Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | பிற்கால வேதப் பண்பாடு

வரலாறு - பிற்கால வேதப் பண்பாடு | 11th History : Chapter 2 : Early India: The Chalcolithic, Megalithic, Iron Age and Vedic Cultures

   Posted On :  14.05.2022 05:53 am

11 வது வகுப்பு : அலகு 2 : பண்டைய இந்தியா : செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

பிற்கால வேதப் பண்பாடு

பிற்கால வேதப்பண்பாட்டின் காலம் பொ.ஆ.மு. 1000 முதல் பொ.ஆ.மு. 700-600 வரை ஆகும்.

பிற்கால வேதப் பண்பாடு

பிற்கால வேதப்பண்பாட்டின் காலம் பொ..மு. 1000 முதல் பொ..மு. 700-600 வரை ஆகும். இரும்புக் காலத்தைச் சேர்ந்த வண்ணம் தீட்டிய சாம்பல் நிற மட்பாண்டப் பண்பாடு பிற்கால வேதப் பண்பாட்டோடு தொடர்புடையதாகும். இதனை அகழ்வாய்வு நடைபெற்ற இடங்களில் கிடைத்த சான்றுகளைக் கொண்டு தொல்லியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். இக்காலம் அரசியல், சமூகம், பொருளாதாரம் ஆகிய துறைகளின் கலப்பினையும் வளர்ச்சியினையும் எதிர் கொண்டது.

பிற்கால வேத நூல்கள்

பிற்கால வேத நூல்கள் ரிக்வேத சம்ஹிதைகளுக்குப்பின்னர் இயற்றப்பட்டனவாகும். ரிக் வேதத்திற்குப் பின்னரே யஜூர், சாம, அதர்வ வேதங்கள் இயற்றப்பட்டன.

ஆரியர்களின் கிழக்கு நோக்கிய பரவல்

பின் வேதகாலத்தில், ஆரியர்கள் பஞ்சாபிலிருந்து மேற்கு உத்திரப்பிரதேசத்தின் கங்கை - யமுனை சமவெளியை நோக்கித் தமது வாழ்விடங்களை விரிவுபடுத்தினர். பண்டைய இந்தியாவின் வரலாறு, பண்பாடுகளின் பரவல்களாலும் பரிமாற்றங்களாலும், பல குழுவினர்க்கிடையே, நிலப்பகுதிகளுக்காகவும் செல்வ ஆதாரங்களுக்காகவும் நடைபெற்ற போர்களாலும் சுட்டப்படுகின்றன. ஆரியர்கள் கங்கை நதியின் கிழக்குப் பகுதிகளுக்குக் குடிபெயர்ந்த நிலையில், இந்தோ - ஈரானியர்கள் ஈரானிலிருந்து குடிபெயர்ந்து பஞ்சாபில் குடியேறினர். சிந்து கங்கை நதிகளுக்கு இடைப்பட்ட மேலை கங்கைச் சமவெளியே குரு மற்றும் பாஞ்சாலர்களின் பகுதிகளாக இருந்ததெனப் பிற்கால வேத நூல்கள் கூறுகின்றன. ரிக்வேதத்தில் ஆரியர்களின் தெற்கு எல்லை எனக் குறிக்கப்படும் பகுதிகள் அய்த்ரேய பிராமணத்தில் (சம்ஹிதைகள் பற்றிய விளக்கங்கள்) பட்டியலிடப்பட்டு ஆரியர்களின் மத்தியப் பகுதி எனக் கூறப்பட்டுள்ளது. இது பின் வேதகாலத்தில் ஆரியர்கள் கங்கைச் சமவெளியில் குடியேறியதை உறுதி செய்கின்றது. ஆரிய மக்கள் தொகைப் பெருக்கம் புதிய, அதிகம் ஆக்கிரமிக்கப்படாத பகுதிகளைக் கைப்பற்றும் நோக்கம், நீர் மற்றும் நிலங்களுக்கான தேவை ஆகியவற்றால் இந்த இடப் பெயர்வு தூண்டப்பட்டிருக்கலாம்.

