கலீல் கிப்ரான் | பருவம் 3 இயல் 2 | 6 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: நீங்கள் நல்லவர்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 6th Tamil : Term 3 Chapter 2 : Ellarum enbura
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.
பரிசு பெறும்போது நம் மனநிலை ............. ஆக இருக்கும்.
அ) கவலை
ஆ) துன்பம்
இ) மகிழ்ச்சி
ஈ) சோர்வு
[விடை : இ) மகிழ்ச்சி]
2.
வாழ்வில் உயர கடினமாக ........... வேண்டும்.
அ) பேச
ஆ) சிரிக்க
இ) நடக்க
ஈ) உழைக்க
[விடை : ஈ) உழைக்க]
குறுவினா
1.
பழம்,
வேர் ஆகியவற்றின் இயல்புகள் யாவை?
விடை : பழத்தின் இயல்பு கொடுப்பது; வேரின் இயல்பு பெறுவது.
2.
உழைக்கும்போது என்னவாக ஆகிறோம்?
விடை : உழைக்கும் போது நாம் புல்லாங்குழலாகிறோம்.
சிந்தனை வினா
1.
நல்லவர் என்னும் பெயர் பெற நாம் என்ன செய்யலாம்?
விடை
நல்லவர் என்னும் பெயர் பெற நாம் செய்ய வேண்டுவன :
வீட்டில் :
(i) பெற்றோர் கூறும் அறிவுரைகளைக் கேட்டு நடத்தல்.
(ii) பெரியோரை மதித்தல்.
(iii) வீட்டில் உள்ள தாத்தா பாட்டியிடம் மரியாதையுடன் பேசுதல், அவர்கள் கூறுவதைக் கேட்டல், அவர்களுடன் அன்புடன் பழகுதல்.
(iv) வீட்டில் அப்பா அம்மாவிற்குச் சிறுசிறு வேலைகள் செய்தல்.
பள்ளியில் :
(i) ஆசிரியர்கள் கூறும் வீட்டுப் பாடங்களை முடித்து வருதல்.
(ii) வகுப்பில் பாடம் நடத்தும்போது கூர்ந்து கவனித்தல்.
(iii) மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தல். அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெறுவதற்கான வழிமுறைகளைச் சொல்லிக் கொடுத்தல்.
(iv) சக மாணவர்களுடன் சண்டையிடாமல் அன்புடன் பழகுதல். பிறர் குறைகளைக் கூறாமல் நிறைகளை மட்டும் கூறுதல்.
பொது இடங்களில் :
(i) நாம் செல்கின்ற வழியில் யாருக்காவது உதவி தேவைப்பட்டால் உதவி செய்தல் (சாலையைக் கடப்பது, அவர்கள் செல்கின்ற இடத்திற்கு வழி கூறுதல்…… போன்றவை)
(ii) விபத்து நேரிட்டால் முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுதல் போன்றவற்றைச் செய்கின்றவர்கள் நல்லவர் என்ற பெயர் பெறுவார்கள்.
2.
உங்கள் குறிக்கோளை அடைய நீங்கள் செய்யும் முயற்சிகளை எழுதுக.
விடை
என்னுடைய குறிக்கோள் – சிறந்த மட்டைப்பந்து விளையாட்டு வீரர் ஆதல் :
(i) எனக்குள் பல விருப்பங்கள், இலட்சியங்கள் இருந்துகொண்டே இருக்கும். என் மனமும் அவற்றை அசைபோட்டுக் கொண்டே இருக்கும். ஆனாலும் அவற்றுள் மட்டைப்பந்து விளையாட்டில் மாநில அளவில், தேசிய அளவில், உலக அளவில் என முதலிடம் பெற்று இவ்வுலகையே என்னைப் பார்க்கச் செய்ய வேண்டும் என்பதே என் குறிக்கோள்.
(ii) என் விருப்பமே என்னுடைய குறிக்கோளாக மாற்றம் பெற்றுள்ளது. இந்த இலட்சியப் பாதையைக் கடப்பதற்கு நான் செய்ய வேண்டியது, பல ஆசைகள் இருந்தாலும் ஒன்றை மட்டும் தேர்வு செய்வேன்.
(iii) இவ்விளையாட்டில் வெற்றிபெறுவதற்கு முடியுமா? முடியாதா? சரியா? சரியில்லையா? என்று யோசித்துத் தீர்மானம் செய்துகொள்வேன்.
(iv) ‘திட்டமிட்டுச் செயல் புரிந்தால் வெற்றி நிச்சயம்’ என்பதால் திட்டமிடுவேன். பள்ளிக்குச் செல்லும் நேரம், பாடங்களைப் படிப்பதற்கான நேரம், காலை, மாலை விளையாடுவதற்கான நேரம் இவற்றைத் திட்டமிடுவேன்.
(v) திட்டமிட்டபடி தினமும் விளையாடுவேன். என்னுடைய முயற்சியும் தினம் தினம் செய்யும் பயிற்சியும் என்னை வெற்றி பெறச் செய்யும். இவ்வாறு என் குறிக்கோளை அடைவேன்.
கற்பவை கற்றபின்
1.
உங்களது நிறை குறைகளைப் பட்டியலிடுக.
விடை
நிறைகள் :
(i) பிடிக்காதவர்கள் வீட்டிற்கு வந்தால்கூட புன்சிரிப்புடன் வரவேற்பேன்.
(ii) என் பெற்றோர் கூறுவதைக் கேட்டு அதன்வழி நடப்பேன்.
(iii) என் வீட்டுப்பாடங்களைப் பிறர் செய்வதற்குமுன் நானாகவே செய்வேன்.
(iv) என் காலுறைகளையும் சீருடையையும் நானே துவைப்பேன்.
(v) என் பொருட்களைப் பத்திரமாக வைத்துக் கொள்வேன்.
குறைகள் :
(i) பிறருடைய நிறைகளை எண்ணிப் பார்க்காமல் அவரிடம் உள்ள குறையை மட்டும் பறைசாற்றுவது.
(ii) ஒருசில நேரங்களில் சுயநலமாகச் சிந்திப்பது.
(iii) பிறருக்கு உதவி செய்வதற்குக் கொஞ்சம் தயங்குவது.
(iv) பிறர் கருத்துக்கு மதிப்பளிக்காமை.
2. உங்கள் நண்பர் மனம் சோர்ந்து இருக்கும்போது அவரைத் தேற்றும் வழிகள் குறித்துக் கலந்துரையாடுக.
விடை
நண்பர் மனம் சோர்ந்து இருக்கும்போது அவரைத் தேற்றும் வழிகள் :
(i) நண்பர் தேர்வில் தோல்வியுற்று அதனால் வருந்தினான் எனில், அவனுக்குத் ‘தோல்வியே வெற்றிக்குப் படிக்கல்’ என்று கூறி அவனைச் சமாதானப்படுத்த வேண்டும். அடுத்தத் தேர்விற்கு எவ்வாறு படிக்க வேண்டும் எனக் கூறவேண்டும்.
(ii) முக்கியமான வினாக்கள் எதுவெனக் கேட்டுப் படிப்பதற்கும், தினமும் படிக்கும் முறையையும் அவனுக்குக் கூறி அவனைத் தேற்றுவேன். பெற்றோரின் உதவியுடன் படிக்க வேண்டும் என்பதை அறிவுறுத்துவேன்.
(iii) வீட்டில் சகோதரர்களுடன் சண்டையிட்டு அதனால் மனம் சோர்ந்து இருந்தால், அவனுக்குப் பிறரிடம் விட்டுக் கொடுத்து வாழ்வதன் அவசியத்தைப் பற்றிக் கூறுவேன். விட்டுக் கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை.
(iv) நம்மை விடச் சிறியவராக இருந்தாலும் அவர்களிடமும் பணிவாகப் பேசினால் நாம் கூறுவதை அவர்கள் கேட்டுக் கொள்வார்கள். அன்போடு நாம் பேசினால் அனைவரும் நம்மிடம் பழகுவார்கள்.
(v) மனம் வருந்துவதற்கான சூழலே வராது என்பதை உணர்த்துவேன். பெற்றோர்கள் நம்மைக் கடிந்துகொண்டால் நம் நன்மைக்குத்தான் என்பதைப் புரியவைத்து அவனைத் தேற்ற வேண்டும்.