Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | மீரட் சதி வழக்கு, 1929

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம் - வரலாறு - மீரட் சதி வழக்கு, 1929 | 12th History : Chapter 5 : Period of Radicalism in Anti-imperialist Struggles

   Posted On :  12.07.2022 04:53 pm

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 5 : ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம்

மீரட் சதி வழக்கு, 1929

1929ஆம் ஆண்டின் மீரட் சதி வழக்குதான் அனேகமாக, ஆங்கிலேய அரசினரால் தொடுக்கப்பட்ட அனைத்துக் கம்யூனிஸ்ட் சதி வழக்குகளிலும் பெரிதும் புகழ்பெற்றதாகும்.

மீரட் சதி வழக்கு, 1929

கம்யூனிஸ்ட்களின் செயல்பாடுகள்

1929ஆம் ஆண்டின் மீரட் சதி வழக்குதான் அனேகமாக, ஆங்கிலேய அரசினரால் தொடுக்கப்பட்ட அனைத்துக் கம்யூனிஸ்ட் சதி வழக்குகளிலும் பெரிதும் புகழ்பெற்றதாகும். 1920களின் பிற்பகுதி ஏராளமான தொழிலாளர் எழுச்சிகளைக் கண்டது. இந்த நிலையின்மைக் காலம் மாபெரும் பொருளாதார மந்த நிலையின் சகாப்தம் (1929 - 1939) வரை நீண்டது. தொழிற்சங்க நடவடிக்கைகள் பற்பல நகர்ப்புறங்களுக்குப் பரவி, தொழிலாளர் வேலைநிறுத்தங்களை ஏற்படுத்தியது. இந்தக் காலக்கட்டம் முழுவதிலும் உழைப்பாளி வர்க்கத்தை ஒருங்கிணைப்பதில் கம்யூனிஸ்டுகள் முக்கியப் பாத்திரத்தை வகித்தனர். 1927ஆம் ஆண்டு பிப்ரவரியிலும் செப்டம்பரிலும் நடைபெற்ற காரக்பூர் ரயில்வே பணிமனை வேலைநிறுத்தங்கள், 1928ஆம் ஆண்டு ஜனவரி, ஜூலை மாதங்களுக்கிடையில் நடைபெற்ற லில்லுவா ரயில் பணிமனை வேலைநிறுத்தம், 1928ஆம் ஆண்டின் கல்கத்தா துப்புரவுத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், 1929ஆம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வங்காளத்தின் சணல் ஆலைகளில் நடைபெற்ற பல்வேறு வேலைநிறுத்தங்கள், 1928ஆம் ஆண்டு ஜூலையில் திருச்சிராப்பள்ளியின் பொன்மலை பணிமனையில் நடைபெற்ற தென்னிந்திய ரயில்வே வேலைநிறுத்தம், 1928 ஏப்ரலில் பம்பாயில் நடந்தேறிய ஜவுளித் தொழிலாளர் வேலைநிறுத்தம் ஆகியன குறிப்பிட்டுச் சொல்லத்தக்கச் சில வேலைநிறுத்தங்கள் ஆகும்.

அரசு ஒடுக்குமுறை

இந்த வேலைநிறுத்தங்களின் அலையாலும் கம்யூனிஸ்ட் செயல்பாடுகள் பரவுவதாலும் கவலை அடைந்த ஆங்கிலேய அரசு 1928ஆம் ஆண்டின் தொழிற்தகராறுகள் சட்டம், 1928ஆம் ஆண்டின் பொதுமக்கள் பாதுகாப்பு மசோதா ஆகிய இரு கொடுஞ் சட்டங்களை இயற்றியது. இவ்விரு சட்டங்களும் பொதுவாகப்பொதுமக்கள் உரிமைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் -குறிப்பாக தொழிற்சங்க நடவடிக்கைகளை அடக்குவதற்கும் உரிய அதிகாரங்களை அரசுக்கு அளிப்பதாக விளங்கியது. தொழிலாளர்கள், விவசாயிகள் மத்தியில் வலுவான கம்யூனிஸ்ட் செல்வாக்கு நிலவுவது கண்டு அரசு கவலை கொண்டது.

