நகர்ப்புறக் குடியிருப்புகளின் பரிணாமம், நகர்ப்புறக் குடியிருப்பின் நிலைகள், நகர்ப்புற ஒருங்கிணைப்பு, நகர்ப்புறக் குடியிருப்புகளின் வகைப்பாடு - புவியியல் - நகர குடியிருப்புகள் | 12th Geography : Chapter 2 : Human Settlements
நகர குடியிருப்புகள் (Urban Settlements)
1991ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகைக் கணக்கீடு வரையறுப்பதாவது
"மாநகராட்சி, நகராட்சி, இராணுவக்குடியிருப்பு வாரியம் அல்லது அறிவிக்கப்பட்ட நகர்ப்புறக்
குழுவைக் கொண்டதும், குறைந்தது 5000 மக்கள் தொகையைக் கொண்டதும் குறைந்தது 75 சதவீத
ஆண் தொழிலாளிகள் விவசாயமல்லாத பிற தொழில்களில் ஈடுபட்டிருப்பதும் மக்கள் அடர்த்தி ஒரு
ச.கி. மீட்டருக்கு குறைந்தது 400 பேரைக் கொண்ட எல்லாப் பகுதிகளும் நகர்ப்புறக் குடியிருப்புகளாகும்.
பொ.ஆ. 1810ல் 1 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டிருந்த இலண்டன்
மாநகரமே முதல் நகரக் குடியிருப்பாகும். 1982ல் உலகில் ஏறக்குறைய 175 நகரங்கள் 1 மில்லியன்
மக்கள் தொகையைக் கொண்ட நகரங்களாகும். 1800ஆம் ஆண்டில் உலகின் 3 சதவீத மக்களே நகர்ப்புறக்
குடியிருப்புகளில் வாழ்ந்தனர் என்பதை ஒப்பிடும்பொழுது தற்பொழுது 48 சதவீத மக்கள் நகர்ப்புறக்
குடியிருப்புகளில் வாழ்கின்றனர்.
அளவு மற்றும் கிடைக்கப்பெறும் சேவைகள் மற்றும் அளிக்கப்படும்
செயல்பாடுகள் ஆகியவற்றைப் பொருத்து நகர்ப்புறமையங்கள் நகரம், மாநகரம் மில்லியன் நகரம்,
இணைந்த நகரம், மீப்பெருநகர் என அழைக்கப்படுகின்றன.
'கிராமம்' என்ற சொற்குறிப்பை வைத்து 'நகரம்' என்ற கருத்தை சிறப்பாகப் புரிந்து கொள்ளலாம். மக்கள் தொகை மட்டுமே ஒரு அளவுகோல் ஆகாது. கிராமத்திற்கும் நகரத்திற்குமுள்ள செயல்பாட்டு முரண்பாடுகள் எப்போதும் தெளிவாக இருப்பதில்லை. ஆனால் சில குறிப்பிட்ட செயல்பாடுகளான உற்பத்தித் தொழில், சில்லறை மற்றும் மொத்த வியாபாரம் மற்றும் தொழில் சார் சேவைகள் போன்றவை நகரங்களில் காணப்படுகின்றன.
மாநகரம் என்பது முன்னணி நகரமாகும். மாநகரங்கள் நகரங்களைக் காட்டிலும்
அளவில் பெரியதாகவும், பொருளாதாரச் செயல்பாடுகளை அதிக எண்ணிக்கையில் கொண்டதாகவும் இருக்கின்றன.
இவைபோக்குவரத்து முனையங்களையும், பெரிய நிதி நிறுவனங்களையும் வட்டார நிர்வாக அலுவலகங்களையும்
கொண்டுள்ளன. மக்கள் தொகை 1 மில்லியனைக் கடந்து விட்டால் இது மில்லியன் நகரம் என அழைக்கப்படுகிறது.
