பயிர்
மேம்பாட்டிற்கான பயிர்ப்பெருக்க முறைகள்
அதிக மகசூல் தரும் பயிர்
ரகங்களை உற்பத்திச் செய்யும் பயிர்ப்பெருக்க முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. புதிய வகைத்
தாவரங்களின் அறிமுகம்.
2. தேர்வு
செய்தல்
3. பன்மய
பயிர்ப்பெருக்கம்
4. சடுதிமாற்றப்
பயிர்ப்பெருக்கம்
5. கலப்பினமாக்கம்
இது அதிக மகசூல் தரும் தாவர
வகைகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அறிமுகம் செய்யும்
செயல்முறையாகும். இத்தகைய தாவரங்கள் அயல் இனங்கள் என அழைக்கப்படுகின்றன.
இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட தாவரங்களில் நோய்க் கிருமிகளும், பூச்சிகளும்
இருக்கலாம். எனவே அவை அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னர் தாவர நோய்த் தொற்றுத்
தடுப்பு முறைகள் மூலம் முற்றிலும் சோதிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக பேசியோலஸ்
முங்கோ என்ற உளுந்து ரகம் சீனாவில் இருந்து அறிமுகம் செய்யப்பட்டது.
புறத்தோற்றத்தை அடிப்படையாகக்
கொண்டு சிறந்த தாவர ரகங்களைத் தாவரக்கூட்டத்தில் இருந்து பிரித்தெடுக்கும் பழம்
பெரும் முறை “தேர்வு செய்தல்" ஆகும்.
தேர்வு
முறைகள்
மூன்று வகையான தேர்வு முறைகள்
உள்ளன.
1. கூட்டுத்
தேர்வு முறை
2. தூய வரிசைத்
தேர்வு முறை
3. போத்துத்
தேர்வு முறை (குளோனல் தேர்வு முறை)
பல வகைப் பண்புகள் கொண்ட
தாவரங்களின் கூட்டத்தில் இருந்து விரும்பத் தக்க பண்புகளைக் கொண்ட சிறந்த தாவரங்களின்
விதைகள் சேகரிக்கப் படுகின்றன. இந்த விதைகளிலிருந்து இரண்டாம் தலைமுறை தாவரங்கள்
உருவாக்கப்படுகின்றன. இச்செயல்முறை ஏழு அல்லது எட்டு தலைமுறைகளுக்குத் தொடர்ந்து
செய்யப்படுகிறது. இறுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட விதைகள் அதிக எண்ணிக்கையில்
உற்பத்தி செய்யப்பட்டு,
விவசாயிகளுக்கு பயிரிடுவதற்காக விநியோகிக்கப்படுகிறது.
வேர்க்கடலை ரகங்களான TMV - 2 மற்றும்
AK-10 ஆகியவை கூட்டுத் தேர்வுக்கான சில எடுத்துக்காட்டுக்கள்
ஆகும். கூட்டுத் தேர்வு முறையின் சுருக்க வரைபடம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தூய வரிசை என்பது “தனி உயிரியில்
இருந்து தற்கலப்பு மூலம் பெறப்பட்ட சந்ததி” ஆகும். இது “தனித் தாவரத் தேர்வு” எனவும் அழைக்கப்படுகிறது.
இம்முறையில் தன் மகரந்தச் சேர்க்கைக்கு உட்படுத்தப்பட்ட ஒரு தனித் தாவரத்தில்
இருந்து ஏராளமான தாவரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தனித்தனியே
அறுவடைச் செய்யப்படுகின்றன. அவற்றில் இருந்து தாவர சந்ததிகள் தனித்தனியே மதிப்பீடு
செய்யப்படுகின்றன. அவற்றுள் மிகச் சிறந்தது “தூய வரிசை"
என வெளியிடப்படுகிறது. இந்த சந்ததிகள், புறத் தோற்றத்திலும்
ஜீனாக்கத்திலும் ஒத்துக் காணப்படுகின்றன.
ஒரு தனித் தாவரத்திலிருந்து
உடல இனப்பெருக்கம் அல்லது பாலிலா இனப்பெருக்கத்தின் மூலம் உருவாக்கப்பட்ட
தாவரங்களின் கூட்டமே குளோன்கள் எனப்படுகின்றன. இதன் மூலம்
உருவான அனைத்து தாவரங்களும் புறத் தோற்றத்திலும் ஜீனாக்கத்திலும் ஒத்துக்
காணப்படுகின்றன. உடலப் பெருக்கத்தின் மூலம் உருவான பலவகைத் தாவரங்களின்
கூட்டத்திலிருந்து விரும்பத்தக்க போத்துக்களைத் தேர்வு செய்யும் முறையே “போத்து தேர்வு
முறை”
என அழைக்கப்படுகிறது.
