வரலாறு - ரிக் வேதகாலப் பண்பாடு | 11th History : Chapter 2 : Early India: The Chalcolithic, Megalithic, Iron Age and Vedic Cultures
ரிக் வேதகாலப் பண்பாடு
ரிக்வேத சம்ஹிதையே பழமையான நூலாகும். அது தொடக்க வேத காலத்தோடு தொடர்புடையதாகும். பல அறிஞர்கள் தொடக்க வேதகாலப்பண்பாடு பொ.ஆ.மு. 1500க்கும் பொ.ஆ.மு. 1000 க்கும் இடைப்பட்ட காலத்தை சேர்ந்ததெனக் கணக்கிடுகின்றனர். இக்காலகட்ட அரசியல், சமூக, பொருளாதார வாழ்க்கைக் கூறுகள் ரிக் வேதப் பாடல்களில் எதிரொலிக்கின்றன.
புவியியல்
இந்தியத் துணைக் கண்டத்தில், தொடக்க வேதகால ஆரியர்கள் கிழக்கு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பஞ்சாப், மேற்கு உத்திர பிரதேசத்தின் சில பகுதிகளில் வாழ்ந்தனர்.
தாசர்களும் தசயுக்களும்
ரிக் வேதம் ஆரியர்களைக் குறித்து மட்டும் பேசவில்லை. இந்தியாவில் ஆரியர்கள் எதிர்கொண்ட ஆரியர் அல்லாத மக்களைப் பற்றியும் பேசுகிறது. ரிக்வேதகால ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்தபோது தாசர்கள், தசயுக்கள் என்று ஆரியர்களால் அழைக்கப்பட்ட மக்களோடு மோதினர். வெவ்வேறான பண்பாடுகளைப் பின்பற்றும் கருப்பு நிறம் கொண்ட இம்மண்ணின் மக்களிடமிருந்து ஆரியர்கள் தங்களை மிகத் தெளிவாக வேறுபடுத்திக் கொண்டனர்.
வேறுபல மக்கள் குழுக்களைப் பற்றிய குறிப்புகளும் ரிக்வேதத்தில் உள்ளன. சிம்யு, கிக்கடா எனப்பட்டவரும் தசயுக்களுடன் சேர்க்கப்பட்டனர். குலிதாரா என்பவரின் மகனான சம்பரா என்பவர் 90 கோட்டைகள் அல்லது குடியிருப்புகளின் தலைவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளார். மற்றொரு தலைவரான வர்சின் பெரும் படையொன்றிற்குத் தலைவராக இருந்துள்ளார். சம்பரா என்னும் தலைவன் பரத குலத்தைச் சார்ந்த திவோதசா என்பவரால் தோற்கடிக்கப்பட்டதாக ரிக்வேதம் குறிப்பிடுகிறது.
அரசு முறையும் அரசியல் மோதல்களும்
அரசுமுறை என்னும் கோட்பாடு ரிக்வேத காலத்தில் உருவாக்கம் பெற்றது. ரிக் வேதத்தில் மக்களின் வாழ்விடங்களும் நிலப்பகுதிகளும் ஜனா, விஷ், கணா, கிராம், குலா எனக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆரியர்களின் பகைவர்களையும் அவர்களோடு ஆரியர்கள் மேற்கொண்ட போர்களையும் ரிக்வேதம் கூறுகின்றது. கால்நடைகளுக்காகவும் ஏனைய செல்வங்களுக்காகவும் போர்கள் செய்யப்பட்டுள்ளன. போர்களின் மூலம் கொள்ளையடிக்கப்பட்ட செல்வங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. ஆரியர்கள், ஆரியர் அல்லாதவரோடு மட்டும் போர் புரியவில்லை ; தங்களுக்குள்ளும் மோதிக் கொண்டார்கள். தாங்கள் மேற்கொண்ட போர்களில் தங்களுக்கு ஆதரவாகத் தெய்வங்களின் அருளாசியையும் பெற்றார்கள். வழிபாடுகளும் சடங்குகளும் பலியிடுதலும் தங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தெய்வங்களின் ஆதரவைப் பெற்றுத்தருமென அவர்கள் உறுதியாக நம்பினர். இந்திரன் ‘புரந்தரா'
என்றழைக்கப்பட்டார். ‘புரந்தரா’ என்பதன் பொருள் குடியிருப்புகளை அழிப்பவன் என்பதாகும். அக்குடியிருப்புகள் ஒருவேளை வேலிகளைக் கொண்டதாக இருக்கலாம் அல்லது திட்டமிட்டு கட்டப்பட்ட நகரங்களாக இருக்கலாம்.
