இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை - இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும் | 10th Social Science : Civics : Chapter 5 : India’s International Relations
இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும்
அண்டை
நாட்டுறவைப் பொருத்த வரையில் இந்தியா ஒரு உன்னத நிலையைக் கொண்டுள்ளது. இந்திய துணைக்கண்டத்தில்
கடந்த 5000 ஆண்டுகளாக நிலவி வந்த ஒரே மாதிரியான பண்பாட்டின் ஒரு
பகுதியாக அண்டை நாடுகள் விளங்குகின்றன.
•
மிகப்பரந்த இந்தியாவின்
வடமேற்கில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான்
•
வடக்கில் சீனா, நேபாளம், பூடான்
•
கிழக்கில் வங்காளதேசம்
•
தூரக்கிழக்கில்
மியான்மர்
•
தென்கிழக்கில்
இலங்கை, தென்மேற்கில் மாலத்தீவு
போன்ற இந்தியாவிற்கு மிக அருகில் அமைந்துள்ள இரு நாடுகளும் இந்திய பெருங்கடலால் பிரிக்கப்பட்டுள்ளன.
இந்தியா இந்த அண்டை நாடுகளுடன் வரலாற்று ரீதியாகவும், சமய, பொருளாதார, இன மற்றும் மொழியின்
அடிப்படையிலும் நல்லுறவைப் பேணுகிறது. அண்டை நாடுகளுடனான இந்தியாவின்
உறவுகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.
சீனாவும்
– ரஷ்யாவும் அதிக
எண்ணிக்கையிலான அண்டை நாடுகளுடன் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன.
இந்தியா, ஆப்கானிஸ்தான் உறவு
போர்த்திறம் சார்ந்த பங்களிப்பு ஒப்பந்தம் (Strategic Partnership
Agreement) மூலம் வலிமை பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தம்
ஆப்கானிஸ்தானின் உள்கட்டமைப்பை மறுசீரமைக்கவும், நிறுவனங்கள்,
வேளாண்மை, நீர்,
கல்வி, சுகாதாரம் மற்றும் வரியில்லாமல் இந்திய
சந்தையை எளிதாக அடைதல் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை நல்கவும் வழிகோலுகிறது.
ஹீரட் மாகாணத்திலுள்ள சல்மா அணையைக் கட்ட ஆப்கானிஸ்தானிற்கு இந்தியா
உதவியது. ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புப் படையில் பணிபுரிந்து உயிரிழந்த
வீரர்களின் குழந்தைகள் 500 பேருக்கு இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில்
உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயில்வதற்கான உதவித்தொகையை இந்தியா அறிவித்துள்ளது.
மேலும் ஆப்கானிஸ்தானின் பொது சுகாதாரம் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களின்
மேம்பாட்டிற்காக இந்தியா ஆதரவு அளித்து வருகிறது. ஆப்கானிஸ்தானில்
முதலீடு செய்வதில் முன்னணியில் இந்தியா இருப்பதோடு, பொதுத்துறை
மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த இந்திய நிறுவனங்கள் ஆப்கானிஸ்தானில் சுரங்கத் தொழிலில்
அதிக அளவில் முதலீடு செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்தியா
தனது விளையாட்டுத் திறமையைப் பறைசாற்றும் விதமாக காந்தகார் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தைக்
கட்டியுள்ளது. இந்தியாவின் மகளிர் சுய வேலை வாய்ப்புச் சங்கம்
நிலையான வாழ்வாதாரம் மற்றும் தன்னம்பிக்கை பெறுவதற்குமான பயிற்சியை ஆப்கானிஸ்தானில்
அளிக்கிறது. இந்தியா இவ்விதமாக ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்கு
நிதி உதவி மற்றும் கடனுதவி அளித்துப் பங்காற்றி வருகிறது.
சிந்துவெளி
நாகரிக காலம் முதல் இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் பன்முகத்தன்மையையும் மிக ஆழமான நட்புறவையும்
கொண்டிருந்தன. கனிஷ்கருடைய ஆட்சியின் போது ஏராள இந்திய சமய பரப்புக் குழுக்கள் சீனா,
மத்திய ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்குத் தங்கள் மதத்தைப்
பரப்பச் சென்றனர்.
