இயல் 7 : 11 ஆம் வகுப்பு தமிழ் - செய்யுள் கவிதைப்பேழை: புரட்சிக்கவி | 11th Tamil : Chapter 7 : Vaiya thalamai kol
இயல் 7
கவிதைப்பேழை
புரட்சிக்கவி
நுழையும்முன்
மக்களாட்சிக்கு முன்புவரை சட்டம், நிருவாகம், நீதி ஆகியவை அரசனிடமே குவிந்து இருந்தன. இந்நிலை சிறிது சிறிதாக மக்கள் புரட்சியால் மாற்றப்பட்டுத் தற்பொழுது மக்களாட்சிமுறை பல்வேறு நாடுகளில் மலர்ந்துள்ளது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியன மக்களாட்சியின் அடிப்படைக்கூறுகள். மக்களாட்சிச் சிந்தனைகளைப் பரப்பியதில் இலக்கியத்திற்கும் பெரும்பங்கு உண்டு. அரசு என்பது மக்களுக்கானதே என்று காலந்தோறும் இலக்கிய வடிவங்களின் மூலம் கவிஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
முன்கதைச் சுருக்கம்
அரசன் ஒருவன் தன் மகள் அமுதவல்லிக்குக் கவிதை எழுதும் கலையினைப் பயிற்றுவிக்க விரும்புகிறான். அதற்காக அமைச்சரிடம் கருத்துரை கேட்கிறான். அமைச்சர் உதாரன் பெயரை முன்மொழிந்து, 'அவன் அழகும் அறிவும் இளமையும் வாய்ந்தவன்' என்று கூறுகிறார். தன் மகள் எளிய கவிஞரோடு காதல் வயப்படுவாளோ என எண்ணி அரசன் தயங்குகிறான். அதற்கு அமைச்சர் ஓர் உத்தியைக் கூறுகிறார்.
அதன்படி உதாரன் பார்வையற்றவன் என்று அமுதவல்லியிடம் கூறுகின்றனர். இதுபோலவே உதாரனிடம் அமுதவல்லி தொழுநோயாளி என்று தெரிவிக்கின்றனர். இருவருக்கும் இடையில் திரையிடப்படுகிறது. உதாரன், அமுதவல்லிக்குக் கவிதை எழுதும் கலையைக் கற்றுத் தருகிறான்.
ஓர் இரவுப்பொழுதில் அழகிய நிலவினைக் கண்டு உதாரன் தன்ணை மறந்து கவிதை ஒன்றைப் பாடுகிறான். பார்வையற்ற ஒருவன் நிலவின் அழகைக் கண்டு எவ்வாறு கவிபாட முடியும் என்று ஐயம் கொண்ட அமுதவல்லி திரையினை விலக்கினாள். அழகிய ஆண் மகன் இருக்கக் கண்டு அவனை விரும்பத் தொடங்குகிறாள். உதாரனும் அழகான அமுதவல்லியைக் கண்டு விருப்பம் கொள்கிறான். இருவருக்கும் இடையே அன்பு மலர்கிறது.
இவர்களின் விருப்பம் அரசனுக்குத் தெரியவருகிறது. இதனை விரும்பாத அரசன், உதாரனைக் குற்றவாளியாக்கி மரண தண்டனை விதிக்கிறான். அமுதவல்லி அதை எதிர்க்கிறான். அதனால், சினம்கொண்ட மன்னன் இருவருக்கும் சேர்த்தே மரண தண்டனை விதிக்கிறான்.
இதனைத் தொடர்ந்து வரும் இக்காவியத்தின் இறுதிப்பகுதி இங்குப் பாடமாக இடம்பெற்றுள்ளது.
பா வகை: எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
உயிர் எமக்கு வெல்லமல்ல
'காதலனைக் கொலைக்களத்துக் கனுப்பக் கண்டும்
கன்னிஎனை மன்னிக்கக் கேட்டுக்கொண்ட
நீதிநன்று மந்திரியே! அவன் இறந்தால்
நிலைத்திடும்என் உயிர்எனவும் நினைத்து விட்டாய்!