குரு, பாஞ்சாலர், வாஸ்கர்கள், உசிநரர்கள் ஆகியோர் இக்காலத்தைச் சேர்ந்த இனக்குழுக்கள் ஆவர். பிற்கால வேத நூல்களில் சரஸ்வதி, திரிஸ்தவதி ஆகிய நதிகளின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. பொ..மு. 1000 வாக்கில் வேதகால ஆரியர்கள் கிழக்கு உத்திரப்பிரதேசத்திலுள்ள கோசலம், வடக்கு பீகாரில் உள்ள விதேஹா ஆகிய பகுதிகளை நோக்கி நகர்ந்தனர். அப்பகுதிகளில் இந்த ஆரியர்கள் செம்புக்காலப் பண்பாட்டைப் பின்பற்றி வரும் அப்பகுதி வாழ்மக்களை எதிர்கொள்ள நேர்ந்தது. மேல் கங்கைச் சமவெளியில் தான் வேதங்கள் முண்டா மொழி சொற்களைப் பெற்றன. கங்கைச் சமவெளிப் பகுதிகளில் முண்டா மொழியின மக்கள் வாழ்ந்ததை இது உணர்த்துகின்றது. இக்காலத்தில் கோசலமும் விதேஹமும் ஆரியர்களின் கிழக்கு எல்லைப் பகுதிகளாக இருந்தன. வேத காலத்தின் இறுதியில் கோசலமும் விதேஹமும் ஆரிய மயமாயின. அவற்றுக்கும் அப்பால் கிழக்கேயிருந்த பகுதிகள் அந்நிய தேசங்களாகவே கருதப்பட்டன. அதர்வ வேதத்தில் அங்க, மகத (பிகார்) நாடுகளைச் சேர்ந்த மக்கள் எதிரிகளாகவே பார்க்கப்பட்டனர். இதைப் போலவே அய்த்ரேய பிராமணத்தில் வங்காளத்தைச் சேர்ந்த புந்த்ராக்களும் ஆந்திரர்களும் ஆரிய அடையாளங்களுக்கு அப்பாற்பட்டவர்களாகவே கருதப்பட்டுள்ளனர். இப்பகுதிகள் ஆரியப் பண்பாட்டின் செல்வாக்கிற்கு உள்ளாகவில்லை என்பதை இதன்மூலம் அறியலாம். ஆரிய மயமாதல் என்பது வடமேற்கிலிருந்து படிப்படியாகத் தென்கிழக்கு நோக்கி முக்கியமாக கங்கை சமவெளியில் பரவியது என்பது புலப்படுகிறது.

பிற்கால வேதப்பண்பாடும் இரும்பும்

இக்காலத்தில் கருவிகள் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட மற்றொரு முக்கிய உலோகம் இரும்பாகும். இது 'சியாமாஅயஸ்அல்லது 'கிருஷ் அயஸ்என்றழைக்கப்பட்டது. கருப்பு உலோகம் என்பது இதன் பொருள். கங்கைச் சமவெளிப் பகுதிகளிலிருந்த காடுகள் அழிக்கப்பட்டு வேளாண் நிலங்களாக மாற்றப்பட்டதில் இரும்பு முக்கியப் பங்கு வகித்தது. வேதகாலத்தின் இறுதியில் இரும்பைப் பற்றிய அறிவு கிழக்கு உத்திரபிரதேசத்திலும் விதேகத்திலும் பரவியது. இரும்பானது பொ..மு. 700 வாக்கில் அறிமுகமானதாகக் கருதப்படுகிறது. ஆனால், அண்மைக்கால ஆய்வுகள் பொ..மு. 1200 வாக்கிலேயே இரும்பு அறிமுகமாயிற்று என்று கூறுகின்றன. தொடக்ககால ஆய்வுகள் கங்கைப் பகுதியின் காடுகள் திருத்தப்பட்டதில் இரும்பின் பங்கிற்கு அதிக அழுத்தம் கொடுத்தன. ஆனால் தற்போதைய ஆய்வுகள் அது மட்டுமே காரணமாக இருக்க முடியாது; வேறு காரணங்களும் உண்டென வாதிடுகின்றன.

குடியேற்றங்களும் நிலப்பகுதிகளும்

வேளாண்மை தீவிரமடைந்த பின்னர் பின் வேதகால மக்கள் ஓரிடத்தில் நிலையாகக் குடியேறி வாழத் துவங்கிய போது எல்லைகள் வரையறை செய்யப்பட்ட நிலப்பகுதிகள் உருவாயின. ஜனபதம் என்னும்நிலத்தைக் குறிக்கும்சொல் பொ..மு. 800ஐச் சேர்ந்த பிராமணத்தில் காணப்படுகிறது. வட இந்தியப்குதியில் சுமார் 1000 இடங்களில் ஓவியம் தீட்டிய சாம்பல் நிற பாண்டப் பண்பாட்டுச் சின்னங்கள் கிடைக்கின்றன. இது மேலை கங்கைச் சமவெளியில் புதிய குடியேற்றங்கள் உருவாகி மக்கள் தொகைப் பெருக்கம் ஏற்பட்டதை மெய்ப்பிக்கிறது. மக்கள் சுடாத களிமண் கற்களால் கட்டிய வீடுகளிலோ அல்லது மரத்தட்டிகளையும் களிமண் சாந்தையும் கொண்டு கட்டிய வீடுகளிலோ வாழ்ந்தனர். வேதகாலத்தின் பிற்பகுதியில்தான் நகரங்கள் உருவாகி இருக்க வேண்டும். பின் வேதகாலம் தீவிரப் பண்பாட்டு ஊடாட்டங்கள் நடைபெற்ற காலமாகும். பிற்கால வேத நூல்களில்நகரஎன்ற சொல் இடம் பெறுகிறது. அது வணிகர்கள் தங்கியிருந்த இடங்களைக் குறிப்பனவாகவே உள்ளன. இருந்தபோதிலும் வேதகாலத்தின் இறுதிப் பகுதியில்தான் பெரிய நகரங்கள் உருவாயின. ஹஸ்தினாபுரம், கோசாம்பி ஆகியவை நகரங்களின் முன் மாதிரிகளாக (நகரங்களைப் போன்ற) கருதப்பட்டன. இக்காலப் பொருண்மைப் பண்பாடானது பல்வகைத் தன்மைகள் கொண்டதாகவும் முந்தைய வேதகால பொருள்களைக் காட்டிலும் நேர்த்தியாகவும் மாறியது. உற்பத்தியில் உபரி இருந்தது எனவும் இனக்குழுத் தலைவர்கள், இளவரசர்கள் மத குருமார்கள் போன்ற சமூகப் பிரிவினர்க்கு அவ்வுபரி உதவுவதாய் அமைந்தது எனவும் யூகிக்கலாம்.