பலுசிஸ்தான் (தற்காலத்திய பாகிஸ்தானின்
எல்லைப்புற மாகாணம்) பகுதியைச் சார்ந்த கான் அப்துல் கபார்கான்
இந்திய விடுதலைப் போராட்ட இயக்கத்தின் முக்கியத் தலைவரும் இந்திய தேசிய காங்கிரசின்
தீவிர ஆதரவாளரும் ஆவார்.
வங்காளதேசத்தின் (முந்தைய கிழக்கு பாகிஸ்தான்)
சுதந்திரத்தை அங்கீகரித்த முதல் நாடு இந்தியா ஆகும். இந்தியாவும் வங்காளதேசமும் 4,096.7கி.மீ நீளம் கொண்ட மிக நீண்ட நிலப்பரப்பை எல்லையாகப் பகிர்ந்து கொள்கின்றன.
அகர்தலாவிற்கும் (இந்தியா) அகவுராவிற்கும் (வங்காளதேசம்) இடையேயானரயில்
போக்குவரத்து இணைப்பிற்கான முன்மொழிவை செயல்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.இந்தியாவின் பகுதிகளான கொல்கத்தாவில் இருந்து அகர்தலாவிற்கு டாக்கா வழியாக
செல்வதற்கான சாலை வழியினை BBIN- MVA (வங்காளதேசம், பூடான், இந்தியா, நேபாளம் மோட்டார்
வாகன ஒப்பந்தம்) ஒப்பந்தத்தின் கீழ் அமைக்க இந்தியாவிற்கு வங்காள
தேசம் அனுமதி வழங்கியுள்ளது. கங்கை நீரைப் பகிர்ந்து கொள்ள
1977இல் கையெழுத்தான பராக்கா ஒப்பந்தம் ஒரு வரலாற்று ஒப்பந்தமாகும்.
இந்தியாவிற்கும் வங்காளதேசத்திற்கும் பொதுவானதாக உள்ள 54 நதிகளிலிருந்து
அதிகபட்ச நலனைப் பெறுவதற்காக இரு நாட்டுக் கூட்டு நதி ஆணையம் செயல்படுகிறது.
இந்திய அரசாங்கம் ‘வங்காளதேசத்திற்கான உதவி’
என்ற திட்டத்தின் கீழ் கட்டடங்கள் கட்டவும், ஆய்வுக்கூடங்கள்,
மருந்தகங்கள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கவும் மானியம் வழங்கி
உதவுகிறது. மேலும் இந்திய பண்பாட்டு உறவுகளுக்கான குழுவின்
(ICCR) மூலம் வங்காளதேச மாணவர்களுக்கு ஆண்டுதோறும் உதவித்தொகைஅளிக்கப்படுவதோடு
டாக்கா பல்கலைக்கழகத்தில் ‘தாகூர் இருக்கை’ ஏற்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. (மேற்குவங்காளம்)
சிலிகுரி - பர்பதிபூர் (வங்காளதேசம்)
ஆகிய இடங்களுக்கிடையே 130 கிலோ மீட்டர் நீளம் கொண்ட
நட்புறவுக் குழாய் போக்குவரத்தை அமைக்கும் பணியை இரு நாடுகளும் இணைந்து தொடங்கி வைத்தன.
இந்தியாவிற்குச்
சொந்தமான டீன்பிகா
(Teen Bigha) என்ற பகுதி மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேசத்திற்கு
இடையேயான எல்லையில் உள்ளது. குறுகலான இப்பாதை 2011ஆம் ஆண்டு வங்காளதேசத்திற்குக் குத்தகைக்கு விடப்பட்டது.
பூடான்
இமயமலையில் உள்ள ஒரு சிறிய முடியாட்சி நாடு ஆகும். 'இடி மின்னல் நிலம்' என்று அறியப்படும் இது உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகும். இந்தியா மற்றும் பூடான் இடையேயான இராஜதந்திர உறவுகள் 1968ஆம் ஆண்டில் இந்திய பிரதிநிதி ஒருவரைத் திம்புவில் நியமித்ததிலிருந்து தொடங்கியது.
