இந்திய-ஜப்பான் உறவுகள்
இந்திய - ஜப்பானுக்கிடையேயான உறவுகளில், ஆறாம் நூற்றாண்டிலே பௌத்த மதம் ஜப்பானை சென்று அடைந்ததிலிருந்து இருந்தது. ஜப்பான் நாட்டை சேர்ந்த அறிஞர்கள் இந்தியாவில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்துள்ளனர், அதில் மிகவும் புகழ்பெற்றவர் "டென்ஜிக்கு டோக்குபி" என்ற பயணி ஆவார். இந்த "டென்ஜிக்கு" (Tenjiku) என்பது குறிக்கும் சீன வார்த்தையாகும், இதன் பொருள் "சொர்க்கத்தின் உறைவிடம்" என்பதாகும். மிகவும் பழைமையான அரசியல் பரிவர்த்தனையானது, இந்தியாவில் இருந்த போர்ச்சுகீசிய காலனிக்கும் ஜப்பானுக்கும் இடையே நிறுவப்பட்டதாகும். இந்திய-ஜப்பான் கழகமானது 1903ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதற்கு முன்பான அரசியல் பரிமாற்ற உறவு மெய்ஜி (Meiji) சகாப்தத்தின் போது (1868-1912) நிகழ்ந்த து. அது முதல் இரு நாடுகளும் சமூக, அரசியல், பொருளாதார, கலாச்சார உறவுகளைப் பரிமாறிக் கொண்டிருக்கின்றன.
இந்திய-ஜப்பான் இரு நாடுகளுக்கு இடையிலான தூதரக உறவுகளானது இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, 1952ஆம் ஆண்டு இந்தியாவுடன் ஜப்பான் செய்து கொண்ட அமைதி உடன்படிக்கையுடன் தொடங்கியது. 1951ஆம் ஆண்டு டில்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு அழைப்பு விடுத்ததன் மூலம், தூதரக உறவை ஏற்படுத்திக் கொண்ட முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இந்த உறவுகள் ஜப்பான் பிரதமர் நோபுக்கே கிஷி மற்றும் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவும் பரஸ்பரம் பயணம் மேற்கொண்டதன் மூலம் மேலும் வலுவடைந்தது. இந்தியா ஜப்பானின் "யென்" கடன் உதவிப்பெறும் முதல் நாடானது மேலும், இந்தியாவிற்கு கடன் வழங்கும் மிகப் பெரிய நாடாக ஜப்பான் மாறியது. பல இந்திய அரசியல் மற்றும் பொருளாதார சிந்தனையாளர்கள் போருக்கு பின்னரான ஜப்பானின் பொருளாதார மறுகட்டுமானம் வெற்றிகரமாக நடந்திருப்பதை புகழ்ந்துள்ளனர்.
இந்த இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் பனிப் போர் காலத்தின் போது பின்னடைவை சந்தித்தன. ஜப்பான் அமெரிக்காவுடன் அணி சேர்ந்துவிட்டதால், இந்தியா அணிசேராக் கொள்கையினை தேர்வு செய்து கொண்டது. மேலும், இந்த உறவுகளானது, 1962ஆம் ஆண்டு இந்தியசீனப் போரின் போது ஜப்பான் நடுநிலை வகித்ததால் தடைக்கல்லாகிப் போனது. 1970 மற்றும் 1980ஆம் ஆண்டுகளில் ஜப்பானுடைய தென்கிழக்கு நாடுகளுடனான பொருளாதார செயற்பாடுகள் ஆழமடைந்தன. ஆசியா என்ற வரையறையின் வரம்பிற்குள்ளே இந்தியா விடப்பட்டது. இந்தியா செய்த அணுக்கரு சோதனையை அதன் அணு ஆயுதப் பரவல் நோக்கத்திற்கு அச்சுறுத்தல் என்பதாகவே கருதியது.
ஜப்பானிய பிரதமர் யோஷிரோ மோரி 2000ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை தந்த பிறகு இரு தரப்பு உறவு மேம்படத்தொடங்கியது. பொருளாதாரம், வர்த்தகம்,நிதிச் சேவை, சுகாதாரம், சாலைப் போக்குவரத்து, கப்பல், கல்வி என்ற பல துறைகளிலும் ஒத்துழைக்க அதிகாரிகள் கொண்ட குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன.
