வரலாறு - ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம் | 12th History : Chapter 5 : Period of Radicalism in Anti-imperialist Struggles
கற்றலின் நோக்கங்கள்
கீழே குறிப்பிடப்பட்டவைகளோடு அறிமுகமாதல்
• கான்பூர் சதி வழக்கு
• மீரட் வழக்கு விசாரணை
• பகத் சிங் - கல்பனா தத்
• இந்திய தேசிய காங்கிரசின் கராச்சி கூட்டத்தொடர்
• மாபெரும் பொருளாதார மந்தநிலையும் இந்தியாவில் அதன் தாக்கமும்
• இந்தியாவில் தொழில் மேம்பாடு
அறிமுகம்
இந்திய தேசிய காங்கிரசில் இடதுசாரிகளின் செல்வாக்கும்
படிப்படியாகச் சுதந்திரப்போராட்டத்தில் அது ஏற்படுத்திய தாக்கமும் 1920 களின் பிற்பகுதியில்
கணிசமான அளவில் உணரப்பட்டது. இந்தியப் பொதுவுடைமைக் (கம்யூனிஸ்ட் கட்சியானது எம்.என்.
ராய், அபானி முகர்ஜி, எம்.பி.டி. ஆச்சார்யா, முகமது அலி, முகமது ஷாஃபிக் ஆகியோரால்
உஸ்பெகிஸ்தானிலுள்ள தாஷ்கண்டிலும் பின்னர் சோவியத் யூனியனிலும் 1920ஆம் ஆண்டு அக்டோபர்
மாதத்தில் உருவாக்கப்பட்டது. அது இந்தியாவில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில்
ஒரு புதிய புரட்சிகர தேசியவாத சகாப்தம் தோன்ற வழிவகுத்தது.
ஏற்கெனவே இந்தியாவில் பல புரட்சிகர தேசியவாதக்
குழுக்கள் செயல்பட்டு வந்தன. முன்னதாக சோவியத் ரஷ்யாவின் வடிவில் ஒரு கம்யூனிஸ்ட் அரசு
அமைந்தது இந்தியாவில் ஆங்கிலேயருக்குப் பெரிதும் அச்சமூட்டியது. 1921 ஜூன் 3இல் முதல்
புரட்சிகர தேசியவாதக் குழுவினர் பெஷாவருக்கு வந்தனர். கலகம் விளைவிப்பதற்காக இந்தியாவுக்கு
ரஷ்ய கம்யூனிஸ்ட் இயக்கத்தினரான போல்ஷ்விக்குகள் வந்துள்ளனர் என்று குற்றம் சாட்டி,
அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். 1922-1927ஆம் ஆண்டுகளுக்கு இடையில் அவர்கள்
மீது தொடர்ச்சியாக ஐந்து சதி வழக்குகள் தொடுக்கப்பட்டன. அவற்றுள் முதலாவது பெஷாவர்
சதி வழக்கு ஆகும். இதனைத் தொடர்ந்து கான்பூர் (போல்ஷ்விக்) சதி வழக்கு 1924ஆம் ஆண்டிலும்
மிகவும் பிரசித்தி பெற்ற மீரட் சதி வழக்கு 1929ஆம் ஆண்டிலும் தொடுக்கப்பட்டன. இதற்கிடையில்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய மண்ணில் 1925இல் பம்பாயில் முறைப்படி தொடங்கப்பட்டது.
ஆங்கிலேயர் ஆண்டுவந்த இந்தியாவில் அப்போது
சோசலிச லட்சியங்களை ஏற்றுக்கொண்ட பல்வேறு தேசபக்த புரட்சிகரக் குழுக்கள் செயல்பட்டுவந்தன.
ஆனால் அவை கம்யூனிஸ்ட் கட்சிகள் அல்ல. இந்துஸ்தான் புரட்சிகர சோசலிசக் கூட்டமைப்பைச்
சார்ந்த பகத்சிங் வங்காளத்தில் சிட்டகாங் படைத்தளத்தில் தொடர்ச்சியான தாக்குதலை ஏற்பாடு
செய்த இந்திய குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த கல்பனா தத் ஆகிய இரண்டு புரட்சியாளர்கள்
அடுத்த பகுதியில் கவனம் பெற உள்ளனர். இந்திய தேசிய காங்கிரசின் கராச்சி கூட்டத்தொடரும்
அதில் நிறைவேற்றப்பட்ட புகழ் வாய்ந்த தீர்மானங்களும் - குறிப்பாக அடிப்படை உரிமைகளும்
கடமைகளும் ஆகியனவற்றை அடுத்து நாம் பார்க்கவுள்ளோம். கடைசி இரண்டு தலைப்புக்களும் உலகம்
முழுவதும் நிலவிய மாபெரும் மந்தநிலை என்று பரவலாக அறியப்பட்ட பொருளாதார மந்தநிலை குறித்தும்
இந்தியாவிலும் தமிழ்ச் சமூகத்திலும் அது விளைவித்த தாக்கமும் இந்தியாவில் பதிவான தொழில்
மேம்பாடும் அதன் விளைவுகளும் குறித்தவை ஆகும். மாபெரும் மந்த நிலையானது உழைக்கும் தொழிலாளர்கள்,
விவசாயிகளுக்கு ஒரு கடுமையான அடியைக் கொடுத்ததைத் தொடர்ந்து இந்தியச் சுதந்திரத்தின்
மீது ஒரு குறிப்பிடத்தக்க வகையில் செல்வாக்கும் செலுத்தியது.