Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | ஆக்குத் திசுக்கள்

பண்புகள் மற்றும் வகைப்பாடு, கொள்கைகள் - ஆக்குத் திசுக்கள் | 11th Botany : Chapter 9 : Tissue and Tissue System

11 வது தாவரவியல் : அலகு 9 : திசு மற்றும் திசுத்தொகுப்பு

ஆக்குத் திசுக்கள்

ஆக்குத்திசுக்கள் தாவர உடலில் அமைந்திருக்கும் விதம், தோற்றம், பணி, பகுப்படையும் திறன் ஆகியவற்றைப் பொறுத்துப் பல வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.

ஆக்குத் திசுக்கள்

 

1. பண்புகள் மற்றும் வகைப்பாடு (கிரேக்கம் - மெரிஸ்டோஸ் - பகுப்படும் திறன் Gr. Meristos-Divisible)

C. நகேலி (C. Nageli) (1858) என்ற வல்லுநர் ஆக்குத்திசு என்ற பெயரைச் சூட்டினார்.

• ஆக்குத்திசு செல்கள் ஒத்த விட்டம் கொண்ட முட்டை, உருண்டை அல்லது பலகோண வடிவச் செல்கள் ஆகும்.

• பொதுவாக இச்செல்கள் அடர்ந்த சைட்டோபிளாசத்தையும், தெளிவான உட்கருவினையும் கொண்டுள்ளன.

• பொதுவாக நுண்குமிழ்ப்பைகள் சிறியனவாகவோ அல்லது இல்லாமலோ இருக்கலாம்.

• இதன் செல் சுவர் மெல்லியது, முக்கியமாகச் செல்லுலோஸினால் ஆனது, நெகிழும் தன்மையுடையது.

• இச்செல்கள் பொதுவாகத் தீவிரமாகப் பகுப்படும் திறன் உடையன.

• ஆக்குத்திசுவின் செல்கள் பொதுவாக இடைவிடாமல் தானே பகுப்படையும் திறன் கொண்டவை.


ஆக்குத்திசுவின் வகைப்பாடு


ஆக்குத்திசுக்கள் தாவர உடலில் அமைந்திருக்கும் விதம், தோற்றம், பணி, பகுப்படையும் திறன் ஆகியவற்றைப் பொறுத்துப் பல வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.

 


ஆக்குத்திசுவின் வகைப்பாடு



ஆக்குத்திசுவின் அமைப்பாக்கக் கொள்கைகளும் பணிகளும்


வேர், தண்டு நுனி ஆக்குத்திசுவின் எண்ணிக்கை, அமைப்பு முறை அடிப்படையில் கீழ்கண்ட கொள்கைகள் உள்ளமைப்பியல் வல்லுநர்களால் முன் வைக்கப்பட்டுள்ளன.

 

தண்டு - நுனி ஆக்குத்திசு பற்றிய கொள்கைகள்


1. நுனிசெல் கொள்கை (Apical cell theory):

இதனை உருவாக்கியவர் ஹாப்மெஸ்டெர் (1852). இதை C. நகேலி (1859) ஆதரித்தார். தனி ஒரு நுனி செல்லே ஆக்குத் திசுவின் அமைப்பு மற்றும் செயல் அலகாகும். இந்த நுனி செல்லே முழுத் தாவர வளர்ச்சிக்கு அடிகோலுகிறது. இது பாசிகள், பிரையோஃபைட்கள் மற்றும் பெரிடோஃபைட்கள் ஆகிய தாவரங்களுக்குப் பொருந்தும்.



2. ஹிஸ்டோஜென் கொள்கை (Histogen theory):

ஹிஸ்டோஜென் கொள்கையை உருவாக்கியவர் ஹேன்ஸ்டீன் (1868). இதை ஸ்டார்ஸ்பர்க்கர் ஆதரித்தார். தண்டின் நுனிப்பகுதி மூன்றடுக்கு வேறுபட்ட பகுதிகளைக் கொண்டுள்ளது அவை.

1. டெர்மட்டோஜென் (Dermatogen): இது ஆக்குத்திசுவின் புற அடுக்காகும். இது புறத்தோல் அடுக்கினைத் தோற்றுவிக்கிறது.

2. பெரிப்ளம் (Periblem): இது ஆக்குத் திசுவின் மைய அடுக்காகும். இது புறணிப் பகுதியைத் தோற்றுவிக்கிறது.

3. பிளிரோம் (Plerome): இது ஆக்குத் திசுவின் உள் அடுக்காகும். இது ஸ்டீல்பகுதியைத் தோற்றுவிக்கிறது.

3. டூனிகா - கார்பஸ் கொள்கை (Tunica corpus theory):

டூனிகா - கார்பஸ் கொள்கையினை உருவாக்கியவர் A. ஷ்மிட் (1924). தண்டு நுனி ஆக்குத்திசு இரண்டு திசுப்பகுதிகளை கொண்டது.

1. டூனிகா: இது தண்டு நுனியின் வெளிப்பகுதி. இது புறத்தோலினை உண்டாக்குகிறது.

2. கார்பஸ்: இது தண்டு நுனியின் உள்பகுதி. இப்பகுதி தண்டின் புறணியையும் ஸ்டீல் பகுதியையும் உண்டாக்குகிறது. 

 

வேர் - நுனி ஆக்குத்திசு (Tunica corpus theory)

வேர் நுனி, தண்டின் நுனிப்பகுதிக்கு நேர் எதிரில் அமைந்துள்ளது. வேரில் நுனிப்பகுதி வேர்மூடியை கொண்டுள்ளது. இதற்குக் கீழே நுனி ஆக்குத் திசு அமைந்துள்ளது. 

வேர் நுனி ஆக்குத்திசு பற்றிய மாறுபட்ட கொள்கைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

1. நுனிசெல் கொள்கை (Apical cell theory)

நுனிசெல் கொள்கையினை உருவாக்கியவர் C. நகேலி (C. Nageli) ஒரே ஒரு நுனிசெல் அல்லது நுனி தோற்றுவி செல் ஆக்குத்திசுவை உண்டாக்குகிறது. இச்செல் நான்முக வடிவமானது. இதன் ஒரு பக்கம் வேர் மூடியை உண்டாக்குகிறது. இதன் மற்ற மூன்று பக்கங்கள் புறத்தோல், புறணி வாஸ்குலத் திசுக்களை உண்டாக்குகிறது. இது வாஸ்குலக் கிரிப்டோகேம்களில் காணப்படுகிறது.

2. ஹிஸ்டோஜென் கொள்கை (Histogen theory):

ஹிஸ்டோஜென் கொள்கையை உருவாக்கியவர் ஹேன்ஸ்டீன் (1860) ஆவார். ஸ்டார்ஸ்பர்க்கர் என்பவர் இக்கொள்கையை ஆதரித்தார். வேர் நுனி ஆக்குத் திசுவில் நான்கு ஹிஸ்டோஜென்கள் இருப்பதாக இக்கொள்கை கூறுகிறது. அவைகள் முறையே,

1. டெர்மடோஜென் : இது வெளிப்புற அடுக்கு. இது வேரின் புறத்தோல் பகுதியை உண்டாக்குகிறது.

2. பெரிப்ளம்: இது மைய அடுக்கு. இது புறணி பகுதியை உண்டாக்குகிறது.

3. பிளிரோம்: இது உள் அடுக்கு. இது ஸ்டீல் பகுதியை உண்டாக்குகிறது.

4. கேலிப்ட்ரோஜென் (Calyptrogen): இது வேர் மூடிப்பகுதியை உண்டாக்குகிறது.

3. கோர்ப்பர் - கப்பே கொள்கை (Korper kappe theory):

கோர்ப்பர் - கப்பே கொள்கையை முன் வைத்தவர் ஷீயெப் வேரின் நுனி இரண்டு பகுதிகளைக் கொண்டது கோர்ப்பர் மற்றும் கப்பே.

1. கோர்ப்பர் பகுதி: இது உடல் பகுதியை உண்டாக்குகிறது.

2. கப்பே பகுதி : இது வேர்மூடிப் பகுதியை உண்டாக்குகிறது. இது தண்டு நுனியின் டூனிகா - கார்பஸ் கொள்கையினை ஒத்துள்ளது. 'T' வகை பகுப்படைதல், இருவேறு முறைகளில் வேறுபடுத்தப்படுகிறது. (இது Y வகை பகுப்படைதல் எனவும் அழைக்கப்படுகிறது). தலைகீழான T வகை பகுப்படையும் பகுதி கோர்ப்பர் எனவும், நேரான T வகை பகுப்படையும் பகுதி கப்பே எனவும் அழைக்கப்படுகிறது.

4. உறக்க மையக் கொள்கை (Quiescent centre concept)

வேர் நுனி ஆக்குத்திசுவின் செயல்பாட்டினை விளக்கும் உறக்க மையக் கொள்கையை வெளிப்படுத்தியவர் க்ளாவ்ஸ் (Clowes) (1961). இப்பகுதியானது வேர் மூடிக்கும், வேரின் வேறுபாடடைகின்ற செல்களுக்குமிடையே காணப்படுகிறது. வேர் ஆக்குத்திசு பகுதியிலமைந்த தெளிவான செயலூக்கமற்ற பகுதி உறக்க மையம் எனப்படும். இது ஹார்மோன் உற்பத்தி மையமாகவும் மற்றும் ஆக்குத்திசு செல்களை உருவாக்கும் பகுதியாகவும் உள்ளது.


Tags : Characteristics, classification, Theories பண்புகள் மற்றும் வகைப்பாடு, கொள்கைகள்.
11th Botany : Chapter 9 : Tissue and Tissue System : Meristematic Tissue Characteristics, classification, Theories in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 9 : திசு மற்றும் திசுத்தொகுப்பு : ஆக்குத் திசுக்கள் - பண்புகள் மற்றும் வகைப்பாடு, கொள்கைகள் : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 9 : திசு மற்றும் திசுத்தொகுப்பு