பரத, திரிசு ஆகியன அரசாட்சி செய்த ஆரியக் குலங்களாகும். வசிஷ்ட முனிவர் இவர்களுக்கு ஆதரவாக இருந்தார். பரத குலத்தின் பெயரை ஒட்டியே இந்தியப் பகுதிகளுக்கு ‘பாரதவர்ஷா’ எனும் பெயர் சூட்டப்பட்டது. பரத குலமானது பத்து தலைவர்களால் எதிர்க்கப்பட்டது. அவர்களுள் ஐவர் ஆரியர்களாவர். மற்றுமுள்ள ஐவர் ஆரியர் அல்லாதோர். இவர்களிடையே நடை
பெற்ற போர் ‘பத்து அரசர்களின் போர்’
என அறியப்படுகிறது. புருசினி ஆற்றங்கரையில் இப்போர் நடைபெற்றது. புருசினி ஆறு இன்றைய ரவி ஆறு என அடையாளங் காணப்பட்டுள்ளது. இப்போரில் சுதா என்பவன் பெற்ற வெற்றி பரத குலத்தின் மேலாதிக்கத்திற்கு வழி கோலியது. தோற்கடிக்கப்பட்ட குழுக்களில் ‘புரு’ வும் ஒன்றாகும். புரு மற்றும் பரதகுலத்தவர் ஒன்றிணைந்து குரு குலத்தைத் தோற்றுவித்தனர். பின்னாளில் குரு குலத்தவர் பாஞ்சாலர்களோடு இணைந்து மேலை கங்கைச்சமவெளியில் தங்கள் ஆட்சியை நிறுவினர்.
சமூகப் பிரிவுகள்
வேதகால ஆரிய மக்கள் ஆரியர் அல்லாத ஏனைய மக்களிடமிருந்து தங்களை மேம்படுத்திக் காட்டிக்கொண்டனர். நிறத்தையும் வகையையும் சுட்டிக்காட்டுவதற்காக ஆரியர்கள் ‘வர்ண’ என்ற சொல்லைப் பயன்படுத்தினர். ரிக் வேதம் ‘ஆரிய வர்ண', ‘தச வர்ண' என்று குறிப்பிடுகின்றது. தாசர்களும் தசயுக்களும் அடிமைகளாகக் கருதப்பட்டு பிடிக்கப்பட்டனர். பிற்காலத்தில் இவர்கள் சூத்திரர் என்று அறியப்பட்டனர். சமூகத்தில் போர் புரிபவர்கள், மத குருமார்கள், சாதாரண மக்கள் என்னும் பிரிவுகள் தோன்றின. ரிக் வேத காலத்தின் கடைப்பகுதியில் சூத்திரர் என்போர் தனிவகைப்பட்ட பிரிவாயினர். பொதுவாக அடிமை முறை இருந்தது. அடிமைகள் மதகுருமார்களுக்கு பரிசாக வழங்கப்பட்டனர். ஆனால் கூலித் தொழிலாளர் பற்றிய குறிப்புகள் ஏதும் காணப்படவில்லை. அடிமைகள் மத குருமார்களுக்குப் பரிசாக வழங்கப்பட்டனர். குதிரைகளால் இழுக்கப்பட்ட தேர்களையும், வெண்கலத்தாலான சில பொருள்களையும் சமூகத்தில் சிலர் மட்டுமே பெற்றிருந்தது சமூகத்தில் ஏற்றதாழ்வுகள் தோன்றியதை