பூடான் நிலங்களால் சூழப்பட்ட நாடாகும். அதனால்
கடல் சார்ந்த தொடர்புகளுக்கு இந்தியாவையே பெரிதும் சார்ந்துள்ளது. பூடானின் பொருளாதார மேம்பாட்டிற்கு இந்தியா முதன்மைப் பங்காற்றுகிறது.
இந்தியா ‘பாரத் முதல் பூடான் வரை‘ (B2B)
என்று அறியப்படும் இருதரப்பு வணிக உறவினை
அறிவித்தது. பூடான் மாணவர்கள் புகழ் பெற்ற நிறுவனங்களில் உயர் கல்வி பெறுவதற்கு இந்தியா
உதவித்தொகை அளிப்பதோடு பூடானில் ஒருடிஜிட்டல் நூலகம் அமைத்திடவும் உதவியுள்ளது.
மதிப்புமிக்க நேரு - வாங்சுக் கல்வி உதவித்தொகையானது
தகுதியும் திறமையும் கொண்ட பூடான் நாட்டினருக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட
முதன்மையான இந்திய கல்வி நிறுவனங்களில் கல்வி பயில வாய்ப்பு அளிக்கிறது. இந்தியா மற்றும் பூடான் இடையே இரு தரப்பு ஒத்துழைப்பிற்கு நீர்மின்சக்தித்
துறை ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இதுவரை இந்திய
அரசாங்கம் மூன்று நீர்மின்சக்தி (சுக்கா, குரிச்சி, தலா) திட்டங்களைப் பூடானில்
அமைத்துள்ளது. பூடான் நாட்டில் தொலைத் தொடர்பு வசதியை ஏற்படுத்தவும்
மருத்துவமனைகள், சாலைகள் மற்றும் பாலங்கள் ஆகியவற்றைக் கட்டுவதற்கும்
அந்நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்தவும் இந்தியா உதவியுள்ளது.
குரு
பத்மசம்பவா எனும் புத்த துறவி இந்தியாவிலிருந்து பூடானுக்குச் சென்றார். அங்கு தனது செல்வாக்கை
ஏற்படுத்தி புத்த சமயத்தைப் பரப்பியதன் மூலம் இரு நாட்டு மக்களிடையே பாரம்பரியத்தை
உறுதிப்படுத்தினார்.
புவியியல்
அமைப்பு, மக்கள் தொகை,
திறன் கொண்ட மனித ஆற்றல் மற்றும் நாகரிகத் தொன்மை ஆகியவற்றின் அடிப்படையில்
இந்தியாவுடன் ஒப்பிடுவதற்குத் தகுதி வாய்ந்த நாடு சீனா மட்டுமே. உலகில் உள்ள உற்பத்தி மண்டலங்களில் ஒன்றாக இருக்கும் சீனா, இந்தியாவிற்கு மிக முக்கியமான நாடாகும். இந்தியாவும்
சீனாவும் உலக வர்த்தக நிறுவனம், சர்வதேச காலநிலை மாற்றம் குறித்த
பேச்சுவார்த்தைகள், உலக வங்கி சீர்திருத்தம் ஆகியவற்றில் ஒத்த
கருத்தைக் கொண்டுள்ளன. சீனாவால் துவங்கி வைக்கப்பட்ட ஷாங்காய்
ஒத்துழைப்புக் கூட்டமைப்பில் (Shanghai Cooperation) இந்தியாவிற்குப்
பார்வையாளர் தகுதியை வழங்கியுள்ளது. அதேபோன்று சார்க்
(SARRC) அமைப்பில் பார்வையாளர் தகுதி சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இருநாடுகளும் பல்வேறு மாறுபட்ட துறைகளில் பேச்சுவார்த்தை நடத்திட வழிகளை
ஏற்படுத்தியுள்ளன. இருதரப்பு வணிகம் மகத்தான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
இந்தியாவும் சீனாவும் கல்வி பரிமாற்றத் திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன.
அதன்படி இரு நாடுகளிலும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் உயர்
கல்வி பயில தலா 25 மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு
வருகிறது.
