தாயுமானவர் | பருவம் 3 இயல் 2 | 6 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: பராபரக் கண்ணி | 6th Tamil : Term 3 Chapter 2 : Ellarum enbura
இயல் இரண்டு
கவிதைப்பேழை
பராபரக் கண்ணி
நுழையும்முன்
அற இலக்கியங்கள் நம் முன்னோர்களின் வாழ்க்கை அனுபவங்களை உள்ளடக்கியவை. அவை வாழ்வியல் நெறிகளையும் ஒழுக்கங்களையும் விளக்குபவை. நம் தமிழ் இலக்கியங்கள் காட்டும் வாழ்வியல் நெறிகள் உலகம் முழுமைக்கும் பொதுவானவை. அற இலக்கியங்கள் கூறும் கருத்துகளைக் கடைப்பிடித்து வாழ்வதே சிறந்த வாழ்வு. அவற்றை நாமும் பின்பற்றுவோம்;
வாழ்வை வளமாக்குவோம்.
தம்உயிர்போல் எவ்வுயிரும் தானென்று தண்டருள்கூர்
செம்மையருக்கு ஏவல்என்று செய்வேன் பராபரமே!*
அன்பர்பணி செய்யஎனை ஆளாக்கி விட்டுவிட்டால்
இன்பநிலை தானேவந்து எய்தும் பராபரமே!
எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே*
சொல்லும் பொருளும்
தண்டருள் -
குளிர்ந்த கருணை
கூர் –
மிகுதி
செம்மையருக்கு -
சான்றோருக்கு
ஏவல் -
தொண்டு
பணி -
தொண்டு
எய்தும் –
கிடைக்கும்
எல்லாரும் -
எல்லா மக்களும்
அல்லாமல் -
அதைத்தவிர
பாடலின் பொருள்
அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல் கருதும் கருணை மிகுந்த சான்றோர்க்குத் தொண்டு செய்ய வேண்டும்.
அன்பர்களுக்குத் தொண்டு செய்பவராக என்னை ஆக்கிவிட்டால் போதும். இன்பநிலை தானே வந்து சேரும்.
எல்லாரும் இன்பமாக வாழ வேண்டும். அதைத்தவிர, வேறு எதையும் நினைக்க மாட்டேன்.
நூல் வெளி
இப்பாடலை எழுதியவர் தாயுமானவர். திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமைக் கணக்கராகப் பணி புரிந்தவர்.
இப்பகுதி தாயுமானவர் பாடல்கள் என்னும் நூலில் உள்ளது. இந்நூலைத் தமிழ் மொழியின் உபநிடதம் எனப் போற்றுவர். இப்பாடல்கள் 'பராபரக் கண்ணி' என்னும் தலைப்பில் உள்ளன. 'கண்ணி' என்பது இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல்வகை.