பருவம் 3 இயல் 2 | 6 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: பாதம்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 6th Tamil : Term 3 Chapter 2 : Ellarum enbura
மதிப்பீடு
'பாதம்'கதையைச் சுருக்கி எழுதுக.
விடை
முன்னுரை :
மாரி என்பவர் காலணி தைக்கும் ஒரு தொழிலாளி. அவர் பசியால் வாடிக்கொண்டிருந்தார். திடீரென ஒரு விசித்திரக் காலணியின் மூலம் செல்வந்தர் ஆனார். ஆனாலும் அவர் மனம் ஏதோ ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. அவற்றை விளக்கும் கதையைக் காண்போம்.
வெறிச்சோடிய தெரு :
மாரி என்றைக்கும் போல் தியேட்டர் வாசலில் உட்கார்ந்திருந்தார். விடாமல் காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்தது. டீ குடிப்பதற்குக் கூட பணம் இல்லை. மழையில் எவரேனும் காலணி தைக்கக் கொடுத்தால் பணம் கிடைக்கும். டீ குடிக்கலாம் என எண்ணினார். தெரு வெறிச்சோடி இருந்தது. அவரும் ஒரு மரமும் எட்டுப் பழைய செருப்புகளும் மட்டும் இருந்தன.
சிறுமியின் காலணி :
தியேட்டரின் வலப்புறச் சந்தில் இருந்து சிறுமியொருத்தி மீனைப்போலச் சுழன்று அவர் அருகில் வந்து ஒரு காலணியைக் கொடுத்துத் தைத்து வைக்கும்படிக் கூறிவிட்டுச் சென்றாள். அந்தக் காலணி இளம் சிவப்பு நிறத்தில் வெல்வெட் தைத்துப் பூ வேலை கொண்டதாய் இருந்தது. அந்தக் காலணியில் ஏதோ பெயரிடப்படாத நறுமணம் வீசியது. காலணியைத் தைத்து முடித்துவிட்டு அச்சிறுமிக்காகக் காந்திருந்தார். இரண்டு ரூபாய் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தார். அச்சிறுமி இரவு வரை வரவேயில்லை. மழை பெய்வதால் வரவில்லை என எண்ணியவராய் அந்தக் காலணியை வீட்டிற்கு எடுத்துச் சென்றார்.
மாரியின் ஏமாற்றம் :
அடுத்த நாள் மாரி அந்தக் காலணியைத் துடைத்து, தனது நீலநிற விரிப்பில் வைத்துவிட்டு வேலையைத் தொடங்கினார். அன்றும் அந்தச் சிறுமி வரவில்லை. மறந்துவிட்டாளா? இல்லை யாரிடம் கொடுத்தோம் எனத் தெரியாமல் அலைகிறாளா? என்று எண்ணியபடி அன்றும் அக்காலணியை வீட்டிற்கு எடுத்துச் சென்றார். இப்படியே. பல நாட்கள் கழிந்தன.
மாரியின் மனைவி :
மாரியின் மனைவி ஓர் இரவில் அந்தக் காலணியைக் கண்டாள் அதன் வசீகரம் அவளை ஈர்த்தது. அதனைப் போட்டுப் பார்த்தாள். அளவில் சிறியதாக இருந்தாலும் அவளுக்குச் சரியாக இருந்தது. மற்றொரு காலணியைத் தேடிப் பையைக் கொட்டினாள். சப்தம் கேட்டு மாரி வந்து பார்த்தார். மனைவியின் வலக்காலில் இருந்த அந்தக் காலணியைப் பார்த்தார். மனைவியைத் திட்டி விட்டு காலணியை எடுத்துப் பார்த்தார் கிழியவில்லை. சிறுமியின் காலணி மனைவிக்குப் பொருந்தியதை எண்ணி வியந்தார். அவருக்கும் அந்தக் காலணியின் மீது ஆசை ஏற்பட்டதால் தன் வலக்காலை அதனுள் நுழைத்துப் பார்த்தார். அவருக்கும் பொருந்தியது. இது விசித்திரமாய் இருந்தது. அவரால் யோசிக்க முடியவில்லை. உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பையில் போட்டுக் கொண்டார்.
