Posted On :  04.04.2022 12:50 am

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 9 : இந்தியாவும் உலகமும்

இந்திய-ரஷ்ய உறவுகள்

சோவியத் ஒன்றியமானது 1947ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் மிக நெருங்கிய நண்பனாகவும், ராணுவ ரீதியாக ஒரு பங்குதாராகவும் இருந்திருக்கிறது.

இந்திய-ரஷ்ய உறவுகள்


சோவியத் ஒன்றியமானது 1947ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் மிக நெருங்கிய நண்பனாகவும், ராணுவ ரீதியாக ஒரு பங்குதாராகவும் இருந்திருக்கிறது. இந்த இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவானது பல சவாலான புவியரசியல் மாற்றங்களின் போதும் தொடர்கிறது. அமெரிக்காவைப் போல் அல்லாமல், ரஷ்யாவானது இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ராணுவம் தொடர்பான தன்னாட்சி நிலையை வரலாற்று ரீதியாக புரிந்து கொண்டது மற்றும் மதிக்கிறது. அது (ரஷ்யா) இந்தியாவை மிகப் பழமையான நாகரிகம் மற்றும் மிக உயர்ந்தப் பண்பாடு, அறிவாற்றல், பேரறிவு கொண்ட நாடாகப் பார்க்கிறது. இரு நாடுகளுக்கிடையே தொடரும் உறவின் இந்த அடிப்படைப் பண்பானது, கடந்தக் காலங்களில் இரு தரப்பு உறவுகள் மலர்வதற்கு உத்வேகமாக இருந்தது.


தொடக்கத்தில், இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், சோவியத் ஒன்றியம்(USSR)

ஜோசப் ஸ்டாலின் தலைமையின் கீழ் இருக்கும் பொழுது, இந்தியாவினுடைய சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை மற்றும் அணிசேரா கொள்கையின் உண்மைத் தன்மையை சந்தேகித்தது. இருந்தபோதிலும், இந்திய-ரஷ்ய நல்லுறவானது, இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 1955ஆம் ஆண்டு ஜூன் மாதம் சோவியத் ஒன்றியத்தின் பயணம், அதனைத் தொடர்ந்து சோவியத்தின் பிரதமர் நிகிதா குருஷேவின் 1955ஆம் ஆண்டு டிசம்பர் மாத வருகை ஆகியவற்றால் சிறப்புற தொடங்கியது.

இதே காலக்கட்டத்தில் தான் இந்தியா, சோவியத் மாதிரியின் அடிப்படையிலான திட்டமிட்ட பொருளாதாரம் மற்றும் சோசலிச மாதிரியான சமூக அமைப்பை ஏற்றுக்கொண்டது. இந்த சகாப்தத்தில் தான் சோவியத் ஒன்றியம் மேற்கு உலகின் தாக்கத்தை கட்டுப்படுத்த, நிதி உதவி, வர்த்தகம் மற்றும் தூதரக உறவு போன்றவற்றை மூன்றாம் உலக நாடுகளில் பயன்படுத்தியது. இதன் விளைவாக, இந்திய-சோவியத் உறவுகள் உலோகவியல், பாதுகாப்பு, ஆற்றல் மற்றும் வர்த்தகத் துறைகளில் மேம்படத் தொடங்கியது.

இருதரப்பும் 1971ஆம் ஆண்டு இந்திய-சோவியத் அமைதி, நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. இது இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளில் ஒரு மைல்கல் ஆகும்.

1971ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின் போது, சோவியத் ஒன்றியம், இந்தியாவிற்கு ஆதரவாக உறுதியான நடவடிக்கை எடுக்க, ஏற்கெனவே அமெரிக்கா தனது 7-வது கடற்படைப் பிரிவை வங்காள விரிகுடா கடற்பகுதிக்கு அனுப்பியிருந்த நிலையில் அது இந்தியாவிற்கு எதிராக இருக்குமானால் அதனை எதிர்கொள்ள தனது போர் கப்பல்களை இந்திய பெருங்கடற் பகுதிக்கு அனுப்பி வைத்தது. அதேபோல 1971ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின் விளைவு மற்றும் பங்களாதேஷ் நாட்டின் தோற்றம் போன்றவையெல்லாம் இந்தியா மற்றும் சோவியத் ஒன்றியத்தினியிடையே ஒரு நம்பிக்கையான நட்புறவை நிறுவியது. 


