பருவம் 3 இயல் 2 | 6 ஆம் வகுப்பு தமிழ் - வாழ்வியல்: திருக்குறள் | 6th Tamil : Term 3 Chapter 2 : Ellarum enbura
இயல் இரண்டு
வாழ்வியல்
திருக்குறள்
அறன் வலியுறுத்தல்
1.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.*
உள்ளத்தில் குற்றம் இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும். மற்றவை எல்லாம் வெறும் ஆரவாரமே.
2.
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
பொறாமை, பேராசை, சினம் கடுஞ்சொல் பேசுதல் ஆகிய நான்கும் இல்லாமல் வாழ்வதே அறம் ஆகும்.
ஈகை
3.
வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து.
இல்லாதவர்க்கு தருவதே ஈகை ஆகும். மற்றவை எல்லாம் பயனை எதிர்பார்த்துச் செய்பவை ஆகும்.
4.
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.
இல்லாதவர்க்குத் தருவதால் உண்டாகும் இன்பத்தை அறியாதவர்கள் பொருளைச் சேர்த்து வைத்துப் பின் அதனை இழந்து விடுவார்கள்.
இன்னா செய்யாமை
5.
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்*.
நமக்குத் துன்பம் செய்தவர் நாணும்படி அவருக்கு நன்மை செய்வதுதான் அவரைத் தண்டிக்கும் வழியாகும்.
6.
அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.
பிற உயிரின் துன்பத்தைத் தமது துன்பம் போல் கருதாவிட்டால் தாம் பெற்றுள்ள அறிவால் எந்தப் பயனும் இல்லை.
7.
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.
தம் உள்ளம் ஏற்றுக் கொள்ளாத எச்செயலையும் எக்காலத்திலும் யார்க்கும் சிறிதளவுகூடச் செய்யக் கூடாது.
கொல்லாமை
8.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.*
தம்மிடம் இருப்பவற்றைப் பிற உயிர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துக் காப்பாற்ற வேண்டும். அதுவே அறநூல்களில் கூறப்படும் அறங்களுள் சிறந்தது.
பெரியாரைப் பிழையாமை
9.
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை
ஆற்றல் உடையவர்களை இகழக் கூடாது. அதுவே தம்மைத் தீங்கிலிருந்து காத்துக்கொள்ளும் வழிகளுள் சிறந்த வழியாகும்.
10.
எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்..
தீயினால் சுடப்பட்டவர்கூடப் பிழைத்துக்கொள்ள முடியும். ஆனால் பெரியவர்களுக்குத் தீங்கு செய்தவர் தப்ப முடியாது.