ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம் - வரலாறு - இந்தியாவில் தொழில்துறை வளர்ச்சி | 12th History : Chapter 5 : Period of Radicalism in Anti-imperialist Struggles
இந்தியாவில் தொழில்துறை வளர்ச்சி
பிரிட்டிஷ் வணிகக் கொள்கையானது உள்நாட்டுத்
தொழில்துறையைப் பெரும் எண்ணிக்கையாக்கியது. இந்தியாவைத் தொழில்மயமாக்குதல் பிரிட்டிஷ்
கொள்கையின் ஒரு பகுதி அல்ல. மற்ற காலனிகளைப் போலவே இந்தியாவும் ஒரு மூலப்பொருள் கொள்முதல்
செய்யும் பகுதியாகவும் உற்பத்திப்பொருட்களுக்கான சந்தையாகவும் கருதப்பட்டது.
இதுமட்டுமன்றி, முதல் உலகப்போரின் போதும் பொருளாதாரப்
பெரும் மந்தம் போன்ற சில எதிர்பாராத சந்தர்ப்பங்கள் காரணமாகவும் இந்தியாவில் தொழில்துறை
விரிவாக்கம் ஏற்பட்டது.
1854இல் பம்பாயில் கவஸ்ஜீ நானாபாய் தவர்
(1815-73) என்ற பார்சி இனத்தைச் சேர்ந்த இந்தியரே பருத்தி ஆலையை முதன்முதலில் தொடங்கினார்.
இது பாம்பே ஸ்பின்னிங் அண்ட் வீவிங் கம்பெனி என்று அறியப்பட்டது. நகரத்தின் முன்னணி
வர்த்தகர்கள் பெரும்பாலும் பார்சிக்கள், இந்த முயற்சிக்குப் பங்களிப்புச் செய்தனர்.
அமெரிக்க உள்நாட்டுப் போர் (1861-65) பருத்தி விவசாயம் செய்தோருக்கு ஒரு வரம். ஆனால்
உள்நாட்டுப் போருக்குப்பின் பிரிட்டன் அமெரிக்காவிலிருந்து தொடர்ந்து பருத்தி இறக்குமதி
செய்ததால் இந்தியப் பருத்தி விவசாயிகள் துயரத்திற்குள்ளாயினர். ஆனால், ஐரோப்பியர்கள்
பருத்தியின் மலிவான, அபரிதமான உற்பத்தியால் இந்தியாவில் ஜவுளித் தொழிற்சாலைகளைத் துவக்கினர்,
இந்தியத் தொழில் முனைவோரால் அகமதாபாத் ஜவுளி ஆலைகள் நிறுவப்பட்டதும், அகமதாபாத் மற்றும்
பம்பாய் ஆகியவை பருத்தி ஆலைகளின் முக்கிய மையங்களாக மாறின. 1914ஆம் ஆண்டு வாக்கில்,
பம்பாய் மாகாணத்திற்குள் 129 நூற்பு, நெசவு மற்றும் பிற பருத்தி ஆலைகள் இருந்தன.
1875-76க்கும் 1913-14க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் பருத்தி ஜவுளி ஆலைகள்
எண்ணிக்கை 47 லிருந்து 271 ஆக அதிகரித்தது.
இந்தியாவில் தொழில்துறையை நிறுவுவதில் ஒரு முக்கியமான மைல் கல் இந்தியாவின் இருப்புப்பாதை விரிவாக்கமும் புகைவண்டிப் போக்குவரத்து அதிகரித்ததுமேயாகும். முதல் பயணிகள் ரயில் 1853இல் பம்பாய்க்கும்
தானேவுக்குமிடையே இயங்கியது. இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய பொறியியல் தொழில் இரயில்வே ஆகும். பிரிட்டிஷாரால் நிர்வகித்து, ரயில்வே நிறுவனங்களால் நடத்தப்பட்ட இந்த நிறுவனத்தில் 1911இல் 98,723 நபர்கள் பணியில் இருந்தனர். இரயில்வே, இதரப் போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு வசதிகளின் வருகை பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு உதவியது.
இந்தியாவில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி
மற்றும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சணல் உற்பத்தி மற்றொரு தொழில் ஆகும்.
முதல் சணல் உற்பத்தி ஆலை கல்கத்தாவில் 1855இல் நிறுவப்பட்டது. சணல் தொழில் வளர்ச்சி
மிகவும் விரைவாக இருந்ததால் 1914ஆம் ஆண்டில் கல்கத்தா மாகாணத்தில் மட்டும் 64 ஆலைகள்
இருந்தன. இருப்பினும், பாம்பே துணி ஆலைகள் போலன்றி, இந்த ஆலைகள் ஐரோப்பியர்களுக்குச்
சொந்தமானவை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொழில்துறை
வளர்ச்சி முக்கியமாகப் பருத்தி, சணல் போன்ற பல துறைகளில் மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும்.
இதனை மடைமாற்றப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. உதாரணமாக, 1843இல் ரவீந்திரநாத் தாகூரின்
தாத்தா துவாரகநாத்தாகூர் (1794-1847) என்பவரால் ராய்கஞ்ச் என்ற இடத்தில் பெங்கால் நிலக்கரி
நிறுவனம் நிறுவப்பட்டது. 1892க்குப் பிறகு நிலக்கரி உற்பத்தித் துறையின் வளர்ச்சி வேகமெடுத்து
முதல் உலகப்போரின் போது உச்சத்தையெட்டியது.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்தியாவில்
தொழில்துறை மாற்றுப்பாதையில் விரிவுபடத் தொடங்கியது. 1907இல் பீகாரிலுள்ள சாகி நகரில்
டாடா குழுமத்தால் டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் (TISCO) - முதன்முதலில் சுதேசி
இயக்கத்தின் ஒரு நிகழ்வாக அமைக்கப்பட்டது. இதற்கு முன்னர், 1875இல் ஐரோப்பியர்கள் குழு
ஒன்று வங்காள இரும்பு நிறுவனத்தை நிறுவ முயற்சித்தது. இதைத் தொடர்ந்து 1889இல் வங்காள
இரும்பு மற்றும் எஃகு ஆலை அமைக்கப்பட்டது. இருப்பினும், இந்தத் துறையில் உள்ள மற்ற
முயற்சியாளர்களைவிட பாபா மிக உன்னத நிலையை அடைந்துள்ளது. அதன் உற்பத்தி 1912-13இல்
31,000 டன்னிலிருந்து 1917-18இல் 1,81,000 டன்னாக அதிகரித்துள்ளது.
முதல் உலகப் போர் நாட்டைத் தொழில் மயமாக்குவதற்கு
ஒரு இடைக்காலத் தடையாய் இருந்தது. முதல் முறையாக, பிரிட்டனின் கிழக்கு நோக்கிய திட்டமிடலுக்கு
ஜப்பான் சவாலாய் இருந்தது. பாரம்பரியமிக்க வர்த்தகப் பாதைகள் தாக்குதலுக்கு உள்ளாகலாமென்பதால்
தன் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தியாவில் தொழில்துறையின் வளர்ச்சி அவசியம். எனவே,
பிரிட்டன் தனதுக் கட்டுப்பாட்டிலிருந்த இந்திய முதலீட்டாளர்களுக்கு சில சலுகைகள் வழங்கியது
. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஒப்பீட்டுத் தளர்வுக் கட்டுப்பாடு மற்றும் போரினால் கிடைத்த
உள்நாட்டுச் சந்தை விரிவாக்கம், தொழில்மயமாக்கலை எளிதாக்கியது. முதல் முறையாக 1916இல்
ஒரு தொழிற்துறை ஆணையம் நியமிக்கப்பட்டது. போர் காலத்தில் பருத்தி மற்றும் சணல் தொழில்கள்
அதிக வளர்ச்சியைக் காட்டின. இக்காலத்தில் எஃகு தொழிற்துறையானது கணிசமான வளர்ச்சியைக்
கொண்ட மற்றொரு துறை ஆகும்.