புரட்சிகர தேசியவாத இயக்கத்தை துடைத்தெறியத் தீர்மானித்த அரசு பல்வேறு ஒடுக்குமுறை நடவடிக்கைகளில் இறங்கியது. அவர்கள் பம்பாய், கல்கத்தா, பஞ்சாப், பூனா, ஒருங்கிணைந்த பிரதேசங்கள் போன்ற பிரிட்டிஷ் இந்தியாவின் பகுதிகளிருந்து கம்யூனிஸ்ட் கட்சியின் 32 முன்னோடிச் செயல்பாட்டாளர்களைக் கைது செய்தது. அவர்கள் அனைவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் அல்லர் எனினும் அவர்களில் பெரும்பாலானோர் தொழிற்சங்கச் செயல்பாட்டாளர்கள் ஆவார்கள். அவர்களில் குறைந்த பட்சம் 8 பேர் இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்தவர்கள். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டியமைக்க உதவுவதற்கென பிரிட்டானிய கம்யூனிஸ்ட் கட்சியால் அனுப்பிவைக்கப்பட்ட பிலிப் ஸ்ப்ராட், பான் ப்ராட்லி, லெஸ்டர் ஹட்சின்சன் ஆகிய பிரிட்டானிய கம்யூனிஸ்டுகள் மூவரும் கைது செய்யப்பட்டனர். கான்பூர் சதி வழக்கில் கைது செய்யப்பட்டவர்களைப் போன்று இவர்களும் இந்திய தண்டனைச் சட்டம் 121 ஏ பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டனர். கைது செய்யப்பட்ட 32 தலைவர்களும் மீரட்டுக்கும் (அப்போது ஒருங்கிணைந்த பிரதேசத்தில் இருந்தது) கொண்டுவரப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். காலனிய நிர்வாகத்தினரால் நிலைகுலைவிக்கும் 0102wmlshit (subversive materials) TOOTMI விவரிக்கப்பட்ட புத்தகங்கள், கடிதங்கள், போன்ற கணிசமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான சாட்சியங்களாக ஒப்படைக்கப்பட்டன.

விசாரணையை மீரட் நகரில் நடத்துவதென்று பிரிட்டானிய அரசு தீர்மானித்தது. (எடுத்துக்காட்டாக, குற்றம் சாட்டப்பட்டவர்களில் அதிகமானவர்கள் பிடிபட்ட பம்பாய் போன்ற இடங்களில் அல்லாமல்). எனவே அவர்கள் நடுவர் விசாரணை என்ற சலுகையைப் பெற முடிந்தது. நடுவர் விசாரணைகுற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அனுதாபத்தை உருவாக்கக் கூடும் என்று அவர்கள் அஞ்சினர்.

விசாரணையும் தண்டனையும்

இதற்கிடையில், இந்த வழக்கில் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக ஒரு தேசிய மீரட் சிறைவாசிகளின் பாதுகாப்புக் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. கே.எஃப். நாரிமன், எம்.சி. சக்லா போன்ற புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வாதாடினர். காந்தியடிகள், ஜவகர்லால் நேரு போன்ற தேசியத் தலைவர்கள் கூடச் சிறைக்குச் சென்று குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பார்த்துவிட்டு வந்தனர். நமது சுதந்திரப் போராட்ட வரலாற்றில் இந்த வழக்கின் முக்கியத்துவத்தை இவையனைத்தும் காட்டுகின்றன.

 

1929இல் நடைபெற்ற கைது நடவடிக்கைகளுக்கு நான்கு ஆண்டுகளுக்குப் பின்ன ர் 1933 ஜனவரி 16இல் மீரட் அமர்வு நீதிமன்றம் கடுமையான தீர்ப்பை வழங்கியது. 27 பேர் தண்டிக்கப்பட்டு வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். விசாரணையின் போது, கம்யூனிஸ்டுகள் அரசியல் சித்தாந்தங்களை உருவாக்கியதன் மூலம் தங்கள் தரப்பைத் தங்களுக்கான பிரச்சார மேடையாகப் பயன்படுத்திக் கொண்டனர். அவை செய்தித்தாள்களில் பரவலாக வெளியாகி அதன்வழியாக லட்சக்கணக்கான மக்கள் கம்யூனிசச் சித்தாந்தம் குறித்தும் இந்தியாவில் கம்யூனிஸ்டுகளின் செயல்பாடுகள் குறித்தும் அறிந்துகொண்டனர். தீர்ப்புக்கு எதிராகக் கிளர்ச்சிகள் வெடித்தன. இங்கிலாந்து நாட்டினர் மூவர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு சர்வதேச அளவிலும் தெரியவந்தது. மிகவும் முக்கியமாக ரோமன் ரோலண்ட், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்றவர்களும் கூடக் குற்றம் சாட்டவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.

தேசிய, சர்வதேச அழுத்தங்களின் காரணமாக, அவர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து ஜூலை 1933இல் தண்டனை வெகுவாகக் குறைக்கப்பட்டது.

Tags : Period of Radicalism in Anti-imperialist Struggles | History ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம் - வரலாறு.
12th History : Chapter 5 : Period of Radicalism in Anti-imperialist Struggles : Meerut Conspiracy Case, 1929 Period of Radicalism in Anti-imperialist Struggles | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 5 : ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம் : மீரட் சதி வழக்கு, 1929 - ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம் - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 5 : ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம்