ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம் - வரலாறு - இந்திய தேசிய காங்கிரசின் கராச்சி அமர்வு, 1931 | 12th History : Chapter 5 : Period of Radicalism in Anti-imperialist Struggles
இந்திய தேசிய காங்கிரசின் கராச்சி அமர்வு,
1931
இந்திய தேசிய காங்கிரஸ், புரட்சியாளர்களின்
வன்முறைச் செயல்களுக்கு மாறாக, வன்முறையற்ற போராட்டங்களுக்கு மக்களை அணிதிரட்டியது.
காந்தியடிகளின் தலைமையின் கீழ் காங்கிரஸ் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை
அளித்தது. உலக அளவிலான பொருளாதார பெருமந்தநிலையால் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டு
விவசாயிகளும் சொல்லொணாத் துயரத்தில் இருந்ததால் காங்கிரஸ் விவசாயிகளை அணிதிரட்டியது.
தனது சட்டமறுப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக காங்கிரஸ் குத்தகை செலுத்தா மற்றும் வரிசெலுத்தாப்
போராட்டத்தைக் கடைபிடித்தது. பெருமந்த அழுத்தத்தினால் ஏற்பட்ட சமூக-பொருளாதாரத் தேவைகள்
கராச்சியின் காங்கிரஸ் அமர்வில் தீவிரமாய் பேசப்பட்டது.
விடுதலைப் போராட்டம் ஒரு புதிய வடிவம் பெற்றது.
விவசாயிகள் கிசான் சபா எனப்படும் விவசாயிகள் சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டும்
தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இணைந்துகொண்டும் தங்களது பெரிய அளவிலான ஈடுபாட்டைச்
சுதந்திரப் போராட்டக்களத்தில் உணர்த்தினர். 1930 களில் இந்திய தேசிய காங்கிரஸ் ஒரு
பெரும் மக்கள் கட்சியாக உருவெடுத்தது. நேருவின் தலைமையின் கீழ் வந்த காங்கிரஸ் சமூக
மற்றும் பொருளாதார நீதி அடிப்படையில் ஒரு சமத்துவ சமூகத்தைப் பற்றிப் பேச் ஆரம்பித்தது
. மார்ச் 1931இல் நடந்த கராச்சி அமர்வு சர்தார் வல்லபாய் படேல் தலைமையில் அடிப்படை
உரிமைகள் மற்றும் கடமைகளில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியதோடல்லாமல் சுதந்திர இந்தியாவின்
பொருளாதார கொள்கை பற்றிய ஒரு பார்வையை வழங்கியது. பின் இதுவே சுதந்திர இந்தியாவிற்கான
இந்திய தேசிய காங்கிரசின் கொள்கை அறிவிப்பு விளக்கமானது. இந்த உரிமைகளும் சமூக மற்றும்
பொருளாதாரத் திட்டங்களும் உறுதி செய்வது யாதெனில் அரசியல் சுதந்திரம் மற்றும் பொருளாதாரச்
சுதந்திரம் என்பது பிரித்துப் பார்க்கமுடியாத ஒன்றாகும்.
அடிப்படை உரிமைகள் தீர்மானத்தை மேலோட்டமாய்
பார்த்தால்கூட பிரிட்டிஷாரால் நமது அடிப்படை உரிமைகள் எப்படியெல்லாம் மறுக்கப்பட்டுள்ளது
என்பதை அப்பட்டமாய்த் தெரிந்து கொள்ளமுடியும். அதனாலேயே அடிப்படை உரிமைகள் தீர்மானத்தில்
முக்கிய இடம் பிடித்துள்ளன. கொடூரமான சட்டங்கள் போட்டும், அடக்குமுறைகளைக் கையாண்டும்
மக்களின் சுதந்திரத்தைக் காலனியரசு நசுக்கியது. சுதந்திர இந்தியாவில் இந்திய தேசிய
காங்கிரஸ் தான் வழங்க உறுதியளித்துள்ள உரிமைகள் பட்டியலில் காந்தியடிகளின் கொள்கைகளும்
நேருவின் சோசலிச் பார்வைகளும் இடம் பெற்றன. தற்போதைய சமூக உறவுகள், குறிப்பாகச் சாதி
அமைப்பு மற்றும் தீண்டாமை நடைமுறை ஆகியவை பொது இடங்களிலும் நிறுவனங்களிலும் சமமான அணுகுமுறையை
உறுதி செய்ய சவாலாய் இருந்தன.
அடிப்படை உரிமைகள், உண்மையில் இந்திய அரசமைப்பின்
பகுதி IIல் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் சில, பகுதி Vல் நாட்டின் அரசு வழிகாட்டு நெறிமுறைகளில்
இடம்பெற்றுள்ளன. இந்திய அரசமைப்பின் மீதான விவாதத்தை இரண்டாம் தொகுதியில் அலகு 13இல்
நீங்கள் மேலும் படிக்கலாம்.