இயல் 7 : 11 ஆம் வகுப்பு தமிழ் - மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் | 11th Tamil : Chapter 7 : Vaiya thalamai kol
இலக்கணத் தேர்ச்சி கொள்
பயிற்சி 1
கீழ்க்காணும் பத்தியில் உள்ள ஆக்கப்பெயர்களை எடுத்தெழுதுக.
எங்கள் பள்ளியில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவிற்குக் காவல்துறை ஆணையாளர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர், "மாணவர்களாகிய நீங்கள் படிப்பகங்களைப் பயன்படுத்தி விண்ணியல், மண்ணியல் போன்ற துறைகளில் சிறந்து விளங்கவேண்டும். நல்ல நண்பர்களைக் கூட்டாளி ஆக்கிக்கொண்டு உதவியாள் இல்லாமலே ஒரு நிறுவனத்தின் மேலாளராகவோ முதலாளியாகவோ ஆகலாம்” என்று கூறி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
விடை
ஆக்கப்பெயர்கள்:
1. ஆணையாளர்
2. அழைப்பாளர்
3. படிப்பகம்
4. கூட்டாளி
5. உதவியாள்
6. மேலாளர்
7. முதலாளி
பயிற்சி 2
அடைப்புக்குள் உள்ள ஆக்கப்பெயர் விகுதிகளைக் கொண்டு விடுகதைகளுக்குரிய ஆக்கப்பெயர்களைக் கண்டறிக,
1. வேவு பார்த்திடுவான்; ஓசையின்றிச் சென்றிடுவான் (ஆளி).
ஆளி - உளவாளி
2. அறிவைத் தேடிப் போகுமிடம்; உலகம் அறிய உதவுமிடம் (அகம்).
அகம் - படிப்பகம்/நூலகம்
3. வந்தால் மகிழ்ச்சி இது; உழைத்தால் கிடைக்கும் இது (மானம்).
மானம் - வருமானம்
4. வேட (ஷ)ம் போட்டவன் வேடதாரி; பட்டம் வாங்கினவன்? (தாரி).
தாரி - பட்டதாரி
5. அளந்து அளந்து கொட்டிடுவான்; அகம் மகிழத் தந்திடுவான் (ஆள்). –
ஆள் - படியாள்
கற்பவை கற்றபின்
1. நான் விரும்பும் நாட்டிற்குழைத்த தலைவர் - மேடைப்பேச்சுக்கான கவியுரை உருவாக்குக.
விடை
நான் விரும்பும் நாட்டிற்குழைத்த தலைவர் - பெருந்தலைவர் காமராசர்
விருதுமாநகரின் விடிவெள்ளியே!
எண்ணற்றோர் வாழ்வின் ஒளிவிளக்கே!
அன்னச் சத்திர அமைத்தலை விட
ஆங்கோர் ஏழைக்கு கல்விச் சாலை என்றான்
பாரதி!
யாமோ அன்னமும் கல்வியும் அளித்த
கருணைக்கடல் காமராசரே!
அன்பின் திருவுருவே!
ஆற்றலின் இருப்பிடமே!
இரக்கத்தின் இணையே!
ஈடில்லாப் பாரதத்தின் தலைமை
உருவாக்கிய தலைமகனே!
தமிழ்மண்ணின் தலைமையே!
வருங்கால சந்ததியின் ஒளிச்சுடரே!
உண்மை, உணர்வு, உணர்ச்சியால்
ரஷ்யாவில் ரசிக்கப்பட்ட இராஜதந்திரமே!
பாரில் படித்துப் பாராட்டு பெற்றோர் பலர்
படிக்காத, நடிக்காத நல்லோர் மனதில் வாழும்
சொல்லழகு நாயகனே! காமராசரே!!
2. ஜீவானந்தம் பற்றிய செய்திகளைத் திரட்டி வகுப்பறையில் படித்துக் காட்டுக.
