வரலாறு - இந்தியாவில் ஆரியருக்கு முந்தைய - ஹரப்பாவிற்கு பிந்தைய, செம்பு காலகட்ட பண்பாடுகள் | 11th History : Chapter 2 : Early India: The Chalcolithic, Megalithic, Iron Age and Vedic Cultures
இந்தியாவில் ஆரியருக்கு முந்தைய - ஹரப்பாவிற்கு பிந்தைய, செம்பு காலகட்ட பண்பாடுகள்
ஹரப்பா பண்பாட்டிற்கு முந்தைய பண்பாடுகளே இந்தியாவின் மிகப் பழமையான செம்புக்காலப் பண்பாடுகளாகும். இவை முதிர்ந்த நிலை ஹரப்பா நாகரிக காலகட்டம் தொடங்குவதற்கு முன்பும் அதற்குப் பின்னரும் தொடர்ந்து நீடித்தன. இந்தியாவில் காணப்படும் பிற செம்புக்காலப் பண்பாடுகளும் இதன் சமகாலத்தவை. ஹரப்பா பண்பாட்டின் சரிவுக்குப் பின்னரும்கூட அவை தொடர்ந்தன. இந்தியாவின் புதிய கற்காலப் பண்பாடுகள் சில ஹரப்பா பண்பாட்டின் சமகாலத்தவையாகவும், அதற்குப் பின்னரான காலங்களைச் சேர்ந்தவையாகவும் உள்ளன. முதிர்ந்த நகர்ப்புறம் சார்ந்த ஹரப்பா பண்பாட்டைப் போல் இல்லாமல், இச்செம்புக்காலப் பண்பாடுகள் பொதுவாக கிராமப்புற தன்மை கொண்டவையாகவும், வேளாண்மை மற்றும் மேய்ச்சல் தொழில் பண்பாடுகளாகவும் இருந்தன.
செம்புக்காலப் பண்பாட்டினைச் சேர்ந்த மக்கள் செம்பினால் செய்யப்பட்ட பொருள்களையும், கற்களாலான கூரான கருவிகளையும் மட்பாண்டங்களையும் பயன்படுத்தினர். மேலும், பிற்காலத்தில் குறைந்த தரம் கொண்ட இரும்பையும் பயன்படுத்தியுள்ளனர். இக்கால மக்கள் நிலையற்ற அல்லது ஓரளவு நிலையான குடியிருப்புகளில் வாழ்ந்தார்கள் என்பதற்கு இந்தியாவின் மேற்கு, வடமேற்குப் பகுதிகளின் தொடக்ககால வேளாண் பண்பாடுகள், புதிய கற்காலப் பண்பாடுகளைக் காட்டிலும் செம்புக்காலப் பண்பாடுகளுடனே அதிகம் தொடர்புடையவையாகும்.
செம்புக்காலப் பண்பாட்டினைச் சேர்ந்த மக்கள் வேளாண்மை செய்தார்கள். விலங்குகளைப் பழக்கப்படுத்தினார்கள். எருது, எருமை, வெள்ளாடு, செம்மறியாடு, பன்றி ஆகியவற்றை வளர்த்தார்கள். ஆமைகளும் கோழிகளும் இவர்களின் வாழ்விடங்களில் இருந்தன என்பதற்குச் சான்றுகள் உள்ளன. இவர்கள் வாழ்ந்த வீடுகள் கல்லாலும், சுடாத மண் கற்களாலும், களிமண்ணாலும், மரப்பொருள்களினாலும் கட்டப்பட்டவையாகும். இவற்றின் சுவர்கள் மூங்கில் தட்டிகளால் ஆனது. தானியங்களைச் சேகரித்து வைக்கும் குதிர்கள் கண்டறியப்பட்டுள்ளன. மக்கள் கருப்பு மற்றும் சிவப்பு நிற மட்பாண்டங்களையும், செந்நிறத்தின் மீது கருமை நிற ஓவியம் தீட்டிய மட்பாண்டங்களையும் பயன்படுத்தினர்.
இவ்விடங்களில் அதிகமான எண்ணிக்கையில் செம்பினாலான பொருள்கள் கிடைக்கின்றன. செம்பினாலான தட்டையான கோடாரிகள், வளையல்கள், மோதிரங்கள், வெட்டுக்கத்திகள், உளிகள், கூராக்கப்பட்ட அம்பு முனைகள், கத்திகள், பொருத்து குழியில்லா கோடாரிகள் ஆகியவற்றை மக்கள் பயன்படுத்தினர்.