மக்மகான்
எல்லைக் கோடு
- இந்தியா, சீனா மற்றும் பூடானின் கிழக்குப் பகுதி
ஆகிய பகுதிகளுக்கு இடையேயான எல்லைக்கோடு ஆகும். இது
1914ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்தியா, திபெத் மற்றும்
சீனா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. பிரிட்டிஷ் இந்தியாவின் சார்பில் இந்தியாவிற்கான செயலாளர் ஆர்தர் ஹென்றி மக்மகான்
இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
மாலத்தீவு
இந்தியப் பெருங்கடலில் இலட்சத்தீவுகளுக்குத் தெற்கில் அமைந்துள்ளது. இதன் அமைவிட முக்கியத்துவத்தினாலும்
அருகாமையில் அமைந்திருப்பதாலும் மாலத்தீவினுடனான
உறவு இந்தியாவிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்தியாவும் மாலத்தீவும்
இனம், மொழி, பண்பாடு, சமயம் மற்றும் வணிகத் தொடர்பு ஆகிய பல பரிமாணத் தொடர்புகளைப் பழங்காலத்திலிருந்தே
சுமுகமாகப் பேணி வருகின்றன. இரு நாடுகளுக்கிடையே வணிகம் மற்றும்
சுற்றுலா மேம்பட்டு இருக்கின்றன. இந்தியப் பெருங்கடல் பகுதியில்
ஒருங்கிணைந்த ரோந்து மற்றும் வான்வழி கண்காணிப்புத் தகவல் பரிமாற்றம் ஆகியவற்றின் மூலம்
கடல் சார் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பை நல்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
இந்தியா
தன் இரண்டாவது மிக நீளமான எல்லையை மியான்மர் நாட்டோடு பகிர்ந்து கொண்டுள்ளது (1989ஆம் ஆண்டு வரை
பர்மா என அறியப்பட்டது). இந்தியாவின் நான்கு
வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து,
மணிப்பூர், மிசோரம் ஆகியவை மியான்மர் நாட்டுடன்
தங்கள் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்தியா, தென் கிழக்காசியாவிற்குள் செல்வதற்கான நுழைவு வாயிலாக மியான்மர் இருக்கிறது.
கொல்கத்தாவை மியான்மரில் உள்ள சிட்வேயுடன் இணைப்பதற்காகச் சாலை
- நதி - துறைமுகம் - சரக்குப்
போக்குவரத்துத் திட்டமான கலடன் பன்முக மாதிரி போக்குவரத்துத் திட்டத்தினை
(Kaladan Multi Model Transit Transport) இந்தியா உருவாக்கி வருகிறது.
தென்கடலில் பொருளாதார மண்டலத்தை உருவாக்குவதற்காகக் கொல்கத்தா நகரை ஹோசிமின்
உடன் இணைக்கும் நோக்கம் கொண்ட ஒரு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மியான்மர், கம்போடியா, வியட்நாம்
வழியே சாலைப் போக்குவரத்தையும் கொண்ட இத்திட்டத்தின் ஒரு பகுதியாகக் கவுகாத்தியுடன்
மாண்டலேவை இணைக்கும் முதற்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. நமது எரிபொருள் தேவைகளான பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றில் முக்கியப்
பங்குதாரராக மியான்மர் உள்ளது. சில இந்திய நிறுவனங்களான எஸ்சார்
(ESSAR), கெயில் (GAIL), ஓஎன்ஜிசி
(ONGC), விதேஷ் லிமிடெட் (Videsh Ltd.,) ஆகிய நிறுவனங்கள்
மியான்மரின் எரிசக்தித்துறையில் முதலீடு செய்துள்ளன.
இந்தியாவிற்கும்
சீனாவிற்கும் இடையிலான இயற்கையாக அமைந்த இடைப்படு நாடு நேபாளம் ஆகும். நேபாளம் நிலப்பகுதிகள்
சூழப்பட்ட நாடாக இருப்பதால் பொருளாதார உதவிக்கும் வழித்தடங்களுக்கும் இந்தியாவையே சார்ந்துள்ளது.
