வரலாறு - ஆரியர்களும் ரிக் வேதகால சமூகமும் | 11th History : Chapter 2 : Early India: The Chalcolithic, Megalithic, Iron Age and Vedic Cultures
ஆரியர்களும் ரிக் வேதகால சமூகமும்
இதுவரை நாம் பிற்கால ஹரப்பா பண்பாடு, செம்புக்காலப் பண்பாடு, ஓவியம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டப் பண்பாடு ஆகியன குறித்து பார்த்தோம். இனி வேத நூல்களிலிருந்து பெறப்பட்ட சான்றுகள் குறித்து நோக்குவோம். பொருட் பண்பாடுகளைப் பற்றி மட்டுமே தெரியப்படுத்தும் தொல்லியல் இடங்களைப் போலல்லாமல், வேதங்கள்,
மக்களின் இனக்குழு
மற்றும் பண்பாட்டு
அடையாளங்களைப் பற்றி
பேசுகின்றன. வேதங்களில்
காணப்படும் குறிப்புகளின்
காரணமாக, தொடக்ககால
இந்திய வரலாற்றில்,
ஆரியர்கள் குறித்து
எழும் விவாதங்கள்
முக்கியத்துவம் கொண்டவையாக
ஆகியுள்ளன.
ஆரியர்கள்
ஐரோப்பியர்கள் இந்தியாவில்
காலனியாதிக்கம் செலுத்தத்
தொடங்கிய பின்னரே
இந்திய வரலாற்றை
எழுதும் முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டன. அவர்கள்
இந்தியாவின் வரலாறு,
தொல்லியல், இலக்கியச்
சான்றுகளையும், இந்திய
மக்களின் வாய்மொழி
மரபுகளையும் தொகுத்தனர்.
அப்போது ஆசியா,
ஆப்பிரிக்கா கண்டங்கள்
ஐரோப்பிய ஆட்சி
அதிகாரத்தின் கீழ்
இருந்தன. இக்காலகட்டத்தில்தான் காலனியச்
சூழலில் காலனியாளர்கள்
பயன்படுத்திக் கொள்வதற்காக,
‘ஆரியர்‘ போன்ற
சில கருத்தாக்கங்கள் உருவாக்கப்பட்டன. இக்காலகட்டத்தில்தான் மக்களை
வகைப்படுத்துவதற்கும், பிரித்தறிவதற்கும் ‘இனம்’
என்னும் கோட்பாடு
பரவலாக்கப்பட்டது. இவற்றில்
ஒரு சில
கருத்துக்கள் காலனியகால
இனவெறிக் கருத்துக்களை
எதிரொலிப்பதாக இருந்தன.
‘ஆரியர் கருத்தியல்’
நீலநிறக் கண்களையுடைய
வெள்ளையின மக்களோடு
இணைக்கப்பட்டு பின்னர்
ஐரோப்பியரோடு தொடர்புபடுத்தப்பட்டது. இந்த
ஆரியக் கோட்பாட்டை
நாஜிகள் தங்கள்
அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்
கொண்டனர். இது
இறுதியில் மாபெரும் இனஅழிப்புக்கு
இட்டுச் சென்ற
து. ஆரியர் என்ற சொல் இனத்தைக்
குறிக்கவில்லை எனவும், ஆனால் இந்தோ-ஆரிய மொழிகளைப்
பூர்விகமாகப் பேசுபவர்களையே குறிக்கிறது
எனவும் அண்மைக்கால ஆய்வுகள்
நிறுவியுள்ளன.
மொழியியல் ஆய்வாளர்கள் வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் மொழியை, அது எழுதப்பட்ட வடிவத்திலும் வாய்மொழி வடிவத்திலும் ஆய்வு செய்கின்றனர். சொற்பிறப்பியல், வரலாறு, மொழியியல், ஒப்பீட்டு மொழியியல், இலக்கிய விமர்சனம் ஆகியவற்றை அவர்கள் பயன்படுத்துகின்றனர்.
ரிக் வேதம்
சமஸ்கிருத மொழியில்
எழுதப்பட்டிருந்தாலும், முண்டா மற்றும்
திராவிட
மொழிகளைச் சேர்ந்த 300 சொற்கள்
அதில் அடையாளம்
காணப்பட்டுள்ளன. இது
முந்தையகால மக்களுடனான
பண்பாட்டுக் கலப்புகளைக்
குறிக்கிறது.