சாதல்எனில் இருவருமே சாதல் வேண்டும்,
தவிர்வதெனில் இருவருமே தவிர்தல் வேண்டும்;
ஓதுகஇவ் விரண்டில் ஒன்று மன்னவன்வாய்!
உயிர் எமக்கு வெல்லமல்ல!' என்றாள் மங்கை.
கடைசிப் பேச்சு
கொலைக்களத்தில் கொலைஞர்களும் அதிகா ரங்கள்
கொண்டவரும் காதலரும் ஓர்பால் நின்றார்;
அலைகடல்போல் நாட்டார்கள் வீடு பூட்டி
அனைவருமே வந்திருந்தார். உதார னுக்கும்
சிலைக்குநிகர் மங்கைக்கும் 'கடைசி யாகச்
சிலபேச்சுப் பேசிடுக' என்றுசொல்லித்
தலைப்பாகை அதிகாரி விடைதந் திட்டான்;
தமிழ்க்கவிஞன் சனங்களிடை முழக்கம் செய்வான்;
பேரன்பு கொண்டவரே, பெரியோ ரே,என்
பெற்றதாய் மாரே, நல் இளஞ்சிங் கங்காள்!
நீரோடை நிலங்கிழிக்க, நெடும ரங்கள்
நிறைந்துபெருங் காடாகப், பெருவி லங்கு
நேரோடி வாழ்ந்திருக்கப் பருக்கைக் கல்லின்
நெடுங்குன்றில் பிலஞ்சேரப், பாம்புக் கூட்டம்
போராடும் பாழ்நிலத்தை அந்த நாளில்
புதுக்கியவர் யார்? அழகு நகர்உண் டாக்கி!
சிற்றூரும் வரப்பெடுத்த வயலும் ஆறு
தேக்கியநல் வாய்க்காலும் வகைப்ப டுத்தி
நெற்சேர உழுதுழுது பயன்வி ளைக்கும்
நிறைஉழைப்புத் தோள்களெலாம் எவரின் தோள்கள்?
கற்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டிக்
கருவியெலாம் செய்துதந்த கைதான் யார்கை?
பொற்றுகளைக் கடல்முத்தை மணிக்கு லத்தைப்
போய்எடுக்க அடக்கியமூச் செவரின் மூச்சு?*
ஒருமனிதன் தேவைக்கே இந்தத் தேசம்
அரசனுக்கும் எனக்கும் ஒரு வழக்குண் டாக
அவ்வழக்கைப் பொதுமக்கள் தீர்ப்ப தேதான்
சரியென்றேன்; ஒப்பவில்லை! இவளும் நானும்
சாவதென்றே தீர்ப்பளித்தான்; சாக வந்தோம்!
ஒருமனிதன் தேவைக்கே இந்தத் தேசம்
உண்டென்றால், அத்தேசம் ஒழிதல் நன்றாம்!
இருவர் இதோ சாகின்றோம்! நாளை நீங்கள்
இருப்பதுமெய் என்றெண்ணி இருக்கின் றீர்கள்!
மாசில்லாத உயர் தமிழ்
'தமிழ்அறிந்த தால் வேந்தன் எனை அழைத்தான்
தமிழ்க்கவிஎன் றெனை அவளும் காத லித்தாள்!
அமுதென்று சொல்லுமிந்தத் தமிழ், என் ஆவி
அழிவதற்குக் காரணமாயிருந்த தென்று
சமுதாயம் நினைத்திடுமோ? ஐயகோ! என்
தாய் மொழிக்குப் பழிவந்தால் சகிப்ப துண்டோ?
உமைஒன்று வேண்டுகின்றேன் மாசில் லாத
உயர்தமிழை உயிர்என்று போற்று மின்கள்!
மக்களுக்கே ஆளும் உரிமை
அரசனுக்குப் பின்னிந்தத் தூய நாட்டை
ஆளுதற்குப் பிறந்தஒரு பெண்ணைக் கொல்ல
அரசனுக்கோ அதிகாரம் உங்க ளுக்கோ?
அவ்வரசன் சட்டத்தை அவம தித்தான்
சிரம் அறுத்தல் வேந்தனுக்குப்பொழுது போக்கும்
சிறியகதை! நமக்கெல்லாம் உயிரின் வாதை!
