பருவம் 3 இயல் 2 | 6 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: பெயர்ச்சொல் | 6th Tamil : Term 3 Chapter 2 : Ellarum enbura
இயல் இரண்டு
கற்கண்டு
பெயர்ச்சொல்
மரம், பள்ளிக்கூடம், சித்திரை, கிளை, இனிப்பு, பாடுதல் ஆகிய சொற்களைச் கவனியுங்கள். இவை அனைத்தும் பெயரைக் குறிக்கின்றன. இவ்வாறு ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவையாவன
1.
பொருட்பெயர்
2.
இடப்பெயர்
3.
காலப்பெயர்
4.
சினைப்பெயர்
5.
பண்புப்பெயர்
6.
தொழிற்பெயர்
பொருட்பெயர்
பொருளைக் குறிக்கும் பெயர் பொருட்பெயர் எனப்படும். இஃது உயிருள்ள பொருள்களையும் உயிரற்ற பொருள்களையும் குறிக்கும்.
(எ.கா.)
மரம், செடி, மயில், பறவை, புத்தகம், நாற்காலி.
இடப்பெயர்
ஓர் இடத்தின் பெயரைக் குறிக்கும் பெயர் இடப்பெயர் எனப்படும்.
(எ.கா.) சென்னை,
பள்ளி, பூங்கா, தெரு.
காலப்பெயர்
காலத்தைக் குறிக்கும் பெயர் காலப்பெயர் எனப்படும்.
(எ.கா.)
நிமிடம், நாள், வாரம், சித்திரை, ஆண்டு.
சினைப்பெயர்
பொருளின் உறுப்பைக் குறிக்கும் பெயர் சினைப்பெயர் எனப்படும்.
(எ.கா.) கண்,
கை, இலை,
கிளை.
பண்புப்பெயர்
பொருளின் பண்பைக் குறிக்கும் பெயர் பண்புப்பெயர் எனப்படும்.
(எ.கா.) வட்டம்,
சதுரம், செம்மை, நன்மை.
தொழிற்பெயர்
தொழிலைக் குறிக்கும் பெயர் தொழிற்பெயர் எனப்படும்.
(எ.கா) படித்தல், ஆடுதல், நடித்தல்.
அறுவகைப் பெயர்ச்சொற்களுக்கான சான்றுகளை தொடரில் அமைத்து எழுதுவோம்.
காவியா புத்தகம் படித்தாள் - பொருட்பெயர்
காவியா பள்ளிக்குச் சென்றாள் -
இடப்பெயர்
காவியா மாலையில் விளையாடினாள் -
காலப்பெயர்
காவியா தலை அசைத்தாள் - சினைப்பெயர்
காவியா இனிமையாகப் பேசுவாள் -
பண்புப்பெயர்
காவியாவுக்கு நடனம் ஆடுதல் பிடிக்கும் - தொழிற்பெயர்
இடுகுறிப்பெயர், காரணப்பெயர்
நம் முன்னோர் பெயர்ச்சொற்களை அவை வழங்கும் அடிப்படையில் இடுகுறிப்பெயர், காரணப்பெயர் என இருவகைப்படுத்தினர்.
இடுகுறிப்பெயர்
நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதாமல் பெயரிட்டு வழங்கினர். அவ்வாறு இட்டு வழங்கிய பெயர்கள் இடுகுறிப்பெயர்கள் ஆகும்.
(எ.கா.)
மண், மரம்,
காற்று
இடுகுறிப் பொதுப்பெயர், இடுகுறிச் சிறப்புப்பெயர் என இடுகுறிப்பெயர் இரண்டு வகைப்படும்.
இடுகுறிப் பொதுப்பெயர்
ஓர் இடுகுறிப்பெயர் அத்தன்மை உடைய எல்லாப் பொருள்களையும் பொதுவாகக் குறிப்பது இடுகுறிப் பொதுப்பெயர் எனப்படும்.
(எ.கா.)
மரம்,காடு.
இடுகுறிச் சிறப்புப்பெயர்
ஓர் இடுகுறிப்பெயர் குறிப்பாக ஒரு பொருளை மட்டும் குறிப்பது இடுகுறிச் சிறப்புப்பெயர் எனப்படும்.
(எ.கா) மா, கருவேலங்காடு.
காரணப்பெயர்
நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதிப் பெயரிட்டனர். இவ்வாறு காரணத்தோடு ஒரு பொருளுக்கு வழங்கும் பெயர் காரணப்பெயர் எனப்படும்.
(எ.கா.)
நாற்காலி, கரும்பலகை
காரணப் பொதுப்பெயர், காரணச் சிறப்புப்பெயர் எனக் காரணப் பெயர் இரு வகைப்படும்.
காரணப் பொதுப்பெயர்
காரணப்பெயர் குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களையும் பொதுவாகக் குறித்தால் அது, காரணப்பொதுப்பெயர் எனப்படும்.
(எ.கா.)
பறவை, அணி
காரணச் சிறப்புப்பெயர்
குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களுன் ஒன்றை மட்டும் சிறப்பாகக் குறிப்பது காரணச்சிறப்புப்பெயர் ஆகும்.
(எ.கா.) வளையல், மரங்கொத்தி