இந்திய-ரஷ்ய உறவுகள் (1991 முதல் இன்று வரை)

1991ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியால், இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான இருதரப்பு உறவுகள் ஒரு நிச்சயமற்ற தன்மைக்கு சென்றது. சோவியத் ஒன்றியம் என்ற அரசு இல்லாமல் போய்விட்டதால் 1971ஆம் ஆண்டு செய்து கொண்ட உடன்படிக்கை செயலிழந்து போனது. ரஷ்யாவும் தனது கவனத்தை அதன் உள்விவகாரங்களிலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உடனான உறவுகளில் கவனம் செலுத்தியது. இப்பொழுது இந்தியா, பிற வளரும் நாடுகளைப் போல் இருக்கும் ஆர்வமும் வளர்ச்சிக்கான வாய்ப்பும் இல்லாத ரஷ்யாவுடன் பரஸ்பர உறவை மேற்கொண்டு வருகிறது.

ரஷ்ய அதிபர் போரிஸ் எல்ட்சின் 1993ஆம் ஆண்டு இந்திய வருகையின் போது 1971ஆம் ஆண்டு செய்து கொண்ட உடன்படிக்கையை மீண்டும் தூண்டிவிடும் விதமாக புதிய நட்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். எனினும் பழைய உடன்படிக்கையின் அடிப்படைத்தன்மை மாற்றியமைக்கப்பட்டு, புதிய உடன்படிக்கையானது அமைதிக்கு அச்சுறுத்தல் வரும்பொழுது, ஆலோசனையும் ஒருங்கிணைப்பு மட்டும் இருப்பதாக செய்யப்பட்டது.


சோவியத் ஆட்சிக்காலத்தில் இருந்தது போல் அல்லாமல், போரிஸ் எல்ட்சின் இந்தியாவை ஒரு "இயற்கை கூட்டாளி" என்று கூறினாரே தவிர, சிறப்பான உறவு உள்ளது எனும் அளவிற்கு ஒரு உணர்வை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. இந்த உறவானது இரு நாடுகளுக்கிடையே 1990ஆம் ஆண்டுகளின் துவக்கம் வரை இருந்தபோதிலும், இக்காலக்கட்டத்தில் ரஷ்யா உறவு மிகச் சாதாரணமாகவே இருந்தது. இந்தியாவை, ரஷ்யா ஓரளவுக்கு புறக்கணித்தாலும், அது இந்தியாவிற்கு எவ்வித தீங்கையும் ஏற்படுத்தவில்லை .

எஸ் (S)-400 வான்வழி பாதுகாப்பு முறைக்கான வர்த்தக ஏற்பாடு

முன்னதாக இந்தியாவும்-ரஷ்யாவும், எஸ்-400 வான்வழி பாதுகாப்பு TOUTLL9D5/60 (Air Defence System) 5.2 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்திற்கு கையெழுத்திட்டன. இந்த வான்பாதுகாப்பு ஏற்பாடானது 2020ஆம் ஆண்டிற்குள் வழங்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்-400 டிரையம்ஃப் (triumph) என்பது மேம்பட்ட தரையில் இருந்து வானிற்கு சென்று தாக்கும் ஏவுகணை அமைப்பு முறை ஆகும். இதனை உருவாக்கியது "அல்மாஸ் ஆன்டே" என்ற ரஷ்ய அரசு நிறுவனமாகும். இது எதிரி நாட்டு போர் விமானத்தை மற்றும் கண்டம் தாவும் ஏவுகணைகளை தாக்கி அழிக்கக்கூடியது. இதன் தாக்கும் திறன் 250 கிலோ மீட்டர் தொலைவு ஆகும். மேலும், இதன் சிறப்பு தாக்கும் திறனை 400 கிலோ மீட்டர் தூரம் வரை அதிகப்படுத்தமுடியும் .

விளாடிமிர் புடின் அதிபர் தலைமையிலான (2000 முதல் இன்று வரை) புதிய ரஷ்யா, எல்ட்சின் காலத்து இந்தியரஷ்யா இருதரப்பு உறவுகளை மீண்டும் பழையபடி மாற்றி அமைந்தது. ரஷ்யாவானது 2000ஆம் ஆண்டு இந்தியாவுடன் "ராணுவம் சார்ந்த நட்புறவு பிரகடனத்தில்" கையெழுத்திட்டது. மேலும் 2010ஆம் ஆண்டு இந்த பிரகடனமானது சிறப்பான ராணுவம் சார்ந்த நட்புறவு பிரகடனத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றது. மாஸ்கோ யூரோ- ரஷ்யா பகுதியின் வல்லரசு என்ற வகையில், இந்தியா போன்ற பழைய நண்பருடன் திடமான நட்புறவு இல்லாமல் ஆசியாவில் ஒரு சக்தி என்பதை அடைய முடியாது என்று ரஷ்யா உணர்ந்துள்ளது. 


ஒத்துழைப்பிற்கான பகுதிகள்

தற்சமயம், இந்தியா ரஷ்யாவின் ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்யும் பெரியளவு இறக்குமதியாளர் ஆகும். சோதனையான காலக்கட்டங்களில் மட்டுமல்லாமல் இந்திய-ரஷ்யா உறவுகளானது மிகவும் வலிமையான தூண் என்பது இரு நாடுகளுக்கிடையே இருந்த ராணுவத் தளவாடங்கள் கொள்முதல் என்பதற்கான ஒப்பந்தமே ஆகும். ராணுவ தொழில்நுட்ப பரிமாற்றத்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்வதை வலியுறுத்தும் நாடாக இன்று ரஷ்யா உள்ளது. இது இருவருக்கும் இடையே சுமுகமான உறவை விதைக்கிறது.

இந்தியா, ரஷ்யா மற்றும் இதர அண்டை நாடுகள், சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து பெருவழித் தடத்தை செயற்பாட்டிற்கு கொண்டு வர தங்களை ஈடுபடுத்திக் கொண்டன.

இந்தியா மற்றும் ரஷ்யா பல்வேறுபட்ட துறைகளில் ஆழமான ஒத்துழைப்பைக் கொண்டிருக்கின்றன, அவைகள் முறையே அணு ஆற்றல், வர்த்தகம், எண்ணெய் மற்றும் எரிவாயு, விண்வெளித்திட்டம், அறிவியல் தொழில்நுட்பம் போன்றவை மேலும், ஐக்கிய நாடுகள் சபை, பிரிக்ஸ் நாடுகள் அமைப்பு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மற்றும் பிற சர்வதேச மன்றங்களுடனும் ஒத்துழைப்பும் ஆகும். இந்த இரு நாடுகளும் மிகவும் சிக்கலான உலகளாவிய சவால்களான தீவிரவாதம், விண்புறவெளிப் பகுதி ஆயுதமாக்கப்படல் மற்றும் பேரழிவு தரும் ஆயுதங்களைத் தடுத்தல், இணைய பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் ஆகிய விவகாரங்களில் பொதுவான தளத்தில் கருத்துக்களைக் கொண்டிருக்கின்றன. இந்தியாவை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக்க ரஷ்யாவும் ஆதரவு தெரிவிக்கிறது. இந்தியாவின் நலனிலும் காஷ்மீர் சிக்கலிலும் இன்றும் உறுதியான ஆதரவாளராக ரஷ்யா இருந்து வருகிறது.


12th Political Science : Chapter 9 : India and the World : India-Russia Relations in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 9 : இந்தியாவும் உலகமும் : இந்திய-ரஷ்ய உறவுகள் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 9 : இந்தியாவும் உலகமும்