அரசன்மகள் தன்நாளில் குடிகட் கெல்லாம்
ஆளுரிமை பொதுவாக்க நினைத்தி ருந்தாள்!
ஆழ்க எந்தன் குருதி
வாழியஎன் நன்னாடு பொன்னா டாக!
வாழியநற் பெருமக்கள் உரிமை வாய்ந்தே
வீழியபோய் மண்ணிடையே விண்வீழ் கொள்ளி
வீழ்வதுபோல் தனித்தாளும் கொடிய ஆட்சி!
ஏழையினேன் கடைசிமுறை வணக்கம் செய்தேன்!
என் பெரியீர், அன்னையீர், ஏகு கின்றேன்!
ஆழ்க என்றன் குருதியெலாம் அன்பு நாட்டில்
ஆழ்க' என்றான்! தலை குனிந்தான் கத்தி யின்கீழ்!
கொலையாளி உயிர் தப்பல்
படிகத்தைப் பாலாபி ஷேகம் செய்து
பார்ப்பதுபோல் அமுதவல்லி கண்ணீர் வெள்ளம்
அடிசோர்தல் கண்டார்கள் அங்கி ருந்தோர்
ஆவென்று கதறினாள்! 'அன்பு செய்தோர்
படிமீது வாழாரோ?' என்று சொல்லிப்
பதைபதைத்தாள்! இதுகேட்ட தேச மக்கள்
கொடிதென்றார்! கொடுவாளைப் பறித்தார்; அந்தக்
கொலையாளர் உயிர்தப்ப ஓட லானார்!
செல்வமும் உரிமையும் மக்களுக்கே
கவிஞனுக்கும் காதலிக்கும் மீட்சி தந்தார்!
காவலன்பால் தூதொன்று போகச் சொன்னார்;
'புவியாட்சி தனிஉனக்குத் தாரோம் என்று
போய்உரைப்பாய்' என்றார்கள்! போகா முன்பே
செவியினிலே ஏறிற்றுப் போனான் வேந்தன்!
செல்வமெலாம் உரிமைஎலாம் நாட்டா ருக்கே
நவைஇன்றி எய்துதற்குச் சட்டம் செய்தார்!
நலிவில்லை! நலம்எல்லாம் வாய்ந்த தங்கே!
சொல்லும் பொருளும்
ஓதுக -
சொல்க; முழக்கம் –
ஓங்கி உரைத்தல்; கனிகள் -
உலோகங்கள்; மணி -மாணிக்கம்; படிகம் - பளபளப்பான கல்; படி - உலகம்; மீட்சி - விடுதலை; நவை - குற்றம்.
இலக்கணக் குறிப்பு
ஓதுக, பேசிடுக, ஆழ்க, வாழிய -
வியங்கோள் வினைமுற்றுகள்: அலைகடல் -
வினைத்தொகை; தமிழ்க்கவிஞர் -
இருபெயரொட்டுப் பண்புத்தொகை; பேரன்பு, நெடுங்குன்று -
பண்புத்தொகைகள். ஒழிதல் -
தொழிற்பெயர்; உழுதுழுது அடுக்குத்தொடர்,
பகுபத உறுப்பிலக்கணம்
நின்றார் -
நில்(ன்)
+ ற் + ஆர்
நில் -
பகுதி ('ல்' 'ன்' ஆனது விகாரம்), ற் இறந்தகால இடைநிலை, ஆர் பலர்பால் வினைமுற்று விகுதி.
செய்வான் -
செய்+வ்+ஆன்
செய் -
பகுதி, வ் -
எதிர்கால இடைநிலை, ஆன் -
ஆண்பால் வினைமுற்று விகுதி.
அழைத்தான் -
அழை +
த் +
த் +
ஆன்
அழை -
பகுதி, த் -
சந்தி, த் -
இறந்தகால இடைநிலை, ஆன் -
ஆண்பால் வினைமுற்று விகுதி.