இந்தியாவின் ஐந்து மாநிலங்களான சிக்கிம், மேற்கு
வங்காளம், பீகார், உத்தரப்பிரதேசம்,
உத்தரகாண்ட் ஆகியவை நேபாள எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. இரு நாட்டின் எல்லை மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் தங்களிடையே ஆழமான பண்பாட்டுப்
பிணைப்பினைக் கொண்டுள்ளனர். நேபாளத்தின் பெரிய முதலீட்டாளராக இந்தியா திகழ்கிறது.
அடிப்படைக்
கட்டமைப்பு, நீர்ப்பாசனம், சுகாதாரம், ஆற்றல்
திட்டங்கள் மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட மேம்பாட்டிற்கு
இந்தியா உதவுவதோடு, நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளையும் அளித்து
வருகிறது. இந்தியாவையும் காத்மண்டுவையும் இணைப்பதற்கான
204 கிலோ மீட்டர் நீளமுள்ள மகேந்திர ராஜ் மார்க் (Mahendra
Raj Marg) என்னும் இணைப்பை இந்தியா கட்டியுள்ளது. நேபாளம் மிக வேகமாக ஓடும் ஆறுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளதால் நீர் மின்சக்தி
நிலையங்களை நிறுவுவதற்கு அதன் நிலப்பரப்பு ஏற்றதாக உள்ளது. 18 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒப்பந்தமான 5600 மெகாவாட் பஞ்சேஷ்வர் திட்டப்பணிகளை இந்தியா மேற்கொண்டு உள்ளது. இந்தியா மற்றும் நேபாள மக்கள் ஆன்மீக பயணங்களுக்காக இரு நாடுகளுக்கும் சென்று
வருகின்றனர். நேபாளத்தில் பசுபதி, ஜனக்பூர்
ஆகிய பாரம்பரியமிக்க மையங்கள் உள்ளன. அதே போல இந்தியாவில் வாரணாசி
மற்றும் நான்கு தாம்ஸ் (Four Dhaams - பத்ரிநாத், பூரி, துவாரகை மற்றும் இராமேஸ்வரம்) ஆகிய முக்கியமான புனிதத் தலங்களும் உள்ளன. நேபாள மொழியை,
இந்தியா அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் சேர்த்துள்ளது,
இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புப்பிணைப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
சாரதா
ஆற்றின் குறுக்கே ஒரு கூட்டு மின்சக்தித் திட்டம் கட்டப்பட்டு வருகிறது. இத்திட்டம் முறையே
மின்சார உற்பத்தி, நீர்ப்பாசன வசதிகள் ஆகியவை இந்தியா மற்றும்
நேபாளத்திற்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல்
நோக்கில் இந்தியா, நேபாளம் எல்லையோரம் பல்வேறு எண்ணிக்கையிலான
புலிகள் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்திய
மற்றும் நேபாள அரசு இரட்டை நகரங்களான காத்மண்டு- வாரணாசி, லும்பினி
- புத்தகயா மற்றும் ஜனக்பூர் - அயோத்தி ஆகிய மூன்று
சகோதரி நகர் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
1947ஆம் ஆண்டு இந்திய - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர்
பல்வேறு முக்கிய விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே வேறுபாடு காரணமாக நெருடலான
உறவு இருந்து வருகிறது. பாகிஸ்தானுடனான உறவில் தீவிரவாதமே தொடர்ந்து
நமது முக்கியக் கவலையாக உள்ளது. இந்தியாவுடனான உறவுகளைப் பராமரிப்பதில்
பாகிஸ்தான் விரோத மனப்பான்மையுடனே இருந்து வருகின்றது. ஆனால்
இந்தியா, உறவுகளை மேம்படுத்தவும் நிலைநிறுத்தவும் தீவிரமாக முயன்று
வருகிறது. எல்லை தாண்டிய துப்பாக்கிச் சண்டை மற்றும் தீவிரவாதிகள்
தாக்குதல் ஆகியவை காஷ்மீர் மக்களின் உயிர்களைக் பலி கொண்டது. மேலும் அம்மக்கள் ஏழ்மை நிலை மற்றும் மனித உரிமை மீறல் ஆகியவற்றால் அவதியுறுகின்றனர்.