இந்தியாவில் ஜப்பான் தனது உற்பத்தி நிறுவனங்களை நிறுவியவுடன் சோனி, யமஹா, ஹோண்டா, டொயோட்டா போன்றவையெல்லாம் வீடு தோறும் இருக்கக் கூடிய பொருள்கள் ஆயின. இந்தியாவின் கார் உற்பத்தி நிறுவனத்துடன் ஜப்பானின் சுசூகி நிறுவனம் இணைந்து மாருதி சுசூகி எனும் இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனம் தோன்றியது. இந்தியாவின் பொருளாதார மேம்பாட்டு முயற்சிக்கு, ஜப்பானின் ஆதரவானது ஆற்றல், போக்குவரத்து, சுற்றுச்சூழல் திட்டங்கள் மற்றும் மனிதனின் அடிப்படைத் தேவையுடன் முக்கியமானவைகள் ஆகும்.
ஆகஸ்ட் 2000இல் பிரதமர் யோஷிரோ மோரியின் இந்தியா வருகை இந்திய-ஜப்பான் உறவை வலுப்படுத்துவதற்கான வேகத்தை அளித்தது. ஜப்பான் பிரதமர் மோரியும், இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயும் "ஜப்பானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் உலகளாவிய ஒத்துழைப்பு" நிறுவ முடிவு செய்தனர். ஏப்ரல் 2005இல் பிரதமர் ஜூனிச்சிரோ கொய்சுமியின் இந்தியா வருகைக்குப் பின்னர், இந்திய-ஜப்பானுக்கு இடையே ஆண்டு உச்சி மாநாட்டுக் கூட்டங்கள் அந்தந்த தலைநகரங்களில் நடத்தப்பட்டன. 2006 டிசம்பரில் பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பானுக்கு வருகை புரிந்தபோது, இந்தியஜப்பான் உறவு "உலகளாவிய இராணுவம் சார்ந்த ஒத்துழைப்பு" க்கு உயர்த்தப்பட்டது.
இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அக்டோபர் 2008ஆம் ஆண்டு ஜப்பானுக்கு அரசு முறை பயணமாக சென்றார். அங்கே இரு நாட்டு தலைவர்களும் இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கான பிரகடனத்தை வெளியிட்டனர்.
2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பாதுகாப்புக் ஒத்துழைப்பு மீதான உறுதிமொழியில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. ஜப்பானுடன் பாதுகாப்பு உறவு கொண்ட நாடுகளுள் இந்தியா மூன்றாவது நாடாகும், இதர நாடுகள் அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும் ஆகும். இந்தியாவும் ஜப்பானும் தங்களது இரு தரப்பு உறவுகளை வலிமைப்படுத்தியது உலக சமூகத்திற்கு நேர்மறையான தகவலைத் தந்தது. சீனாவின் வளர்ச்சியும் இப்பகுதியில் இந்தியாவும் ஜப்பானும் தங்களது உறவுகளை மறுசீரமைப்பு செய்வதற்கு ஒரு இன்றியமையாத காரணமாகும். பாதுகாப்புப் பேச்சுவார்த்தையில் இந்தியாவும் ஜப்பானுடன் சேர்த்துக்கொண்டது, பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் வருகை, இரு நாடுகளும் கடல்வழி வர்த்தக பாதுகாப்பு (Maritime), தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை, அணு ஆயுத பரவல் எதிர்ப்பு நடவடிக்கை, பேரழிவு மேலாண்மை மற்றும் ஆற்றல் பாதுகாப்பு போன்ற விவகாரங்களில் ஈடுபடுவதில் செயற்பாடுகளைத் துவக்கின.
2014ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறையிலான சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபேயுடன் ஒரு உச்சி மாநாட்டை நடத்தினார். அதேபோல 2015ஆம் ஆண்டு ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு, பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரு உச்சி மாநாட்டை நடத்தினார். இந்திய-பசிபிக் மண்டலம் மற்றும் உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கான ஜப்பான் மற்றும் இந்தியாவின் ஒத்துழைப்பு 2025-ஐ ஜப்பான் பிரதமரும், இந்திய பிரதமரும் கூட்டாக அறிவித்தனர்.
2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் நாட்டிற்கு அரசு முறை பயணம் செய்து, பிரதமர் அபேயுடன் ஒரு உச்சி மாநாட்டை நடத்தினார். இதுகுறித்து பிரதமர் அபே கூறும்போது, தடையில்லா மற்றும் வெளிப்படையான இந்தியா, பசுபிக் பகுதி யுத்த தந்திரம், கிழக்கு நோக்கிய செயற்பாடு போன்ற கொள்கைகளின் ஒருங்கிணைப்பின் விளைவாக, இரு நாடுகளும் இந்திய-பசிபிக் பகுதியில் வளமும், உறுதித்தன்மையும் ஏற்படும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் மோடியின் ஜப்பான் சுற்றுப்பயணத்தின் போது, 2019ஆம் ஆண்டிற்குள்ளாக, இந்தியாவில் ஜப்பானின் நேரடி முதலீடு மற்றும் கம்பெனிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்காகவும் உயர்த்த ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொண்டு, மேலும் இருதரப்பு உறவிலும் முழுமையான வெற்றி என்ற உறவை கட்டியமைக்க, இரு நாட்டு தலைவர்களும் ஒத்துக்கொண்டனர். மேலும் பிரதமர் ஷின்ஷோ அபே, அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் 3.5 டிரில்லியன் யென் அளவிற்கு பொதுத்துறை மற்றும் தனியார் நிதியளிப்பு மற்றும் பங்களிப்பு, இவற்றோடு அலுவலர் மேம்பாட்டு நிதி உதவி (Official Development Assistance) CUNGOMOJMOM நடைமுறைக்கு கொண்டு வர முயற்ச்சி மேற்கொண்டார்.
ஜப்பான் இந்தியாவிடம் விதிமுறைகளை எளிமையாக்குதல் மற்றும் அமைப்பு உறுதித்தன்மை உள்ளிட்ட வியாபாரச் சூழலை எதிர்பார்த்தது. 2014ஆம் ஆண்டு இந்தியா ஜப்பான் நாட்டு நிறுவனங்கள் சந்தித்து வரும் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக, "One Stop" எனப்படும் ஒரே இடத்தில் அனைத்தும் கிடைக்கும் படியான ஏற்பாட்டை செய்வதற்கு 'Japan Plus' என்ற அலுவலகத்தை மத்திய வணிகத்துறை அமைச்சகத்தில் ஏற்படுத்தியது. 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் டில்லி-மும்பை பெருவழித்தடம் (DMIC) மற்றும் சென்னை-பெங்களூரூ பெருவழித்தடம் (CBIC) ஆகியவற்றைச் சுற்றி பதினொரு ஜப்பான் நிறுவனங்களைக் கொண்ட நகரங்களை நிறுவ ஜப்பானும் இந்தியாவும் ஏற்றுக்கொண்டன. மேலும் ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே, டிசம்பர் 2015 மற்றும் நவம்பர் 2016இல் ஜப்பான் தொழில் நகரத்திற்கான சிறப்பு ஊக்கத் தொகுப்பை அளிப்பதற்கான முடிவை இந்தியா விரைந்து எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஜப்பான் பிரதமர் இந்தியாவிற்கு வருகை தந்தபொழுது"ஷின்கான்சென்" என்ற கட்டமைப்பை அறிமுகப்படுத்த இந்தியா முடிவெடுத்தது. ஜப்பானின் "ஷின்கான் சென்" அமைப்பு என்பது உலகளவில் இருக்கும் பாதுகாப்பு மற்றும் துல்லியம், என்ற வகையில் அதிவிரைவுக் கொண்ட ஜப்பானின் ரயில்வே போக்குவரத்து ஆகும். ஜப்பானும்இந்தியாவும் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இதற்கானப் பணிகளைத் தொடங்கி விட வேண்டும், கட்டுமானப் பணிகள் 2018இல் துவங்கும், ரயில்களின் இயக்கம் 2023ஆம் ஆண்டில் துவங்கும் என்பதை உறுதிப்படுத்தின. ஜப்பானின் ஒத்துழைப்பால் வெளிநாட்டு அலுவலர் மேம்பாட்டு உதவி பயன்பாட்டின் மூலம் மிகவும் வெற்றிகரமாக பயனடைந்த நகரம் டெல்லி மெட்ரோ ரயில் சேவையாகும்.
இந்தியா ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களில் முதன்மையானது, பெட்ரோலியப் பொருள்கள், வேதிப்பொருள்கள், சேர்மங்கள், உலோகம் அல்லாத தாதுக்கள், மின் மற்றும் தயாரிப்பு பொருள்கள், உலோகத் தாதுக்கள் மற்றும் உலோகத் தாதுக்களின் எச்சங்கள், துணி இழை, நெய்யப்பட்ட ஆடை மற்றும் இயந்திரத் தளவாடங்கள் போன்றவைகள் ஆகும், இந்தியா ஜப்பானிடம் இருந்து இறக்குமதி செய்து கொள்ளும் பொருள்களில் முதன்மையானது இயந்திரத் தளவாடங்கள், போக்குவரத்து சாதனங்கள், இரும்பு மற்றும் எஃகு மின்னணு பொருள்கள், கரிம வேதிப்பொருள்கள், இயந்திரக் கருவிகள் போன்றவைகளாகும். ஜப்பானின் இந்தியாவில் நேரடி அன்னிய முதலீடானது தானியங்கி வாகனங்கள், மின்சாரக் கருவிகள், தொலைதொடர்பு, வேதிப்பொருள்கள் மற்றும் மருந்து தயாரிப்பு வேதிப்பொருள்கள் போன்றவை முதன்மையான துறைகளாகும்.
இந்தியாவில், உற்பத்தித் துறையில், மனித வளமேம்பாடு என்ற வகையில், உற்பத்திக்கான இந்திய-ஜப்பான் நிறுவனத்தின் (JIM)மூலம் அடுத்தப் பத்து ஆண்டுகளுக்கு 30,000 இந்தியருக்கு, இந்தியாவின் "திறன் இந்தியா" மற்றும் "இந்தியாவில் தயாரிப்பு" போன்ற தொழிற்துறையை அடிப்படையாக கொண்ட உற்பத்திக்கு இந்தியா மேற்கொண்டு வரும் துவக்கத்திற்கு, ஜப்பான்-மாதிரி உற்பத்தித் திறன் மற்றும் நடைமுறைப் பயிற்சியினை அளிக்க, ஜப்பான் தன்னுடைய ஒத்துழைப்பை அறிவித்துள்ளது. அதே போல உற்பத்திக்கான இந்திய-ஜப்பான் நிறுவனம் மற்றும் "ஜப்பானியர்களால் வழங்கப்பட்ட பாடப்பிரிவுகள்" (JEC - Japanese Endoived Courses) என்ற பொறியியல் கல்லூரிகளில் வழங்கும் பாடத்திட்டத்தை, ஜப்பானிய நிறுவனங்களே இந்தியாவில் வடிவமைக்கும் என்பவையெல்லாம் அரசு துறைக்கும், தனியார் துறைக்கும் இடையே உள்ள நல்ல ஒத்துழைப்பிற்கான உதாரணங்கள் ஆகும். 2017ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் உற்பத்திக்கான இந்திய-ஜப்பான் நிறுவனமானது, குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஆகிய முதல் நான்கு மாநிலங்களில் துவங்கப்பட்டது. அதே போல "ஜப்பானியர்களால் வழங்கப்பட்ட பாடப் பிரிவுகளானது முதன் முறையாக ஆந்திர மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு மேலும் நான்கு ஜப்பானியப் பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இந்த நிறுவனங்கள் யாவும் ஜப்பானிய மொழியை படிக்க ஆர்வமாக உள்ள நிறைய இந்திய மாணாக்கர்களுக்கு கற்றுக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2012ஆம் ஆண்டு இந்திய-ஜப்பான் இடையேயான தூதரக உறவு நிறுவப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவு செய்வதை குறிக்கிறது. இந்திய-ஜப்பான், இரு நாடுகளுக்கு இடையே பரஸ்பர உறவை மேம்படுத்த "எழுச்சிப் பெறும் ஜப்பான், துடிப்பான இந்தியா; புதிய கண்ணோட்டமும், புதிய பரிமாற்றமும்," என்ற கருத்தின் அடிப்படையில் கலாச்சார நிகழ்வுகள் நடைபெற்றன.
2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் மோடி,ஜப்பானுக்குசுற்றுப்பயணம் செய்தபோது, இரு நாட்டுப் பிரதமர்களும் 2017ஆம் ஆண்டு, இந்திய-ஜப்பான், மக்களுக்கிடையேயான நட்புறவை மேலும் பரிமாறிக் கொண்டனர். கலாச்சார உடன்படிக்கை 1957இல் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் 2017ஆம் ஆண்டு கலாச்சார உடன்படிக்கை நடைமுறைக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கிறது.