இந்தியாவின் சர்வதேச உறவுகள் | குடிமையியல் | சமூக அறிவியல் - விரிவான விடை தருக. | 10th Social Science : Civics : Chapter 5 : India’s International Relations
VI. விரிவான விடை தருக.
1. இந்தியா மற்றும் சர்வதே அமைப்புகள் குறித்தும்
இந்தியா உறுப்பினராக உள்ள ஏதேனும் மூன்று உலகளாவிய குழுக்கள் பற்றிய சிறப்பு அம்சங்கள்
குறித்தும் எழுதுக.
• இந்தியா ஒரு வலிமை வாய்ந்த வல்லரசாகும். வளர்ந்து வரும் உலகளாவிய செல்வாக்கை அனைத்து நாடுகளிலும் பெற்றுள்ளது.
• புதிதாக தொழில்மயமாக்கப்பட்ட நாடாக இருப்பதால் பல்வேறு
நாடுகளுடன் ஒத்துழைக்கும் சிறந்த வரலாற்றைக் கொண்டுள்ளது.
• பல்வேறு சர்வதேச அமைப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்த
உறுப்பினராக இந்தியா செயல்படுவதோடு, அவற்றில் சிலவற்றின் நிறுவன
உறுப்பினராகவும் இருந்து வருகிறது.
• இந்தியா முறைப்படி அமைக்கப்பட்ட அமைப்புகளான ஐ.நா.சபை, அணிசேரா இயக்கம்,
சார்க், ஜி-20 மற்றும் காமன்வெல்த்
போன்றவைகளில் உறுப்பினராக உள்ளது.
• இராணுவ மோதல்களை முடிவுக்கு கொண்டு வருவது மற்றும்
நாடுகளிடையே அமைதி மற்றும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவது போன்ற ஐ.நா. சபை எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் இந்தியா உதவுகிறது.
உலகளாவிய குழுக்களின் பெயர்கள்
ஐ.பி.எஸ்.ஏ (IBSA)
உறுப்பினர் நாடுகள் : இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா.
குறிக்கோள்கள் : வேளாண், கல்வி, ஆற்றல், வர்த்தகம், கலாச்சாரம்
மற்றும் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது.
பி.சி.ஐ.எம் (BCIM)
உறுப்பினர் நாடுகள் : வங்காளதேசம், சீனா,
இந்தியா, மியான்மர்.
குறிக்கோள்கள் : இயற்கைப் பேரழிவுகள் மற்றும் தரவு மீறல்கள் போன்ற அச்சுறுத்தல்களை சமாளிக்கவும், வணிக நலன் பாதுகாப்பிற்கும்.
எம்.ஜி.சி (MGC) (மீகாங் – கங்கா ஒத்துழைப்பு)
உறுப்பினர் நாடுகள் : இந்தியா, கம்போடியா, லாவோஸ் மக்கள் ஜனநாயக குடியரசு, மியானமர், தாய்லாந்து, வியட்நாம்.
குறிக்கோள்கள் : கங்கா - மீகாங் தாழ்நிலத்தில்
தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல்.
2. பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பு உருவானதற்கான காரணம் மற்றும் அதன்
நோக்கங்களை எழுதுக.
பிரிக்ஸ் கூட்டமைப்பு உருவாவதற்கான காரணம் :
• உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு ஒரு
மாற்றாகவும், அமெரிக்க மேலாதிக்கத்திற்கு போட்டியாகவும் பிரிக்ஸ்
நாடுகள் கூட்டமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.
• உறுப்பு நாடுகளிடையே பொருளாதார வளர்ச்சி திட்டங்களை
நிறைவேற்றவும், சொந்த மற்றும் சுயமாக நிரூபிக்கும் விதமாக இக்கூட்டமைப்பு
உருவாக்கப்பட்டது.
பிரிக்ஸின் நோக்கங்கள் :
• பிராந்திய வளர்ச்சியை அடைவது.
• வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இடையே பாலமாகச் செயல்படுவது.
• மனித மேம்பாட்டிற்கு மிகப் பரந்த அளவில் பங்களிப்பு
செய்தல்.
• அதிக சமத்துவம் மற்றும் நியாயமான உலகத்தை ஏற்படுத்துதல்.
• வணிக ஒத்துழைப்பை அதிகரிக்க பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே
உள்நாட்டு நாணயங்கள் மூலம் வணிகம் மேற்கொள்வதை ஊக்குவித்தல் மற்றும் நடப்பு சர்வதேச
சிக்கல்களை எதிர்கொள்ளுதல்.
• உறுப்பு நாடுகளிடையே தகவல் தொழில் நுட்பங்களை பரிமாறிக்
கொள்வதை ஊக்குவித்தல், உறுப்பு நாடுகளில் வேலைவாய்ப்பு,
வறுமை ஒழிப்பு பொருளாதார மாற்றங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய பொருளாதார
வளர்ச்சியை மேம்படுத்துதல்.
3. பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பின்
(OPEC) திட்டம் குறித்தும் அவ்வமைப்பு எவ்வாறு பிற நாடுகளுக்கு உதவி
செய்கின்றன என்பது குறித்தும் குறிப்பிடுக.
பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பின்
திட்டம்:
• அதன் உறுப்பு நாடுகளுக்குள் எண்ணெய் கொள்கைகளை ஒருங்கிணைத்தல்.
• எண்ணெய் சந்தையை நிலை நிறுத்த உதவுதல்.
• பெட்ரோலிய உற்பத்தியாளர்களுக்கு நியாயமான நிலையான வருவாய்
கிடைப்பதை உறுதி செய்தல்.
• எண்ணெய் நுகர்வு செய்யும் நாடுகளுக்கு திறமையான,
சிக்கனமான, வழக்கமான வினியோகத்தை அளித்தல்.
• பெட்ரோலியத் தொழிலில் முதலீடு செய்பவர்களுக்கு மூலதனத்திற்கு
நியாயமான வருவாய் கிடைக்கச் செய்தல்.
ஒபெக் பிறநாடுகளுக்கு உதவி செய்தல்:
• பெட்ரோலிய ஏற்றுமதி செய்யும் நாடுகளின் சர்வதேச மேம்பாட்டு
நிதி என்பது குறைந்த வட்டி வீதத்தில் கடன் அளிக்கும் நிதி நிறுவனம் ஆகும்.
• இது சமூக மற்றும் மனிதாபிமான திட்டங்களுக்கு மானியங்களை
வழங்குகிறது.
• புத்தகங்கள், அறிக்கைகள்,
வரைபடங்கள், பெட்ரோலிய எரிசக்தி மற்றும் எண்ணெய்
சந்தை தொடர்பான மாநாட்டு நடவடிக்கைகள் உள்பட 20 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட தொகுதிகளைக் கொண்ட ஒரு தகவல் மையத்தை ஒபெக் கொண்டுள்ளது.
• இத்தகவல் மையம் பொதுமக்களாலும் பெரும்பாலும் ஆராய்ச்சியாளர்கள்
மற்றும் மாணவர்களாலும் அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
VII. செயல்பாடுகள்.
1. உலக நாடுகளுடனான இந்தியாவின் உறவு குறித்துச் செய்தித்தாள்களில்
இருந்து தகவல்களைச் சேகரிக்க மாணவர்களிடம் கூறலாம்.
மாணவர் செயல்பாடு.
2. இந்தியா அதன் அண்டை நாடுகளுடன் கொண்டுள்ள சமீபத்தியத்
திட்டங்கள் குறித்து படங்களுடன் ஒரு ஆல்பம் தயாரிக்க குழுத் திட்டமாக மாணவர்களிடம்
கொடுக்கலாம்.
மாணவர் செயல்பாடு.