வேண்டுகின்றேன் -
வேண்டு +
கின்று +
ஏன்
வேண்டு -
பகுதி, கின்று –
நிகழ்கால இடைநிலை, ஏன் -
தன்மை ஒருமை வினைமுற்று விகுதி.
ஆழ்க -
ஆழ் +க
ஆழ் -
பகுதி, க - வியங்கோள் வினைமுற்று விகுதி,
பறித்தார் – பறி + த் + த் + ஆர்
பறி -
பகுதி, த் -
சந்தி, த் –
இறந்தகால இடைநிலை, ஆர் -
பலர்பால் வினைமுற்று விகுதி.
புணர்ச்சி விதி
நீரோடை -
நீர் +
ஓடை
உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே -
நீரோடை
சிற்றூர் -
சிறுமை +
ஊர், ஈறு போதல் சிறு +
ஊர்
தன்னொற்றிரட்டல் - சிற்று + ஊர்
உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் -
சிற்ற் +
ஊர்
உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே -
சிற்றூர்
கற்பிளந்து -
கல் +
பிளந்து
ல ள வேற்றுமையில் வலிவரின் றடவும் -
கற்பிளந்து
மணிக்குலம் -
மணி +
குலம்
இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்
கசதப மிகும் -
மணிக்குலம்
அமுதென்று -
அமுது +
என்று
உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும் -
அமுத் +
என்று
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே -
அமுதென்று
புவியாட்சி -
புவி +
ஆட்சி
இ ஈ ஐ வழி யவ்வும் -
புவி +
ய் +
ஆட்சி
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே -
புவியாட்சி
தெரிந்து தெளிவோம்
ஒரு மூல மொழிப் பிரதியின் உள்ளடக்கத்தை அப்பிரதிக்கு இணையான இலக்கு மொழிப் பிரதியின் வழியாக வெளிப்படுத்துதலே மொழிபெயர்ப்பு.
தழுவல்,
சுருக்கம்,
மொழியாக்கம்,
நேர்மொழிபெயர்ப்பு என்பவற்றை மொழிபெயர்ப்பின் வகைகளாகக் கொள்ளலாம்.
தமிழிலிருந்து பிற மொழிக்கு
சங்க இலக்கிய மொழிபெயர்ப்பு
ஏ.கே.ராமானுஜம்
- Love
Poems from a Classical Tamil Anthology
ம.லெ.
தங்கப்பா
- Hues
And Harmonies From An Ancient Land
பிற மொழியிலிருந்து தமிழுக்கு
"அந்நியன்"
- ஆல்பர் காம்யு,
"உருமாற்றம்" - காப்கா
- ஜெர்மனியிலிருந்து
'சொற்கள்' - ழாக் பிரேவர்,
"குட்டி இளவரசன்' - எக்சுபெறி
- பிரெஞ்சிலிருந்து
"உலகக் கவிதைகள்"
- தொகுப்பு: பிரம்மராஜன்
நூல்வெளி
வடமொழியில் எழுதப்பட்ட பில்கணீயம் என்னும் காவியத்தைத் தழுவி, தமிழில் பாரதிதாசனால் 1937இல் எழுதப்பட்டது புரட்சிக்கவி. பாரதியின் மீது கொண்ட பற்றின் காரணமாகக் கனக சுப்புரத்தினம் என்னும் தம் பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார். மொழி, இனம், குடியாட்சி உரிமைகள் ஆகியவை பற்றித் தம் பாடல்களில் உரக்க வெளிப்படுத்தியமையால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்டார். பிரெஞ்சு மொழியில் அமைந்த தொழிலாளர் நலச் சட்டத்தைத் தமிழ் வடிவில் தந்தவர். குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, சேர தாண்டவம், ஆகிய காப்பியங்களையும் எண்ணற்ற பாடல்களையும் இயற்றியவர். 'குயில்' என்னும் இலக்கிய இதழை நடத்தியுள்ளார். இவருடைய 'பிசிராந்தையார்' நாடகத்துக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது. 'வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே' என்ற இவரின் தமிழ் வாழ்த்துப் பாடலைப் புதுவை அரசு தனது தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழக அரசு இவருடைய பெயரால் திருச்சியில் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளது.