Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | இந்தியா மற்றும் சர்வதேச அமைப்புகள்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை - இந்தியா மற்றும் சர்வதேச அமைப்புகள் | 10th Social Science : Civics : Chapter 5 : India’s International Relations

   Posted On :  27.07.2022 02:31 pm

10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 5 : இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

இந்தியா மற்றும் சர்வதேச அமைப்புகள்

இந்தியா ஒரு வலிமை வாய்ந்த வல்லரசாகும். வளர்ந்து வரும் உலகளாவிய செல்வாக்கை அனைத்து நாடுகளிலும் பெற்றுள்ளது. புதிதாக தொழில் மயமாக்கப்பட்ட நாடாக இருப்பதால் பல்வேறு நாடுகளுடன் ஒத்துழைக்கும் சிறந்த வரலாற்றைக் கொண்டுள்ளது.

இந்தியா மற்றும் சர்வதேச அமைப்புகள் 

இந்தியா ஒரு வலிமை வாய்ந்த வல்லரசாகும். வளர்ந்து வரும் உலகளாவிய செல்வாக்கை அனைத்து நாடுகளிலும் பெற்றுள்ளது. புதிதாக தொழில் மயமாக்கப்பட்ட நாடாக இருப்பதால் பல்வேறு நாடுகளுடன் ஒத்துழைக்கும் சிறந்த வரலாற்றைக் கொண்டுள்ளது. பல்வேறு சர்வதேச அமைப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பினராக இந்தியா செயல்படுவதோடு, அவற்றில் சிலவற்றின் நிறுவன உறுப்பினராகவும் இருந்து வருகிறது. இந்தியா முறைப்படி அமைக்கப்பட்ட அமைப்புகளான ஐ.நா.சபை, அணிசேரா இயக்கம், சார்க், ஜி-20 மற்றும் காமன்வெல்த் போன்றவைகளில் உறுப்பினராக உள்ளது .

இராணுவ மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவது மற்றும் நாடுகளிடையே அமைதி மற்றும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவது போன்ற ஐ.நா. சபை எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் இந்தியா உதவுகிறது.


பிரிக்ஸ் (BRICS)

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் பிராந்திய அளவில் மற்றும் சர்வதேச அளவில் வளர்ந்து வரும் பொருளாதார, அரசியல் சக்திகள் ஆகும். பிரிக்ஸ் அமைப்பின் தலைமையகம் சீனாவின் ஷாங்காய் நகரில் அமைந்துள்ளது. உலகின் வடபகுதியில் உள்ள நாடுகளின் சவால்களை எதிர்கொள்ளும் விதமாகத் தென்பகுதியில் உள்ள நாடுகளுக்கு நல்வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா, இக்கூட்டமைப்பில் ஒரு தீவிர உறுப்பினராக இருப்பதோடு உலகளவில் தன்னை வடிவமைக்கவும் இது வழிவகுக்கிறது.


பிரிக்ஸ் கூட்டமைப்பு உருவாவதற்கான காரணம்

உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு ஒரு மாற்றாகவும், அமெரிக்க மேலாதிக்கத்திற்குப் போட்டியாகவும், உறுப்பு நாடுகளிடையே பொருளாதார வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றவும், பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.

பிரிக்ஸின் நோக்கங்கள்

பிராந்திய வளர்ச்சியை அடைவது

வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இடையே பாலமாக செயல்படுவது

மனித மேம்பாட்டிற்கு மிகப்பரந்த அளவில் பங்களிப்பு செய்தல்

அதிக சமத்துவம் மற்றும் நியாயமான உலகத்தை ஏற்படுத்துதல்

வணிக ஒத்துழைப்பை அதிகரிக்க பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே உள்நாட்டு நாணயங்கள் மூலம் வணிகம் மேற்கொள்வதை ஊக்குவித்தல் மற்றும் நடப்பு சர்வதேச சிக்கல்களை எதிர்கொள்ளுதல்

உறுப்பு நாடுகளிடையே தகவல் தொழில்நுட்பங்களைப் பரிமாறிக் கொள்வதை ஊக்குவித்தல், உறுப்பு நாடுகளில் வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு பொருளாதார மாற்றங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல்.

இந்தியா பொருளாதாரத் துறையில் தீவிரமாகச் செயல்பட்டு வருவது கீழ்க்காணும் பல்வேறு பொருளாதார கூட்டமைப்புகளின் ஒரு பகுதியாக இந்தியா இருப்பதிலிருந்தே நன்கு புலனாகிறது.


குறிக்கோள்கள்

வேளாண், கல்வி, ஆற்றல், வர்த்தகம், கலாச்சாரம் மற்றும் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது.

