நகரமயமாதலால் ஏற்படும் பிரச்சனைகள்
சீனாவிற்கு அடுத்தபடியாக உலகிலேயே இரண்டாவது அதிக நகர்ப்புற
மக்கள் கொண்ட நாடு இந்தியாவாகும். இந்தியாவில் நகர்ப்புற மக்கள் தொகையானது (மொத்த மக்கள்
தொகையில் சுமார் 28%) கிட்டத்தட்ட அமெரிக்க ஐக்கிய நாட்டின் மொத்த மக்கள் தொகைக்குச்
சமமானதாகும். நகர்ப்புற வளர்ச்சி விகிதம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பெரிய எண்ணிக்கையில்
மக்கள் மிகப்பெரிய மற்றும் பெரிய நகரங்களுக்கு (Metropolitan) வருவதால் நகர்ப்புற இந்தியாவின்
மக்கள் தொகை வருடத்திற்கு 5 சதவீதத்திற்கும் மேலாக அதிகரிக்கிறது. மக்கள் தொகையின்
இந்த பிரம்மாண்டமானவளர்ச்சிபல சமூகப் பொருளாதார சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்குக் காரணமாகிறது.
நகர்ப்புற இந்தியாவில் காணப்படும் சில முக்கியப் பிரச்சனைகள் கீழே சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
இயற்கை மற்றும் புவியியல் தடைகளால் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்குத்
தேவையான அதிக இடம் எளிதில் கிடைப்பதில்லை. இடப்பற்றாக்குறை காரணமாக நிலத்தின் விலை
அதிகரிப்பதுடன், அலுவலகம் மற்றும் குடியிருப்புகளின் வாடகை அதிகரிக்கிறது. மக்களால்
அதிக வாடகை கொடுக்க முடியாததால் நகரக் குடிசைகளின் தேவையற்ற வளர்ச்சி ஏற்படுகிறது.
ஒரு மதிப்பீட்டின்படி இந்திய நகரங்களில் வருடத்திற்கு சுமார்
2 மில்லியன் வீடுகளின் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் குறைந்த வருவாயுள்ள மக்கள்
குழுக்கள் நகரக் குடிசைகளிலும், நடைபாதைகளிலும் வாழும் நிலைமைக்குத் தள்ளப்படுகின்றனர்.
இந்தியாவின் பெரிய நகரங்களில் நகரக் குடிசைகள் மற்றும் நடைபாதைகளில் வாழ்பவர் எண்ணிக்கை
அதிகரித்து வருகிறது.
இந்தியாவின் பெரும்பான்மையான மாநகரங்களில் வளர்ச்சி காணப்படுகிறது.
ஆனால் நகரமயமாதல் நடைபெறவில்லை . உண்மையில், மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள வேளையில்
உட்கட்டமைப்பு வசதிகளும், குடிமை வசதிகளும் போதுமானதாக இல்லை. நகர்ப்புற இடங்களில்
மக்கள் குவிந்துள்ளதால் சமூக அடிப்படை வசதிகளான வீடு, மின்சாரம், குடிநீர், போக்குவரத்து,
சுகாதாரம், கழிவு அகற்றுதல், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பூங்காக்கள், விளையாட்டு
மைதானங்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் போன்றவை அதிக அழுத்தத்திற்கு ஆளாகின்றன.
வேலையின்மை என்பது கட்டாயாமாக வேலையற்று இருப்பதாகும். இந்தியாவில்
வருடத்திற்கு 3 சதவீதத்திற்கும் அதிகமான நகர்ப்புற வேலையின்மை படிப்படியாக உயர்ந்து
வருகிறது. ஒரு மதிப்பீட்டின்படி சுமார் 25% நகர்ப்புறத் தொழிலாளர்கள் வேலையின்றி இருக்கின்றனர்.
அதிக அளவு வேலையின்மை மற்றும் தகுதிக்குக் குறைவான வேலை போன்றவை குற்ற விகிதம் அதிகரிக்கக்
காரணமாகியுள்ளது.
போக்குவரத்துச் சிக்கல்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகியவை
இந்திய மாநகரங்களின் முக்கியப் பிரச்சனையாகும். ஒரு நகரம் பெரியதாக வளர வளர அதன் செயல்பாடுகளும்
மிக முக்கியமானவை. தொழிலாளிகளுக்கும் பயணிகளுக்கும் அதிக போக்குவரத்து வசதிகள் தேவை.
எதிர்பாராதவிதமாக, பெரிய நகரங்களில் குறிப்பாகப் பழைய நகரங்களில் சாலைகள் குறுகலாக
காணப்படுகின்றன. எனவே பயணிகளின் அதிகரித்து வரும் தேவையை சமாளிக்க முடியவில்லை. தனியார்
வாகனங்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக போக்குவரத்து நெரிசல்,
தாமதம், எரிச்சல் மற்றும் பதற்றம் போன்றவை ஏற்படுகிறது. சாலைகளை அகலப்படுத்தாமல், சாலைகளின்
தரத்தை மேம்படுத்தாமல் வாகனங்களின் எண்ணிக்கையைத் தற்போதுள்ள வீதத்தில் அதிகரிக்க அனுமதித்தால்
முக்கிய மாநகரங்களில் உள்ள போக்குவரத்து அமைப்பு முழுவதும் சரிவடையும்.
எரிசக்தி நெருக்கடி தொழிற்சாலைப் பொருட்களின் உற்பத்தியையும்
விநியோகத்தையும் பாதிக்கிறது. உண்மையில் எரிசக்தியானது தொழில் வளர்ச்சி, போக்குவரத்துத்
திறன் மற்றும் மனித வசதியைச் சார்ந்துள்ளது. பெருநகரங்கள், மில்லியன் மற்றும் முதல்
நிலை நகரங்கள் ஆகியவற்றில் உச்சகட்ட மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அதற்கேற்றவாறு எரிசக்தியின் அளிப்பு தேவையை பூர்த்தி செய்யும் நிலையில் இல்லை .
மனித வாழ்க்கையின் முதல் மற்றும் முன்னணித் தேவை நீர். உண்மையில்
நீரே வாழ்க்கை . மனிதன் நீர் இல்லாமல் வாழ முடியாது. கொல்கத்தாவில் சராசரி தனிநபரின்
நீர் நுகர்வு 250 லிட்டர், மும்பையில் 175 லிட்டர், டில்லியில் 80 லிட்டர் மட்டுமே.
ஆனால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இது 1200 லிட்டர், சிக்காகோவில் 1100 லிட்டர் ஆகும்.
இந்தியாவில் நகர்ப்புறப் பகுதிகளில் கடுமையான நீர்ப் பற்றாக்குறை
உள்ளது என்பதை சென்னை, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜோத்பூர், நாக்பூர், சிம்லா, சோலன்,
சூரத், உதய்பூர், வதோதரா போன்ற நகரங்களில் நாளொன்றுக்கு ஒன்று முதல் இரண்டு மணி நேரமே
நீர் வழங்கப்படுகிறது என்ற உண்மையிலிருந்து அறிந்துகொள்ளலாம். தேசிய தலைநகர்புதுடெல்லியும்
நீர் அளிப்பு நாளொன்றுக்கு சுமார் 4 மணி நேரம் என்று முறைப்படுத்தியுள்ளது.
சுற்றுச்சூழல் மாசுபடுதலானது அனைத்து மில்லியன் மற்றும் பெரு
நகரங்களின் தீவிரப் பிரச்சினையாகும். வாகனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளிலிருந்து
வெளியேறும் புகையினால் காற்று மாசுபடுவதுபோல நீர் மற்றும் ஓலி மாசடைதாலும் அதற்கிணையாக
தீவிரமான ஒன்றாகும். குப்பை சேகரிக்கும் இடங்களின் பற்றாக்குறை கிராம-நகர விளிம்பை
சுகாதாரமற்றதாக ஆக்குவதுடன் மக்கள் உடல் நலத்திற்குப் பாதகமாகவும் ஆகிறது. குப்பை அகற்றும்
பிரச்சனை (அபாயகரமான பிளாஸ்டிக், உலோகம் மற்றும் பொட்டலம் கட்டும் பொருட்கள்) இந்தியாவில்
பெரும்பாலான மாநகரங்களிலும், நகர்ப்புறப் பகுதிகளிலும் தீவிரமான பிரச்சினையாக உள்ளது.
எதிர்பாராதவிதமாக பெருமளவில் குப்பைகள் ஆறுகளிலோ அவற்றின் கரைகளிலோ கொட்டப்படுகின்றன.
மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற மாநகரங்களில் குப்பைகளின் பெரும்பகுதி தொடர்ந்து
கடலில் கொட்டப்படுகின்றன.
அதிகரிக்கும் நகர்ப்புறக் குற்றங்கள் நவீன நகரங்களின் அமைதியைக்
குலைக்கின்றன. சமூகவியலாளர்கள் கூற்றுப்படி வேலையின்மை நகர்ப்புற பகுதிகளில் குற்றங்களுக்கு
முக்கிய காரணமாகும். வேலையில்லாத இளைஞர்கள் கடத்தல், பணம் பறித்தல், குழந்தை கடத்தல்,
கொலை, வழிப்பறி செய்தல் (பாக்கெட் பிக்கிங்), கற்பழித்தல், கொள்ளையடித்தல் மற்றும்
திருடுதல் போன்ற குற்றங்களில் ஈடுபடுகின்றனர். நகரக் குடிசைகள் வேலையில்லாத குற்றவாளிகளால்
நிறைந்திருக்கின்றன. இவர்கள் காலப்போக்கில் குற்றத் தொழிலையே வழக்கமாகக் கொண்டவர்களாக
மாறுகின்றனர். பொருள் கலாச்சாரம், வளர்ந்து வரும் நுகர்வுத்தன்மை, சுயநலம், கடினமான
போட்டி, ஆடம்பரமாக செலவு செய்யும் பழக்கம், அதிகரித்து வரும் சமூகப் பொருளாதார வேற்றுமைகள்,
அதிகரித்து வரும் வேலையின்மை மற்றும் தனிமை ஆகியவை இப்பிரச்சனைக்குச் சில முக்கியக்
காரணங்களாகும்.