Home | 12 ஆம் வகுப்பு | 12வது புவியியல் | நகரமயமாதல் - உலகம் மற்றும் இந்தியா

மனிதக் குடியிருப்புகள் - புவியியல் - நகரமயமாதல் - உலகம் மற்றும் இந்தியா | 12th Geography : Chapter 2 : Human Settlements

   Posted On :  27.07.2022 05:34 pm

12 வது புவியியல் : அலகு 2 : மனிதக் குடியிருப்புகள்

நகரமயமாதல் - உலகம் மற்றும் இந்தியா

நகரமயமாதல் என்பது கிராமப்புறத்திலிருந்து நகரக் குடியிருப்புகளை நோக்கி மக்கள் இடம் பெயர்ந்து நகர மக்களின் சதவிகிதம் படிப்படியாக அதிகரித்து மாறும் சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிகொள்வது போன்றவற்றைக் குறிப்பதாகும்

நகரமயமாதல் - உலகம் மற்றும் இந்தியா

நகரமயமாதல் என்பது கிராமப்புறத்திலிருந்து நகரக் குடியிருப்புகளை நோக்கி மக்கள் இடம் பெயர்ந்து நகர மக்களின் சதவிகிதம் படிப்படியாக அதிகரித்து மாறும் சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிகொள்வது போன்றவற்றைக் குறிப்பதாகும். மையப் பகுதிகளில் வசித்து பணிபுரியும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் நகரங்களும் மற்றும் மாநகரங்களும் பெரிய அளவில் உருவாகும் ஒரு செயல் முறையே நகரமயமாதல் ஆகும். நகரமயமாதலும் மற்றும் நகரவளர்ச்சியும் மாறி மாறி பயன்படுத்தப்பட்டாலும் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபடுத்தப் படவேண்டும். நகரம் என வரையறுக்கப்பட்ட பகுதியில் வாழும் மொத்த தேசிய மக்களின் சதவிகிதமே நகரமயமாதலாகும். மாறாக, நகர வளர்ச்சி என்பது நகரம் என வரையறுக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களின் அறுதி எண்ணிக்கையாகும். 2008 ஆம் ஆண்டு இறுதியில் உலக மக்கள் தொகையில் பாதிக்கு மேல் நகரப் பகுதியில் வசிப்பார்கள் என ஐநா சபை மதிப்பிட்டுள்ளது. 2050ஆம் வருடத்திற்குள் 64 சதவிகித வளரும் நாடுகளும் 86 சதவிகித வளர்ந்த நாடுகளும் நகரமயமாக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரத்திற்கு பிறகு கலப்புப் பொருளாதாரத்தை ஏற்றுக் கொண்ட பிறகே இந்தியாவில் நகரமயமாதல் துரிதப்படுத்தப்பட்டது. கலப்புப் பொருளாதாரம் தனியார் துறை வளர்ச்சிக்கு வித்திட்டது. இந்தியாவில் நகரமயமாதல் அதிவேகமாக நடைபெறுகிறது.

1901 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நகரப்பகுதியில் வசிப்போர் 11.4 சதவிகிதமாக இருந்தனர். இது 28.53 சதவிகிதமாக 2001ல் உயர்ந்து 30 சதவிகிதத்தை கடந்து 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 31.16 சதவிகிதத்தில் உள்ளது. ஐநா சபை மக்கள் தொகை அறிக்கை 2007 த்தின் படி 2030க்குள் 40.76 சதவிகித மக்கள் நகரப்பகுதியில் வசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறார்கள். உலக வங்கியின் ஆய்வுப்படி, சீனா, இந்தோனேசியா, நைஜீரியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகியவற்றோடு இந்தியாவும் சேர்ந்து 2050ல் உலக நகர மக்கள் தொகை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும். மும்பை 20ஆம் நூற்றாண்டில் பெரிய அளவிலான கிராமப்புற - நகர்புற இடம்பெயர்தலை கண்டது. மும்பை 2018ல் 22.1 மில்லியன் மக்கள் தொகையுடன் இந்தியாவின் மிகப்பெரிய மாநகரமாக விளங்குகிறது. அதைத் தொடர்ந்து டெல்லி 18.6 மில்லியன் மக்கள் தொகையுடன் இரண்டாவது பெரிய மாநகரமாகும். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி அதிவேக நகரமயமாதல் வளர்ச்சியைக் கொண்டு டெல்லி மக்கள் தொகை 4.1 சதவிகிதமாக உயர்கிறது. அதைத் தொடர்ந்து மும்பை 3.1 சதவிகிதத்திலும் கொல்கத்தா 2 சதவிகிதத்திலும் வளர்ச்சியடைந்துள்ளது.


