வரலாறு - தமிழகத்தில் பெருங்கற்காலம் | 11th History : Chapter 2 : Early India: The Chalcolithic, Megalithic, Iron Age and Vedic Cultures
தமிழகத்தில் பெருங்கற்காலம்
இரும்புக்காலம் தமிழகத்தில் புதிய கற்காலத்தில் பழக்கத்தில் இருந்த இறந்தவர்களைப் புதைக்கும் முறை பெருங்கற்காலத்திலும் தொடர்ந்தது. ஈமச் சடங்கின் போது பெரிய கற்பலகைகளைப் பயன்படுத்தி வட்ட வடிவம், குத்துக்கல் எனப் பலவகையான கல்லறைகளை உருவாக்குதல் பெருங்கற்காலப் பண்பாட்டுக் கூறாக அறியப்படுகிறது. இத்தகைய பெருங்கற்காலச் சான்றுகள் தமிழகத்தில் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன. தாழியில் புதைக்கும் வழக்கம் மற்றொரு முறையாகும். இதற்கான சான்றுகள் ஆதிச்சநல்லூரில் (தற்போதைய தூத்துக்குடி மாவட்டம்) அகழ்ந்தெடுக்கப்பட்டன. தமிழகத்தில், இறந்தவர்கள் புதைக்கப்பட்ட புதைமேடுகளில் மட்டுமே கருப்பு நிற மட்பாண்டங்கள் அதிகம் கிடைக்கின்றன. அக்கால மக்கள் வாழ்ந்த குடியிருப்பு பகுதிகளில் அவை காணப்படவில்லை. முதுமக்கள் தாழியைப் பொறுத்தமட்டில் பெரும்பாலும் கற்கள் பயன்படுத்தப்படவில்லை. இருப்பினும் முதுமக்கள் தாழிகள் பெருங்கற்காலத்தவை என்றே வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஏனெனில், மட்பாண்டங்கள், இரும்புப் பொருள்கள், மணிக்கற்கள் போன்ற ஈமக்காரியங்களில் பயன்படுத்திய பொருள்கள் பெருங்கற்காலக் கல்லறைகளில் காணப்படும் பொருள்கள் போன்றே உள்ளன.
பெருங்கற்கால ஈம நடைமுறைகள் பொ.ஆ. இரண்டு - மூன்றாம் நூற்றாண்டுகள் வரை தொடர்ந்தாக மதிப்பிடப்படுகிறது. இக்காலகட்டத்தில் அசோகர் பிராமி எழுத்து முறை போன்ற தமிழ் பிராமி எழுத்துமுறை இருந்துள்ளது என்பது கொடுமணல் (ஈரோடு மாவட்டம்) அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. பெருங்கற்கால மரபு பிந்தைய நூற்றாண்டுகளில் தொடர்ந்திருப்பதற்கான சான்றுகளும் காணப்படுகின்றன. சங்க காலம் வரையிலும் இதுபோன்ற ஈமக்குழிகள் மக்களால் நினைவு கூறப்பட்டுள்ளன. வைகை ஆற்றுப்படுகையின் மேல்பகுதிகளில் காணப்பட்ட பழைய காலத்தைச் சேர்ந்த நான்கு நடுகற்கள் தமிழ் பிராமி எழுத்துக்களுடன் காணப்படுகின்றன. இவை ஏறத்தாழ பொ.ஆ.மு. மூன்றாம் நூற்றாண்டு அல்லது இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம். ஆநிரை கவர்தல் தொடர்பாகச் சங்க இலக்கியங்களில் விவரிக்கப்படும் நடுகல் நடும் மரபினை நிறுவும் சான்றுகளாக இந்த நடுகற்கள் காணப்படுகின்றன. இதன்காரணமாக, சங்க காலம் என்பது பொ.ஆ.மு. முதல் நூற்றாண்டு அல்லது அதற்குச் சற்று முன்னதாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். போரில் இறந்த வீரர்கள் நினைவாக நடுகல் நடும் மரபு ஈமக் குத்துக்கல் மரபின் தொடர்ச்சியாகக் கருதப்படுகிறது. ஈமக் குத்துக்கள், நினைவுக்கல், கல்திட்டை போன்றவை தமிழகத்தில் காணப்படும் பெருங்கற்கால ஈமச்சின்னங்களாகும்.
கருப்பு, சிவப்பு வண்ண மட்கலன்கள், மனித எலும்புச் சான்றுகள் மற்றும் இரும்புப் பொருட்களுடன் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி அருகில் உள்ள வடமலைக்குண்டா எனும் இடத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு சில கற்பலகைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பல நூற்றாண்டுகள் பழமையான குத்துக்கல் திருப்பூர் மாவட்டம் சிங்காரிபாளையம் குந்தலம் அருகே நடந்த அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது; இது, உப்பாறு நதிக்கரையில் பண்டைய கால மனிதர்களின வாழிடங்கள் இருந்ததைச் சுட்டிக்காட்டுகிறது.