மனிதக் குடியிருப்புகள் - புவியியல் - குடியிருப்புகளின் தோற்றம் மற்றும் வளர்ச்சி | 12th Geography : Chapter 2 : Human Settlements
குடியிருப்புகளின் தோற்றம் மற்றும் வளர்ச்சி
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவின் பெரும் பிளவுப்
பள்ளத்தாக்குப் பகுதியில் மனிதர்கள் தோன்றினர் என்று பெரும்பாலான மானுடவியலாளர்கள்
நம்புகிறார்கள். அங்கிருந்து அவர்கள் மத்திய கிழக்கு ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும்
ஓசியானிவிற்குப் பரவினர்.
புதிய கற்காலப்புரட்சி (விவசாயப்புரட்சி) மெசபடோமியாவில் தோன்றியது.
வேட்டையாடுபவர்களாகவும், உணவு சேகரிப்பவர்களாகவும், நாடோடிகளாகவும் இருந்த மக்கள் விலங்குகளை
வீட்டு விலங்குகளாகப் பழக்கப்படுத்துபவர்களாக மாறினர். மக்கள் தொகை விரைவாக வளர்ச்சி
அடைந்தது. சில இடங்களில் நகர்ப்புற மக்களின் தோற்றமும் உருவாகியது. பெரும்பாலும் நைல்,
கங்கை, யாங்சிகியாங் ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் விவசாயம் செழிப்படைந்தது. இந்த இடங்களில்
ஆண்டுதோறும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக மண் வளம் மிகுந்திருந்ததால் அறுவடை
மிகுதியாகக் காணப்பட்டது. உலகின் முதல் நகரங்கள் இப்பகுதிகளில் தோன்றின. விவசாயம் அல்லாத
நகர்ப்புற மக்களுக்கு உணவளிக்க இப்பகுதி மக்கள் மிகுதியான உணவை உற்பத்தி செய்தனர்.
இதன் விளைவாக பல்வேறு துறைகளில் சிறப்புப் பயிற்சி பெற்ற மக்கள் தோன்றினர். மதகுருக்கள்,
உரை எழுதுபவர்கள், கட்டிடக் கலைஞர்கள், விவசாயிகள், வீரர்கள், வணிகர்கள் மற்றும் கொல்லர்கள்
ஆகியோர் இங்கே குடியேறினர்.