இணைந்த நகரம் (Conurbation) என்ற சொல் பற்றி பேட்ரிக் கேட்ஸ் (Patrick Geddes) என்பவரால் 1915ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. உண்மையில் தனித்தனிப் பிரிவுகளாக இருந்த நகரங்கள் அல்லது மாநகரங்கள் இணைந்து அதன் மூலம் நகர வளர்ச்சி பெற்ற பெரும்பகுதியைக் குறிக்க இச்சொல்லை அவர் பயன்படுத்தினார். இலண்டன் மாநகரம், மான்செஸ்டர், சிகாகோ மற்றும் டோக்கியோ போன்றவை சில எடுத்துக்காட்டுகளாகும். இந்தியாவில் ஹைதராபாத் மற்றும் கொச்சி ஆகியவை இணைந்த நகரங்களுக்கு உதாரணங்களாகும்
‘பெரிய நகரம்’ என்னும் பொருள் கொண்ட மெகாலோபோலிஸ் என்ற கிரேக்க
வார்த்தை ஜீன்காட் மேன் (Jean Gott man - 1957) என்பவரால் பிரபலமானது. இது இணைந்த நகரங்கள்
சேர்வதால் பரந்து விரிந்த ‘பெரிய பெரு நகரப் பகுதியை குறிக்கிறது’ (Super metro
politan).
அமெரிக்க ஐக்கிய நாட்டில் வடக்கில் பாஸ்டன் முதல் தெற்கில் வாஷிங்டன்
வரையுள்ள நகர்ப்புற நிலப்பகுதி மீப்பெரு நகருக்கு சிறந்த உதாரணமாகும்.
1 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரம் மில்லியன் நகரம் எனப்படும். உலகில் மில்லியன் நகரங்களின் எண்ணிக்கை என்றுமில்லாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. இலண்டன் மாநகரமானது 1800ல் மில்லியன் நகரமானது. அதைத் தொடர்ந்து பாரிஸ் 1850லும் நியூயார்க் 1860லும் மில்லியன் நகரங்களாயின 1950ல் 80 மாநகரங்கள் மில்லியன் நகரங்களாக உருவெடுத்தன. ஒவ்வொரு 30ஆண்டுகளுக்கும் மில்லியன் நகரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வீதம் மூன்று மடங்காக இருந்துள்ள து. இது 1975ல் 160, 2005ல் 438ஆக இருந்தது.
திருப்பூர் வடக்கில் 11.1075 டிகிரி முதல் கிழக்கில் 77.3398 டிகிரி வரை அமைந்துள்ளது. இது நொய்யல் ஆற்றங்கரையில் சராசரியாக 295 மீட்டர் (967அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இது 159.6 கிலோமீட்டர்” (சதுர கிலோமீட்டர்) பரப்பளவு கொண்டது.
திருப்பூர் ஒரு நீர்ப்பாசனம் பெறும் வேளாண் நகரமாக இருந்தது. 1970களில் விவசாயிகள் ஜவுளித் தொழிலோடு தொடர்புடைய பிரிவுகளுக்குச் சொந்தக்காரர்கள் ஆயினர். ஜவுளித்தொழிலில் ஏற்பட்ட திடீர் வளர்ச்சி சிறு தொழில்களை ஒன்றிணைத்து நகர்ப்புற வளர்ச்சிக்கு உதவியதோடு பெரிய ஜவுளி மையம் உருவாகவும் வழிவகுத்தது. ஆக்ஸ்போர்டு பொருளாதாரம் நடத்திய அண்மைக்கால ஆய்வுகளிலிருந்து உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் மாநகரங்களில் இந்திய மாநகரங்கள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன என்று தெரிய வருகிறது. இந்தியாவில் திருப்பூர் மிக வேகமாக வளர்ந்து வரும் மாநகரங்களில் 6வது இடத்தைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளியும், சென்னையும் உள்ளன.
உயர் சிந்தனை வினா
இலண்டன்
மாநகரம் ஏன் உலகிலேயே முதல் மில்லியன் நகரமாயிற்று?
நகர்ப்புற ஒருங்கிணைப்பில் ஒரு மைய நகரமோ அல்லது ஒருங்கிணைப்பில்
அங்கம் வகிக்கும் நகரங்களில் குறைந்தது ஒன்றாவது அங்கீகரிக்கப்பட்ட நகரமாக இருக்க வேண்டும்.
மேலும் ஒருங்கிணைப்பிலுள்ள அனைத்து நகரங்களின் மொத்த மக்கள் 20,000க்குக் குறையாமல்
(1991 கணக்கீடு) இருக்க வேண்டும் என்று 2001ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி முடிவெடுக்கப்பட்டது.
நகர்ப்புற ஒருங்கிணைப்பு என்பது தொடர்ச்சியான நகர்ப்புற பரவலாகும்.
ஒரு நகரம் அல்லது அதனுடன் இணைந்த நகரத்தின் வெளிப்புற வளர்ச்சி (OGS - Out
Growths) அல்லது 2 அல்லது அதற்கு மேல் வெளிப்படையாகத் தெரியும் (Physical) தொடர் நகரங்களின்
தொகுப்பு மற்றும் அந்நகரங்களோடு இணைந்த நகரத்தின் வெளிப்புற வளர்ச்சியே நகர்ப்புற ஒருங்கிணைப்பாகும்.
வெளிப்புற வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டுகள் இரயில்வே குடியிருப்புகள், பல்கலைக்கழக
வளாகங்கள், துறைமுகப் பகுதி, இராணுவ முகாம்கள் போன்றவையாகும். இவை அங்கீகரிக்கப்பட்ட
நகரம் அல்லது மாநகரத்திற்கருகில் வந்திருந்தாலும், ஒரு கிராமம் அல்லது ஒரு நகரம் அல்லது
மாநகரத்தோடு தொடர்ச்சியாக வந்த கிராமங்கள் இவற்றின் வருவாய் எல்லைக்குள் அடங்கியவை.
இந்த இரண்டு அடிப்படைக் காரணிகளும் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில், கீழ்க்காணும் வேறுபட்ட
சூழ்நிலைகள் தான் நகர்ப்புற ஒருங்கிணைப்பு ஏற்படக் காரணமாய் இருக்கலாம்.
i) தொடர்ச்சியான வெளிப்புற வளர்ச்சி கொண்ட ஒரு மாநகரம் அல்லது
நகரம்.
ii) வெளிப்புற வளர்ச்சி கொண்ட அல்லது வெளிப்புற வளர்ச்சி இல்லாத
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இணைந்த நகரங்கள்.
iii) தொடர்ச்சியான பரவலை ஏற்படுத்தக்கூடிய ஒரு மாநகரம் அல்லது
ஒன்றுக்கு மேற்பட்ட இணைந்த நகரங்கள் மற்றும் அதனோடு கூடிய வெளிப்புற வளர்ச்சிகள் அனைத்தும்.
1971 மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்காக ஒரு புதிய கருத்து உருவாக்கப்பட்டது.
இது சில நகர்ப்புறத் தகவல்களை அட்டவணைப் படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டது. இதுவே நிலையான
நகர்ப்புறப் பகுதியாகும்.
i) குறைந்தது 50,000 மக்கள் தொகை கொண்ட முக்கிய நகரமாக இருத்தல்
வேண்டும்.
ii) நகர்ப்புற மற்றும் கிராமப்புற நிர்வாகக் குழுக்களைக் கொண்ட
தொடர் பகுதிகள் முக்கிய நகரத்தோடு நெருக்கமான, பரஸ்பர, சமூக பொருளாதாரத் தொடர்புகளைக்
கொண்டிருக்க வேண்டும்.
iii) 2 அல்லது 3 பத்தாண்டுகளில் இந்த முழுப்பகுதியும் நகரமயமாகலாம்.
நகரமயமாக்கப்பட்டப் பகுதிக்குத் தேவையான ஒப்பீட்டு தகவல்கள்
தொடர்ச்சியாக முப்பது ஆண்டுகளுக்கு வழங்கப்படும் பொழுதுதான் நிலையான நகர்ப்புற பகுதியைப்
பற்றிய ஒரு சரியான கருத்து கிடைக்கும். இந்த தெளிவற்ற "நிலையான நகர்ப்புறப் பகுதி"
என்ற மாற்றுக் கருத்து 1961 கணக்கெடுப்பில் உருவானது. நகரக்குழுக்கள் சுயேச்சையான
(independent) நகரப் பகுதிகளைக் கொண்டிருந்தன. இந்த நகரக் குழுக்களுக்கான தகவல்கள்
ஒரு கணக்கெடுப்பிலிருந்து மற்றொரு கணக்கெடுப்பிற்கு ஒப்பிட முடியாதவாறு இருந்தது. ஏனெனில்
நகரங்களின் எல்லைகள் மாறிவிட்டன. இடையிலிருந்த பகுதிகள் கணக்கெடுப்பிலிருந்து விடுபட்டுப்
போயின. 1968 ஆம் ஆண்டு சர்வதேச புவியியல் சங்கத்தின் கருத்தரங்கு ஒன்றில் இக்கருத்து
விமர்சனத்துக்குள்ளானது. எனவே நிலையான நகர்ப்புறப் பகுதி என்ற கருத்து உருவாக்கப்பட்டு
1971 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நிலையான நகர்ப்புறப்பகுதி பற்றிய
தகவல்கள் தொடர்ந்து 2 அல்லது 3 கணக்கெடுப்புகளில் கிடைத்தால் நகர்ப்புற மையக் கருத்துக்களைச்
சுற்றிக் காணப்படும் நகரமயமாதல் பற்றித் தெரிந்து கொள்ளத் தேவையான, அர்த்தமுள்ள விளக்கம்
கிடைக்கும்.
'உலகமாநகரம்
(Ecumeno polis) என்பது (இகுமினோ என்பது உலகத்தையும் போலீஸ் என்பது மாநகரத்தையும் குறிக்கும்)
உலக முழுமையும் தன்னுள் அடக்கிய ஒரே மாநகரமாகும். எதிர்காலத்தில் இது ஏற்பட வாய்ப்புள்ளது.
நகர்ப்புறப் பகுதியின் வரையறையானது நாட்டிற்கு நாடு வேறுபடுகிறது.
நகர்புறக் குடியிருப்புகளை வகைப்படுத்த சில பொதுவான அடிப்படைகளான மக்கட்தொகையளவு, தொழில்
அமைப்பு மற்றும் நிர்வாக அமைப்பு ஆகும்.
இந்தியாவில் மக்கள் தொகை அளவு, ஒரு ச.கி. மீட்டருக்கு 400 பேர்
என்ற மக்களடர்த்தி, விவசாயமற்ற தொழில் செய்வோரின் பங்கு ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
இந்தியாவில் 50% பொருளாதார உற்பத்தித் திறன் கொண்ட மக்கள் விவசாயமற்ற தொழில்களில் ஈடுபடுதல்.
இந்தியாவில் நகராட்சி, இராணுவக் குடியிருப்பு அல்லது அறிவிக்கப்பட்டப்
பகுதிக்குழு ஆகியவை எந்த அளவில் இருந்தாலும் அவை நகர்ப்புறம் என்று வரையறுக்கப்படுகிறது.
நகர்ப்புறக் குடியிருப்பின் செயல்பாடுகளைப் பொறுத்து நகரங்கள்
நிர்வாக நகரங்கள், வணிக நகரங்கள், கலாச்சார நகரங்கள், பொழுதுபோக்கு நகரங்கள் மற்றும்
தொழில்துறை நகரங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. நிர்வாக நோக்கத்திற்காக அல்லது நிர்வாகச்
செயல்பாட்டிற்காக நிறுவப்பட்ட குடியிருப்புகள் நிர்வாக நகரங்கள் எனப்படுகின்றன. எ.கா.
வாஷிங்டன், புதுடெல்லி, கான்பெரா, பாரிஸ், பீஜிங், அடிஸ் அபாபா மற்றும் லண்டன்.
வர்த்தக வாய்ப்புகளை எளிதாக்கும் குடியிருப்புகள் வணிக மற்றும்
வர்த்தக நகரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஆக்ரா , லாகூர், பாக்தாத்
போன்ற முக்கிய போக்குவரத்து முனையங்கள் மான்செஸ்டர் மற்றும் செயின்ட் லூயிஸ் போன்ற
உள்நாட்டு மையங்கள், வின்னிபெக் மற்றும் கான்சாஸ் மாநகரம் போன்ற வேளாண் சந்தை நகரங்கள்,
பிராங்க்பர்ட்(Frankfurt) மற்றும் ஆம்ஸ்டர்டாம் போன்ற வங்கி மற்றும் நிதி மையங்கள்
ஆகும்.
மத ஈடுபாடு காரணமாக நிறுவப்பட்ட குடியிருப்புகள் கலாச்சார அல்லது
மத நகரங்கள் என்றழைக்கப்படுகின்றன. எ.கா.ஜெருசலேம், மெக்கா, ஜகந்நாத் பூரி, மதுரை மற்றும்
வாரணாசி போன்றவை.
பொழுதுபோக்கு நோக்கத்திற்காக நிறுவப்பட்ட நகரங்கள் பொழுதுபோக்கு நகரங்கள் எனப்படும். எ.கா.மியாமி (அமெரிக்க ஐக்கிய நாடுகள்), பனாஜி( இந்தியா) போன்றவை. தொழில்துறை வளர்ச்சி காரணமாக நிறுவப்பட்ட நகரங்கள் தொழில்துறை நகரங்கள் என அழைக்கப்படுகின்றன. எ.கா. பிட்ஸ்பர்க் (அமெரிக்க ஐக்கிய நாடுகள்) ஜாம்ஷெட்பூர் (இந்தியா) போன்றவை.