பாலினப் பெருக்கம் செய்யும்
தாவரங்களின் உடல செல்களில் இரண்டு முழுமையான தொகுதி குரோமோசோம்கள் உள்ளன. இதுவே இரட்டை
மயம் (2n) எனப்படும். கேமீட்டுகளில் (இனச்செல்களில்) ஒரே ஒரு தொகுதி குரோமோசோம்
மட்டுமே உள்ளது. இது “ஒற்றைமயம்" (n) என்று அழைக்கப்படுகிறது. இரண்டுக்கும் மேற்பட்ட
தொகுதி குரோமோசோம்களைக் கொண்ட உயிரினம் "பன்மயம்" (Greek:
Polys = many + aploos = One fold + eidos=form) எனப்படும். இந்த
நிலை “பல தொகுதியாக்கும் இயல்பு”
எனப்படும். இது வெப்பம், குளிர், x - கதிர்
போன்ற இயற்பியல் காரணிகளாலும், கால்ச்சிசின் போன்ற வேதிக்காரணிகளாலும்
தூண்டப்படுகிறது.
பன்மய பயிர்ப்பெருக்கத்தின்
சில சாதனைகள் கீழே தரப்பட்டுள்ளன.
அ. விதைகளற்ற தர்பூசணி (3n) மற்றும்
வாழை (3n)
ஆ. பெரிய தண்டும், வறட்சி
எதிர்ப்புத் தன்மையும் கொண்ட மும்மய தேயிலை TV-29
இ. டிரிட்டிக்கேல் (6n) என்பது
கோதுமை மற்றும் ரை ஆகிய இரண்டிற்கும் இடையே கலப்பு செய்து பெறப்பட்ட கலப்புயிரி
ஆகும். இதை வளமுடையதாக மாற்ற, பன்மயம் தூண்டப்பட்டது. இது
அதிக நார்ச்சத்தும் புரதமும் கொண்டது.
ஈ. கால்ச்சிசின் சிகிச்சையால்
உருவாக்கப்பட்ட ரப்பனோ பிராசிக்கா ஒரு அல்லோடெட்ராபிளாய்டு (4n) ஆகும்.
ஒரு உயிரினத்தின் DNA வின்
நியூக்ளியோடைடு வரிசையில் திடீரென ஏற்படும், பாரம்பரியத்துக்கு
உட்படும் மாற்றமே சடுதிமாற்றம் எனப்படும். இது மரபியல் வேறுபாடுகளை
உண்டாக்குவதன் மூலமாக, உயிரினங்களில் மாற்றங்களை
ஏற்படுத்தும் செயல் ஆகும். சடுதிமாற்றத்துக்கு உட்படும் உயிரினம் “சடுதிமாற்றமுற்ற உயிரினம்” (mutant)
எனப்படும்.
சடுதிமாற்றத்தைத் தூண்டும்
காரணிகள் "மியூடாஜென்கள்” அல்லது “சடுதிமாற்றத்
தூண்டிகள்" எனப்படும் சடுதி மாற்றத் தூண்டிகள்
இருவகைப்படும். அவை இயற்பியல் சடுதிமாற்றத் தூண்டிகள் மற்றும் வேதியியல்
சடுதிமாற்றத் தூண்டிகள் ஆகும்.
மேலும் அறிந்து கொள்வோம்
காமாத் தோட்டம்
காமாத்
தோட்டம் அல்லது அணுப் பூங்கா என்பது இரண்டாம் உலகப் போருக்கு பிறகு அணு
சக்தி ஆற்றலை பயிர் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்தும் ஒரு பிரபலமான கருத்தாக்கம்
ஆகும். இது ஒரு தூண்டப்பட்ட சடுதிமாற்ற பயிர்ப்பெருக்க முறையாகும். இதில் கோபால்ட்
- 60 அல்லது சீசியம்- 137 இல் இருந்து காமாக்கதிர்கள்
பயிர் தாவரங்களில் விரும்பத்தக்க சடுதி மாற்றங்களைத் தூண்டுவதற்குப்
பயன்படுத்தப்பட்டன.