இயற்கைப் பேரழிவுகள் மற்றும் தரவு |மீறல்கள் போன்ற அச்சுறுத்தல்களை சமாளிக்கவும் வணிக நலனை பாதுகாக்கவும்

கங்கா-மீகாங் தாழ்நிலத்தில் தேவையான உள்கட்டமைப்பு  வசதிகளை உருவாக்குவது

தொழில்நுட்ப பொருளாதார ஒத்துழைப்பு, சர்வதேச வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடு ஆகியவற்றை வலுப்படுத்தவும் மேம்படுத்தவும்

பொருள்கள் வர்த்தகம், சேவை வர்த்தகம், முதலீடுகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு, தீர்வு மற்றும் பல பிரச்சனைகளுக்கு உயர் தரமான  மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் வகையிலான ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது

அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவிப்பது

பொதுவான நோக்கங்கள் மற்றும் ஒத்த அரசியல் மற்றும் கலாச்சார அடையாளங்களின் அடிப்படையில் ஒற்றுமையை அடைவது

எரிசக்தி ஆற்றலுக்காக

பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பது, எல்லை பிரச்சினைகளைத் தீர்ப்பது, நுண்ணறிவு பகிர்வு மற்றும் பயங்கரவாதத்தை எதிர்கொள்வது

பிரிக்ஸ் நிதி கட்டமைப்பு

புதிய மேம்பாட்டு வங்கி (NDB) என்பது பல துறை வளர்ச்சி வங்கி ஆகும். அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களுக்குக் கடன் வழங்குவதே இதன் முதன்மைச் செயலாகும். தேசிய அளவில் ஏற்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களான சமூக சுற்றுச்சூழல் மற்றும் நீடித்த பொருளாதாரத் திட்டங்களுக்குப் பங்களிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை மேம்படுத்தும் திட்டங்களுக்கு இது முன்னுரிமை வழங்குகிறது.

அவசரகால நிதி ஒதுக்கீடு ஏற்பாடு (CRA) நாணய விவகாரங்கள் உள்ளிட்ட உலக அளவிலான பண நெருக்கடியில் இருந்து பாதுகாத்திட அடிப்படைத் திட்டம் வழங்க வகை செய்கிறது.

பிரிக்ஸ் பணம் செலுத்தும் திட்டம்

2015ஆம் ஆண்டு நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளின் அமைச்சர்கள் பணம் செலுத்தும் முறை தொடர்பான ஆலோசனைகளைத் தொடங்கினர். இது உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி, செய்திப் பரிமாற்ற அமைப்பிற்கு (SWIFT - Society for Worldwide Interbank Financial Telecommunication System) மாற்றாக இருக்கும்.

பிரிக்ஸ் (BRICS) என்ற சொல் ஜிம் ஓ' நீல் (Jim O'Neill) என்ற பிரபலமான பிரிட்டிஷ் பொருளாதார நிபுணரால் உருவாக்கப்பட்டது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் 2050ஆம் ஆண்டு வாக்கில் ஆறு தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளைவிட டாலர் மதிப்பில் பெரிய நாடுகளாக உருவாகும் என்றும் கடந்த 300 ஆண்டுகளின் அதிகாரப் போக்கு முற்றிலும் மாறுபடும் என்றும் அவர் கணித்தார்.

உறுப்பு நாடுகளிடையே ஒத்துழைப்பை அதிகரிக்கும் காரணிகள்

முதலாவதாக வளரும் நாடுகளிடையே தற்போதைய சூழ்நிலையைப் பிரதிபலிக்கும் ஒரு பொருளாதார ஒழுங்கை உருவாக்குவதற்கு பிரிக்ஸ் அமைப்பு முயற்சிகளைத் தூண்டும். இது தொடர்பாக மாற்றங்களை வரையறுப்பதற்கான புதிய வளர்ச்சி வங்கி (NDB) மற்றும் அவசர ஒதுக்கீடு ஏற்பாடு (CRA) ஆகியவற்றின் யோசனையானது பொருளாதாரம் மற்றும் அரசியலில் மிகுந்தத் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இரண்டாவதாக உலக நிர்வாகத்தில் பிரிக்ஸ் நாடுகளின் மாற்று யோசனை இதர நாடுகளின் ஆதரவை ஈர்க்கும்.

மூன்றாவதாக மற்ற துறைகளுடனான பிரிக்ஸ் தொடர்புகளின் விரிவாக்கம் அதை மேலும் வலுவான கூட்டாண்மையாக உருவாக்கும்.


பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு (OPEC)

பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள்) ஈராக்கில் பாக்தாத் நகரில் நிறுவப்பட்ட அரசுகளுக்கிடையேயான ஓர் அமைப்பாகும். இதன் தலைமையகம் ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் உள்ளது. ஒபெக் நிறுவன உறுப்பினர்கள் ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் ஆகும்.

இவ்வமைப்பில் மூன்று வகையான உறுப்பினர்கள் முறையே நிறுவன உறுப்பினர்கள், குழு உறுப்பினர்கள், இணை உறுப்பினர்கள் உள்ளனர். தற்போது இவ்வமைப்பில் 15 உறுப்பினர்கள் உள்ளனர். (தென் அமெரிக்காவில் 2, மத்திய கிழக்கில் 6, ஆப்பிரிக்காவில் 7). கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் மற்றும் அமைப்பின் நோக்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் எந்த ஒரு நாடும் ஒபெக் அமைப்பில் உறுப்பினராகலாம்.

பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பின் திட்டம்

அதன் உறுப்பு நாடுகளுக்குள் எண்ணெய் கொள்கைகளை ஒருங்கிணைத்தல்

எண்ணெய் சந்தையை நிலைநிறுத்த உதவுதல்

பெட்ரோலிய உற்பத்தியாளர்களுக்கு நியாயமான நிலையான வருவாய் கிடைப்பதை உறுதி செய்தல்

எண்ணெய் நுகர்வு செய்யும் நாடுகளுக்குத் திறமையான, சிக்கனமான, வழக்கமான, விநியோகத்தை அளித்தல்

பெட்ரோலியத் தொழிலில் முதலீடு செய்பவர்களுக்கு மூலதனத்திற்கு நியாயமான வருவாய் கிடைக்கச் செய்தல்

OPEC இலச்சினை


இது 1969ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு சர்வதேச வடிவமைப்புப் போட்டியின் மூலம் இச்சின்னமானது OPEC தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆஸ்திரிய வடிவமைப்பாளர் ஸ்வோபோடா இதை வடிவமைத்து போட்டியில் வென்றார். இது இந்த அமைப்பினுடைய பெயரின் வெவ்வேறு எழுத்துக்களை (OPEC) ஒரு வட்டமான வடிவமைப்பில் காணலாம்.

ஒபெக் எவ்வாறு பிற நாடுகளுக்கு உதவி செய்கின்றன?

பெட்ரோலிய ஏற்றுமதி செய்யும் நாடுகளின் சர்வதேச மேம்பாட்டு நிதி (OPID) என்பது குறைந்த வட்டி வீதத்தில் கடன் அளிக்கும் நிதி நிறுவனம் ஆகும். இது சமூக மற்றும் மனிதாபிமானத் திட்டங்களுக்கு மானியங்களை வழங்குகிறது.

புத்தகங்கள், அறிக்கைகள், வரைபடங்கள், பெட்ரோலிய எரிசக்தி மற்றும் எண்ணெய் சந்தை தொடர்பான மாநாட்டு நடவடிக்கைகள் உள்பட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கொண்ட ஒரு தகவல் மையத்தை ஒபெக் கொண்டுள்ளது. இத்தகவல் மையம் பொதுமக்களாலும் பெரும்பாலும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களாலும் அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஒபெக் நாடுகளுடனான இந்தியாவின் உறவு

கச்சா எண்ணெய் அதிக அளவில் நுகர்வு செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் தங்களுடைய ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன. 86 சதவிகித கச்சா எண்ணெய், 70 சதவிகித இயற்கை எரிவாயு, 95 சதவிகித சமையல் எரிவாயு ஆகியவற்றை இந்தியா ஒபெக் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அதிக எண்ணெய் தேவையினால் இந்தியா ஒரு சிறந்த பங்காளராக ஒபெக் நாடுகளால் அடையாளம் காணப்படுகிறது.

இந்தியாவில் போதுமான எண்ணெய் வள இருப்பு இல்லை. இதனால் எண்ணெய்யை இந்தியா உற்பத்தி செய்ய முடியாது. அதனால் இந்தியா விவசாயம் மற்றும் தொழில் துறை உற்பத்தியில் வலுவான கவனம் செலுத்துகிறது.


முடிவுரை

இந்தியா பொருளாதாரம் மற்றும் வணிக ஒத்துழைப்பு தவிர ஒரு நட்பான நீடிக்கப்பட்ட உறவினை தனது அண்டை நாடுகளுடன் ஏற்படுத்திக் கொள்ள விரும்புகிறது. மேலும் கல்வி, சுகாதாரம், தீவிரவாத எதிர்ப்பு, பேரிடர் மேலாண்மை, குடிமக்களுக்கான வேலைவாய்ப்பு, குற்றங்களைக் கட்டுப்படுத்தல், தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைக்க விரும்புகிறது.


Tags : India’s International Relations இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை.
10th Social Science : Civics : Chapter 5 : India’s International Relations : India and International Organisations India’s International Relations in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 5 : இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை : இந்தியா மற்றும் சர்வதேச அமைப்புகள் - இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 5 : இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை