ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம் - வரலாறு - கான்பூர் சதிவழக்கு, 1924 | 12th History : Chapter 5 : Period of Radicalism in Anti-imperialist Struggles
கான்பூர் சதிவழக்கு, 1924
கம்யூனிஸ்ட் கொள்கைகள் பரவுவதைக் காலனிய ஆட்சியாளர்களால்
மிகச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. பம்பாய், கல்கத்தா, மதராஸ் ஆகிய பிரிட்டானியர்
பிரதேசங்களிலும் ஒன்றுபட்ட பிரதேசத்தில் கான்பூர் போன்ற தொழில் மையங்களிலும் பல காலத்திற்கு
முன்பே தொழிற்சாலைகள் வந்துவிட்ட லாகூர் போன்ற நகரங்களிலும் புரட்சிகர தேசியவாதம் பரவியது.
அதன் விளைவாக சணல், பருத்தி ஆடைத் தொழிற்சாலைகளிலும் நாடெங்கிலுமுள்ள ரயில்வே நிறுவனங்களிலும்
பல்வேறு நகராட்சிப் பணியாளர்கள் மத்தியிலும் தொழிற்சங்கங்கள் உருவெடுத்தன. குறிப்பாக
அப்போது போல்ஷ்விசம் என்று அழைக்கப்பட்ட அரசியல் புரட்சிகர தேசியவாதத்தை நசுக்கும்
பொருட்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. 1924ஆம் ஆண்டின்
கான்பூர் சதி வழக்கு அத்தகையதொரு நடவடிக்கையே ஆகும். அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்
கம்யூனிஸ்ட்களும் தொழிற்சங்கவாதிகளும் ஆவர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆறுமாத கால அளவில்
கைது செய்யப்பட்டனர். இந்திய தண்டனைச் சட்டம் 121 ஏ பிரிவின் கீழ் அவர்களுள் எட்டு
பேர் "வன்முறையான புரட்சி ஒன்றின் மூலம் ஏகபோக பிரிட்டனிடமிருந்து இந்தியாவை முற்றிலும்
பிரித்து பிரிட்டானிய இந்தியாவின் பேரரசரின் இறையாண்மைக்குக் குந்தகம் விளைவிப்பதாகக்"
குற்றம் சாட்டப்பட்டுப் பல்வேறு சிறைகளுக்கு அனுப்பப்பட்டனர். இந்த வழக்கு மாட்சிமை
பொருந்திய அமர்வு நீதிபதி H.E. ஹோம்ஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இவர் கோரக்பூர்
அமர்வு நீதிபதியாகப் பணியாற்றிய போது சௌரிசௌரா வழக்கில் தொடர்பு கொண்டவர்களாகக் குற்றம்
சாட்டப்பட்ட 172 விவசாயிகளுக்கு மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்துப் பிரசித்தி பெற்றவர்.
கான்பூர் சதி வழக்கில் ஆரம்பத்தில்
13 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது: 1) எம்.என்.ராய் 2) முசாபர் அகமது 3) சவுகத்
உஸ்மானி 4) குலாம் ஹுசைன் 5) எஸ்.ஏ. டாங்கே 6) எம். சிங்காரவேலர் 7) ஆர்.எல்.சர்மா
8) நளினி குப்தா 9) ஷமுத்தின் ஹாசன் 10) எம். ஆர். எஸ். வேலாயுதன் 11) டாக்டர் மணிலால்
12) சம்பூர்ண நந்தா 13) சத்ய பக்தா. 8 பேர் மீதே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது
: எம். என். ராய், முசாபர் அகமது, எஸ்.ஏ.டாங்கே, நளினி குப்தா, குலாம் ஹுசைன், சிங்காரவேலர்,
சவுகத் உஸ்மானி, ஆர். எல். சர்மா. குலாம் ஹுசைன் அரசுத் தரப்புச் சாட்சியாக (அப்ரூவர்)
மாறிவிட்டதால் அவர் விடுவிக்கப்பட்டார். எம். என். ராய், ஆர். எல். சர்மா ஆகியோர் முறையே
- ஜெர்மனியிலும் பாண்டிச்சேரியிலும் (ஒரு பிரெஞ்சுப் பிரதேசம்) இருந்ததால் நேரில் வரவழைக்காமல்
குற்றப்பத்திரிகைகள் அனுப்பிவைக்கப்பட்டன. சிங்காரவேலர் மோசமான உடல்நிலை காரணமாகப்
பிணையில் விடுவிக்கப்பட்டார் கடைசியாக, அந்தப் பட்டியலில் நால்வர் மட்டுமே எஞ்சியிருந்தனர்.
கான்பூர் சதி வழக்கில் முசாபர் அகமது, சவுகத்
உஸ்மானி , நளினி குப்தா, எஸ். ஏ. டாங்கே ஆகியோர் நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை
அனுபவிப்பதற்காகச் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இதற்கிடையில், இந்த விசாரணையும் சிறைத்
தண்டனையும் இந்தியாவில் கம்யூனிஸ்ட்களின் நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஓரளவுக்கு
ஊட்டியது. ஆங்கிலேயர் ஆண்ட இந்தியாவில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்களை
அமர்த்தவும் நிதி திரட்டவும் கம்யூனிஸ்ட்களின் பாதுகாப்புக் குழு ஒன்று உருவாக்கப்பட்டது.
இவற்றுக்கு அப்பால், இந்தியாவின் மாநில மொழிப் பத்திரிகைகள் நீதிமன்ற நடவடிக்கைகளை
மிக விரிவான முறையில் வெளியிட்டன. சதி வழக்கின் விசாரணையும் சில தலைவர்கள் கைது செய்யப்பட்டதும்
புரட்சிகர தேசியவாதத்தின் உணர்வை மழுங்கடிப்பதற்குப் பதிலாகப் கம்யூனிஸ்ட்களின் நடவடிக்கைகளுக்கு
உத்வேகத்தையே ஊட்டியது. டிசம்பர் 1925இல் இந்தியாவெங்கிலும் இருந்து வந்திருந்த பல்வேறு
கம்யூனிஸ்ட்களின் குழுக்களின் மாநாடு ஒன்று நடந்தேறியது. இந்த மாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்து
சிங்காரவேலர் சென்று கலந்துகொண்டார். அங்கிருந்துதான் பம்பாயைத் தலைமையிடமாகக் கொண்டு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முறைப்படி நிறுவப்பட்டது.
எம். சிங்காரவேலர் (18 பிப்ரவரி 1860 - 11 பிப்ரவரி 1946) மதராசில் பிறந்தார். இவர் இளமைக் - காலத்தில் புத்தமதத்தைத் தழுவியவர். பிற கம்யூனிஸ்ட் இயக்கத் எம். சிங்காரவேலர் தலைவர்கள் பலரைப் போன்று இவரும் ஆரம்பத்தில் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து செயல்பட்டவர். எனினும், சில காலத்திற்குப் பிறகு அவர் புரட்சிகர தேசியவாதப் பாதையைத் தேர்ந்தெடுத்தார். திரு .வி. கல்யாணசுந்தரத்துடன் இணைந்து தென்னிந்தியாவில் பல தொழிற்சங்கங்களை இவர் தோற்றுவித்தார். 1923ஆம் ஆண்டு மே மாதம் முதல் நாள் முதன்முறையாக நாட்டில் மே தினத்தைக் கொண்டாடினார். 1928ஆம் ஆண்டு தென்னிந்திய ரயில்வே வேலைநிறுத்தத்தை (பொன்மலை, திருச்சிராப்பள்ளி) ஏற்பாடு செய்ததில் இவர் முக்கியப் பங்கு வகித்தார். அதற்காகத் தண்டனை பெற்றார்.