உணர்த்துகிறது. தொடக்க காலத்தில் சமூகம் சமத்துவத் தன்மை கொண்டதாகவே இருந்துள்ளது. சமூக வேறுபாடுகள் பிற்காலத்தில் தோன்றியுள்ளன. ரிக் வேதத்திலுள்ள ‘புருஷசுக்தம்’ என்னும் பகுதியில் கூறப்பட்டுள்ளவாறு பல வர்ணங்கள் இவ்வாறு தோன்றியுள்ளன. புருஷ பலியிடப்பட்டபோது அவனுடைய வாயிலிருந்து தோன்றியவர்கள் பிராமணர்கள், இரண்டு கைகளிலிருந்து தோன்றியவர்கள் சத்திரியர்கள், தொடைகளிலிருந்து பிறந்தவர்கள் வைசியர்கள், கால்களிலிருந்து தோன்றியவர்கள் சூத்திரர்கள் என்று கூறுகிறது. இந்தச் சமூக வேறுபாடுகள் தொடக்க வேதகாலத்தின் கடைசிப்பகுதியில் தோன்றியிருக்க வேண்டும் என கருதப்படுகிறது. மேலும் தொழில் அடிப்படையில் போர் புரிவோர், மத குருமார்கள், கால்நடை வளர்ப்போர், வேளாண்மை செய்வோர், சிகை அலங்காரம் செய்வோர் போன்றோரும் பூட்டப்பட்ட வண்டிகளில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு பல்வேறு இடங்களுக்குச் சென்று வணிகம் செய்தவர்கள் ஆவர். சில பாடல்களில் பானிகள் பகைவர்களாகப் பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இனக்குழுக்களும் குடும்பங்களும்
இரத்த உறவின் அடிப்படையிலேயே ரிக்வேத சமூகம் கட்டமைக்கப்பட்டிருந்தது. மக்கள் குறிப்பிட்ட குலங்களோடு இனங்காணப்பட்டனர். குலங்கள் ஒன்றிணைந்து ‘ஜனா’ எனும் சமூகம் ஆனது. ஜனா என்ற சொல்லுக்கு பழங்குடி, சமூகம் எனப் பொருள். ரிக் வேதத்தில் ‘ஜனா’ என்னும் சொல் 21 முறை இடம் பெற்றுள்ளது. ஆனால் ஜனபதா என்னும் சொல் ஒருமுறை கூட இடம் பெறவில்லை. சாதாரண மக்களைக் குறிப்பிடக் கூடிய ‘விஷ்’ என்னும் சொல் 170 முறை இடம் பெற்றுள்ளது. இவர்கள் கிராமங்களில் வாழ்ந்தனர். 'கிருஹா' எனும் சொல்லுக்கு குடும்பம் என்று பொருள். ஒரு இனக்குழுவினுள் குடும்பமே முக்கியமான சமூக அலகாகும். குடும்பத்திற்குத் தலைமையேற்றவன் ‘கிருகபதி’ ஆவான். அவன் மனைவி ‘ஸபத்தினி’ ஆவாள். இக்காலத்தில் குடும்பம் என்பது ஒருவேளை கூட்டுக்குடும்பமாக இருந்திருக்கலாம்.
பெண்கள்
பெண்கள் சமூகத்தில் மரியாதைக்குரிய இடத்தை வகித்தனர் என்ற போதிலும், அதைப் பொதுமைப்படுத்த முடியாது. சமூகம் தந்தைவழிச் சமூகமாக இருந்ததால் ஆண் குழந்தைகளுக்குச் சமூகத்தில் முக்கியத்துவம் வழங்கப்பட்டது. ஆண் குழந்தையின் பிறப்பும், கால்நடைகளின் பிறப்பும் பெரிதும் விரும்பப்பட்டது. அக்காலச் சமூக அமைப்பு இராணுவத்தன்மை கொண்டதாக இருந்ததால் போர் புரிவதற்கும் நிலங்களின் மேல் ஆதிக்கம் செலுத்துவதற்கும் ஆண் மக்கள் தேவைப்பட்டிருக்கலாம். பெண்கள் கிராமக் கூட்டங்களில் கலந்துகொண்டனர். வேள்விகளில் பங்கெடுத்தனர். திருமணம் செய்துகொள்வது நடைமுறையில் இருந்தாலும் புராதன மணமுறைகளும் பின்பற்றப்பட்டன. பலரைக் கணவராய் கொள்வது நடைமுறையில் இருந்ததாகத் தெரிகிறது. மறுமணமும் பழக்கத்தில் இருந்துள்ளது. பதினாறு - பதினேழு வயதில் திருமணம் நடைபெற்றதாக அறிஞர்கள் கருதுகின்றனர். வரலாற்று அறிஞர்கள் கருத்துப்படி அப்போது குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றதாகத் தெரியவில்லை .
பொருளாதாரம்
வேளாண்மை
ரிக்வேத மக்களிடையே வேளாண்மை வளர்ந்திருந்ததைத் தொல்லியல் சான்றுகள் சுட்டுகின்றன. கலப்பையின் கொழுமுனை ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வேளாண் நிலம் க்ஷேத்ரா என்று அறியப்பட்டிருந்தது. கிருஷி என்ற சொல் உழவைக் குறிப்பதாகும். லங்லா, சுரா ஆகிய சொற்கள் கலப்பையைக் குறிப்பனவாகும். சீத்தா என்ற சொல் கலப்பையின் கொழுமுனையைக் குறிப்பதாகும். எருதுகளைக் கொண்டும் சக்கரங்களின் துணையோடும் கிணறுகளிலிருந்து நீர் இறைத்து வேளாண்மை செய்யப்பட்டிருக்கலாம். பல்வேறு பருவ காலங்களையும் விதைத்தல், அறுவடை செய்தல், பதர் நீக்குதல் ஆகியன குறித்தும் அவர்கள் அறிந்திருந்தனர். அவர்கள் பார்லியையும் (யவம்) கோதுமையையும் (கோதுமா) பயிரிட்டார்கள்.
கால்நடை வளர்ப்பு
ஆரியர்கள் வேளாண்மை செய்தபோதிலும் கால்நடை வளர்ப்பையும் பொருளாதாரத்திற்காய் மேற்கொண்டனர். கால்நடைகள் சொத்தாகக் கருதப்பட்டன. ரிக் வேதத்தில் போர்களைக் குறிக்கப் பயன்பட்ட சொல்லான காவிஸ்தி என்னும் சொல்லின் பொருள் பசுக்களைத் தேடுவதாகும். தற்காலத்தில் மருவி பகைக்குழு என பொருள்படும் சொல் கோஷ்டி ஆகும். மதகுருமார்களுக்குப் பெரும்பாலும் பசுக்களையும் பெண் அடிமைகளையுமே நன்கொடையாக வழங்கினார்கள். நிலங்கள் கொடையாக வழங்கப்படாதது மேய்ச்சல் பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. நிலத்தைப் பொருத்தமட்டிலும் தனியுடைமை என்பது இருக்கவில்லை.