இந்தியா பாகிஸ்தானிடையே காஷ்மீர் முக்கிய விவகாரமாக இருந்து வருவதோடு
இரு நாடுகளும் வெளிப்படையாகவே மோதிக்கொள்ளும் நிலையினை பல்வேறு சமயங்களில்
ஏற்படுத்தியுள்ளது.
கட்டுப்பாடுக்
கோடு
1949ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்ட போர் நிறுத்தக் கோடு 1972ஆம் ஆண்டிற்குப் பின்னர் எல்லைக் கட்டுப்பாடுக் கோடு என அழைக்கப்பட்டது.
இது 1972ஆம் ஆண்டின் சிம்லா ஒப்பந்தத்தின் கீழ்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்றுக்கொள்ளப்பட்ட எல்லையாகும். இக்கோடு பிரிவினை செய்யப்பட்டபோது ராட்க்ளிஃப் கோடு (Radcliffe
Line) என்று அழைக்கப்பட்டது. (ராட்க்ளிஃப் என்பவர்
எல்லை ஆணையத்தின் தலைவராக இருந்தார்) இக்கோடு தற்போது கட்டுப்பாடுக்
கோடு என அழைக்கப்படுகிறது.
இந்தியாவும் இலங்கையும்
இந்திய
நாடு பண்பாடு, கலாச்சார, வரலாறு மற்றும் சமய உறவுகளை இலங்கையுடன் கொண்டுள்ளது.
பாக் ஜலசந்தியால் பிரிக்கப்பட்டுள்ள இந்தியாவும் இலங்கையும் சிறந்த வணிக
உறவுகளைத் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்வதோடு இருதரப்பு ஒப்பந்தங்கள் மட்டுமல்லாமல்
சார்க் அமைப்பின் மூலமும் மேம்பாட்டிற்கு ஒருங்கிணைந்து செயலாற்றி வருகின்றன.
இந்தியா மற்றும் இலங்கை உறவு நட்பு ரீதியாக அமைந்திருக்கிறது எனினும்
தமிழ் இனப்பிரச்சினை தொடர்பான காலகட்டத்தில் சிறிது காலத்திற்கு மட்டும் உறவில் பின்னடைவு
ஏற்பட்டது. இரு நாடுகளும் மரபுரீதியாக ஒன்றுக்கொன்று நெருங்கிய
நிலையில் இருந்து வருகின்றன. இலங்கையில் முதலீடு செய்துள்ள நாடுகளில்
இந்தியா முன்னணியில் இருப்பதோடு, பெட்ரோலியம், சில்லரை வணிகம், தகவல் தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட், தொலைத் தொடர்புகள் மற்றும் சுற்றுலா போன்ற
பல்வேறு துறைகளில் இந்தியா முதலீடு செய்துள்ளது. இலங்கையின் முதலீடுகள்
இந்தியாவில் சரக்கு சேவை மற்றும் தளவாடத்துறை ஆகியவற்றைத் தவிர பிராண்டிக்ஸ்
(Brandix) (விசாகப்பட்டினத்தில் உள்ள ஆடை நகரம்) எம். ஏ. எஸ். ஹோல்டிங்ஸ் (MAS Holdings), ஜான் கீல்ஸ்
(John Keels), ஹேலேஸ் (Hayleys) போன்றவற்றிலும்
செய்துள்ளது. இந்தியா தகுதியுள்ள இலங்கை மாணவர்களுக்கு கல்வி
உதவித் தொகையை ஆண்டுதோறும் அளித்து வருகிறது. இந்தியாவின் நாளந்தா
பல்கலைக்கழகத் திட்டத்தில் இலங்கை ஒரு பங்குதாரர் ஆகும்.
அசோகர்
புத்த மதத்தைப் பரப்புவதற்காக அவரது மகன்மகிந்தாவையும்மகள் சங்கமித்திரையையும் இலங்கைக்கு
அனுப்பினார். சோழ அரசர்களான முதலாம் இராஜராஜன் மற்றும் முதலாம் இராஜேந்திரன் ஆகியோர் இலங்கையின்
வடபகுதியைக் கைப்பற்றினர்.