அரசியல் நிறுவனங்கள்

முற்கால வேத காலத்தில் இனக்குழு அரசியலே மேலாதிக்கம் செலுத்தியது. அரசர் மக்கள் பிரதிநிதி மன்றங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் வேத காலத்தில் இவ்வமைப்புகள் முக்கியத்துவம் இழந்தன. அரசரின் அதிகாரம் பெருகியது. வித்தா என்ற அமைப்பு செல்வாக்கு இழந்தது. சபா, சமிதி ஆகிய அமைப்புகள் தொடர்ந்து இயங்கின. பேரரசுகளின் தோற்றத்தைத் தொடர்ந்து இவ்வமைப்புகளின் அதிகாரம் மென்மேலும் குறைந்தது.

ராஜன் என்பவரே இனக்குழுவின் தலைவர். போர்க்களத்தில் அவர் படைகளுக்குத் தலைமை தாங்கினார். சாம்ராட், சாம்ராஜ் போன்ற கோட்பாடுகள் வளர்ச்சி பெற்றன. இவை அரசருடைய அதிகாரம் பெருகியதை உணர்த்துகின்றன. குடும்ப உரிமைகளை சட்டபூர்வமாக்க அரசர் வாஜ்பேய, ராஜசூயயாகங்களை நடத்தினார்.நிலப்பகுதியின்மீதும் மக்களின் மீதும் செல்வ ஆதாரங்களின் மீதும் அரசரின் கட்டுப்பாடு பெருகியது. “அரசரை முன்னிறுத்தக் கூடியவர்என்ற பெயர்ப்பொருள் கொண்ட புரோகிதர் அரசு நிர்வாகத்திலும் குடும்ப உறவுகளிலும் முக்கிய இடம் வகித்தார். முடியாட்சிமுறை வலுப்பெற்றது. ராஜன் சமூக ஒழுங்கைக் கட்டுப்படுத்துபவரானார். செல்வ ஆதாரங்களைக் கட்டுப்படுத்துவதற்காக ஸ்ராதா (சில நன்மைகளைப் பெறுவதற்காக செய்யப்படுவது) என்னும் யாகங்கள் நடத்தப்பட்டன. அரசர் புரோகிதர்க்குப் பசு, குதிரை, தேர், ஆடை ஆகியவற்றைப் பரிசாக அளித்தார். பெண்ணடிமைகளும் பரிசுப்பொருள்களாக வழங்கப்பட்டனர். அரசப் பதவியேற்பின் போது செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்த ஒரு புரோகிதர்க்கு 1000 தங்கக்கட்டிகளும் கால்நடைகளும் பரிசளித்ததாக அய்த்ரேய பிராமணம் குறிப்பிடுகின்றது. புரோகிதர் அரசியல் உருவாக்கத்திலும் அரச குடும்பத்திலும் முக்கியப் பங்கு வகித்தார்.

ஒரு பொதுமூதாதையரிடமிருந்து உருவாகும் தலைமுறைகள் வம்சாவளி கொடிவழி/ பரம்பரை எனப்படும்.

மாநிலத்தைக் குறிக்கும் ராஷ்ட்ர என்ற சொல்லும், இறையாண்மை உடைய நாட்டினைக் குறிக்கும் ராஜ்ய என்ற சொல்லும் பிறந்தன. அரசர் மக்களிடமிருந்து (விஷ்) ‘பலிஎன்ற வரியைப் பெற்றார். அது மக்கள் தாமாகவே மனமுவந்து வழங்கியதாகவோ அல்லது கட்டாய வசூலாகவோ இருந்தது. தன்னார்வ அடிப்படையில் கொடுக்கப்பட்டது காலப்போக்கில் கப்பமாக மாறியது போலும். மகாபாரதம் அதிகாரப் போட்டிகளையும் நாடுகளைக் கைப்பற்ற நடந்த போர்களையும் சித்தரிக்கிறது. இராமாயணமும் ஆரியர்களின் விரிவாக்கத்தையும் காடுகளில் வாழ்ந்த மக்களோடு ஏற்பட்ட மோதல்களையும் விவரிக்கிறது.

நாடுகளின் உருவாக்கமும் மரபுவழி அரசாட்சியும் பின் வேதகாலத்தில் வலுப்பெற்றன. பொ..மு. முதல் ஆயிரமாண்டு காலத்தில் ஏற்பட்ட இப்போக்கை ரோமிலா தாப்பர்குல உரிமையிலிருந்து அரசுக்குஎன்று கூறுகிறார். நாடுகளின் அளவிலான அரசியல் நிறுவனங்கள் பொ..மு. 500 க்குப் பின்னரே உருவாயின. ஆகவே பின் வேதகாலச் சமூகம் மாறுதல்களுக்கு உள்ளாகிக் கொண்டிருந்தது தெளிவாகின்றது. பல மரபினர் நிலங்களைக் கொண்டவர்களாக மாறி பின்வேதகாலத்தில் நிலையான வாழ்க்கையை மேற்கொண்டனர். இதற்கான சான்றுஜனபதம்என்ற சொல்லாகும். பொ..மு. முதல் ஆயிரமாண்டுகளின் இடைப்பகுதியில், பின் வேதகாலத்தில் ராஜிய, கணசங்கா எனப்படும் அரசியல் நிறுவனங்கள் உருவாயின.