கைவினைத்தொழில்
மரவேலை செய்வோர், தேர்களைச் செய்வோர், துணி நெய்வோர், தோல் வேலை செய்வோர் ஆகியோரை ரிக்வேதம் குறிப்பிடுகின்றது. இக்காலத்தில் ஏற்பட்ட முக்கியமான வளர்ச்சிகளில் ஒன்று செம்பு உலோகவியலாகும். ரிக் வேதத்தில் இடம்பெறும் அயஸ் என்னும் சொல் செம்பையும் வெண்கலத்தையும் குறிக்கும். இரும்பைப் பற்றிய குறிப்புகள் ஏதும் ரிக் வேதத்தில் காணப்படவில்லை. உலோக வேலை செய்வோரைக் குறிக்கும் கர்மரா என்னும் சொல் ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைப்போலவே நூலைக் குறிக்கும் ஸ்ரி என்னும் சொல்லும், மரவேலை செய்வோரைக் குறிக்கும் தச்சன் என்ற சொல்லும் இடம் பெற்றுள்ளன. கம்பளி ஆடைகள் நெய்யப்பட்டதற்கான குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன. குளிர் காலத்திற்கு அவை நிச்சயம் தேவைப்பட்டிருக்கும். சில தொழில்கள் சிறப்பு நிபுணத்துவம் கொண்டவர்களைக் கொண்டு முழுநேரப் பணியாக செய்யப்பட்டது.
வணிகம் , பரிமாற்றம், மறு விநியோகம்
தொடக்க வேதகாலத்தில் வணிகர்கள் இருந்தபோதிலும் வணிக நடவடிக்கைகள் அதிகமாக இல்லை. பானி என்போர் வணிகர்கள் எனக் குறிப்பிடப்படுகின்றனர். பான் என்ற சொல்லுக்கு பண்டமாற்று என்று பொருளாகும். அவர்கள் ஒருவேளை வணிகர்களாக இருந்திருக்கலாம். நிஷ்கா என்பது தங்க அல்லது வெள்ளி அணிகலனாகும். இது பண்டமாற்றுப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டது. பண்டமாற்றே பரிவர்த்தனைக்கான வழியாகும். ஒரு மதகுரு தான் நடத்திக் கொடுத்த வேள்விக்காக 100 குதிரைகளையும் 100 நிஷ்காக்களையும் பெற்றுள்ளார். மற்றவர்களுக்கு வழங்கப்பட்ட தானங்களும் தட்சிணைகளும் செல்வத்தை மறுவிநியோகம் செய்வதற்கான வழிகளாகும். தக்சிணா என்பது குறிப்பிட்ட சேவைக்காக வழங்கப்பட்ட கட்டணமாகும். அதுவே செல்வ விநியோகத்திற்கான வழியுமாகும். பசுக்களை விநியோகம் செய்தது மேய்ச்சல் தொழில் பரவுவதற்கும் பொருளாதார உற்பத்தி பெருகுவதற்கும் உதவியது.
போக்குவரத்து
போக்குவரத்திற்குக் குதிரைகளே பெரிதும் பயன்படுத்தப்பட்டன. மாட்டு வண்டிகளும் குதிரை பூட்டிய தேர்களும் பயன்படுத்தப்பட்டன. கடல் (சமுத்ரா), படகுகள் (நாவ்) குறித்த குறிப்புகள் உள்ளன. 100 துடுப்புகளால் ஓட்டப்பட்ட படகுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
அரசுமுறையும் நிர்வாகமும்
ரிக்வேத கால அரசுமுறை என்பது இனக்குழு சமூகத்தின் அரசியலே ஆகும். இனக்குழுவின் தலைவரே அனைத்து நடவடிக்கைகளின் மையமாக இருந்துள்ளார். அவரே அரசியல் தலைமையாக இருந்தார். அவர் ராஜன் (அரசன்) என்றழைக்கப்பட்டார். அரசர்கள் பல தூண்களைக் கொண்ட அரண்மனைகளில் வாழ்ந்தனர். அவர்கள் மத குருமார்களுக்குக் கால்நடைகளையும் தேர்களையும் தங்க அணிகலன்களையும் பரிசாக வழங்கினர். ராஜன் ஒரு பாரம்பரியத் தலைவனாவார். ஒருவேளை அவர் சமிதி என்ற சபையினாலும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம். அரசருடைய மிக முக்கியப் பணி இனக்குழுவைக் காப்பதாகும். அவர் சொத்துக்களைப் பாதுகாத்தார், எதிரிகளோடு போரிட்டார், மக்களுக்காகக் கடவுளிடம் பிராத்தனை செய்தார். நிலப்பரப்பின் மீதும் மக்களின் மீதும் அவருக்கு அதிகாரமிருந்தது.
வேத சமூகம் இராணுவ இயல்பைக் கொண்டிருந்தது. வில் அம்புகளும், கோடரி, ஈட்டி, வாள் ஆகியவையே முக்கியப் போர்க்கருவிகளாயிருந்தன. போர்களின் போது சூறையாடிய செல்வமும் எதிரிகளிடமிருந்து பெற்ற கப்பமும் அரசனால் மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டதின் மூலம் மறுவிநியோகம் நடந்தது. தாசர்களும் அடிமைகளும் பரிசுப் பொருள்களாகக் கொடுக்கப்பட்டதாகக் குறிப்புகள் உள்ளன. புருக்களின் அரசர் திரசதஸ்யு 50 பெண்களைப் பரிசாகக் கொடுத்துள்ளார். இனக்குழுத் தலைவர்கள் ‘கோபா’ என்றும் ‘கோபதி’ என்றும் அழைக்கப்பட்டுள்ளனர். அவற்றின் பொருள் கால்நடைகளின் தலைவர் என்பதாகும்.
ரிக் வேதத்தில் சபா, சமிதி, விததா, கணா என்றழைக்கப்பட்ட அமைப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ‘சபா’ என்பது வயதில் மூத்தோர் அல்லது செல்வர்கள் பங்கேற்ற அமைப்பாகும். ‘சமிதி' என்பது மக்கள் கூடும் இடமாகும். வித்தா என்பது இனக்குழுக்களின் அமைப்பாகும். இராணுவம் மற்றும் மதம் சார்ந்த பணிகளை இவை மேற்கொண்டன. சபா மற்றும் 'வித்தா’க்களில் பெண்கள் பங்கேற்றனர். அரசர்கள் தங்களுடைய
செயல்பாடுகளுக்கு சமிதி, சபா ஆகிய அமைப்புகளின் ஆதரவை நாடினர். இத்தகைய அமைப்புகளின் உண்மையான இயல்புகள், அவை மேற்கொண்ட பணிகள் குறித்துக் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. வேதகால சமுதாயத்தைப் பற்றிய நம்முடைய புரிதலானது பெருமளவிற்கு, இது போன்ற பல சொற்களுக்கு அக்காலத்தில் தரப்படும் விளக்கங்களைச் சார்ந்தே அமைந்துள்ளது. சில சமயங்களில் உண்மையான பொருளை மீட்டுருவாக்கம் செய்வது கடினமாக உள்ளது.
மதகுருமார்கள் அரசருக்கு அறிவுரை வழங்கினர். வேதகால மத குருக்கள் அரசருக்கு ஆலோசனை வழங்கி, ஊக்கப்படுத்தி, புகழ்ந்து அரசர்களின் செல்வாக்கைப் பெற்றனர். இதற்காக அவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. சேனானி என்பவர் படைத் தலைவராவார். வரிவசூல் செய்யும் அதிகாரிகளைப் பற்றிய சான்றுகள் இல்லை. ஒரு வேளை மக்கள் தாமாகவே அரசனுக்கு வரி வழங்கியிருக்கலாம். அது ‘பலி’ எனப்பட்டது. சில அறிஞர்கள் பலி என்பது கட்டாயப்படுத்தி பெறப்பட்ட வரியே; தன்னார்வத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டதல்ல என்கிறார்கள். நீதி நிர்வாகம் குறித்துக் குறிப்புகள் ஏதுமில்லை. நிலப்பரப்பைக் கட்டுப்படுத்திய அதிகாரி விராஜபதி எனப்பட்டார். படைக்குழுக்களின் தலைவர்களான கிராமணி என்பவர்களுக்கு விராஜபதி உதவி செய்வார். கிராமங்களின் தலைவர் கிராமணியே ஆவார்.
