற்றை என்னிடம் ஒரே ஒருமுறை கூறு. அதனை நான் எட்டுத் திசையிலும் பரப்பி மனித ஜாதியை நீ சொன்ன இடத்திற்கு அழைத்து வருகிறேன். சந்தேகப்படாதே. செய்துகாட்டுகிறேன். என்னைப் பயன்படுத்திக்கொள். முடிந்தமட்டும் என்னைப் பயன்படுத்திக்கொள். கைமாறு வேண்டாம். என்னை பயன்படுத்திக்கொள்வதே நீ எனக்குத் தரும் கைமாறு'. இதுவே அவருடைய பிரார்த்தனை. இந்த அடிப்படையான மனோபாவத்திலிருந்து பிறந்தது அவருடைய கொள்கை; அவருடைய நம்பிக்கை.

பேச்சு நடை

பேச்சுக்கலை, அவர் பெற்ற வரம் என்றுதான் சொல்ல வேண்டும். அதோடு அவர் பேசுகையில் வெளிப்படும் உத்திகளும். பேச்சை அமைக்கும் அழகும் வெகு நூதனமாகவும் நளினமாகவும் இருக்கும். பேச்சுக்கலையை விளக்கும் பாடப்புத்தகங்கள் எத்தனையோ விதிகள் கூறும். ஜீவா அவற்றைக் காலடியில்போட்டு மிதித்தவர். அவருடைய பாணி இரவல்பாணி அல்ல; கற்று அறிந்ததும் அல்ல.

நம் நாட்டு மக்களின் தரத்தையும் அனுபவ அறிவையும் பழக்கவழக்கங்களையும் நம்பிக்கைகளையும் நன்றாகத் தெரிந்துகொண்ட ஒரு மனிதன், விஷயத்தைக் கலைநோக்கோடு அணுகிக் கற்பனையும் கலந்து நாளடைவில் வெற்றிகரமாக அமைத்துக் கொண்ட பேச்சுப்பாணி அது.

அதோடு, உழுது விதைத்தால் நல்ல அறுவடை காணவேண்டும் என்பதில் ஜீவாவுக்கு நிர்ப்பந்தமுண்டு. இந்தத் தேசத்தில் பேச்சு, அதற்குரிய பயனைத் தர வேண்டுமென்றால், அது எவ்வாறு அமைய வேண்டும் என்பதும் அவருக்குத் தெரியும்.

இரண்டு கைப்பிடி விசயம்

விசயத்தை வண்டி வண்டியாகக் குவித்துச் சின்ன மூளைகளைக் குழப்பி வாதனைக்கு உள்ளாக்குவது பல பிரசங்கிகளுக்குப் பொழுதுபோக்கு. ஜீவா இதற்கு எதிரி. ஒரு சில கருத்துகளை விரிவாகச் சொல்லிப் புரியவைத்துவிட்டால் போதும் என்பதே அவருடைய எண்ணம்.

வாண வேடிக்கைக்காரன் நாழிக்குள் திணிக்கும் மருந்துபோல் இரண்டு கைப்பிடி விசயம்தான் எடுத்துக்கொள்வார். மேடைமீது ஏறி அதற்கு நெருப்பு வைத்ததும் அதிலிருந்து வர்ணஜாலங்கள் தோன்றும்; பச்சையும் சிவப்பும் மஞ்சளும் உதிரும்; குடை குடையாய் இறங்கி வரும்; மாலை மாலையாய் இறங்கி வரும்.

பசுமையான எண்ணங்கள்

பேச்சுக்கலை அவருடைய காலடியில் விழுந்து கிடந்தது. இப்போது மேடையில் ஒரு நாற்காலி காலியாகிவிட்டது. அது என்றும் காலியாகவே கிடக்கும்.

நான் ஒரு பள்ளி மாணவன், படித்துக்கொண்டிருக்கிறேன். படித்துக் கொண்டே இருப்பேன்' என்ற எண்ணம் எப்போதும் அவர் மனசில் பசுமையாக இருந்தது போலிருக்கிறது. அவர் கரைத்துக் குடித்துவிட்ட ஒரு விஷயத்தைப் பற்றி ஒரு கற்றுக்குட்டி அவரிடம் பேசினாலும் அதையும் காது கொடுத்துக் கேட்பார். தனக்குத் தெரியாத விஷயங்கள் பிறருக்குத் தெரிந்திருக்கும் என்ற எளிய உண்மை எப்போதும் அவர் நினைவில் நிற்கும்.

ஆற்றில் விழுந்த கிளை

ஆற்றில் ஒரு கிளையைப் போடுகிறோம். அது ஆற்றோடு செல்கிறது. நீரோட்டத்தில் சிக்கிக் கனவேகமாக ஓடுகிறது. சுழியில் அகப்பட்டுச் சுழல்கிறது. சில சமயம் கரையோடு ஒதுங்குகிறது. மீண்டும் ஓடுகிறது. ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த சொரிமுத்து ஆற்றில் கிளையைப் போட்டாற்போல் வாழ்ந்திருக்க வேண்டியவர்தான். ஆனால் அவரோ இயற்கையின் விதிகளை மறுத்து எதிர்நீச்சல் போடத் துணிந்தார். அவரை அறிஞர் என்கிறோம்; கற்றுக்கொடுக்க யாருமில்லை. பழந்தமிழ் இலக்கியத்தை யாரும் அவர் காதில் ஓதவில்லை. சொரிமுத்துவுக்கும் தலைவர் ஜீவாவுக்குமுள்ள இடைவெளி கொஞ்சம் தூரமல்ல. அதையொரு கணம் எண்ணிப் பார்த்தால், அவருடைய சாதனை தெரியவரும்.

'என் வாழ்வு என் கைகளில்' என்று நம்பியவர் அவர். அவருடைய வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்கிறபோது அவருடைய நம்பிக்கை பலித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். கடவுளின் 'முன்னேற்பாடுகளை' முடிந்த மட்டும் அவர் தகர்த்து எறித்துவிட்டார். நீரில் விழுந்த கிளை மலைக்குச் சென்றுவிட்டது. எனினும், மரணம் இன்னும் கடவுளுக்குத்தான் சொந்தம். பேரோசை காற்றில் கலந்துவிட்டது.

('காற்றில் கலந்த பேரோசை' கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம்)

 

நூல்வெளி

ஜீவா என்றழைக்கப்படும் . ஜீவானந்தம் தொடக்கத்தில் காந்தியவாதியாகவும் பிறகு சுயமரியாதை இயக்கப் போராளியாகவும் பொதுவுடைமை இயக்கத் தலைவராகவும் செயல்பட்டார்; சிறந்த தமிழ்ப் பற்றாளர்; எளிமையின் அடையாளமாகத் திகழ்ந்தவர்.

நாகர்கோவிலைச் சேர்ந்த சுந்தர ராமசாமி, நவீனத் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். பசுவய்யா என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதியவர். ரத்னாபாயின் ஆங்கிலம், காகங்கள் உள்ளிட்ட சிறுகதைகளை எழுதியிருப்பதுடன் ஒரு புளியமரத்தின் கதை, ஜே.ஜே. சில குறிப்புகள், குழந்தைகள் பெண்கள் ஆண்கள் ஆகிய புதினங்களையும் எழுதியுள்ளார். செம்மீன், தோட்டியின் மகன் ஆகிய புதினங்களை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். பாடப்பகுதியாக உள்ள இக்கட்டுரை 1963இல் தாமரை இதழின் ஜீவா பற்றிய சிறப்புமலரில் வெளியானது.

Tags : by Sundara ramasamy | Chapter 7 | 11th Tamil சுந்தர ராமசாமி | இயல் 7 : 11 ஆம் வகுப்பு தமிழ்.
11th Tamil : Chapter 7 : Vaiya thalamai kol : Prose: Kaatril kalantha peraasai by Sundara ramasamy | Chapter 7 | 11th Tamil in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : வையத் தலைமை கொள் : உரைநடை: காற்றில் கலந்த பேரோசை - சுந்தர ராமசாமி | இயல் 7 : 11 ஆம் வகுப்பு தமிழ் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : வையத் தலைமை கொள்