காலணியின் விசித்திரம் :
மறுநாள் மாரி அவருடன் தொழில் செய்பவரிடம் இந்தக் காலணியின் விசித்திரம் பற்றிக் கூறினார் அவரும் போட்டுப் பார்த்தார் பொருத்தமாக இருந்தது. இச்செய்தி நகர் முழுவதும் பரவியது சிறியவர் முதல் முதியவர் வரை அந்தக் காலணி அனைவருக்கும் பொருந்தியது. அதனைக் காலில் அணிந்தால் மேகத்துணுக்குகள் காலடியில் பரவுவது போலவும் பனியின் மிருது படர்வது போலவும் இருப்பதாகப் பலர் கூறினர். கோடைக்காலம் வந்தது அந்தக் காலணியை அணிந்து பார்த்தவர்கள் அவர்களாகவே பணம் கொடுத்தனர். அப்பணத்தில் இரண்டு பசு வாங்கினார். வீடு கட்டினார் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைந்தார். இந்நிலையிலும் அச்சிறுமியை அவர் தேடிக் கொண்டேதான் இருந்தார்.
முப்பது வருடப் பயணம் :
மாரி வருவதற்கு முன்பாகவே பலர் வந்து மரத்தடியில் காத்திருப்பார்கள். காலணியை அணிந்து பார்ப்பார்கள் முகத்தில் சந்தோஷம் பீறிடும். கலைந்து போவார்கள் முப்பது வருடம் கடந்தது. ஒரு நாள் இரவு மாரி வீடு திரும்பும்போது அக்காலணியைத் திருட முனைந்த இருவர் தடியால் அடித்தனர். காலணி திருடு போகவில்லை . தலையில் பட்ட அடியால் அவர் பலவீனமானார். அன்றிலிருந்து வெளியில் செல்லவில்லை பார்வையாளர்கள் அவர் வீடு தேடி வந்து சென்றனர். அவருடைய மனதில் மட்டும் அச்சிறுமியினால் நாம் வளர்ந்தோம். இறப்பதற்குள் அவளைப் பார்க்க வேண்டுமே’ என வேதனையுற்றார்.
மீண்டும் வந்த சிறுமி :
ஒரு மழை இரவில் பார்வையாளர்கள் வந்து சென்றதும் மத்திய வயதில் ஒரு பெண் நனைந்தபடி நின்றிருந்தாள். அவள் தணிவான குரலில் சொன்னாள். “வெகு தாமதமாகிவிட்டது எனது காலணியைத் தைத்துவிட்டீர்களா இல்லையா?” என்றாள். அவளை அடையாளம் கண்டு கொண்டார் மாரி “வலது காலணியை தைக்கக் கொடுத்தது நினைவிருக்கிறதா?” என்றாள். மாரி தன்னிடம் இருந்த காலணியைக் காட்டினார். “இந்தக் காலணி உலகின் எல்லாப் பாதங்களுக்கும் பொருந்துகிறது” என்று கூறினார்.
சிறுமியின் செயல் :
சிறுமி ஆச்சரியமின்றித் தலையாட்டி விட்டு தன்னிடம் இருந்த நாணயம் எதையோ கூலியாகக் கொடுத்துவிட்டுக் காலணியைப் பெற்றுக் கொண்டாள். அவள் யார் என அறிவதற்காக மாரி அவளிடம் யார் எனக் கேட்ட கேள்விக்குப் பதில் கூறாமல் சென்றுவிட்டாள். அவள் இரு காலணிகளையும் தரையிலிட்டுக் காலில் அணிய முயன்றாள். அவள் கொண்டு வந்த இடது காலணி பொருந்தியது தைத்து வாங்கின வலது காலணி பொருந்தவில்லை சிறியதாக இருந்தது.
கற்பவை கற்றபின்
1.
தனக்குப் பெரும் வருமானத்தைத் தந்த காலணியைத் திரும்ப ஒப்படைக்க வேண்டுமென மாரி நினைத்தது ஏன்?
வகுப்பில் கலந்துரையாடுக.
விடை
மாணவன் 2 : மாரி ஏழ்மையில் வாழும் ஒரு தொழிலாளி. அவரிடம் செல்வம் இல்லையென்றாலும் நேர்மை இருந்தது. அதனால் அவர் அவ்வாறு நினைத்தார்.
மாணவன் 1 : அந்தக் காலணியை வைத்து அவர் பெரும் பணம் சம்பாதித்து உள்ளார். அதேபோல் சம்பாதித்துக் கொண்டு நிம்மதியாக இருந்திருக்கலாமே?
மாணவன் 2 : பிறர் பொருளைத் தான் வைத்திருக்கக்கூடாது என்று எண்ணி, அந்தக் காலணிக்கு உரியவர் சிறுமி எனவும், குழந்தையின் மனம் வருந்தும் எனக்கூட எண்ணியிருக்கலாம்.
மாணவன் 1 : அதுவும் சரிதான். சிறுமி வளர்ந்து விட்டால் அந்தக் காலணி அவளுக்குப் பொருந்தாது. பிறகு அது வீணாகவே இருக்கும் எண்ணி இருப்பார்.
மாணவன் 2 : மாரி மனசாட்சிக்குப் பயந்தும், பிறர் பொருளைத் தாம் வைத்திருக்கக்கூடாது என்றும் அந்தக் காலணியை வைத்துப் பெரும்பொருள் ஈட்டியதாலும் அவருடைய மனம் வருந்தியது. விசித்திரக் காலணியாய் இருந்ததால்தான் அவர் திரும்ப அச்சிறுமியிடம் ஒப்படைக்க எண்ணினார்.
2. மீண்டும் வந்த பெண்ணுக்குக் காலணி பொருந்தாதது ஏன்?
விடை
மாரி அந்தக் காலணியின் விசித்திரத் தன்மையை அந்தப் பெண்ணிடம் கூறினார். அவள் அதனைக் கண்டு கொள்ளாமல், ஆச்சரியமின்றித் தலையாட்டி விட்டுச் சென்றாள். அந்தக் காலணியைப் பற்றி அவள் அறிந்திருந்தும் அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டாள். மாரியிடம் இருந்திருந்தால் அவர் இன்னும் பொருள் ஈட்டியிருப்பார். ஓர் ஏழைக்கு உதவிய அந்தக் காலணியை அப்பெண் பெற்றுக் கொண்டதால் அவளுக்கு அந்தக் காலணி பொருந்தவில்லை.
3.
மாரிக்குக் கிடைத்தது போன்ற காலணி உங்களுக்குக் கிடைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
வகுப்பில் உரையாடுக.
விடை
மாரிக்குக் கிடைத்தது போன்ற காலணி எனக்குக் கிடைத்தால் மாரியைப் போலவே நானும் பலர் அணிவதற்கு அக்காலணியைக் கொடுத்திருப்பேன். அவரைப் போலவே பணம் வசூலித்திருப்பேன். ஏழை எளிய மக்களுக்குக் கொடுத்து உதவுவேன். கல்வி கற்க வசதியில்லாதவர்களுக்குப் பணம் கொடுத்து உதவுவேன். ஆதரவற்றவர்களுக்கு உதவி புரிவேன்.
4.
பாதம் என்னும் கதையின் மூலம் நீங்கள் அறிந்து கொண்ட கருத்து யாது? விடை
பாதம் என்னும் கதையின் மூலம் நான் அறிந்து கொண்டது:
ஏழ்மையிலும் நேர்மை, செய்ந்நன்றி மறவாமல் மனசாட்சியின் படி வாழ்தல்.