ஆரியர்கள் பழக்கப்படுத்தப்பட்ட குதிரைகள் பூட்டிய தேர்களைப் பயன்படுத்தினார்கள் என்பது ரிக் வேதத்தின் மூலம் உறுதியாகிறது. அவற்றின் சக்கரங்கள் ஆரக்கால்களைக் கொண்டிருந்தன. ஆரியர்கள் வில்லையும் அம்பையும் பயன்படுத்தினர். அவர்கள் வேளாண்மை, கால்நடை மேய்த்தல் ஆகிய தொழில்களைச் செய்தனர். இறந்தவர்களைப் புதைக்கவும் எரிக்கவும் செய்தனர். இந்தோ -ஆரிய மொழிகளைப் பேசிய இவர்களிடையே சோமபானம் அருந்தும் பழக்கமும், நெருப்பைப் புனிதமாக நினைத்து வழிபடுவதும் பரவலாக இருந்துள்ளது.
இந்தோ -ஐரோப்பிய, இந்தோ - ஆரிய மொழிகளின் பிறப்பிடம் எது என்பது இன்றளவும் விவாதத்திற்குரியதாகவே உள்ளது. ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து குடிபெயர்ந்து இந்தியாவிற்கு வந்தனர் என்பது பல அறிஞர்களின் கருத்தாகும். பல்வேறு காலகட்டங்களில் ஆரியர்கள் அலையலையாக இந்தியாவிற்கு வந்தனர் என்றும் நம்பப்படுகிறது. இக்கருதுகோளுக்கு ஆதரவாகப் பல சான்றுகள் காணப்படுகின்றன. ஆரியர்களின் பண்பாட்டுக் கூறுகள் பரவியுள்ள கிழக்கு ஐரோப்பிய, மத்திய ஆசியப்பகுதிகள் புவியியல் ரீதியில் இந்தியா, மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பியப் பகுதிகளோடு இணைந்துள்ளன. கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசியா, கருங்கடலுக்கு வடக்கேயுள்ள பகுதிகளே அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஆரியர்களின் தாயகமாகும். ‘பாக்ட்ரியா மார்ஜினா தொல்லியல் வளாகம்’ ஆரியப் பண்பாட்டோடு நெருங்கிய தொடர்புடையதாகும். இதனுடைய காலம் பொ.ஆ.மு. 1900 முதல் பொ.ஆ.மு. 1500 ஆகும்.
இந்தோ-ஐரோப்பிய மொழிகள் பற்றிய குறிப்புகள் இன்றைய நவீன ஈராக் பகுதியில் கண்டறியப்பட்ட பொ.ஆ.மு. 2200ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டில் காணப்படுகிறது. வேதகால கடவுள்களின் பெயர்களைப் போலுள்ள பெயர்களைக் குறிப்பிடும் அனதோலியா கல்வெட்டு (பொ.ஆ.மு. 1900-1700), ஈராக்கைச் சேர்ந்த காஸ்சைட் கல்வெட்டு (பொ.ஆ.மு. 1600), சிரியாவின் மிட்டானி கல்வெட்டுகள்,
போகஜ் கல்வெட்டுகள் (பொ.ஆ.மு.1400) ஆகியன இந்தோ - ஐரோப்பிய மொழிகளின் பொது இயல்புகளைப் பெற்றுள்ளன. அவ்வாறான கல்வெட்டுகள் இந்தியாவில் கிடைக்கவில்லை என்பதால், ஆரியர்கள் இந்தியாவில் குடியேறியவர்களே என வலுவாகக் கூற இயலும்.
‘அஸ்வா’ என்னும் சொல்லும் வேறு பல சொற்களும், பல இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் பொதுவான வேர்ச்சொற்களைக் கொண்டுள்ளன. ரிக் வேதத்தில் ‘அஸ்வா’ (குதிரை) என்னும் சொல் 215 முறை இடம் பெற்றுள்ளது. அதைப் போலவே ரிஷபா (காளை) என்னும் சொல் 170 முறை இடம்பெற்றுள்ளது. வெப்பமண்டல விலங்குகளான புலி, காண்டாமிருகம் ஆகியன ரிக் வேதத்தில் காணப்படவில்லை . மேலும் ரிக் வேதத்தில் நகர்ப்புற வாழ்க்கை முறை குறித்து எந்தத் தடயமும் இல்லை . ஹரப்பா பண்பாட்டில் குதிரை இருந்ததற்கான சான்றுகளில்லை. எனவே ஆரியர்களை ஹரப்பா பண்பாட்டோடு தொடர்பு படுத்துவது பொருந்திப்போவதாயில்லை. பண்டைய காலக் குடிபெயர்வுகளைக் கண்டறிய தற்போது மரபணு அறிவியலும் பயன்படுத்தப்படுகிறது. எம்.17 (M.17) எனப்படும் மரபணு (DNA) இந்தோ -ஐரோப்பிய மொழிகளைப் பேசுபவர்களிடம் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.