ஜே.என். டாடா எனப் பிரபலமாய் அறியப்பட்ட ஜாம்ஷெட்ஜி நுஸர்வஞ்சி டாடா (1839 - 1904), பரோடாவில் உள்ள நவ்சாரி என்ற இடத்தில் ஒரு பார்சி (ஜொராஷ்ட்ரியன்) வணிகக் குடும்பத்திலிருந்து ஜே.என். டாடா வந்தவர். இந்தியாவின் முதல் வெற்றிகரமான தொழிலதிபர் இவர் என்பதால், இந்திய நவீனத் தொழிலகங்களின் தந்தை என அழைக்கப்படுகிறார். தனது தந்தையின் வியாபாரத்திற்கு உதவும் பொருட்டு, அவர் உலகம் முழுவதிலும் பயணம் மேற்கொண்டார். மேலும் அவருடைய அனுபவம் எதிர்கால முயற்சிகளுக்கு இது உதவியது. 1868இல் நிறுவப்பட்ட அவருடைய வர்த்தக நிறுவனம் டாடா குழுமம் என்றானது. ஒரு தேசியவாதியாய், குர்லா, பம்பாயில் உருவாக்கிய தனது நிறுவனம் ஒன்றிற்கு "சுதேசி" எனப் பெயரிட்டார். அவரது மகன்களான தோரப்ஜி டாடா மற்றும் ரத்தன்ஜி டாடா ஆகியோர் அவரது கனவுகளை நனவாக்கி வந்தனர். தோரப்ஜி டாடா அவரது தந்தையின் நீண்ட காலக் கனவான இரும்பு மற்றும் எஃகு நிறுவனத்தை 1907ஆம் ஆண்டில் நிறுவினார். இதற்காக அவர் இரண்டு ஆண்டுகள் அமெரிக்காவில் உள்ள அமெரிக்கன் இரும்புத் தொழிலகங்களில் உத்வேகத்துடன் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார். ஒரு நீர்மின்சக்தி நிறுவனத்தை அமைப்பதற்கான அவரது மற்றொரு கனவு அவரது வாழ்நாளுக்குள் நிறைவேறவில்லையெனினும் 1910இல் மிகப்பெருமளவில் டாடா நீர்மின்சக்தி நிறுவனம் உதயமானது. தொலைநோக்குப் பார்வையுடன் இந்திய அறிவியல் கழகம் ஒன்றை பெங்களூரில் டாடா குழுமம் நிறுவியுள்ளது.
மேலும் வளர்ச்சியடைந்த தொழில் நிறுவனங்கள்
காகிதம், வேதிப்பொருட்கள், சிமெண்ட், உரங்கள், தோல் பதனிடுதல், முதலியன. 1882ஆம் ஆண்டில்
லக்னோவில் முதல் காகித ஆலை இந்திய முதலாளிகளால் -கூப்பர் பேப்பர் மில் என்ற பெயரில்
அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஐரோப்பியர்களால் இதகர் காகித ஆலை மற்றும் பெங்கால்
காகித ஆலை நிறுவப்பட்டது. 1904இல் மதராஸ் நகரில் தென்னிந்திய தொழிற்சாலை நிறுவனம் சிமெண்ட்
உற்பத்தியைத் தொடங்கியது. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள்
தொடங்கப்பட்டன. 1860இல் கான்பூரில் அரசால் ஒரு தோல் பதனிடும் தொழிற்சாலை அமைக்கப்பட்டது.
1905இல் முதன் முதலாக இந்தியருக்குச் சொந்தமான தேசிய தோல் பதனிடும் தொழிற்சாலை ஒன்று
கல்கத்தாவில் அமைக்கப்பட்டது. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மைசூர் கோலார் தங்கச்
சுரங்கத்தில் தங்கம் வெட்டியெடுக்கும் பணி தொடங்கப்பட்டது.
போர்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதி உற்பத்தித்
தொழில்களின் வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. ஆச்சரியத்தக்கவகையில் பிரிட்டன் மற்றும்
உலக சராசரியை விடவும் இந்தியத் தொழில்களின் வளர்ச்சி சிறப்பாக இருந்தது. 1923-24இல்
ஒரு சிறிய தடுமாற்றத்திற்குப் பிறகு, நெசவுத் தொழில் சிறப்பாக செயல்படத் தொடங்கியது.
போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில், தறிகள் மற்றும் சுழல் அச்சுக்கள் எண்ணிக்கையில் கணிசமாய்
உயர்ந்தன.
1929-30களில் இந்தியாவால் 44 சதவீதம் வெளியில்
இருந்து நுகர்வு செய்யப்பட்ட பருத்திப் பொருட்கள் 1933-34இல் பெருமந்த நிலைக்குப் பின்னர்,
20.5 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. வளர்ச்சியைப் பதிவு செய்த ஏனைய இரண்டு தொழில்கள்
சர்க்கரை உற்பத்தியும் சிமெண்ட் உற்பத்தியும் ஆகும் போர்களுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில்
கப்பல் தொழிலும் வளர்ச்சியைக் கண்டது. சிந்தியா நீராவிக் கப்பல் கம்பெனி லிமிடெட்
(1919) ஏனையவற்றிற்கு முன்னோடியாக இருந்தது. 1939இல், அவர்கள் பிரிட்டிஷாரின் பம்பாய்
நீராவிக் கப்பல் நிறுவனத்தையும் வாங்கிவிட்டனர். இந்த துறையில் எட்டு இந்திய நிறுவனங்கள்
செயல்பட்டு வந்தன. இரண்டாம் உலகப் போருடன் ஒரு புதிய கட்ட உற்பத்தி துவங்கி, அது இயந்திர
உற்பத்தி, விமானப் போக்குவரத்து, ரயில் பெட்டி, ரயில் எஞ்சின் உற்பத்தி மற்றும் பலவற்றிற்கான
உற்பத்தித் தொழில்களாய் விரிவடைந்தது
சென்னை மாகாணத்தில் தொழில்துறை வளர்ச்சி கணிசமானதாக
இருந்தது. கோயம்புத்தூரில், 1896இல் ஸ்டேன்ஸ் மில் (கோயம்புத்தூர் நூற்பு மற்றும் நெசவு
ஆலை) நிறுவப்பட்ட பின் வேறு எந்த ஆலைகளும் வரவில்லை . பொருளாதாரப் பெருமந்தத்தால் ஏற்பட்ட
நிலத்தின் விலை வீழ்ச்சி, குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்கள், குறைந்த வட்டி விகிதத்தில்
கடன் போன்றவை கோயம்புத்தூரில் ஜவுளித்துறையின் விரிவாக்கத்திற்கு வழிவகுத்தன.
1929-37களில் கோயம்புத்தூரில் இருபத்து ஒன்பது ஆலைகள் மற்றும் விதை நீக்கும் தொழிற்சாலைகள்
தோன்றின. 1932இல் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மதுக்கரை என்ற இடத்தில் சிமெண்ட் தொழிற்சாலை
தொடங்கப்பட்டது. இது மாநிலத்திற்கே ஊக்கம் தருவதாயிருந்தது. 1931 - 1936க்கு இடையில்
மாகாணத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை இரண்டிலிருந்து பதினொன்றாய் உயர்ந்தது.
இதே காலத்தில் அரிசி ஆலைகள், எண்ணெய் ஆலைகள் மற்றும் சினிமா நிறுவனங்களின் பெருக்கமும்
அதிகரித்தது.