வேதகால மதமும் சடங்குகளும்
வேதகாலச் சமூகத்தில் மதமும் சடங்குகளும் முக்கிய இடம் வகித்தன. ரிக்வேதத்தில் கால இயற்கை சக்திகளான சூரியன், சந்திரன், ஆறுகள், மலைகள், மழை ஆகியன தெய்வீகமானவையாகக் கொள்ளப்பட்டன. அவர்களின் மதம் இயற்கைத் தன்மையும் பல கடவுள் வழிபாடும் கொண்டது. இந்திரனே மிக முக்கியக் கடவுளாவார். அவர் ‘புரந்தரா’ என்றழைக்கப்பட்டார். நெருப்பு என்பது கடவுளுக்கும் மக்களுக்கும் இடையிலான தூதுவன் எனக் கருதப்பட்டது. இருளை அகற்றும் கடவுள் சூரியன். ‘உஷா’ எனும் பெண்கடவுள் விடியலின் கடவுளாவார். அதிதி, பிரித்வி, சினிவளி ஆகியோர் ஏனைய கடவுள்களாவர்.
நீர்க்கடவுள் 'வருணா' அடுத்த முக்கிய இடத்தை வகிக்கிறார். இயற்கையின் விதிகளை உயர்த்திப்பிடிப்பவர் இவரே. தாவரங்களின் கடவுள் 'சோமா'. அவற்றிலிருந்து பெறப்படும் பானம் அவர் பெயரிலேயே அழைக்கப்பட்டது. சோமபானம் அருந்துவது சடங்குகளின் ஒரு பகுதியாக குறிப்பிடப்படுகிறது. போதை தரும் சோமபானம் தயாரிக்கப்படும் முறைகளை விளக்கும் பல பாடல்கள் ரிக் வேதத்தில் உள்ளன. ‘மாருத்’ வலிமையின் கடவுள் ஆவார். வேறு சில கடவுளர்களைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அவை முன்னர் குறிப்பிடப்பட்டுள்ள கடவுளர்களைப் போல் முக்கியக் கடவுள்கள் அல்லர். ‘ருத்ரா’ அல்லது ‘சிவன்’ குறித்தும் சில குறிப்புகள் காணப்படுகின்றன.
அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளப்படும் பிரச்சனைகள் இடர்ப்பாடுகள் ஆகியவற்றுக்குத் தீர்வாக சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் சமூகத்தில் மதகுருமார்கள் முக்கியப்பங்கு வகித்தனர்.
சமூகத்தின் சிறப்பியல்புகள்
தொடக்க வேத காலத்தில் குலங்களும் இனக்குழுக்களும் சமூகத்தைக் கட்டமைத்தன. அரசர் ஒருசில அதிகாரங்களையே பெற்றிருந்தார். நிலப்பகுதிகளைக் கட்டுப்படுத்துவதற்காக ஆரியப் பழங்குடிகளும் ஆரியர் அல்லாத பழங்குடி இனக்குழுக்களும் போர்களில் ஈடுபட்டனர். வர்ணக் கோட்பாடும் ஆரியர்களின் அடையாளப் பெருமிதங்களும் இருந்தபோதிலும் பொதுவாகச் சமூகத்தில் பாகுபாடுகள் ஆழமாக வேரூன்றவில்லை. கால்நடை மேய்ச்சல் வாழ்க்கைமுறை முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. கால்நடைகளை மையப்படுத்திய மோதல்கள் அன்றாடம் நடந்தன. கால்நடை வளர்ப்பு, மேய்ப்பு ஆகியவற்றுக்கு அடுத்த நிலையில் வேளாண்மை முக்கிய இடம் வகித்தது. உலோகத்தினாலான பொருள்களும், மரத்தினாலான பொருள்களும் மட்பாண்டங்களும், துணிகளும், இன்னும் பல பொருள்களும் உற்பத்தி செய்யப்பட்டதைத் தொல்லியல் ஆய்வு உணர்த்துகின்றது.