காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் - இந்தியா - வங்கப் பிரிவினை | 10th Social Science : History : Chapter 7 : Anti-Colonial Movements and the Birth of Nationalism
வங்கப் பிரிவினை
1905ஆம் ஆண்டின் வங்கப் பிரிவினை மிகவும்
அதிருப்தியை ஏற்படுத்திய நிகழ்வாகும். இந்தியா முழுவதும் விரிவான போராட்டங்கள் பரவ
இந்தப் பிரிவினை வழிவகுத்ததன் மூலம் இந்திய தேசிய இயக்கத்துக்கு புதிய அத்தியாயத்தை
உருவாக்கியது.
இந்துக்கள்,
முஸ்லிம்கள்
இடையே பிளவை உருவாக்கி வங்காளத்தில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடந்த அரசியல்
நடவடிக்கைகளை அடக்க வங்கப்பிரிவினை வகுக்கப்பட்டது.
வங்காளிகளின்
ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி தேசியவாத இயக்கத்தை வலுவிழக்கச் செய்வதே வங்கப்
பிரிவினைக்கான நோக்கம் என்று வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டது. வங்காளத்தைப் இரண்டு
நிர்வாகப் பிரிவுகளின் கீழ் பிரித்து வைத்ததன் மூலம் வங்காள மொழி பேசும் மக்களை
ஒரு மொழி சிறுபான்மையினர் என்ற தகுதிக்கு கர்சன் பிரபு குறைத்துவிட்டார்.
முகலாயர்களின் ஆட்சிக்காலங்களில் கூட அனுபவிக்காத ஒற்றுமையை முஸ்லிம்கள் கிழக்கு
வங்காளம் என்ற புதிய மாகாணத்தில் அனுபவிப்பார்கள் என்று கர்சன் உறுதியளித்தார்.
மத
அடிப்படையில் வங்காள மக்களைப் பிரிக்க நினைத்த பிரிவினைச்செயலானது அவர்களைப் பிரிப்பதற்குப்
பதிலாக ஒன்றிணைத்தது. வங்காள அடையாளத்தை உணர்வுப் பெருமையுடன் உருவாக்க வட்டார
மொழிப் பத்திரிகைகளின் வளர்ச்சி பெரும் பங்காற்றியது.
வங்கப்
பிரிவினையை தடுக்கத் தவறிய மித தேசியவாதத் தலைவர்கள்,
தங்களுடைய
உத்திகள் பற்றி மறு சிந்தனைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். ஆர்ப்பாட்டங்களுக்கு
புதிய வழிமுறையையும் அவர்கள் தேடத் தொடங்கினார்கள். பிரிட்டிஷ் பொருட்களை
புறக்கணிப்பது அவற்றில் ஒரு முறையாகும். எனினும் சுதேசி இயக்கத்தின் கொள்கை வங்கப்
பிரிவினையைத் திரும்பப் பெறுவதை உறுதி செய்வதில் இன்னமும் கட்டுப்பட்டிருந்தது.
முழுமையான மறைமுக எதிர்ப்பைத் துவங்குவதற்கு பிரச்சாரத்தைப் பயன்படுத்த மித
தேசியவாதிகள் ஆதரவாக இல்லை. மற்றொருபுறம் தீவிர தேசியவாதிகள் வங்காளத்தை தாண்டி
இந்த இயக்கத்தை விரிவு செய்வதற்கு மிகப்பெரிய அளவில் பொதுமக்கள் போராட்டத்தைத்
துவங்க ஆதரவாக இருந்தனர்.
1905 அக்டோபர் 16இல்
வங்காளம் அதிகாரபூர்வமாகப் பிரிவினையானபோது அந்த நாள் துக்க நாளாக
அறிவிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானவர்கள் கங்கை நதியில் புனித நீராடியதோடு வந்தே
மாதரம் பாடலை பாடியபடி கல்கத்தாவின் சாலைகளில் அணிவகுத்துச் சென்றார்கள்.
புறக்கணிப்பும்
சுதேசி இயக்கமும் இந்தியாவைத் தற்சார்பு அடையச் செய்யும் விரிவான திட்டத்தின் ஒரு
பகுதியாக எப்போதும் ஒன்றுடன் ஒன்று இணைந்தே இருந்தன. வங்காளத்தில் சுதேசி
இயக்கத்தின் போது நான்கு முக்கியப் போக்குகள் காணப்பட்டன:
1. மிதவாதப் போக்கு
2. ஆக்கபூர்வ சுதேசி
3. தீவிர தேசியவாதம்
4. புரட்சிகர தேசியவாதம்
ஆக்கபூர்வதிட்டங்கள்
அனைத்தும் பெரும்பாலும் சுய உதவியையே வலியுறுத்தின. ஆங்கிலேய ஆட்சியின்
கட்டுப்பாட்டில் சிக்காமல் சுதந்திரமாகச் செயல்படக்கூடிய உள்ளாட்சி அமைப்புகளை
மாற்றாக உருவாக்குவது குறித்து அது கவனம் செலுத்தியது. மக்களை சுயமாக வலுவாக்க
வேண்டிய அவசியம் குறித்து அது வலியுறுத்தியது. துணிகள்,
கைத்தறி
ஆடைகள், சவக்காரம் (சோப்புகள்),
மண்பாண்டங்கள்,
தீப்பெட்டி,
தோல்
பொருட்கள் ஆகியன எங்கும் பரவியிருந்த சுதேசி கடைகளில் விற்கப்பட்டன.
சுதேசி இயக்கம்
1906இல் சுதேசி இயக்கம் மாற்றுப்பாதையில் செல்லத்
துவங்கியது. இந்த புதிய திசையில் சுதேசி இயக்கம் நான்கு அம்சங்களைக்
கொண்டிருந்தது. அந்நியப் பொருட்களைப் புறக்கணிப்பது;
அரசுப்பள்ளிகள்,
கல்லூரிகளைப்
புறக்கணிப்பது, நீதிமன்றங்கள்,
பட்டங்கள்
மற்றும் அரசு சேவைகளை புறக்கணிப்பது; சுதேசி
தொழிற்சாலைகளை மேம்படுத்துவது; பொறுத்துக்கொள்ளும்
அளவைத் தாண்டி ஆங்கிலேயர்களின் அடக்குமுறை இருக்குமானால் ஆயுதமேந்திய போராட்டத்துக்கு
ஆயத்தமாவது என நான்கு அம்சங்கள் பின்பற்றப்பட்டன.
பஞ்சாபின்
லாலா லஜபதி ராய், மகாராஷ்டிராவின் பால கங்காதர திலகர்,
வங்காளத்தின்
பிபின் சந்திர பால், ஆகிய மூன்று முக்கிய தலைவர்களும் சுதேசி
காலத்தில் எப்போதும் லால் பால் பால் (Lal-Bal-Pal) மூவர்
என்று குறிக்கப்பட்டனர். சுதேசி இயக்கத்தின் போது தீவிர தேசியவாதத்தின் இயங்கு
தளமாக பஞ்சாப், மகாராஷ்டிரா,
வங்காளம்
ஆகியன உருவெடுத்தன. தென்னிந்தியாவில் வ. உ. சிதம்பரனார் சுதேசி கப்பல் நிறுவனத்தை
தொடங்கியதை அடுத்து தூத்துக்குடி சுதேசி இயக்கத்தின் மிகமுக்கியத் தளமாக
விளங்கியது.
சுயராஜ்ஜியம் அல்லது அரசியல் சுதந்திரம்
சுயராஜ்ஜியம்
அல்லது தன்னாட்சி அடைவதே தீவிரவாதத் தன்மை கொண்ட தலைவர்களின் பொதுக்
குறிக்கோள்களில் ஒன்றாக இருந்தன. எனினும் சுயராஜ்ஜியம் என்ற வார்த்தையின் பொருளில்
தலைவர்கள் வேறுபட்டனர். திலகரைப் பொறுத்தவரை சுயராஜ்ஜியம் என்பது,
முழுமையான
தன்னாட்சி மற்றும் அந்நிய ஆட்சியில் இருந்து முழுமையான விடுதலை பெறுவதாக இருந்தது.