i) இயற்பியல் சடுதிமாற்றத் தூண்டிகள்
சடுதிமாற்றத்தைத் தூண்டும்
கதிர் வீச்சுகளான X
- கதிர்கள், α, β மற்றும் γ - கதிர்கள், புற ஊதாக்
கதிர்கள் மற்றும் வெப்பநிலை போன்றவை இயற்பியல் சடுதிமாற்றத் தூண்டிகள் எனப்படும்.
ii) வேதியியல் சடுதிமாற்றத் தூண்டிகள்
சடுதிமாற்றத்தைத் தூண்டும்
வேதிப் பொருட்கள் வேதியியல் சடுதிமாற்றத் தூண்டிகள் எனப்படும். (எ.கா) கடுகு வாயு
மற்றும் நைட்ரஸ் அமிலம்.
பயிர் மேம்பாட்டிற்கு
தூண்டப்பட்ட சடுதி மாற்றத்தைப் பயன்படுத்துவதே “சடுதிமாற்ற பயிர்ப்பெருக்கம்” எனப்படும்.
சடுதிமாற்ற
பயிர்ப்பெருக்கத்தின் சாதனைகள்
சடுதிமாற்ற பயிர்ப்பெருக்கத்தின்
சில சாதனைகளைக் கீழே காணலாம். அ. ஸொனாரா - 64 என்ற கோதுமை ரகத்தில் இருந்து
காமாக்கதிர்களைப் பயன்படுத்தி சர்பதி ஸொனாரா என்ற கோதுமை ரகம்
உருவாக்கப்பட்டது.
ஆ. உவர் தன்மையைத் தாங்கும்
திறன் மற்றும் தீங்குயிரி எதிர்ப்புத் தன்மை பெற்ற அட்டாமிட்டா 2 அரிசி ரகம்.
இ. கடினமான கனி
உறை கொண்ட நிலக்கடலை ரகம்
கலப்பினமாக்கம் என்பது
"இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வகைத் தாவரங்களைக் கலப்பு செய்து, அவற்றின்
விரும்பத்தக்க பண்புகளை, “கலப்புயிரி" என்ற ஒரே சந்ததியில் கொண்டு வரும் செயல்முறை ஆகும். கலப்புயிரியானது
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பண்புகளில் இரண்டு பெற்றோரையும் விட மேம்பட்டதாக
இருக்கும். மரபியல் வேறுபாடுகளை ஏற்படுத்தி மேம்பட்ட வகை ரகங்களை உருவாக்கும்
பொதுவான முறையே கலப்பினமாக்கம் ஆகும்.
கலப்பின
ஆய்வு : டிரிட்டிக்கேல் (மனிதன் உருவாக்கிய முதல் கலப்பின தானியம்)
டிரிட்டிக்கேல் என்பது மனிதன்
உருவாக்கிய முதல் கலப்பின தானியமாகும். இது கோதுமை (டிரிட்டிகம் டியூரம், 2n = 28) மற்றும்
ரை (சீகேல் சிரியேல், 2n = 14) ஆகியவற்றை கலப்பு
செய்ததால் கிடைக்கப் பெற்றது. இதனால் உருவான F1 கலப்புயிரி
வளமற்றது (2n = 21). பின்னர் கால்ச்சிசினைப் பயன்படுத்தி,
அதன் குரோமோசோம் எண்ணிக்கையை இரட்டிப்படையச் செய்து, உருவாக்கப்பட்டதே டிரிட்டிக்கேல் (2n = 42) என்ற
ஹெக்சாபிளாய்டு ஆகும்.
பயிர்ப்பெருக்கம் மற்றும்
தேர்ந்தெடுத்தல் ஆகியவற்றின் சுழற்சியானது விரும்பத் தக்க பண்புகளைக் கொண்ட
தாவரங்கள் உருவாகும் வரைத் தொடர்கிறது. புதிய ரக பயிர் வகைகளை உற்பத்திச் செய்வது
ஒரு நீண்டகால செயல்பாடாகும். இரண்டு தாவரங்களின் பண்புகளை ஒரே தாவரத்தில்
ஒன்றிணைப்பதும், அதன் கலப்பின வீரியத்தைப் பயன்படுத்துவதும் கலப்பினமாக்கலின் இரு முக்கிய
அம்சங்களாகும்.