நாம் முன்னர் பார்த்தது போல் பரத, புரு இனக்குழுக்கள் இணைந்து குரு குழு உருவாகி அது பாஞ்சாலர் இனக்குழுவோடு இணைந்து கங்கை -யமுனை சமவெளியின் மத்தியப் பகுதியை கைப்பற்றின. பாஞ்சாலப் பகுதி உத்திரப்பிரதேசத்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இக் குரு பாஞ்சாலர்கள் ஒரு பெரும் இனக் குழுவாக உருவானது. ஹஸ்தினாபுரம் அவர்களின் தலைநகரானது. மகாபாரதத்தில் போரிட்டுக் கொள்ளும் பாண்டவர்களும் கௌரவர்களும் குரு இனக்குழுவைச் சேர்ந்தவர்களே. ஹஸ்தினாபுரம் வெள்ளத்தில் மூழ்கியதால் குரு இனக்குழுக்கள் வெளியேறி அலகாபாத்திற்கு அருகேயுள்ள கௌசாம்பியில் குடியேறியதாக மரபுக் கதைகள் கூறுகின்றன.

பின் வேத காலத்தில் வேள்விகளும் சடங்குகளும் முக்கியத்துவம் பெற்றன. அரசர் மேலும் அதிக சுதந்திரம் பெற்றவரானார். மக்களிடமிருந்து விலகினார். குடும்பங்களில் சடங்குகள் மேலாதிக்கம் செலுத்தின. இது அரசர்கள், மதகுருமார்களின் அதிகாரமும் செல்வாக்கும் பெருகுவதற்கு வழி வகுத்தது. அரசர் அஸ்வமேதயாகம் நடத்தினார். அதன்படி அரசருடைய குதிரை அவிழ்த்து விடப்படும். அது பற்பல இடங்களுக்குச் செல்லும். அக்குதிரையை எவரும் பிடித்துக் கட்டவில்லை என்றால் அப்பகுதி வாழ் மக்கள் இவ்வரசனை அங்கீகரித்து விட்டனர் என்று பொருள். குதிரையை மறித்தால் அரசருடைய அதிகாரம் எதிர்க்கப்படுவதாகப் பொருள் கொள்ளப்படும். இது போர்களுக்கு இட்டுச்செல்லும் வாஜபேய என்னும் சடங்கு தேர்களின் போட்டியை உள்ளடக்கியதாகும். இதைப் போன்ற புதுமையான சடங்குகள் அரசருடைய அதிகாரத்தை மேலும் வளர்க்க உதவின.


சமூக அமைப்பு

பின் வேதகாலத்தில் ஏற்பட்ட சமூக மாற்றங்களை வேத நூல்கள், மிகத் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன. வர்ணத்தின் அடிப்படையிலான சமூகப் பிரிவுகள் உறுதி பெற்றன. கற்பித்தல் பிராமணர்களின் தொழிலானது. பிராமணர்களின் மனைவியரும், அவர்கள் வீட்டு பசுக்களும் உயர் தகுதியைப் பெற்றனர். ராஜன்யா என்னும் சொல் சத்திரியரைக் குறிப்பதாகும். ஆட்சியாளர்களாகவும் போர் செய்பவர்களாகவும் இருந்த அவர்கள் பலி என்னும் வரியை வசூலித்தனர்.

வர்ண முறையில் பளிச்செனப் புலப்படும் மாற்றங்கள் ஏற்பட்டன. சமூகத்தில் மேல் மட்டத்தில் இரு பிரிவினரான பிராமண, சத்திரியர் ஆகியோரின் அதிகாரம் பெருகியது. நால்வர்ணமுறை ஆழமாக வேர் கொண்டு காலப்போக்கில் மேலும் இறுகியது. பஞ்சவம்ச பிராமணத்தில் சத்திரியர்களே பிராமணர்களைக் காட்டிலும் உயர்ந்தவர் என முதலிடத்தில் வைக்கப்பட்டனர். ஆனால் சதபத் பிராமணம் சத்திரியர்களைவிடப், பிராமணர்களே உயர்ந்தவர்கள் எனக் கூறுகிறது. பின் வேத காலத்தில் வேத நூல்களில் குறிப்பிட்டுள்ளதைப்போல் புரோகிதர்களின் முக்கியத்துவத்திற்கு அதிக அழுத்தம் தரப்பட்டது. சத்திரியர்கள் பிராமணர்களின் மேலாதிக்கத்தைக் குறிப்பாக கோவில் கருவறைக்குள் நுழையும் அவர்களின் தனிப்பட்ட உரிமையை எதிர்த்தனர். வாழ்க்கை பிரம்மச்சரியம், கிருகஸ்தம், வனப்பிரஸ்தம், சன்யாசம் என நான்கு கட்டங்களாக (ஆசிரமங்கள்) பிரிக்கப்பட்டது. இதன் காரணமாய் சமணம், பௌத்தம், ஆசீவகம் போன்றவை தோன்றின

வர்ண அடிப்படையிலான சமூகப் படிநிலை சமுதாயத்தில் ஆழமாகக் காலூன்றியது. சமூகத்தில் சடங்குகள் பரவலானதன் விளைவாக பிராமணர்கள் தங்கள் அதிகாரத்தை வளர்த்துக் கொண்டனர். ராஜன்யர்கள் எனப்பட்ட போர்ப் பிரபுக்களுக்கும் பிராமணர்களுக்கும் இடையே மோதல்கள் இருந்தபோதிலும், பிராமணர்கள் முக்கியமானவர்களாக ஆகிவிட்டதால் அரசர்கள் அவர்களை ஆதரித்தனர். இருபிறப்பாளர் (துவிஜா) எனும் கோட்பாடு வளர்ச்சி பெற்றது. அதனுடன் தொடர்புடைய உபநயனச்சடங்கு சமூகத்தின் மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே உரியதானது. இச்சடங்கு கல்வி கற்பதன் தொடக்கத்தைக் குறிப்பதாகும். சமூகத்தின் நான்காவது பிரிவினருக்கு இவ்வுரிமை மறுக்கப்பட்டது. சூத்திரர்கள் காயத்ரி மந்திரத்தை ஓதுதல் கூடாது என்று வரையறுக்கப்பட்டது. பெண்களுக்கு உபநயனமும் காயத்ரி மந்திரமும் மறுக்கப்பட்டன. அரசர் ஏனைய மூன்று வர்ணத்தார் மீதும் தனது அதிகாரத்தை நிலை நிறுத்தினர். பிராமணர்கள் ஆதரவை நாடுபவர்கள் எனவும், அவர்கள் அரசர்களால் பதவி நீக்கம் செய்யப்படலாம் எனவும் அய்த்ரேய பிராமணம் குறிப்பிடுகிறது.

சில தொழில்களைச் செய்யக்கூடிய தொழிற்பிரிவினரும் சமூகத்தில் மேல்நிலையை அடைந்தனர். எடுத்துக்காட்டாக தேர்களைச் செய்யும்ரதகாரர்கள்மேல்நிலையின் அடையாளமாகப் பூணூல் அணியும் உரிமையைப் பெற்றிருந்தனர். வைசியர்கள் சாதாரண மக்களாகவே குறிப்பிடப்படுகின்றனர். வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, கைத்தொழில் போன்றவற்றைச் செய்து வந்த அவர்கள் பின்னர் வணிகர்களாக மாறினர். அவர்கள் அரசர்களுக்கு வரி செலுத்தினர். சமூகப் படிநிலையில் சூத்திரர்களுக்கும் கீழாக சில சமூகக் குழுக்கள் வைக்கப்பட்டனர்.

கோத்திரம்என்னும் கோட்பாடு பின் வேதகாலத்தில் தோன்றியது. கோத்திரம் என்னும் சொல்லுக்குகிடை’ (ஆட்டுக்கிடை, மாட்டுக்கிடை) என்று பொருள். ஒரு குறிப்பிட்ட மூதாதையரின் தொப்புட்கொடி வழிவந்த நபர்களை இது குறிக்கின்றது. ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் உடன்பிறப்புகளாவர். எனவே அவர்கள் தங்களுக்குள்ளே திருமணம் செய்யலாகாது. ஒரே மூதாதைய வம்சாவளியைச் சேர்ந்த குடும்பங்களைக் கொண்ட குழுக்கள் இருந்தன. இவை ஒன்றிணைந்து ஓர் இனக்குழுவாயின.

குடும்பம்

குடும்பம் வரையறை செய்யப்பட்ட உறவு முறைகளோடு நன்கு கட்டமைக்கப்பட்டிருந்தது. குடும்பம் என்பது ஒரு முக்கியமான சமூக அலகாகும். தந்தை வழிப்பட்டதாகவும் அவரின் ஆண் வாரிசுகள் வழிப்பட்டதாகவும் குடும்ப வம்சாவளி அமைந்திருந்தது. குடும்பத்தினுள் உறவுகள் படிநிலைகளைக் கொண்டிருந்தன. பலதார மணம் நடைமுறையில் இருந்தது. குடும்பத்தின் நன்மைக்காகக் குடும்பம் சார்ந்த பல சடங்குகள் நடத்தப்பட்டன. திருமணமான மகன் தனது மனைவியோடு இச்சடங்குகளுக்குத் தலைமையேற்றார் (யஜமானன்).

இக்காலகட்டத்தில் வாழ்வின் வெவ்வேறு நிலைகளைக் குறிக்கக்கூடிய ஆசிரமக் கோட்பாடு வலுவாகக் காலூன்றவில்லை. பிரம்மச்சரியம், கிருகஸ்தம், வனப்பிரஸ்தம் ஆகியன குறிப்பிடப்பட்டிருந்தாலும் சந்நியாசம் என்ற நிலை பெரிதாகப் பேசப்படவில்லை.

பெண்கள்

சமூகம் பல்வேறு பிரிவுகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் கொண்டதாக மாறியதாலும், தந்தை வழிக் குடும்ப அமைப்புகள் முக்கியம் பெற்றதாலும் சமூகத்தில் பெண்களின் நிலை கீழிறக்கப்பட்டது. தந்தை குடும்பத்தின் தலைவனாக இருந்தார். அடுத்த நிலையில் மூத்த மகன் முக்கியத்துவம் பெற்றிருந்தான். ரிக் வேத காலத்தில் பெண்கள் யாகங்களிலும் சடங்குகளிலும் கலந்து கொண்டனர். பின் வேதகாலத்தில் அவ்வுரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டது. பெண் குழந்தைகள் பிரச்சனைகளின் தோற்றுவாயாகக் கருதப்பட்டனர். பெண்கள் கால்நடைகள் வளர்ப்பது, பால் கறப்பது, தண்ணீர் இறைப்பது போன்ற பணிகளைச் செய்தனர்.

பொருளாதாரம்

இக்காலத்தில் பொருளாதார நடவடிக்கைகள் பெருமளவில் பன்முகத் தன்மை கொண்டதாக மாறின. வேளாண்மை, கால்நடை மேய்ச்சல், பொருள் உற்பத்தி, வணிகம் ஆகியவை பொருளாதார வளர்ச்சிக்கு இட்டுச் சென்றன.

வேளாண்மை

பின் வேதகாலத்தில் வேளாண்மைச் செயல்பாடுகள் அதிகரித்தன. ‘சதபத பிராமணம்அரசர்கள் மேற்கொண்ட கலப்பையோடு தொடர்புடைய சடங்குகளைப் பற்றி கூறுகிறது. இக்குறிப்பானது அரசர்கள் வேளாண்மைக்குக் கொடுத்த முக்கியத்துவத்தையும், பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டிய காரணத்தினால் மேய்ச்சல் பொருளாதாரத்திலிருந்து வேளாண்மைக்கு மாறியதையும் கோடிட்டுக் காட்டுகின்றன. பலராமன் கலப்பையோடு காட்சிப்படுத்தப்படுவது வேளாண்மைக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தைக் குறிக்கிறது. வேதகால மக்கள் பார்லி, அரிசி, கோதுமை ஆகியவற்றைப் பயிரிட்டனர். பஞ்சாப் பகுதியின் பிரதான உணவுதானியம் கோதுமையாகும். கங்கை -யமுனை நதிக்கரைப் பகுதிகளில் வாழ்ந்த வேதகால மக்கள் அரிசியைப் பயன்படுத்தினர். வேதச் சடங்குகளில் கோதுமையைக் காட்டிலும் அரிசி அதிகம் பயன்படுத்தப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

கால்நடை வளர்ப்பு

கால்நடை வளர்ப்பு முக்கியத் தொழிலாகத் தொடர்ந்தது. கால்நடை புனிதமானதாகக் கருதப்பட்டது. பண்டப் பரிமாற்றத்திலும் மறு விநியோகத்திலும் ஒரு பகுதியாக அது விளங்கியது. கால்நடைகளைதட்சிணையாக வழங்கும் பழக்கம் தொடர்ந்தது. கால்நடை மேய்ச்சல் வேளாண்மையின் துணைத் தொழிலானது.

கைவினைப்பொருட்கள் உற்பத்தி

கலைகளும் கைவினைத்தொழில்கள் மூலம் பொருள் உற்பத்தியும் பின் வேதகாலத்தில் வெகுவாகப் பரவின. தொழில் நிபுணத்துவம் ஆழமாக வேரூன்றியது. தொழில் சார்ந்து பல சமூகக் குழுக்கள் உருவாயின. பொ..மு. 1200 இல் இரும்புத் தொழில் நடைபெற்றதாகக் கண்டறியப்பட்டுள்ளது. செம்பு, ஈயம், தங்கம், காரீயம், வெண்கலம் ஆகியனவும் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வுலோகங்கள் உருக்கப்பட்டு நிபுணத்துவம் வாய்ந்தவர்களால் பொருள்களாக உருவாக்கப்பட்டன. போருக்கும் வேட்டைக்கும் தேவைப்படும் ஆயுதங்கள் செய்ய செம்பு பயன்படுத்தப்பட்டது. பெண்கள் துணி நெய்தனர் மர வேலைகளும், மண்பாண்டத் தொழிலும், தோல் பொருள்கள் பணியும் நன்கு அறியப்பட்டிருந்தன. மண்பாண்டங்கள் செய்வோரைக் குறிக்கும்குலாலாஎன்னும் சொல்லும், கம்பளி நெய்வோரைக் குறிக்கும்உர்னா சூத்ராஎன்னும் சொல்லும் காணப்படுகின்றன. வில், அம்பு செய்கின்றவர்கள், கயிறு திரிப்பவர்கள், தோலாடை செய்பவர்கள், கல்லுடைப்போர், தங்க வேலை செய்வோர் போன்ற நிபுணத்துவம் வாய்ந்த பணிகளை மேற்கொண்டோர் குறித்த குறிப்புகளும் வேதப்பாடல்களில் உள்ளன. மருத்துவர், சலவை செய்வோர், வேட்டையாடுவோர், படகோட்டிகள், சமையல் செய்வோர், ஆருடம் கூறுவோர் ஆகியோர் குறித்த குறிப்புகளும் உள்ளன. யானை, யானைப் பாகர் பற்றிய குறிப்புகள் அதர்வ வேதத்தில் பல இடங்களில் தென்படுகின்றன. மேற்சொல்லப்பட்ட செய்திகள் மாறுதலுக்கு உள்ளாகிக்கொண்டிருந்த ஒரு சமூகத்தைக் குறிப்பதாக அமைகின்றன.

வேத வேள்விகளையும் சடங்குகளையும் செய்வோரும் ஒருவகைப்பட்ட சேவைக் குழுவினரே. பல்வேறு சடங்குகளை நடத்துவதன் மூலம் மதகுரு அரசனுடைய நடவடிக்கைகளைச் சட்டபூர்வமாக்கினார். கால்நடைகள் மற்றும் ஏனைய விலங்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் சொத்துக்கள் மதிப்பிடப்பட்டன. தட்சிணை வழங்கியதைப் பற்றிய ஒரு குறிப்பு 20 ஒட்டகங்களையும் 100 தங்க கழுத்தணியையும் 300 குதிரைகளையும் 10,000 பசுக்களையும் தட்சிணையாக வழங்கியதாகக் கூறுகிறது.

வணிகமும் பரிவர்த்தனையும்

வணிகமும் பண்டப் பரிவர்த்தனையும் பின் வேத காலத்தில் வளர்ச்சி பெற்றது. தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்பட்ட இடங்களில் கிடைத்த பொருள்கள் சரக்குகள் ஓரிடம் விட்டு வேறிடம் கொண்டு செல்லப்பட்டதைக் காட்டுகின்றன. குறிப்பிட்ட பொருள்களில் வணிகம் செய்த கவிகைவண்டி வணிகக் குழுக்கள் இருந்துள்ளன. நாணயங்கள் புழக்கத்தில் இருந்ததற்கான சான்றுகள் இல்லை என்பதால் பண்டமாற்று முறையே நடைமுறையில் இருந்திருக்க வேண்டும் எனலாம். பொ..மு. 600 வாக்கில் தான் நாணயங்கள் அறிமுகமாயின.

மதப் பற்றும் நம்பிக்கையும்

பின் வேதகாலத்தின் போது மேல் கங்கைப் பகுதியானது ஆரியப் பண்பாட்டின் மையமாக விளங்கியது. இப்பகுதியே குரு பாஞ்சாலர்களின் பகுதியாக விவரிக்கப்பட்டுள்ளது. வேதக் கடவுள்களான அக்னி, இந்திரன் ஆகியோர் தங்கள் செல்வாக்கை இழந்தனர். பிரஜாபதி முக்கியக் கடவுளானார். சிவனின் மற்றொரு வடிவமாகக் கருதப்படும் சடங்குகளின் கடவுளான ருத்ரன் முக்கியக் கடவுளானார். சதபத பிராமணம் ருத்ரனுடைய வேறு பெயர்களை பசுனம்பதி, சர்வா, பவா, பகிகா என பட்டியிலிடுகிறது. மக்களைக் காக்கும் கடவுளாக விஷ்ணு குறிப்பிடப்படுகிறார். விஷ்ணுவின் அவதாரங்கள் குறித்த குறிப்புகள் ஏதுமில்லை. ஒவ்வொரு வர்ணத்தாரும் தங்களுக்கான கடவுளர்களைப் பெற்றிருந்தனர்.

சடங்குகள்

சமுதாயத்தில் சடங்குகள் முக்கியமாயின. சடங்குகளும் வேள்விகளும் பலியிடுதலும் தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கும் என மக்கள் நம்பினர். காலப்போக்கில் இச்சடங்குகள் அதிக செல்வத்தையும் நேரத்தையும் எடுத்துக்கொள்வதாக மாறின. இம்மாற்றம் சடங்குகளுக்கான தேவை அதிகமானதையும் அதிகம் செலவழிக்கத் தயாராக இருந்த செல்வம் படைத்த பிரிவு சமூகத்தில் உருவானதையும் சுட்டிக்காட்டுகிறது. சடங்குகள் மிகச் சரியாக நடத்தப்பட வேண்டுமென வற்புறுத்தப்பட்டது. காணிக்கைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் வற்புறுத்தப்பட்டது. சடங்குகளை நடத்துவதன் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்ற மனப்போக்கு, செல்வமிருந்தால் எதையும் சாதிக்கலாம் எனும் எண்ணத்தை உருவாக்கியது. இப்படிப்பட்ட பார்வையை உபநிடதங்கள் மறுக்கின்றன. மாறாக ஆன்மாவை உணர வேண்டுமென அழுத்தம் கொடுக்கின்றன. சடங்குகளின் இப்படிப்பட்ட சீர்கேடும் செல்வத்தின் மீதான மத குருமார்களின் ஆசையும் எதிர்ப்புகளை ஏற்படுத்தின. அதன் விளைவாக பௌத்த சமண ஆசீவக மதங்கள் தோன்றின. அவை ஒழுக்கத்தையும் சரியான மனித நடவடிக்கைகளையும் முன்னிறுத்தின.

தத்துவமும் கல்வியும்

தத்துவம், இலக்கியம், அறிவியல் ஆகிய அறிவுத் துறைகளும் இக்காலத்தில் வளரலாயின. கற்றலின் பல பிரிவுகளான இலக்கணம், கணிதம், நன்னெறி, வானியல் போன்றவையும் வளர்ந்தன. கல்வியானது ஆண்களுக்கு மட்டுமே உரியதானது. வேத நூல்கள் உருவாக்கம், உச்சரிப்பிற்கும் இலக்கணத்திற்கும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், வாய்மொழி பரிவர்த்தனை ஆகியவை வேதகால கல்வியில் மனப்பாடம் செய்வதும், ஒப்புவித்தலும் அதன் ஒரு பகுதியாக இருந்ததை தெரிவிக்கிறது. பல்வேறு வகையான நூல்களின் உருவாக்கம் வளர்ச்சியையும் அறிவுக்கான தேடல் ஏற்பட்டிருந்ததையும் உணர்த்துகின்றன. காடுகளில் தங்கி தவம் இயற்றும் முனிவர்களோடு ஆரண்யகங்கள் தொடர்புடையனவாகும்.

உபநிடத (உபநிசத் = அருகே அமர்) நூல்கள் இக்காலத்தில் இயற்றப்பட்டன. அவை தத்துவ விசாரணை நூல்களாகும். வேத நூல்களின் இறுதிப்பகுதியாக அவை இணைக்கப்பட்டதால் அவை வேதாந்தங்கள் எனவும் அழைக்கப்பட்டன.

சத்யமேவ ஜயதே (வாய்மையே வெல்லும்) என்ற சொற்றொடர் முண்டக உபநிஷத் எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

அவை அறிவு, தன்னை உணர்தல், ஆன்மா, தியானம், பிறப்பு இறப்பு எனும் சுற்றுவட்டம் என்பனவற்றைக் கோடிட்டுக் காட்டின. கர்மா, நன்னடத்தை, சுய கட்டுப்பாடு, இரக்கம், கொடை ஆகியவற்றை நல்லொழுக்கங்கள் என்று சுட்டிக் காட்டின. வேதகாலச்சமூகத்தில் சடங்குகள் ஆதிக்கம் பெற்றிருந்த வாழ்க்கைமுறை இருந்த போதிலும் சில ஞானிகள் அறிவையும் நல்லொழுக்கத்தையும் பின்பற்றுபவர்களாக இருந்தனர்.

உங்களுக்குத் தெரியுமா?

காலனிய கால அறிஞர்கள் பண்டைய இந்திய இலக்கியங்களின்மீது ஆர்வம் கொள்வதற்கு வெகுகாலத்திற்கு முன்னரே, 1657இல் மொகலாய இளவரசரான தாராசுகோ உபநிடதங்களை பாரசீக மொழியில் மொழி பெயர்த்தார்.

வாழ்க்கையின் ஏனைய கூறுகள்

பின் வேதகாலத்தில் இசையும் கவின்கலைகளும் செழித்ததற்கான சான்றுகள் உள்ளன. இசைக்கருவிகளான புல்லாங்குழல், மேளம், வீணை ஆகியவை பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. வேளாண்மை, கால்நடை மேய்ச்சல் ஆகியவற்றின் விரிவாக்கம், வளர்ச்சி போன்றவற்றின் காரணமாக மக்கள் தானியம், மரக்கறி, வெண்ணெய், நெய் ஆகியவை கொண்டு செய்யப்பட்ட வகைவகையான உணவுகளையும் பானங்களையும் உண்டனர். பட்டு பயன்பாட்டில் இருந்தமைக்கும் தங்கத்தாலும், செம்பினாலும் செய்யப்பட்ட அணிகலன்கள் பயன்படுத்தப்பட்டமைக்கும் சான்றுகள் உள்ளன. உலோகத்தினாலான கண்ணாடிகள் பயன்படுத்தப்பட்டன. தொல்பொருள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட இடங்களில் (கல் மணிகளும்) கண்ணாடி மணிகளும் கிடைத்துள்ளன. வேதகாலத்தின் பிற்பகுதியில் இத்தொழில்கள் மேலும் வளர்ந்தன.

பின்வேதகாலத்தின் தனிச்சிறப்பியல்புகள்

இனக்குழுக்களின் வம்சாவளித் தோன்றல்கள், கங்கைச் சமவெளியில் பல குறு அரசுகளின் ஆட்சி உருவாகியது. வளர்ச்சிப் போக்கில் பொ..மு. 600 க்குப் பின்னர் அவை அரசுகளாக வளர்ந்தது என்பதே பின் வேதகாலத்தின் சிறப்பியல்புகளாகும். ஜனபதங்கள், ராஷ்டிரங்கள் எனும் பெயர்களில் நிலப்பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டன. அரசர் அதிக அதிகாரங்களைப் பெற்றார். சமூகப் பாகுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் ஆழமாக வேர்கொண்டன. வர்ணமுறை வளர்ச்சியடைந்தது.

Tags : Early India | History வரலாறு.
11th History : Chapter 2 : Early India: The Chalcolithic, Megalithic, Iron Age and Vedic Cultures : Later Vedic Culture Early India | History in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு : அலகு 2 : பண்டைய இந்தியா : செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள் : பிற்கால வேதப் பண்பாடு - வரலாறு : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு : அலகு 2 : பண்டைய இந்தியா : செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்