 

நகர்புற விளிம்பு

நகர்ப்புற விளிம்பு என்பது நன்கு அறியப்பட்ட நகர்புறப் பயன்பாடுகள் காணப்படும் நிலத்திற்கும், வேளாண் தொழிலுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்திற்குமிடையில் உள்ள மாற்றம் (transition) நிகழும் பகுதியாகும். இப்பகுதியில் கிராம மற்றும் நகர நிலப் பயன்பாடுகள் கலந்திருப்பதோடு கிராம நிலப்பயன்பாடு நகர நிலப்பயன்பாடாகவும் மாறி வருகிறது. நகரவிளிம்பானது குடியிருப்புகள் மற்றும் வர்த்தக மையங்களைக் கொண்டு ஒரு முறையான மாநகரம் போன்று தோற்றமளித்தாலும், ஒரு மாநகரத்திற்கு தேவையான சேவைகளான குழாய் நீர் விநியோகம், கழிவுநீர் மற்றும் குப்பை அகற்றும் வசதிகள் போன்றவை இருக்காது. முக்கிய மாநகரத்தோடு அதன் தொடர்ச்சியான நகராட்சி நகரங்கள் மற்றும் முழுவதும் நகரமயமான வருவாய் கிராமங்கள் ஆகியவை நகர விளிம்பில் அடங்கும்.

 

நகர்ப்புற விரிவாக்கம் அல்லது புறநகர் விரிவாக்கம்

நகர்ப்புற விரிவாக்கம் அல்லது புறநகர் விரிவாக்கம் என்பது மத்திய நகர்ப்புறப் பகுதிகளிலிருந்து அடர்த்தி குறைந்த ஒரே ஒரு நிலப்பயன்பாடு கொண்ட மற்றும் பொதுவாக மோட்டார் வாகனத்தை மட்டும் சார்ந்த குழுக்கள் வாழும் பகுதியில் மக்கள் தொகை விரிவாக்கம் நடைபெறுவதை விவரிக்கிறது. இச்செயல்முறை புறநகர் விரிவாக்கம் என்றும் அழைக்கப்படும். நகரமயமாதலின் ஒரு வடிவத்தை விளக்க முற்படுவதோடு நகர்ப்புற விரிவாக்கம் என்ற சொல் வளர்ச்சியின் காரணமாக ஏற்படும் சமூக, சுற்றுச்சூழல் விளைவுகளை விளக்குகிறது. இது போன்ற இயக்கங்களையும், நிகழ்வுகளையும் விளக்க நகர்ப்புறமயமாக்கல் (Peri Urbani Sation) என்ற சொல் ஐரோப்பாக் கண்டத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனாலும் ஐரோப்பிய சுற்றுச்சூழல் நிறுவனம் தற்போது நகர்ப்புற விரிவாக்கம் என்ற சொல்லைப் பயன்படுத்தி வருகிறது. விரிவாக்கம் என்பதில் எவற்றை சேர்ப்பது மற்றும் அவற்றை எவ்வாறு எண்களால் கணக்கிடுவது என்பதில் கருத்து வேறுபாடுள்ளது. எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு ஏக்கருக்கு சராசரியாக எத்தனை குடியிருப்புப் பகுதிகள் உள்ளன என்பதை வைத்து மட்டுமே சில வர்ணனையாளர்கள் விரிவாக்கத்தை அளவிடுகின்றனர் மற்றும் சிலர் விரிவாக்கத்தைப் பரவலாக்கலுடன் (Decentralization) தொடர்புபடுத்துகின்றனர். (ஒரு தெளிவான மையமின்றி மக்கள் தொகை பரவியிருத்தல்), தொடர்ச்சியின்மை (தவளைப் பாய்ச்சல் வளர்ச்சி) பயன்பாடுகளை வகைப்படுத்துதல் போன்றவை.

