Home | 12 ஆம் வகுப்பு | 12வது அரசியல் அறிவியல் | இந்திய-ஆப்பிரிக்கா உறவுகள்
   Posted On :  04.04.2022 01:00 am

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 9 : இந்தியாவும் உலகமும்

இந்திய-ஆப்பிரிக்கா உறவுகள்

ஆசியாவும் ஆப்பிரிக்காவும் மிகவும் தொன்மையான நாகரிகங்களுக்குத் தாய் வீடாகும்.

இந்திய-ஆப்பிரிக்கா உறவுகள்



அறிமுகம்

ஆசியாவும் ஆப்பிரிக்காவும் மிகவும் தொன்மையான நாகரிகங்களுக்குத் தாய் வீடாகும். கடந்த 1000 ஆண்டுகளாக இன்றியமையாத வர்த்தகம், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் அரசியல் பரிமாற்றங்களைக் பட்டி கொண்டிருக்கின்றன. வர்த்தகத்தில் செதுக்கிய மணிகள், பருத்தி, சுட்ட மண்பாண்டங்கள், தங்கம் போன்ற பொருள்கள் அடங்கும். கி.மு. (பொ.ஆ.மு) 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே தொன்மையான பரிவர்த்தனைகளான உணவுப் பயிர்கள் மற்றும் கால்நடைகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தன. இத்தகைய தொன்மையான வர்த்தகம் பற்றிய எழுதப்பட்டக் குறிப்புகள், "எரித்திரியக் கடற்பயணம்" என்று அழைக்கப்படும் "பைஸான்டைன் தினசரி குறிப்பு புத்தகம்" கொண்டிருக்கிறது. அதனை தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில் மேற்கண்ட இரண்டு பகுதிகளின் நலன்களும், பரந்தும், விரிந்தும் இருந்தன. 


போருக்கு பிந்தைய சகாப்தம்

இந்தியாவின் சுதந்திரம் 1947ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பின் பெரும்பாலான ஆப்ரிக்கா நாடுகளும் ஐரோப்பாவின் செல்வாக்கில் இருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தன. இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டது என்று அறிவிக்கப்பட்டதிலிருந்தது, பல்வேறு பன்முக சர்வதேச அமைப்புகளில், ஆப்பிரிக்காவின் விடுதலைக்கு தன்னுடைய குரலை வலுவாக எடுத்து வைத்தது. இனவெறி போராட்டம் மற்றும் காலனி நீக்கம் போன்றவை, இந்தியஆப்பிரிக்கா உறவுகள் மேம்படுவதற்கு காரணியாக இருந்தது. 


அணிசேரா இயக்கமும் ஆப்பிரிக்காவும்

அணிசேரா இயக்கம் பனிப்போர் காலகட்டத்தில் உருவானதன் காரணமாக தோன்றியதாகும். மூன்றாம் உலகப்போரினைத் தடுக்கும் பொருட்டு, புதியதாக காலனி ஆதிக்கத்தில் இருந்து நீக்கம் பெற்ற ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகள் போன்றவை, இருதுருவ வல்லரசுகள் மேற்கொள்ளும் ஆயுதக் குவிப்பில் பங்கேற்பதை மறுத்து நடுநிலை வகிப்பதாக அறிவித்தன. இந்த நிகழ்வினை உருவாக்கியதில் இந்தியாவுடன் அன்றைய எகிப்து மற்றும் கானா நாட்டு அரசு தலைவர்கள் மற்றும் யுகோஸ்லாவியா மற்றும் இந்தோனேஷியாவைச் சேர்ந்த அரசு தலைவர்களும் ஈடுபட்டனர்.

மேலும் அணிசேரா இயக்கம், காலனி எதிர்ப்புக் கூட்டணியாகும், இது போர் நடத்தும் வளம் பெற்ற நாடுகளுடன் சேர்வதை தடுத்து தங்கள் நாடுகள் பின்னடைவை சந்திப்பதை தடுப்பதற்காகவும் துவங்கப்பட்டது. ஆப்பிரிக்கா காலனிகளின் உறைவிடங்களாக இருப்பதால், காலனிய சக்திகளை எதிர்த்து பெரும் எழுச்சியுடன் நடத்தி அதில் பெரும் வெற்றியும் பெற்றன. அந்த கண்டத்தில் அமைப்புரீதியான நிறவெறி மற்றும் அடிமைத்தனம் ஆகியவற்றுக்கு எதிராக, Dr. நிக்குருமாவுடன் இதர அணிசேரா இயக்கத்தினை உருவாக்கிய பிறத்தலைவர்களும், இனவெறி பாகுபாட்டை எதிர்த்தும், அணிசேரா இயக்கத்தின் கோட்பாடுகளை பாதுகாத்தும் வந்ததில் ஆப்பிரிக்கா எப்பொழுதும் முதலாவதாகும் என்று பறை சாற்றினர். 1970 ஆம் ஆண்டுகளில் நேருவுக்கு பிறகான இந்தியாவானது ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் இனவெறிக்கு எதிரான உலக கண்ணோட்டத்தை முன்னுக்கு எடுத்துச் சென்றது. 


ஆப்பிரிக்காவில் வெளிநாடுவாழ் இந்தியர்கள்

டயாஸ்போரா எனப்படும் புலம் பெயர்ந்த (அ) வெளிநாடு வாழ்வோர் என்பது, ஒரு குறிப்பிட்ட இனப் பின்னணியை கொண்டோர், தங்களுடைய சொந்த மண்ணைவிட்டு வெகு தொலைவு சென்று ஒரு சமூகத்தை ஏற்படுத்திக் கொள்வதைக் குறிக்கும் வார்த்தையாகும். ஆங்கிலேயர்கள் பல இந்திய தொழிலாளர்களைச் சர்க்கரை இரப்பர் மற்றும் பணப் பயிர்களை விளைவிப்பதற்காக, ஆப்பிரிக்க-கரீபியன் தீவுகளுக்கும், மலேசியா மற்றும் இலங்கைக்கும் கப்பலில் ஏற்றி அனுப்பினர். காலனி காலத்தில் மட்டும் 7,69,437 இந்தியர்கள் மொரீசியஸ், தென் ஆப்பிரிக்கா , ரீயூனியன் தீவுகள் (Reunion Islands), செசஷலஸ் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா பகுதிகளுக்கு குடியேறினர். தற்சமயம், தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் டர்பன் நகரம் 13 இலட்சம் இந்தியர்களின் வீடாகிப்போனது. இதுதான் இந்தியாவிற்கு வெளியே இருக்கும் மிகப்பெரிய இந்திய நகரமாகும், இதனை தொடர்ந்து மொரீசியஸ் மற்றும் ரீயூனியன் தீவுகள் இந்த வரிசையில் வருகின்றன. 

ஆசிய-ஆப்பிரிக்கா வளர்ச்சி பெரு வழித்தடம்:

ஆசிய-ஆப்பிரிக்கா வளர்ச்சி பெரு வழித்தடம் என்பது, ஆசிய-ஆப்பிரிக்காவின் சமூக பொருளாதார மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு, இந்திய-ஜப்பான் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தமாகும். இந்த ஆசிய-ஆப்பிரிக்கா வளர்ச்சி பெரு வழித்தடத்திற்கான பார்வை பற்றிய ஆவணத்தை, 2017 ஆம் ஆண்டு ஆப்பிரிக்கா வளர்ச்சி வங்கி கூட்டத்தில் இந்தியா வெளியிட்டது. இந்த ஆசியஆப்பிரிக்கா வளர்ச்சி பெரு வழித்தடத்தின் நோக்கமானது, இந்திய-ஜப்பான் இணைப்பின் மூலம் ஆப்பிரிக்காவின் உள்கட்டமைப்பு மற்றும் எண்முறை அடிப்படையிலான தொடர்பை வளர்த்தெடுத்தல் என்பனவாகும். இது சீனாவின் நீண்ட நெடு வழி மற்றும் பட்டு சாலை முன்னெடுப்புக்கு (Belt and Road Initiative) இந்தியா ஜப்பானின் எதிர் நடவடிக்கை என்று பார்க்கப்படுகிறது.

12th Political Science : Chapter 9 : India and the World : India-Africa Relations in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 9 : இந்தியாவும் உலகமும் : இந்திய-ஆப்பிரிக்கா உறவுகள் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 9 : இந்தியாவும் உலகமும்