விடை
ஜீவானந்தம்:
‘நீங்கள் இந்தியாவின் சொத்து!' ‘காந்தி வியந்த தோழன்'. தோழர் ஜீவா உண்மையான களப்போராளி தொழிலாளர் நடத்திய போராட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தியவர். 1948 இல் பிரிட்டிஷ் அரசு தொழிலாளர்களின் போராட்டத்தை தடுத்து நிறுத்தியபோது நிறுத்தாமல் முன்னேறியவர் ஜீவா. இதனால் ஆத்திரம் அடைந்த பிரிட்டிஷ் அரசு ‘இன்னும் ஒரு அடி எடுத்து வைப்போர் சுடப்படுவர்' என்றனர். அதைக்கேட்ட ஜீவா கோபம் கொண்டு, 'மார்பைத் தட்டி எங்கே சுடு' என்றார். காந்தீயக் கொள்கையால் ஈர்க்கப்பட்டவர் ஜீவா. 1927 இல் காந்தியின் பெயரால் ஆசிரமம் நடத்தியவர். சாதி ஒழிப்பு, சுயமரியாதை போன்ற போராட்டங்களில் ஈடுபட்டவர். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு கூட்டம் நடத்தினார். இனியும் இவர் பேசினால் நமக்கு ஆபத்து என அரசு அவரை சிறையில் அடைத்தது. 1963, ஜனவரி 18 இல் மறைந்தார்.
3. மக்களாட்சியின் சிறப்பைப் பற்றிக் கட்டுரை எழுதுக.
விடை
குறிப்புச் சட்டகம்
முன்னுரை
வரலாறு
நேரடி மக்களாட்சி
மறைமுக மக்களாட்சி
மக்களாட்சியின் தூண்கள்
மானிட உரிமை மக்களாட்சி
முடிவுரை
முன்னுரை:
மக்களாட்சி என்பது சுதந்திரமான தேர்தல் முறைப்படி உயர் அதிகாரம் பெற்ற மக்கள் தேர்ந்தெடுக்கும் அரசாங்கம். இதில் மக்களின் பிரதிநிதிகள் ஆட்சி அதிகாரம் பெறுவர்.
வரலாறு:
‘மக்களாட்சி என்பது சீராகவோ மிக வேத்துடனோ வளர்ந்தது அல்ல' என்று சாமுவேல் பிஹெட்டிங்கள் கூறுகிறார். பல்வேறு வரலாற்று அலைகளால் முன்னேற்றம் அடைந்தது என்கிறார். முதல் அலை 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஆண் குடிமக்கள் வாக்களிப்பது. 2 ஆம் அலை, இரண்டாம் உலகப்போரில் இருந்து 1962 இல் வளர்ந்து 1970 இல் குறைந்தது. 1974 இல் 3 ஆம் அலை 30 நாடுகளில் பற்றியது.
நேரடி மக்களாட்சி:
நேரடி மக்களாட்சி முறையில் அனைத்து குடிமக்களும் எவ்வித இடைப்பட்ட பிரதிநிதிகளில்லாமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது பணியமர்த்தப்பட்ட அலுவர்கள் இல்லாமலும் மக்களாகவே நேரடியாவது பொதுமுடிவுகளில் கலந்துகொண்டு பொதுமுடிவுகளை எடுக்கும் முறை நேரடி மக்களாட்சி என்பர்.
மறைமுக மக்களாட்சி:
ஒவ்வொரு குடிமகனும் தன்னுடைய நாட்டிற்காக நேரடியாகவோ அல்லது சுதந்திரமாகவோ தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாகவோ அரசாங்கத்தில் பங்கெடுத்துக் கொள்வது மறைமுக மக்களாட்சி எனப்படும்.
மக்களாட்சியின் தூண்கள்:
மக்கள் இறைமையைப் பெற்றல்; அரசு மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் அமைதல்; பெரும்பான்மையோர் ஆட்சி மனித உரிமை பாதுகாத்தல்; சிறுபான்மையினர் உரிமை மதித்தல்; சட்டத்தின் முன் அனைவரும் சமம்; சட்டத்தை அனைவரும் பின்பற்றல் போன்றவை இதில் அடங்கும்.
மானிட உரிமை மக்களாட்சி:
மனிதர்கள் அனைவரும் பிறப்பால் கண்ணியத்தால் மற்றும் உரிமையால் சுதந்திரமானவர்கள். அவர்களிடம் காரண காரியங்கள் மற்றும் நியாய உணர்வு அடிப்படையில் எல்லோரும் சகோதர எண்ணத்துடன் செயலாற்ற வேண்டும் என்ற நோக்கம் இருந்தது.
முடிவுரை:
மக்களால் மக்களுக்காக மக்களால் ஆளப்படுவது மக்களாட்சி என்பார் ஆபிரகாம் லிங்கன். எனவே மக்கள் தங்களுக்குத் தாங்களே அதிகாரம் செலுத்தும் உரிமையும் கடமையும் ஒருங்கே பெற்றுள்ள சிறப்பே மக்களாட்சி என்பது தெளிவாகிறது.
4. பாரதிதாசனாரின் ‘புரட்சிக் கவி' குறுங்காவியத்தை முழுமையாகப் படித்துச் சுவைத்து உங்கள் கருத்தைப் பதிவு செய்க.
விடை
மக்களாட்சிச் சிந்தனைகளைப் பரப்பியதில் இலக்கியத்திற்கும் பெரும் பங்கு உண்டு என்பதைப் பாரதிதாசனின் புரட்சிக் காவியத்தில் காணமுடிகிறது. அவற்றில் நான் சுவைத்த வரிகள். ‘நாடு, நாட்டு வளம் மக்களுக்கே! தனிமனித தேவைக்கென்றால் அந்த நாடும் அழியட்டும்; நாமும் அழிவோம்' என்கிறார்.
அரசனுக்கும் எனக்கும் ஒரு வழக்குண் டாக
அவ்வழக்கைப் பொதுமக்கள் தீர்ப்ப தேதான்
சரியென்றேன்; ஒப்பவில்லை! இவளும் நானும்
சாவதென்றே தீர்ப்பளித்தான்; சாக வந்தோம்
ஒரு மனிதன் தேவைக்கே இந்தத்தேசம்
உன்டென்றால், அத்தேசம் ஒழிதல் நன்றாம்
இருவரும் இதோ சாகின்றோம்!.....
அடுத்தாக தமிழ் படித்தால் சாக வேண்டும் என்ற நிலையைப் பற்றி அழகுபட கூறுகிறார். அரசனின் மகளுக்குத் தமிழ் கற்பிக்க பல்வேறு பொய் கூறிவரவழைத்தார். எதிர்பாராதவிதமாக அரசனின் மகள் என்மேல் விருப்பம் அடைந்தாள். நானும் நேசித்தேன். இதுதான் காரணம் என்னை அழைக்கவில்லை என்றால் காதல் ஏற்பட்டிருக்காது. இதற்கு தமிழ்தான் காரணம். அரசனுக்கு தமிழ்மீது இருந்த காதல். ஆகவே அழைத்தான் நானும் கற்பித்தேன். நாளடைவில் மகள்மீது காதலாக மாறியது. நான் என்ன குற்றம் செய்தேன். தமிழ்தான் குற்றம் செய்தது. தமிழுக்குப் பழி வரலாமா?
தமிழ் அறிந்ததால் வேந்தன் எனை அழைத்தான்
தமிழ்க்கவிஎன் றெனை அவளும் காத லித்தாள்!
அமுதென்று சொல்லுமிந்தத் தமிழ், என் ஆவி
அழிவதற்குக் காரணமாயிருந்த தென்று
சமுதாயம் நினைத்திடுமோ!
என்று அழகுபட பாரதிதாசன் புரட்சிக்கவி எனும் குறுங்காவியத்தைப் படைத்துள்ளார்.
5. பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து (738) - என்ற குறள்வழி நாட்டிற்கு அழகு சேர்ப்பன குறித்துக் கலந்துரையாடுக.
விடை
கலந்துரையாடல்: (கலந்துரையாடுபவர்கள் - மாறன், எழில், அமுதா, எழில்)
மாறன் : தோழர்களே வள்ளுவர் தந்த பொதுமறை நமக்கு பல்வேறு செய்திகள் தந்தாலும் நாட்டுக்கு அழகு சேர்ப்பன எவை எவை என பட்டியல் இடுகிறார்.
எழில் : ஆம் நண்பா!
அமுதா : நேற்றுதான் நமது ஆசிரியர் அதைப்பற்றி விளக்கமாக கூறினார்.
மாறன் : நாடு எப்படி இருக்க வேண்டும்?
எழில் : பிணி, பகை அழிந்து, வறுமை ஒழிந்து, இயற்கை வளம் பெருகி இருக்க வேண்டும்.
அமுதா : நாடு அதிகாரத்தில் எட்டாவது குறளைப் படித்தாயா?
மாறன் : ம்...
அமுதா : அழகுன்னா... என்ன?
எழில் : மரம், செடி, கடல், இவை இல்லை. பசி பிணி ஒழிந்து பாதுகாப்பு பெருகி நல்ல விளைச்சல் இன்பமான வாழ்வு தருவது தான் அழகு என்கிறார் வள்ளுவர்.
அமுதா : 2000 ஆண்டுகளுக்கு முன்னே நாடு எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளுவர் கூறினார்.
எழில் : ஆம்... மிக்க மகிழ்ச்சி.
மாறன் : நாளை சந்திப்போமா!
6. மனித வாழ்வை உயர்த்துவதற்குப் பெரிதும் தேவை பணமே! கல்வியே! என்பது பற்றி ஒரு சொற்போர் நிகழ்த்துக.
விடை
பணமே! கல்வியே! - சொற்போர்
நடுவர் : சொற்போர் நடத்துவதற்கு களம் தந்து காண வருகை தந்தவர்களுக்கும் சொற்போருக்கு தமிழ்ச் சொற்களை தன் அம்பரா தூணில் தூக்கி வந்துள்ள தோழர்களுக்கும் வணக்கம். மனித வாழ்க்கைக்கு பெரிதும் தேவை பணமா! சுல்வியா! என்ற தலைப்பில் முதலில் காமாட்சி வருகிறார்.
காமாட்சி : இவ்வுலக வாழ்க்கைக்கு தேவை பணம் தான் அவசியம் கல்வி தேவையா? பணம் இருந்தால் தான் கல்வியே கற்க முடியும் என்ற நிலை உள்ளது. கடவுளை காணவும், கல்வியைக் கற்கவும் இன்று பணம் தான் என்ற நிலை உள்ளது. கம்பன் புகழ் பெறக் காரணம் பணம் தான். சடையப்ப வள்ளல் உதவவில்லை என்றால் காவியம் இல்லை. அப்ப மனித வாழ்க்கைக்கு பணம் தான் தேவை என்று கூறி விடைபெறுகிறேன். நன்றி!
நடுவர் : காசேதான் கடவுளடா என்று காமாட்சி கலகலப்பாக பேசினார். அடுத்து கல்வி என்ற தலைப்பில் கலாவதி வருகிறார். கலாவதி நிற்பாரா - காலாவதி ஆவார்.
கலாவதி : நடுவர் அவர்களே! ஒன்றே ஒன்று மட்டும் சொல்கிறேன். 'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' என்றார் வள்ளுவர். பொன்னும் பொருளும் கண்ணெனத் தகுமென்று சொல்லவில்லை. காசு கொடுத்து தான் கடவுளைப் பார்க்கலாம் என்றார் காமாட்சி. இறைவன் கண்ணன் குபேரன் வீட்டுக்குச் செல்லவில்லை, குசேலன் வீட்டுக்குத்தான் சென்றார். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு எனக் கூறி நிறைவு செய்கிறேன். நன்றி!
நடுவர் : வார்த்தைகளால் வளைத்த இருவருக்கும் நன்றி! பணம் தேவை, அதைக் கணக்குப் பார்க்க அறிவு தேவை. அறிவு இல்லாவிடில் குரங்கு கையில் அகப்பட்ட பூமாலை போன்றுதான். இனி ஏதும் விளக்கம் உங்களுக்கு தேவையில்லை. ஆதலால் மனித வாழ்க்கைக்கு பணம் தேவையாகத்தான் இருந்தாலும் கல்விதான் முக்கியம் என்று தீர்ப்புத் தருகிறேன்.
7. நீங்கள் வாழும் சூழலில் பயன்படுத்தப்படும் ஆக்கப்பெயர்களைப் பட்டியலிடுக.
விடை
நடிகர்
படைப்பாளி
உழைப்பாளி
நூலகர்
ஓட்டுனர்
பால்காரர்
பார்வையாளர்
நோயாளி
காசாளர்
பணக்காரன்
செய்தியாளர்
தோட்டக்காரன்
உதவியாளர்
வண்டிக்காரன்
மேளக்காரன்
8. படிப்பவர், படிப்பாளி இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை ஆராய்க.
விடை
படிப்பவர்
படி என்னும் வினையுடனும், எச்சத்துடனும் சேர்ந்து வரும் விகுதியாக அமைவது படிப்பவர்.
படிப்பாளி
‘ஆளி' என்னும் விகுதி இருபாற் பொதுப் பெயர்களை பொதுவாகக் குறிப்பது