பழுப்பு மஞ்சள்நிற பாண்டப் பண்பாடு
வட இந்தியாவில், செம்புக்காலப் பண்பாட்டுடன் தொடர்புடைய பழுப்புமஞ்சள்நிற மட்பாண்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இம்மட்பாண்டங்கள் சிவப்பு நிற அடிப்புறத்தின் மேல் பழுப்புமஞ்சள் நிறத்தைக் கொண்டுள்ளதாகக் காட்சியளிக்கும். (மட்பாண்டங்களைத் தொட்டவுடன் பழுப்பு நிறம் விரல்களில் ஒட்டிக்கொள்ளும்.) எனவேதான் இவை பழுப்புமஞ்சள் நிற மட்பாண்டங்கள் என்றழைக்கப்படுகின்றன. இவை கருப்பு நிற ஓவியங்களைக் கொண்டுள்ளன. பழுப்புமஞ்சள் நிற மட்பாண்டங்ளில் ஜாடிகள், கொள்கலன்கள், தட்டுக்கள் அகலமான கிண்ணங்கள் ஆகிய வகைகள் உள்ளன.
பழுப்புமஞ்சள் நிற மட்பாண்டப் பண்பாட்டின் காலம் பொ.ஆ.மு. 2600 முதல் பொ.ஆ.மு. 1200 வரையாகும். சிந்து - கங்கைச் சமவெளிப் பகுதிகளில் காணப்படும் இப்பண்பாடு தொடக்க வேதகால பண்பாட்டோடு தொடர்புகளைக் கொண்டுள்ளது. இப்பண்பாடு நலிந்த ஹரப்பா பண்பாடாக பார்க்கப்படுகிறது. சில அறிஞர்கள் இப்பண்பாட்டிற்கும் ஹரப்பா பண்பாட்டிற்கும் இடையே எவ்வித உறவும் இல்லை எனக் கருதுகின்றனர். பழுப்பு மஞ்சள்நிற மட்பாண்டப் பண்பாடு தொடர்பான ஆய்விடங்களில் செம்பினால் செய்யப்பட்ட உருவங்களும் ஏனைய பொருள்களும் அதிகம் கிடைப்பதால், இது ‘செம்புப் பொருட்குவியல் பண்பாடு’
என்றும் அறியப்படுகிறது. இப்பண்பாடு ஒரு கிராமியப் பண்பாடாகும். இப்பண்பாட்டு இடங்களில் நெல், பார்லி, பட்டாணி, காய்வகைகள் ஆகியன விளைவிக்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. நாட்டுப்புற வாழ்க்கையை மேற்கொண்ட இப்பண்பாட்டு மக்கள் எருது, பசு, வெள்ளாடு, செம்மறியாடு, குதிரை, நாய், பன்றி ஆகியவற்றை வளர்த்துள்ளார்கள். கிராமங்கள் மரதட்டிகளின் மேல் களிமண் பூசிக் கட்டப்பட்ட சுவர், மேல்கூரை கொண்ட வீடுகளைக் கொண்டிருந்தன. செம்பிலும், சுட்ட களிமண்ணிலும் செய்யப்பட்ட அணிகலன்களைப் பயன்படுத்திய அவர்கள் விலங்குகளின் சுடுமண் உருவங்களையும் செய்தனர்.
தென் இந்தியச் செம்புக்காலப் பண்பாடுகள்
ஒரு முழுமை பெற்ற செம்புக் கற்காலப் பண்பாடு தென்னிந்தியப் பகுதிகளில் நிலவியதற்கான சான்றுகள் இல்லை. சில இடங்களில் துளையிட்ட பாண்டங்களும், கெண்டி வடிவிலான பாண்டங்களும் கிடைத்துள்ளன. செம்பினாலும் வெண்கலத்திலுமான கலிகள், கோடரிகள் இங்கு கிடைக்கின்றன. இப்பகுதிகளில் கல்லினாலான கருவிகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும் இக்கால மக்களின் வாழ்வாதாரமாக இருந்துள்ளன. சிறுதானியங்கள், பயறு வகைகள், கொள்ளு போன்றவற்றைச் சாகுபடி செய்த இம்மக்கள் பழங்களையும் இலைகளையும் கிழங்குகளையும் சேகரித்து உண்டு வாழ்ந்தனர்.