 

நகர்ப்புற விரிவாக்கத்துக்கான காரணங்கள்

நகர்ப்புற விரிவாக்கம் பல காரணிகளால் ஏற்படுகின்றன. அவையாவன:

குறைவான நில வீதங்கள்: குறைந்த விலையில் நிலமும், வீடுகளும் புறநகர்ப் பகுதிகளில் கிடைக்கின்றன. நகர்ப்புற வளர்ச்சி மையங்கள் மக்களை அங்கு தங்கவிடாமல் செய்வதால் மக்கள் வெளியேற விரும்புகின்றனர்.

வாழ்க்கைத்தரம் உயர்தல்: வாழ்க்கைத் தரமும் சராசரி குடும்ப வருமானமும் உயர்ந்து இருப்பதால் மக்கள் தொலை தூரத்திலுள்ள பணியிடங்களுக்கு செல்லவும், வீட்டுக்குத் திரும்பி வரவும் தேவையான பணத்தை செலவிடும் திறன் பெற்றவர்களாக உள்ளனர்.

நகர்புறத் திட்டமின்மை: குறைவான போக்குவரத்து நெரிசல் மற்றும் அமைதியான சூழல் ஆகியவற்றை மக்கள் விரும்புவதால் அவர்கள் விளிம்பை நோக்கி நகருகிறார்கள். கட்டுக்கடங்காத வளர்ச்சி, மரங்களை வெட்டுதல், பசுமைப் பரப்பு இழப்பு, நீண்ட போக்குவரத்து நெரிசல்கள், மோசமான உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவை மக்களைப் புதிய இடங்களுக்குச் செல்ல கட்டாயப்படுத்துகின்றன.

குறைவான வீட்டு வரி வீதங்கள்: மாநகரங்களில் வழக்கமாக சொத்துவரிகள் அதிகமாக இருப்பதால் இதைத் தவிர்க்க மக்கள் புறநகர் பகுதிகளில் வாழ முற்படுகின்றனர். ஏனெனில் அங்கு வரிகள் குறைவு.

மக்கள் தொகை வளர்ச்சி அதிகரிப்பு: விரிவாக்கத்திற்கு மற்றொரு காரணம் மக்கள் தொகை வளர்ச்சி அதிகரிப்பாகும். ஒரு மாநகரத்தின் மக்கள் தொகை அதன் தாங்கும் திறனைவிட அதிகமாக உள்ளதால் அங்கு வாழும் உள்ளூர் சமூகங்கள் மாநகரின் மையத்திலிருந்து மேலும் மேலும் தூரமாகச் செல்கின்றன.

நுகர்வோரின் விருப்பங்கள்: அதிக வருவாய் பெறும் வகுப்பிலுள்ள மக்கள் பெரிய வீடுகள், அதிக எண்ணிக்கையில் படுக்கையறைகள், பெரிய பால்கனிகள் மற்றும் பெரிய புல் தரைகள் ஆகியவற்றை அதிகம் விரும்புகின்றனர். மிகுந்த மக்கள் தொகை கொண்ட மாநகரங்களில் இத்தகைய வசதிகள் இல்லாததால் நகர்ப்புற விரிவாக்கம் ஏற்படக் காரணமாகிறது. மக்களின் விருப்பத்திற்கேற்ப எங்கு வீடு கிடைக்கிறதோ அத்தகைய குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட குடியிருப்புப் பகுதிகளையே மக்கள் பொதுவாகத் தேடிச் செல்கின்றனர்

.

Tags : Human Settlements | Geography மனிதக் குடியிருப்புகள் - புவியியல்.
12th Geography : Chapter 2 : Human Settlements : Urbanization of the World and India Human Settlements | Geography in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது புவியியல் : அலகு 2 : மனிதக் குடியிருப்புகள் : நகரமயமாதல் - உலகம் மற்றும் இந்தியா - மனிதக் குடியிருப்புகள் - புவியியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது புவியியல் : அலகு 2 : மனிதக் குடியிருப்புகள்